🌊 சித்தார்த்தன்: ஆன்மா, காதல் & அறிவு – Siddhartha Book Summary (Tamil)

Sun Jul 20, 2025

Siddhartha Book Summary (Tamil)

"சித்தார்த்தன் உலக இன்பங்கள்ல மூழ்கிப் போனான்னு சொல்லுறதுக்குப் பதிலா, கமலாவுக்குள்ள மூழ்கிப் போனான்னு சொல்ற அளவுக்கு அவளே கதின்னு கிடந்தான்.

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன நாவலந்தீவுல, ஒரு சின்ன அழகான ஊரு, ஆறு பக்கத்துல இருந்துச்சி. அங்க வாழ்ந்தவன் தான் சித்தார்த்தன், நம்ம கதையோட ஹீரோ இவன் தான். இவன் ஒரு பிராமண பூசாரியோட பையன். அழகு, புத்திசாலித்தனம், எல்லாமே ஒருங்கே அமைஞ்சவன். அவன் அப்பா ஊருல மதிக்கப்பட்டவர். வீடு நிறைய செல்வம், ஊர்ல மரியாதை, குடும்பத்துல அன்பு, எல்லாமே இருந்துச்சு. ஆனா, சித்தார்த்தனுக்கு மனசுக்குள்ள ஏதோ ஒரு குறை.

“எனக்கு வாழ்க்கையோட உண்மையான பொருள் என்னன்னு தெரியணும்” அவனுக்குள்ள தவிப்பு கூடுச்சி.

வேதங்களை மனப்பாடம் பண்ணான், வேளை தவறாம பூஜைகளை செஞ்சான்.

எல்லாருக்குள்ளயும் ஒரு நித்திய ஆன்மா இருக்குனு ஆத்மா பத்தி பிராமணர்கள் சொன்னாங்க. அவனுக்கு இது வெறும் வார்த்தைகளா தான் தோணுச்சு.

இது உண்மையா? இதை அனுபவிக்க முடியுமான்னுனு கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தான். அவன் அப்பா தினமும் ஆத்துல குளிச்சு பாவத்தை போக்குறதை பார்த்தான். அப்படி செஞ்சும் அவருக்கு உண்மையான அமைதியோ, ஆத்ம விடுதலையோ கிடைக்கல.

“இந்த பாதை சரியா இல்லையோ?”னு மனசு அடிச்சுக்கிச்சு.

சித்தார்த்தனோட நிழல் மாதிரி இருந்தவன் அவன் நண்பன் கோவிந்தன். கோவிந்தனுக்கு இந்த சடங்கு, வேதம் எல்லாம் போதும்னு தோணுச்சு. ஆனா சித்தார்த்தனுக்கு அப்படி இல்ல. ஒரு மாலை, கோவிந்தன்கிட்ட சொன்னான், “மச்சி, நான் வீட்ட விட்டு சமணர்களோட சேரப் போறேன்.

உலக விஷயங்களை துறந்து, ஆன்மீகத்தை தேடுறவங்க கூட இருக்கணும்னு விரும்பறேன்.”

சித்தார்தன் சொன்னதைக் கேட்டதும் கோவிந்தன் முதல்ல ஷாக் ஆனாலும், “உன்கூட நானும் வரேன்”னு துணிஞ்சி கிளம்புனான்.

மறுநாள் காலை, சித்தார்த்தன் அப்பாகிட்ட சமண மதத்த தழுவப் போறேன்னு சொன்னான். அப்பா முதல்ல “வேணாம்”னு கோவிச்சிகிட்டாரு, கத்துனாரு. அவனைத் திட்டுனாரு. ஆனா சித்தார்த்தன் அமைதியா நின்னான். அப்பா திட்டிக்கிட்டே தூங்குறதுக்கு தன்னோட அறைக்குப் போயிட்டாரு. மறுநாள் காலைல எழுந்து வந்து பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. காரணம், சித்தார்த்தன் தன்னோட பிடிவாதத்தைக்காட்ட ராத்திரி முழுக்க அதே இடத்துல நின்னுக்கிட்டு இருந்தான். அவனோட பிடிவாதத்தைப் பார்த்ததும் கடைசியில அப்பாவுக்கு மனசு மாறுச்சு. வேற வழி இல்லாம, “போய்ட்டு வா”னு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வச்சாரு.

