"வங்காளத்தில் கங்கைக் கரையில் நிலைகொண்டிருந்த பாலவம்சத்து மகிபாலனை வெற்றி கொண்டதுடன், அங்கிருந்த கோட்டையில் காவல் தெய்வமாக இருந்த மகிஷாசுரமர்த்தினி திருவுருவச் சிலையை எடுத்து வந்து சோழ கங்கத்தின் கரையில் காவலுக்கு நிறுத்தினான்.
அரசர்களும் பேரரசர்களும் தன் குல தெய்வத்தை வேண்டி, தான் வணங்கும் தெய்வத்தைக் காவல் தெய்வமாக எல்லையில் நிறுத்தித் தான் தன் கோட்டைகளையும், நகரங்களையும் நிர்மானிப்பார்கள். ஆனால், தன்னை எதிர்த்த மன்னர்களையும் தளபதிகளையும் வென்று, அவர்களின் கோட்டைகளையும் நகரங்களையும் கைப்பற்றி அங்குக் காவல் இருந்த தெய்வங்களைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து தனது காவல் தெய்வமாக ஆக்கிக்கொண்ட பேரரசன் இவ்வுலகில் ஒருத்தன் இருக்கிறான் என்றால், அவன் சோழப் பேரரசன் ராஜேந்திரச் சோழன் மட்டும் தான்...
சோழப் பேரரசன் ராஜேந்திரனைப் பற்றியும், அவன் உருவாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றியும் அறியாத தகவல்களை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்...!
'சோறுடைத்த சோழநாடு' என்ற பெருமைக்கு உரிய சோழ தேசத்தை ஆட்சி செய்தவர்களுள் தனிச் சிறப்பு மிக்கவன் ராஜேந்திர சோழன். இவனுடைய சாம்ராஜ்யம் 36 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரந்து விரிந்திருந்தது. இன்றைய இந்திய நிலப்பரப்பை விட சுமார் 4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு அதிகம் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு ராஜேந்திர சோழனுடையது. இவனுடைய ஆட்சிக் காலத்தில் சோழ தேசம், தற்போதைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிசா, பீகார் என்று வடக்கே வங்காளம் வரையிலும் தெற்கே இந்துமாக் கடல் கடந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுகள் வரை பரவியிருந்தது. கிழக்கே வங்கக் கடலைக் கடந்து அந்தமான் நிகோபார் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜாவா, இந்தோனேசியா, போர்னியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, பார்மோஸா என்று கிட்டத்தட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ராஜேந்திர சோழன் ஆட்சி புரிந்து அதிகாரம் செலுத்தினான். அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்த பெருமை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மட்டுமே உரியது.
1022 - 1023 - ல் கங்கை வரை படையெடுத்து பெரும் வெற்றி பெற்ற ராஜேந்திர சோழன், அந்த வெற்றியின் நினைவாக 1026 - 1027 - ல் கொள்ளிடக் கரையில் 'கங்கை கொண்ட சோழீச்சுவரர்' எனும் புதிய கோயில் எழுப்பி கங்கை நீரால் சோழீசுவரருக்கு நீராடல் செய்து, அத்துடன் 'கங்கை கொண்ட சோழபுரம்' எனும் புதிய தலைநகரை நிர்மானித்துக் குடியேறினான். அதன் பிறகு, சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு உண்டு.
