
""உன் குதிரையை அடக்க என் காளை வந்துவிட்டது!" 🐂🏎️
"உனக்கெல்லாம் இது வராது, நீ இதுக்கு லாயக்கில்லை. அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட...."
வாழ்க்கையில் நம்மள பார்த்து யாராவது இப்படி சொன்னா நாம என்ன செய்வோம்? ஒன்னு, அந்த இடத்தை விட்டுத் தலைகுனிந்து போவோம். இல்லன்னா, அவங்ககிட்ட சண்டை போடுவோம். ஆனால், வரலாற்றில் சிலர் மட்டும்தான் அந்த அவமானத்தையே எரிபொருளா மாத்தி, தன்னை அவமானப்படுத்துனவங்களே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிப்பாங்க.
அப்படிபட்ட ஒருத்தரோட கதைதான் இது. அவர் பெயர் ஃபெருச்சியோ லம்போகினி (Ferruccio Lamborghini).
கதை நடப்பது 1950-களில். ஃபெருச்சியோ லம்போகினி ஒரு வெற்றிகரமான விவசாயி: இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு விவசாயம் செழித்து வளர்ந்த நேரம் அது. ஃபெருச்சியோ லம்போகினி ஒரு மெக்கானிக் குடும்பத்தில் பிறந்தவர். போரில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் பாகங்களை வைத்து, விவசாயத்திற்குத் தேவையான டிராக்டர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார்.
அவர் சாதாரண ஆள் இல்லை; அந்த காலத்திலேயே டிராக்டர் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ஒரு பணக்காரர். கையில் நிறையப் பணம் இருந்ததால், அவருக்கு விலையுயர்ந்த சொகுசு கார்கள் மீது ஒரு தீராத காதல் இருந்தது. மெர்சிடிஸ், ஜாகுவார், மசராட்டி எனப் பல கார்களை வாங்கிக் குவித்தார்.
அப்போது இத்தாலியின் கார் உலகத்தையே தன் காலடியில் வைத்திருந்தவர் என்ஸோ ஃபெராரி (Enzo Ferrari). ஃபெராரி கார்கள் வேகம் மற்றும் ஸ்டைலுக்குப் பெயர் போனவை.
லம்போகினியும் ஆசைப்பட்டு ஒரு Ferrari 250 GT காரை வாங்கினார். ஆனால், அந்த காரை ஓட்டும்போது அவருக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அதன் 'கிளட்ச்' (Clutch) அடிக்கடி பழுதானது. ஒரு மெக்கானிக்காக இருந்த லம்போகினிக்கு இது எரிச்சலைத் தந்தது.
"இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய காரில் எப்படி இவ்வளவு மட்டமான கிளட்ச் இருக்க முடியும்?" என்று யோசித்தார்.
ஒரு நாள், பொறுக்க முடியாமல் அந்த ஃபெராரி காரின் இன்ஜினை அவரே பிரித்துப் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
தனது டிராக்டர்களில் பயன்படுத்தும் அதே சாதாரண கிளட்ச் தான், உலகின் மிக விலையுயர்ந்த ஃபெராரி காரிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் கண்டுபிடித்தார் அவர்.
"என்னடா இது! 10 ரூபாய் பொருளைப் போட்டுட்டு, 1000 ரூபாய் பில் போடுறாங்களே" என்று கோபப்பட்டார்.
இந்தக் குறையைச் சுட்டிக்காட்டவும், ஒரு வாடிக்கையாளராகச் சில ஆலோசனைகளைச் சொல்லவும், ஃபெராரி நிறுவனத்தின் ஓனர் என்ஸோ ஃபெராரியைச் சந்திக்கச் சென்றார் லம்போகினி.
லம்போகினி அவரிடம், "மிஸ்டர் ஃபெராரி, உங்கள் கார் செமையா இருக்குது. ஆனால், அதோட கிளட்ச் மட்டும் ரொம்ப மோசமாக இருக்குது. அதை எப்படிச் சரிசெய்யறதுண்ணு எனக்குத் தெரியும்" என்றார்.
அப்போது என்ஸோ ஃபெராரி வெற்றியின் உச்சத்தில் இருந்தவர். அவருக்குத் தலைக்கனம் அதிகம். அவர் லம்போகினியை மேலிருந்து கீழாகப் பார்த்தார்.