சித்தார்த்தனும் கோவிந்தனும் பட்டு வேட்டி, சொத்து, நகை எல்லாத்தையும் விட்டுட்டு, காட்டுல இருக்குற சமணர்களோட சேர்ந்தாங்க. சமணர்களோட வாழ்வியல் ரொம்ப கடினமா இருக்கும். அவங்க ரொம்ப வருத்திக்குவாங்க. கடுமையா வெயில்ல தவம் இருப்பாங்க. தன்னோட முடிய தாங்களே புடிங்கிக்குவாங்க. பல்லு வெளக்குனா வாய்ல இருக்கற உயிர்கள் அழிஞ்சிடும்னு பல்லு கூட விளக்க மாட்டாங்க. உயிர் மேல பற்றே இல்லாம, எப்போதாவது தோணுறப்போ உயிர் வாழ மட்டும் கொஞ்சம் உணவ உட்கொண்டு வாழ்ண்டுகிட்டு இருக்கறவங்க.

உடம்பு மெலிஞ்சு காஞ்சி போயி இருந்த சமணர்கள் கூட சேர்ந்த சித்தார்த்தனும் கோவிந்தனும் கடுமையான தவ வாழ்க்கைய ஆரம்பிச்சாங்க. பசி, தாகம், வெயில், மழை—எல்லாத்தையும் தாங்கி, மனசை காலி வெறுமையாக்கற தியானத்தை செஞ்சாங்க. சித்தார்த்தன் பசியையும், வலியையும் கட்டுப்படுத்த கத்துக்கிட்டான். அவன் உடம்பு எலும்பு கூடு மாதிரி ஆயிடுச்சு. சில நிமிஷம், “நான்”னு ஒண்ணு இல்லாம போன மாதிரி தோணுச்சு. ஆனா, மறுபடி மனசு திரும்பி வந்தப்போ, எதுவும் மாறல. அவன் கடுமையான தவத்துல உணர்ந்த எல்லாமே காணாம போயிடுச்சி. திரும்பவும் முதல்ல இருந்து தவம் இருக்க ஆரம்பிப்பான். இப்படியே மூணு வருஷம் கழிஞ்சிது.

“இந்த பாதையும் சரியில்லை”னு சித்தார்த்தனுக்கு புரிஞ்சுது. மூத்த சமணர்களுக்கே ஞானம் கிடைக்கலையே, இது எப்படி வேலை செய்யும்?

அப்போ ஒரு செய்தி பரவுச்சு. “கௌதம புத்தர், முழு ஞானம் அடைஞ்ச ஒரு புனிதர் இருக்காருன்னு.

சித்தார்த்தனும் கோவிந்தனும் அவரைத் தேடி கிளம்பிட்டாங்க. சமணர்கள் கடுமையா எதிர்த்தாங்க. ரெண்டு பேரையும் தடுக்கப் பார்த்தாங்க.

சித்தார்த்தனும் கோவிந்தனும் உறுதியா கௌதம புத்தர பார்க்க கிளம்புனாங்க. ஜேதவனத்து தோட்டத்துக்கு வந்தப்போ, ஒரு அமைதியான உணர்வு அவுங்கள ஆட்கொள்ளுச்சி. மஞ்சள் நிற உடைல இருந்த புத்தரை பார்த்தவுடனே, அவர் முகத்துல இருந்த ஆழமான அமைதி ரெண்டு பேரோட மனசையும் தொட்டுச்சு.

தன்க்கு வேணும்ங்கறாத இவரால தான் கொடுக்க முடியும்னு சித்தார்த்தன் நம்புனான்.