கங்கை கொண்ட சோழபுரம் உருவாவதற்கு முன்பு இந்த இடம் 'வன்னியபுரம்' எனும் சிற்றூராக இருந்தது என்று கருவூர்த் தேவர் திருவிசைப்பாவில் குறிப்பிடுகிறார். குடியிருப்பு மாளிகைகள், அரண்மனை, கோட்டைகள், தோட்டங்கள், அகழி என்று தனது புதிய தலைநகரத்தைத் திட்டமிட்டு அமைத்ததைப் போன்றே காவல் தெய்வங்களுக்கும் கோயில்கள் எழுப்பியிருக்கிறான் ராஜேந்திர சோழன். புதிய தலைநகர் கங்கைகொண்ட சோழபுரத்தின் மையத்தில் 'கங்கைகொண்ட சோழீசுவரர்' கோயிலை எழுப்பி கங்கை நீரால் அபிஷேகம் செய்தவன், தலைநகரைச் சுற்றிலும் துர்கைகளைக் காவல் தெய்வங்களாகப் பிரதிஷ்டை செய்தான். கங்கை கொண்ட சோழபுரத்தின் எல்லைகளைக் காக்கும் இந்த துர்கைத் திருமேனிகள் ஒவ்வொன்றும் சாளுக்கியம், கலிங்கம், வங்காளம் என்று மற்ற நாடுகளை வீழ்த்தி வெற்றிச் சின்னங்களாகக் கொண்டு வரப்பட்டவை. ராஜேந்திர சோழன் தலைமையில் சோழர்கள் பெற்ற வெற்றியின் அடையாளமாக இன்றும் அவை கங்கை கொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றன.
கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலுக்கு மேற்கில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கனக பிள்ளையார் கோயில். இந்தக் கோயிலில் அருள்புரியும் பிள்ளையாருக்கு, 'கணக்கப் பிள்ளையார்' என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. இந்தப் பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் சுவாரஸ்யமான செவிவழிச் செய்தி ஒன்றும் கர்ணபரம்பரைக் கதையாகச் சொல்லப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 16 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த கோயில் கட்டுமான செலவுக் கணக்கை ராஜேந்திரன் அமைச்சரிடம் கேட்டிருக்கிறான். அதுவரை கணக்கு கேட்காமல் இருந்த ராஜேந்திரன், திடீரென்று கணக்குக் கேட்கவே அமைச்சர் பதறிவிட்டார். காரணம், கோயில் திருப்பணிகளின் மும்முரத்தில் வரவு செலவு கணக்கை எழுதாமல் விட்டுவிட்டார். என்ன செய்வ தென்று தெரியாத நிலையில், தான் தினமும் வழிபடும் கனக பிள்ளையாரைச் சரணடைந்து விட்டார். அன்றிரவு அமைச்சரின் கனவில் தோன்றிய கனக பிள்ளையார், 'எத்து நூல் எண்பது லட்சம்' என்று கூறிச் சென்றார். அமைச்சரும் அப்படியே 'எத்து நூல் எண்பது லட்சம்' என்று ஓலையில் எழுதிக் கொண்டு சென்று பேரரசரிடம் கொடுத்திருக்கிறார். 16 ஆண்டுகால கணக்கை மூட்டை மூட்டையாகக் கட்டி அமைச்சர் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்த ராஜேந்திரனுக்கு ஒற்றை ஓலையைப் பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது.
அதை வாங்கிப் பார்த்தான் ராஜேந்திரன். அதில் 'எத்து நூல் எண்பது லட்சம்' என்று எழுதியிருந்தது. எத்து நூல் என்றால் கற்களை அளப்பதற்குச் சிற்பிகள் பயன்படுத்தும் நூல். எத்து நூல் வாங்கிய செலவுக் கணக்கு மட்டும் 80 லட்சம் பொன் என்றால் மொத்த செலவையும் எப்படி எழுத முடியும் என்று சிந்தித்த ராஜேந்திரன் அமைச்சரை நோக்கினான். அமைச்சர் தனது தவற்றை ஒப்புக்கொண்டு கனக பிள்ளையார் கனவில் வந்து உதவியதைத் தெரிவித்தார். அன்றிலிருந்து கனக பிள்ளையார் 'கணக்க பிள்ளையார்' ஆகிவிட்டார். கோயில் செலவுக் கணக்கைத் தெரிவிக்கும் 'எத்து நூல் எண்பது லட்சம்' என்ற வரி கீழைக் கோபுர வாயிலில் தென்புறத் தூணில் பதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணக்குப் பிள்ளையாரின் பூர்விகம் நுளம்பர் நாடு. சோழர்கள் நுளம்ப நாட்டைக் கைப்பற்றியதன் நினைவாக அங்கிருந்து கொண்டுவரப்பட்டவர் இவர். இந்த விநாயகருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. பால் மற்றும் எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யும்போது பிள்ளையாரின் நிறம் மரகதப் பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.