என்ஸோ ஃபெராரி ஆணவத்துடன் சொன்ன வார்த்தைகள் இவைதான்:
"பிரச்சனை என் கார்ல இல்ல. அதை ஓட்டுற டிரைவரான உன்கிட்ட தான் இருக்குது. நீ ஒரு சாதாரண விவசாயி. டிராக்டர் ஓட்டுறவன் நீ. உனக்கெல்லாம் ஸ்போர்ட்ஸ் காரைப் பத்தி என்ன தெரியும்? நீ போய் உன் வயல்ல டிராக்டர் ஓட்டுற வேலையை மட்டும் பார். கார் தயாரிக்கற வேலைய என்கிட்ட விட்டுடு.”
அந்த நொடியில் அந்த அறை நிசப்தமானது. ஒரு வாடிக்கையாளரை, ஒரு சக தொழிலதிபரை இவ்வளவு கேவலமாக யாரும் பேசியிருக்க முடியாது.
வேறு யாராக இருந்திருந்தாலும், அந்த இடத்தை விட்டு அழுதுகொண்டே சென்றிருப்பார்கள். ஆனால், ஃபெருச்சியோ லம்போகினிக்குத் தன்மானத்தில் அடி விழுந்தது. அந்த வலி அவருக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது.
அவர் வீட்டிற்குத் திரும்பினார்.
"நான் யார்னு அந்த முட்டாப் பயலுக்குக் காட்டுறேன். ஒரு டிராக்டர் மெக்கானிக்கால, ஃபெராரியை விடச் சிறந்த, காரை உருவாக்க முடியும்னு நிரூபிக்கிறேன்” லம்போகினி சபதம் எடுத்தார்.
ஊரே அவரைப் பார்த்துச் சிரித்தது.
"டிராக்டர் என்பது மண்ணில் ஊர்வது; ஸ்போர்ட்ஸ் கார் என்பது காற்றில் பறப்பது. இவனால் எப்படி அதைச் செய்ய முடியும்?" என்று ஏளனம் பேசினார்கள்.
ஆனால், லம்போகினி எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தனது டிராக்டர் ஃபேக்டரியின் ஒரு பகுதியில், கார் தயாரிக்கும் வேலையைத் தொடங்கினார். ஃபெராரியால் அவமதிக்கப்பட்டு வெளியேறிய சிறந்த இன்ஜினியர்களைத் தன்னிடம் வேலைக்குச் சேர்த்தார்.
பகலும் இரவும் உழைத்தார்கள். வெறும் நான்கே மாதங்கள்! ஆம், நான்கே மாதங்களில், 1963-ல் டியூரின் ஆட்டோ ஷோவில் ஒரு புது கார் அறிமுகமானது.
அதன் பெயர்: Lamborghini 350 GTV.
அந்த கார், ஃபெராரியை விட வேகமானது. ஃபெராரியை விடச் சொகுசானது. மிக முக்கியமாக, ஃபெராரியில் இருந்த அந்த கிளட்ச் பிரச்சனை இதில் இல்லை!
உலகம் மிரண்டு போனது. ஒரு டிராக்டர் கம்பெனி முதலாளி, உலகின் நம்பர் ஒன் கார் நிறுவனத்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திக் காட்டினார்.
ஃபெராரியின் சின்னம் 'துள்ளும் குதிரை' (Prancing Horse). லம்போகினி தனது கார்களுக்குத் தேர்ந்தெடுத்த சின்னம் 'சீறும் காளை' (Raging Bull). ஏனென்றால், ஃபெருச்சியோவின் ராசி ரிஷபம்.
அதுமட்டுமல்ல, "உன் குதிரையை அடக்க என் காளை வந்துவிட்டது" என்று குறியீட்டு ரீதியாகவும் ஃபெராரிக்குச் சவால் விட்டார்.
லம்போகினியின் வருகை, ஃபெராரி சாம்ராஜ்ஜியத்தில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியது. என்ஸோ ஃபெராரி சாதாரணமாக நினைத்த அந்த 'விவசாயி', அவரை வியாபார ரீதியாக மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியாகவும் திணறடித்தார்.