புத்தர் தன் போதனைகளை சொன்னார்—நான்கு உன்னத உண்மைகள், எட்டு வழி பாதை, துன்பத்திலிருந்து விடுதலை ஆகுறதப் பத்தி, தன்னோட ஞானம் எல்லாத்தையும் சித்தார்த்தன்கிட்ட பகிர்ந்துகிட்டாரு. கோவிந்தன் மனசு உருகி, “நான் இவரோட சங்கத்துல சேருறேன்”னு சொன்னான். ஆனா சித்தார்த்தனுக்கு மனசு ஒத்து வரல. “புத்தர் ஞானம் அடைஞ்சது உண்மை, ஆனா இதை வார்த்தைகளால கத்துக்க முடியுமா? இதை நாம தான் அனுபவிக்கணும்னு யோசிச்சான். புத்தர்கிட்ட தனியா பேசும்போது, மரியாதையா கேள்வி கேட்டான்.

“உங்களோட போதனைகள் எவ்வளவு சரியானதா இருந்தாலும், ஞானத்தோட உண்மையான அனுபவத்தை போதனைகளால தர முடியாது இல்லையா?” சித்தார்த்தன் புத்தர்கிட்ட கேள்வி கேட்டான்.

“சித்தார்த்தா, உன்னோட புத்திசாலித்தனத்தை விட்டால் தான் உன்னால உண்மையான ஞானத்தை அடைய முடியும். உன் புத்திசாலித்தனம் தான் உனக்கு தடையா இருக்குன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாரு.

கோவிந்தன் புத்தரோட சங்கத்துல சேர்ந்து, அங்கேயே தங்கிட்டான்.

சித்தார்த்தன் தனியா பயணத்தை தொடர்ந்தான். அவன் பல கேள்விகள அவனுக்குள்ள கேட்டுக்கிட்டான்.

“இவ்வளவு நாளா நான் என்னைய விட்டு ஓடிக்கிட்டு இருந்தேன். ஆனா உண்மையில என்னோட இயல்பை புரிஞ்சு வாழ்க்கைய அனுபவிக்கணும்”னு ஒரு தெளிவு அப்போ அவனுக்கு வந்துச்சு. சமணர்களோட தவத்தையும், புத்தரோட போதனைகளையும் விட்டுட்டு, தன் அனுபவத்தை மட்டும் நம்பி முன்னேற ஆரம்பிச்சான்.

அவனோட பயணத்துல ஒரு ஆத்தைக் கடக்க ஒரு படகுக்காரர் உதவி செஞ்சாரு. அவரோட பேரு வாசுதேவன். அவரோட அமைதியான பேச்சு சித்தார்த்தனுக்கு ஆறுதலா இருந்துச்சு. ஆத்தைக் கடந்து ஒரு நகரத்துக்கு வந்தப்போ, அங்க கமலானு ஒரு அழகு தேவதையை பார்த்தான். அவ ஒரு வேசி. அவளோட அழகும், நளினமும் அவனை மயக்குச்சு.

பிராமணர்கள், சமணர்கள், புத்தர்கிட்ட எப்படி சரணடைஞ்சானோ அதே மாதிரி சித்தார்த்தன் கமலாகிட்டையும் சரணடைஞ்சான். அவகிட்ட போயி, “கமலா, எனக்கு நீ காதல், காமக் கலையை கத்து தரணும்”னு கேட்டான்.

அப்போ கமலா சித்தார்த்தனைப் பார்த்தா, அவன் மெலிஞ்சிப் போயி கடுமையான பயணத்துனால கிழிஞ்ச ஆடை, கிழிஞ்சி போன செருப்போட நின்னுக்கிட்டு இருந்தான். ஆனா, அவனோட முகம் பொலிவோட இருந்துச்சி.