கங்கை கொண்ட சோழபுரத்தின் மேற்கு எல்லையாக விளங்குவது 'சோழகங்கம்' எனப்படும் பொன்னேரி. இது சுமார் 4 கி.மீ நீளமும், 1 கி.மீ அகலமும் கொண்டது. இதை 'கங்கா ஜலமய ஜயஸ்தம்பம்' என்று திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. 'கங்கை நீர்மயமான வெற்றித்தூண்' என்று இதற்கு அர்த்தம். பகீரதன் தனது தவவலிமையால் கங்கையை பூமிக்குக் கொண்டுவந்தான். ராஜேந்திரன் தனது படை பலத்தினால் கங்கையைச் சோழ நாட்டுக்குக் கொண்டுவந்து 'கங்கை நீராலான சோழகங்கம்' எனும் வெற்றித் தூணாக மேற்கு எல்லையில் நிறுவினான்.
போர் தெய்வம் கொற்றவை எனப்படும் காளி தேவி. காவல் தெய்வமும் இவள்தான். பொதுவாக, கோட்டையின் காவல் தெய்வத்தை வடக்கு வாயிலில் வைத்து வழிபடுவதுதான் மரபு. அதனால் கோட்டைக் காவல் தெய்வமான காளிக்கு 'வடவாயில் செல்வி' என்ற பெயரும் உண்டு. கோட்டையை வடமொழியில் ’துர்க்கம்’ என்று அழைப்பர். அதனால் கோட்டையைக் காவல் காக்கும் காளி தேவி 'துர்கை' என்று அழைக்கப்பட்டாள். ராஜேந்திரன் மற்ற தேசங்களில் கைப்பற்றிய கோட்டைகளைக் காவல் காத்த துர்கை திருவடிவங்களைக் கொண்டுவந்து, தான் புதிதாக அமைத்த கங்கை கொண்ட சோழபுரத்தின் நான்கு திசைகளிலும் காவலுக்கு நிறுத்தினான்.
கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மேற்கில் கங்கையைக் கொண்டுவந்து வெற்றித் தூண் நிறுவிய ராஜேந்திரன், வங்காளத்தில் கங்கைக் கரையில் நிலைகொண்டிருந்த பாலவம்சத்து மகிபாலனை வெற்றி கொண்டதுடன், அங்கிருந்த கோட்டையில் காவல் தெய்வமாக இருந்த மகிஷாசுரமர்த்தினி திருவுருவச் சிலையை எடுத்து வந்து சோழ கங்கத்தின் கரையில் காவலுக்கு நிறுத்தினான். மேற்கு எல்லைக் காளியான மகிஷாசுரமர்த்தினி தற்போது கங்கை கொண்ட சோழீச்வரர் கோயிலின் முகப்பு மண்டபத்தில் காட்சி தருகிறாள்.
அன்றைய கங்கை கொண்ட சோழபுரத்தின் கிழக்கு எல்லையாக இருந்த பகுதி தற்போது செங்கல் மேடு, மண்மலை என்ற கிராமங்களாக உள்ளன. செங்கல் மேட்டில் தாமரைத் தடாகத்தின் கரையில் வீற்றிருந்து எட்டு கரங்களுடன் பிரமாண்டமான வடிவில் காட்சி தருகிறாள் செங்கல் மேட்டுக் காளி. சோழ தேசத்தைச் சேர்ந்த இவளுக்குத் துணையாக, சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டுவரப்பட்ட சாளுக்கியக் காளி அமர்த்தப்பட்டிருக்கிறாள். இத்துடன் சாளுக்கிய மற்றும் கலிங்கத்தைச் சேர்ந்த பைரவர்கள் இருவரும், பைரவிகள் இருவரும் காணப் படுகிறார்கள்.