1. உலகின் முதல் 'சூப்பர்கார்' - மியூரா (Miura): 1966-ல் லம்போகினி வெளியிட்ட 'மியூரா' (Miura) என்ற கார், உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. அதுவரை ஸ்போர்ட்ஸ் கார்களில் இன்ஜின் முன்பக்கம்தான் இருக்கும். ஆனால், மியூரா தான் உலகின் முதல் முறையாக 'மிட்-இன்ஜின்' (Mid-engine) வடிவமைப்பைக் கொண்டுவந்தது. அதாவது, டிரைவருக்குப் பின்னால் இன்ஜின் இருக்கும். இந்த வடிவமைப்பு, காரின் வேகத்தையும், கட்டுப்பாட்டையும் பல மடங்கு அதிகரித்தது. இதுதான் உலகின் முதல் ’சூப்பர்கார்’ (Supercar) என்று அழைக்கப்படுகிறது. ஃபெராரி இதை எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் பழைய டிசைனை வைத்துக்கொண்டு தடுமாறினார்கள்.
2. கவுன்டாக் (Countach) - எதிர்காலத்தின் கார்: 1970-களில் லம்போகினி வெளியிட்ட 'கவுன்டாக்' (Countach) கார், வேற்றுகிரகத்து வாகனம் போல இருந்தது. அதன் கூர்மையான டிசைன் மற்றும் மேல்நோக்கித் திறக்கும் கதவுகள் (Scissor doors) இளைஞர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தது. அந்த காலகட்டத்தில், ஒவ்வொரு சிறுவனின் படுக்கையறையிலும் ஃபெராரியை விட, லம்போகினி கவுன்டாக்கின் போஸ்டர்தான் அதிகம் ஒட்டப்பட்டிருந்தது. ஃபெராரி தனது இளைய தலைமுறை ரசிகர்களை லம்போகினியிடம் பறிகொடுத்தது.
3. சொகுசு + வேகம்: என்ஸோ ஃபெராரிக்கு ரேஸ் (Race) மீதுதான் ஆர்வம் அதிகம். அதனால், அவர் தயாரித்த சாலை கார்கள் (Road cars) ஓட்டுவதற்குச் சிரமமாக, சத்தமாக இருக்கும். ஆனால், லம்போகினி ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார்: "என் கார் வேகமாக மட்டும் இருந்தால் போதாது; அது ஓட்டுவதற்குச் சொகுசாகவும் இருக்க வேண்டும்."
இதனால், பணக்கார வாடிக்கையாளர்கள் பலர், தினமும் ஓட்டுவதற்கு ஃபெராரியை விட லம்போகினியையே விரும்பத் தொடங்கினர்.
லம்போகினியின் இந்த அதிரடி வளர்ச்சியால், ஃபெராரி தனது விற்பனையிலும், புகழிலும் ஒரு பெரிய சறுக்கலைச் சந்தித்தது. தான் அவமானப்படுத்திய அந்த 'விவசாயி'யை, தன் வாழ்நாளின் இறுதி வரை ஒரு பயங்கரமான போட்டியாளராகவே பார்க்க வேண்டிய நிலை என்ஸோ ஃபெராரிக்கு ஏற்பட்டது.
இன்று லம்போகினி என்பது வெறும் கார் மட்டுமல்ல; அது வெற்றியின் அடையாளம். சொகுசின் உச்சம்.
ஆனால், அதன் விதை எங்கே விழுந்தது தெரியுமா? என்ஸோ ஃபெராரி உதிர்த்த அந்த ஒரு திமிர் பிடித்த வார்த்தையில் தான்.
"நீ ஒரு விவசாயி, உனக்குத் தகுதியில்லை" என்று அன்று ஃபெராரி சொல்லியிருக்காவிட்டால், இன்று லம்போகினி என்ற காரே பிறந்திருக்காது.
உங்களை யாராவது அவமானப்படுத்தினால், "நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட" என்று ஒதுக்கினால், வருத்தப்படாதீர்கள். அந்த அவமானத்தைத் துடைக்க வார்த்தைகளைச் செலவாக்காதீர்கள். அதை உங்கள் வளர்ச்சிக்கான எரிபொருளாக மாற்றுங்கள்.
உங்கள் வெற்றி எவ்வளவு சத்தமாக இருக்க வேண்டும் என்றால், உங்களை நிராகரித்தவர்கள், அந்த வெற்றியின் ஓசையில் காதைப் பொத்திக்கொள்ள வேண்டும்!
"அவமானங்கள் உங்களைத் தடுக்கும் கற்கள் அல்ல; அவை நீங்கள் கட்டி எழுப்பப் போகும் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரக் கற்கள்!"
#Lamborghini #Ferrari #SuccessStory #Motivation #Business #History #NeverGiveUp #TamilPost #Inspiration #CarLovers