கமலா சிரிச்சபடி, “இந்த கந்தல் துணியோடவா? முதல்ல நல்ல உடுப்பு, செருப்பு, பரிசு எல்லாம் வாங்கிட்டு வா”னு சொல்லி அனுப்பி வச்சா. ஆனா அவனோட தன்னம்பிக்கையும், புத்திசாலித் தனமும் அவளுக்கு பிடிச்சிருந்துச்சு.

சித்தார்த்தன் ஆத்துக்குப் போயி முழுகி எழுந்து, தன்னோட கிழிஞ்ச ஆடைகள மாத்திக்கிட்டு காமஸ்வாமினு ஒரு பெரிய வியாபாரிகிட்ட வேலைக்கு சேர்ந்தான். அவனோட பிராமண கல்வியும், இயல்பான அறிவும் வியாபாரத்தை விளையாட்டு மாதிரி கத்துக்க வச்சுது. காமஸ்வாமி பணத்தை பத்தி கவலைப்பட்டுக்கிட்டே இருந்தாலும், சித்தார்த்தன் அதை ஒரு விளையாட்டா பார்த்தான். கவலை இல்லாம, எதிர்காலத்தை யோசிக்காம இருந்தது அவனுக்கு நல்ல வெற்றியை கொடுத்துச்சு.

கமலா சொன்ன மாதிரி சித்தார்த்தன் பணம் சம்பாதிச்சு, நல்ல ஆடைகள், புது செருப்பு வாங்கிப் போட்டுக்கிட்டான். அவளுக்குப் பரிசுப் பொருட்களையும் வாங்கிக்கிட்டுப் போயி அவளைப் பார்த்தான். அவளுக்காக மாறியிருந்த அவனோட தோற்றம் அவளுக்குப் புடிச்சி இருந்துச்சு. கமலா வாக்கு கொடுத்த மாதிரி அவனை ஏத்துக்கிட்டா.

சித்தார்த்தன் கமலா கூட சேர்ந்து காதல் பாடம் கூட, காமத்தையும் கத்துக்க ஆரம்பிச்சான். முப்பொழுதும் அவள் கூட கூடி இன்பத்தை அடைஞ்சான். பிறப்பு எடுத்ததுக்கான காரணமே இதுதானோன்னு நெனச்சி ஏங்கற அளவுக்கு அவகூட கூடி களிப்படைஞ்சான். சித்தார்த்தன் முழு மனசோட இதுல ஈடுபட்டான். அவ சொன்னது எல்லாத்தையும் அவன் செஞ்சான். கமலாவுக்கு அவனோட ஆழமும், பற்றற்ற தன்மையும் புதுசா தெரிஞ்சுது.

வேசியா இருந்த கமலா, சித்தார்த்தன் கிட்ட நம்ம ரெண்டு பேராலயும் உண்மையான காதலை அனுபவிக்க முடியாதுன்னு சொன்னாலும், அவனை உண்மையாவே அவளுக்குப் பிடிச்சிருந்துச்சு.

வருடங்கள் பல கழிஞ்சிது. சித்தார்த்தன் உலக இன்பங்கள்ல மூழ்கிப் போனான்னு சொல்லுறதுக்குப் பதிலா, கமலாவுக்குள்ள மூழ்கிப் போனான்னு சொல்ற அளவுக்கு அவளே கதின்னு கிடந்தான். சூதாட்டம், குடி, ஆடம்பர வாழ்க்கைனு எல்லாத்தையும் அனுபவிச்சான். ஒரு காலத்துல அவன் எதையெல்லாம் வெறுத்தானோ, அதையெல்லாம் மகிழ்ச்சியோட அனுபவிக்க ஆரம்பிச்சான். நாள் ஆக ஆக அவனுக்குள்ள ஒரு வெறுமை ஏற்பட்டு அது அதிகமாக ஆரம்பிச்சிது. இளமையில இருந்த அதே குறை மறுபடியும் தோணுச்சு. கெட்ட கனவுகள் தூக்கத்தை கெடுத்துச்சு.

“இலக்கு எதுவுமே இல்லாம, இப்படி வாழுறோம்னு அவனுக்குள்ள வெறுப்பு வந்துச்சு.