செங்கல் மேட்டுக்குத் தெற்கே ஒரு கி.மீ தொலைவில் இருப்பது மண்மலை கிராமம். இங்கு மண்மலையின் எல்லையில் அடுத்தடுத்துக் காணப்படும் இரண்டு சுடலைகளுக்கு நடுவே இருக்கிறது மண்மலை துர்கை காளியம்மன் கோயில். ராஜேந்திர சோழன் வடக்கு நோக்கிப் படையைச் செலுத்துகையில் எதிர்ப்பட்ட கலிங்க மன்னன் மதுகாமார்ணவனை வெற்றிகொண்டதன் நினைவாக அங்கிருந்து கொண்டுவரப்பட்ட சிவப்புக் கல்லினால் செதுக்கப்பட்ட கலிங்கக் காளி இவள். ராகு காலத்தில் இந்தக் காளியை வழிபட்டால் துன்பம் அனைத்தும் விலகி அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கங்கை கொண்ட சோழபுரத்துக்குத் தெற்கே இருக்கிறது வீராரெட்டித் தெரு. இங்கு, அரச மரத்தடியில் அமைந்திருக்கும் குடிலில் எளிமையே வடிவாக அருள்புரிந்துகொண்டிருக்கிறாள் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட துர்கை. இவள் தெற்கெல்லைக் காளி.
கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து எட்டு கி.மீ வடக்கே அமைந்திருக்கிறது சலுப்பை கிராமம். இங்குக் காணப்படும் சத்திரம் அழகர் கோயிலில் குடியிருக்கிறாள் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மற்றொரு காளி தேவி. இவள் கங்கைகொண்ட சோழபுரத்தில் வடக்குக் காவல் தெய்வம். இந்த சத்திரம் அழகர் கோயிலில் மற்றொரு சிறப்பும் உண்டு. இங்குத் துறவு மேலழகர் உருவமில்லாமல் அரூப நிலையில் வழிபடப்படுகிறார். அவருக்குத் துணையாக வீரபத்திரர், முனி, மதுரைவீரன் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
நான்கு திசைகளையும் காவல் காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காளிகளுக்குத் தலைமைக் காளியாக வீற்றிருப்பவள் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலில் இருக்கும் மகிஷாசுரமர்த்தினி. இவள் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவள். எங்கும் காண இயலாத சிறப்பாக இங்கு பக்கத்துக்குப் பத்து கரங்கள் என மொத்தம் இருபது கரங்களுடன் காட்சியளிக்கிறாள். வேறு எங்கும் காணக் கிடைக்காத அற்புத தரிசனம்.
'கங்கா நதியுங் கடாரமும் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்'
என்று கலிங்கத்து பரணியில் ஜெயங்கொண்டார் போற்றிப் பாடிய பெருமைக்கு உரியவன் ராஜேந்திர சோழன். அவன், தான் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்களாக பல நாடுகளிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த துர்கை, மகிஷாசுரமர்த்தினி போன்ற தெய்வத் திருவடிவங்கள் அத்தனையும் கங்கை கொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்களாக மட்டுமல்லாமல், திக்கெட்டும் வெற்றி வாகை சூடிய ராஜேந்திரனின் மெய்க்கீர்த்திகளை காலத்துக்கும் பறைசாற்றுபவர்களாகவும் விளங்குகிறார்கள்.
தனது எதிரிகளைப் பணியச் செய்ததோடு மட்டுமல்லாமல், எதிரிகள் வழிபட்ட கடவுள்களையும் பணியச் செய்த சோழப் பேரரசன் கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திரனைப் போற்றுவோம்...