ஒரு நாள் இரவு முழுக்க கமலாவே கதின்னு கிடந்தான் சித்தார்த்தன். அவளோட உடம்பு வாசத்தை அனுபவிச்சிக்கிட்டு, அவளோட மார்பு தலைவச்சிப் படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தப்போ அவனுக்குள்ள ஒரு பயங்கரமான கனவு வந்துச்சி. காலைல கனவு கலைஞ்சு எந்திரிச்சப்போ, “இந்தப் பொய்யான வாழ்க்கை போதும். இதை இதுக்கு மேல தொடர வேண்டாம்னு”னு முடிவு பண்ணான். அந்த நகரத்துல அவன் சேர்த்த சொத்து, பணம், பெயர், அடையாளம் எல்லாத்தையும் விட்டுட்டு யார்கிட்டையும் சொல்லாம நகரத்தை விட்டு கிளம்பிட்டான். காட்டுக்குள்ள அலைஞ்சு, மனசு உடைஞ்சு, ஆறு ஓரமா நின்னு தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிச்சான். தண்ணியை பார்த்தப்போ, உள்ளுக்குள்ள இருந்து “ஓம்”னு ஒரு புனித ஒலி எழுந்த மாதிரி அவனுக்குத் தோணுச்சு. இந்த ஒலி அவனோட ஆன்மீக தூக்கத்தை உடைச்சுது. களைப்புல ஆறு ஓரமா ஆழ்ந்த உறக்கத்துல விழுந்தான்.

எந்திரிச்சப்போ, அவனுக்கு முன்னாடி அமர்ந்து அவனையே பார்த்துக்கிட்டு இருந்தவன் கோவிந்தன். இப்போ அவன் புத்த பிக்கு. முதல்ல ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் அடையாளம் தெரியல. சித்தார்த்தன் தன் அடையாளத்தை மறைச்சு பேசினான். கோவிந்தன், அது தன் நண்பன்னு தெரியாம அவன் கூட சேர்ந்து பயணத்தை தொடர்ந்தான்.

சித்தார்த்தன் ஆறு ஓரத்துலயே தங்கினான். மறுபடி வாசுதேவனை சந்திச்சான். “எனக்கு ஆத்தோட குரலை கேக்க கத்து தரணும்”னு கேட்டான். வாசுதேவன் ஒத்துக்கிட்டார். சித்தார்த்தன் படகுக்காரரோட உதவியாளனா மாறி, புது வாழ்க்கைய ஆரம்பிச்சான். வாசுதேவன் பெருசா பேசாம, ஆத்தோட குரலை கேக்க சொல்லி கத்துக்கொடுத்தார். ஆறு, காலத்தோட மாயை, எல்லாத்தோட ஒற்றுமை பத்தி பேசுச்சு. இந்த எளிய வாழ்க்கையில, சித்தார்த்தன் ஆழமான அமைதியை கண்டான்.

பல வருஷம் கழிச்சு ஒரு நாள் கமலாவையும் அவகூட ஒரு சின்னப் பையனும் சித்தார்த்தன் பார்த்தான். அப்போ கமலா உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தா. காரணம், புத்தர் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டு அவரைப் பார்கக்ப் போனப்போ காட்டுல ஒரு பாம்பு அவளைக் கடிச்சிருக்கும். உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்த கமலாவை சித்தார்த்தன் காப்பாத்த முயற்சி செய்வான். ஆனால், அவ சித்தார்த்தன் கைலயே உயிரை விட்டுருப்பா. அவ சாகுறதுக்கு முன்னாடி, “இந்த பையன் உன்னோட மகன்”னு சொல்லிட்டு இறந்து போவா.

கமலாவோட பையன் சித்தார்த்தன் கூட அந்த ஆத்தோர குடில்ல வாழ ஆரம்பிச்சான். அவ நகரத்து ஆடம்பரத்துல வளர்ந்தவன், அவனால அந்த எளிய வாழ்க்கையையும், அப்பாவா சித்தார்த்தனையும் ஏத்துக்க முடியல.

சித்தார்த்தனுக்கு பையன் மேல அளவு கடந்த பாசம் ஏற்பட்டுச்சி. ஆனா பையனுக்கு இந்த எளிய வாழ்க்கை பிடிக்கல. சித்தார்த்தன் எவ்வளவு முயற்சி செஞ்சாலும், பையன் கோவிச்சுகிட்டு, பணத்தை திருடிட்டு நகரத்துக்கு ஓடிப்போய்ட்டான். சித்தார்த்தன் துரத்தி நகர எல்லை வரை போனாலும், அவனை இழுத்து வர முடியாதுன்னு நினைச்சு திரும்பிடுவான்..

தன்னோட மகன் பிரிஞ்சி போன துக்கத்துல அழுவான். அன்னைக்கு இப்படித்தானே தானும் தன் அப்பாவை விட்டு வந்தப்போ, அவருக்கும் வலிச்சிருக்கும்னு நெனச்சான். காதல் தான் மிகப்பெரிய துன்பத்தை கொடுக்குதுன்னு உணர்ந்தான்.

மனசு உடைஞ்சு ஆறு ஓரத்துக்கு திரும்பியப்போ, சித்தார்த்தனுக்கு ஒரு ஆழமான உணர்வு கிடைச்சுது. ஆத்து தண்ணியை பார்த்தப்போ, “காலமே ஒரு மாயை. எல்லா கணங்களும் ஒரே நேரத்துல இருக்கு”னு புரிஞ்சுது. அவன் பையன் கூட இல்லாம இருந்தாலும், ஆறோட நித்திய ஓட்டத்துல வேற வடிவத்துல அவன் கூட இருக்கான்னு தோணுச்சு. இந்த புரிதல் அவனோட பற்றுகளை கரைச்சுது.

வாசுதேவன், சித்தார்த்தன் ஆத்தோட “ஓம்” ஒலியை கேக்குற அளவு வளர்ந்ததை பார்த்து, “என் பங்கு முடிஞ்சுது”னு சொல்லி, காட்டுக்குள்ள மறைஞ்சு போய்டுவாரு. சித்தார்த்தன் படகுக்காரனா தொடர்ந்தான். அவன் முகத்துல ஒரு அமைதியான ஒளி பரவுச்சு. ஆனா எந்த மதத்தையும் அவன் பின்பற்றல, எந்த பாதையையும் அவன் யாருக்கும் போதிக்கல.

ஆனாலும், அவனைப் பத்தி மக்கள் பெருசா பேச ஆரம்பிச்சாங்க.

பல வருஷமா புத்தரோட பாதையில இருந்தும் ஞானம் கிடைக்காத கோவிந்தன், ஞானியான படகுக்காரனைத் தேடிக்கிட்டு வருவான். அது சித்தார்த்தன்னு முதல்ல அவனுக்குத் தெரியல. அடையாளம் தெரிஞ்சதும், எனக்கும் ஞானத்தை சொல்லுன்னு கேட்டான்.

சித்தார்த்தன், “வார்த்தைகளால உண்மையை சொல்ல முடியாது. உலகத்தை அதோட குறைகளோட, முரண்களோட அப்படியே அன்பு செஞ்சு ஏத்துக்கோ, அங்க தான் ஞானம் இருக்கு”னு சொன்னான்.

கோவிந்தன் “என் நெத்தியில முத்தம் குடு”னு கேட்பான். சித்தார்த்தனும் கொடுப்பான்.

அந்த கணத்துல, கோவிந்தனுக்கு ஒரு தரிசனம் கிடைச்சுது. சித்தார்த்தனோட முகம் ஆயிரம் முகங்களா மாறுச்சு—மனுஷங்க, விலங்குகள், தெய்வங்கள், புத்தர்—எல்லாமே ஆத்து தண்ணி மாதிரி ஒருத்தருக்குள்ள ஒருத்தர்னு ஓடுச்சு. எல்லாமே ஒரே தெய்வீக ஒற்றுமையோட பகுதி. இந்த அனுபவத்துல, சித்தார்த்தன் கண்ட முழுமையை கோவிந்தனும் ஒரு கணம் உணர்ந்தான்.

சித்தார்த்தன் கோவிந்தனுக்கு சொன்ன பாடம் இது தான்...

1. அனுபவமே சிறந்த ஆசான். அறிவைப் போதித்து கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஞானத்தை அனுபவத்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

2. சித்தார்த்தன் கோவிந்தனிடம், "எல்லா உண்மையான கூற்றுக்கும் ஒரு எதிர் கூற்றும் உண்மையாக இருக்கும்" என்று கூறுகிறான். அவன் ஒரு கல்லைக் காட்டி, அது ஒரு நாள் மண்ணாக, செடியாக, விலங்காக, மனிதனாக அல்லது ஒரு புத்தனாக மாறக்கூடும் என்று விளக்குகிறான். இதன் மூலம், எல்லாமே புனிதமானது மற்றும் எல்லாவற்றிலும் அற்புத ஆற்றல் உள்ளது என்பதையும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும் உணர்த்துகிறான்.

3. வார்த்தைகள் மற்றும் மொழியினால் ஞானத்தின் முழுமையையும், உண்மையையும் வெளிப்படுத்த முடியாது.

சித்தார்த்தன் பல பாதைகள்ள பயணிச்சான்—பிராமண சடங்குகள், சமணர்களோட தவம், புத்தரோட போதனைகள், உலக இன்பங்கள். ஆனா எதையும் கண்மூடிக்கிட்டு பின்பற்றினா ஞானம் கிடைக்காதுன்னு புரிஞ்சுது. ஒவ்வொருத்தரும் தன்னோட அனுபவம், தவறுகள், துன்பங்கள் மூலமா தான் ஞானத்தைப் பெற முடியும். ஆறு ஒரு குறியீடு. எத்தனை துளிகள், ஓட்டங்கள் இருந்தாலும், ஆறு ஒன்னு தான். ஒரே ஆறு. அப்படி தான் வாழ்க்கையும், எல்லாமே ஒரு முழுமையோட பகுதி.

காலமே மாயைனு சித்தார்த்தன் உணர்ந்தான். இது அவனை பற்றுகளிலிருந்து விடுவிச்சுது. நான்னு ஒண்ணு இல்ல, எல்லாமே ஒண்ணு தான்னு அவனுக்குப் புரிஞ்சிது. இந்தப் பயணத்துல, அவன் இளமையில தேடின அமைதியையும், முழுமையையும் கண்டான்.
ஹெர்மன் ஹெஸ்ஸே 1922 - ம் ஆண்டு எழுதுன நாவல் தான் சித்தார்த்தான். இந்த நாவல் மூலமா அவர் சொல்ல வர்ரது இது தான். ஒவ்வொருத்தரோட ஆன்மீகப் பயணமும் தனித்துவமானது, ஆனா இறுதியில எல்லாரும் ஒரே இடத்துக்கு தான் வரணும். வாழ்க்கையோட ஒற்றுமையை உணர்ந்து, உலகை அப்படியே ஏத்து அன்பு செய்யுற இடத்துக்குப் போகணும்.

நாவல் எழுதப்பட்டு நூறு வருடங்கள் ஆகியிருந்தாலும் இந்தக் கதை இன்னமும் மக்கள் மத்தியில புகழ்பெற்று நிலைச்சி நிக்கிது. அது சொல்றது ஒன்னே ஒன்னு தான்.

“நீயே உன்னோட பாதையைக் கண்டுபிடிச்சிக்கோ. யாரையும் பின்பற்றி வாழ முயற்சி செய்யாம..!”

Writer C. Vetrivel
Author of Venvel Senni, Vaanavalli and karikalan