✨ கனவுகள், புதையல் & பயணம் – The Alchemist Summary (Tamil)

Sun Jul 20, 2025

The Alchemist Book Summary (Tamil)

"ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கு. அதை நோக்கிப் பயணிக்கும்போது, உலகமே உனக்கு உதவி செய்யும். ஆனா, அதுக்கு நீ முதல் அடி எடுத்து வைக்கணும்.

ஸ்பெயின், ஆண்டலூசியாவின் பசுமையான மலைப் பகுதில, சாண்டியாகோ எனும் இளைஞன் தன் ஆடுகளோட மகிழ்ச்சியா திருப்தியா வாழ்ந்துகிட்டு இருந்தான். அவனுக்கு வயசு எப்படியும் இருபது இருக்கும். மெலிந்த உடல், கருத்த கண்கள், காற்றில் பறக்கும் கருப்பு முடி இதுதான் அவனோட அடையாளம். அவனோட அப்பா அவன் ஒரு பாதிரியாரா ஆகணும்னு ஆசைப்பட்டாரு. ஆனால், அவனோட கனவு வேற மாதிரி இருந்துச்சு. அவனுக்கு உலகம் முழுக்க சுத்தணும், புதிய இடங்களை ஆராயணும்னு ஆசைப்பட்டான். அதனால தான் அவன் ஆடுகளை வாங்கி இடையனா மாறுனான். ஆடுகள் போற இடம் எல்லாம் இவனாலையும் போக முடியும். அவன் ஆடுகளோட பயணிக்கும் போது, அவனுக்கு இயற்கையோட ஒரு தனி உறவு இருந்துச்சி. ஆடுகளோட மொழியைப் புரிஞ்சிகிட்டவன், ஆடுங்ககூட பேசுறது போலவே வாழ்ந்தான்.

பகலெல்லாம் பசுமையான புல்வெளிகளிலும், பழமையான அத்தி மர நிழல்களிலும் ஆடுகளை மேய்ச்சவன், வாழ்க்கையோட எளிமையிலேயே மகிழ்ச்சியைக் கண்டான். ஆனா, இரவு ஆனா, ஒரு இடிஞ்ச தேவாலயத்துல இருந்த சிக்கிமாரோ மரம்னு அழைக்கப்பட்ட அத்தி மர நிழலில் தூங்கும்போது, ஒரே கனவு அவனுக்குத் திரும்பத் திரும்ப வந்து, அவனை ஆட்டி வைச்சுது.

ஒரு குழந்தை அவனை எகிப்து பிரமிடுகளுக்கு கூட்டிட்டுப் போய், அங்க ஒரு மறைஞ்ச புதையல் இருக்குனு சொல்லும்.

இந்தக் கனவு அவனை அசைச்சுப் போட்டு, பதறவைச்சுது. அதோட பொருளைத் தெரிஞ்சுக்க, டாரிஃபா நகரத்துக்கு போய் ஒரு குறி சொல்ற ஜிப்ஸி பாட்டியைச் சந்திச்சான். அந்தப் பாட்டி, கண்ணு கூர்மையா, நேரடியா பேசி, "கனவுகள் எல்லாம் கடவுளோட மொழி. அவர் நம்ம மொழியில பேசினா, நான் அதை விளக்குவேன். ஆனா ஆன்மாவோட மொழியில பேசினா, நீயேதான் புரிஞ்சுக்கணும்"னு சொன்னா.

அவனோட கனவு ஒரு தீர்க்கதரிசனம், பிரமிடுகளுக்கு போய் புதையலைக் கண்டுபிடிச்சு செல்வந்தனாகணும்னு சொல்லுவா. அத்தோட இல்லாம, புதையல் கிடைச்சா அதுல பத்தில் ஒரு பங்கு தனக்கு வேணும்னு கேட்டா.

சாண்டியாகோவும் புதையல் கிடைச்சா, குறி சொன்ன பாட்டிக்கு பத்துல ஒரு பங்கு கொடுக்கறதா சொல்லிட்டு வந்துடுவான்.

சாண்டியாகோ தயக்கத்தோட, என்ன செய்யறதுன்னு முடிவெடுக்க முடியாம டாரிஃபாவோட பரபரப்பான சந்தைத் தெருவுல ஒரு பெஞ்சுல உக்காந்து புத்தகம் படிச்சுட்டு இருப்பான். அப்போ, விசித்திரமான உடையில ஒரு முதியவர் வந்து அவன் பக்கத்துல உட்காருந்து, பேச ஆரம்பிச்சார். அவரோட பேரு மெல்குயிசெடெஸ், சேலேமோட அரசர்னு சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டாரு. அவர் மர்மமா தெரிஞ்சாரு.

சாண்டியாகோவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவர் அவனோட வாழ்க்கை, கனவு எல்லாத்தையும் துல்லியமா தெரிஞ்சு வச்சிருந்தார். அது இன்னமும் அவனை கலவரப்படுத்துச்சி.

ஆனாலும், சாண்டியாகோவுக்கு ஒரு விசேஷமான உணர்வை ஏற்படுத்துனாரு. மெல்குயிசெடெஸ் அவனிடம் “தனிப்பட்ட புராணம்” (Personal Legend) பற்றி பேசினாரு.

“ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கு. அதை நோக்கிப் பயணிக்கும்போது, உலகமே உனக்கு உதவி செய்யும். ஆனா, அதுக்கு நீ முதல் அடி எடுத்து வைக்கணும்,” என்று சொன்னாரு.

அவர் 'உலகத்தோட ஆன்மா'னு ஒரு பிரபஞ்ச சக்தியைப் பத்தி பேசினாரு. எல்லாத்தையும் இணைக்கிற இந்த சக்தி, ஒருத்தரோட தனிப்பட்ட இலட்சியத்தை நிறைவேத்த உதவும்னு சொன்னாரு. சாண்டியாகோவோட புதையல் கனவு, அவனோட இலட்சியம்னு எல்லாத்தையும் வெளிப்படுத்தினாரு.

“ஆனா, பலரும் வயசாகும்போது இந்த இலட்சியத்தை விட்டுடறாங்க, சமூக அழுத்தமோ, தடைகளோ அவங்களை தோற்கடிக்குது”ன்னு வருத்தப்பட்டார்.

"தனிப்பட்ட இலட்சியத்தை அடையறதுதான் அவனோட ஒரே கடமை,"னு சாண்டியாகோவுக்கு உறுதியா சொன்னாரு.

"நீ ஒரு விஷயத்தை மனசார விரும்பினா, முழு பிரபஞ்சமும் அதை அடைய உனக்கு உதவ சதி செய்யும்."

அவனுக்கு வழிகாட்ட, மெல்கிசெடெக் உரிம், தும்மிம்னு ரெண்டு கற்களைக் கொடுத்தார்.ஒண்ணு கருப்பு, இன்னொன்னு வெள்ளை. முடிவெடுக்க முடியாதபோது இவை சகுனங்களைப் படிக்க உதவும்னு சொன்னாரு. அவர் இன்னொரு நிபந்தனையும் வச்சாரு: சாண்டியாகோ தன் ஆடுகளில் பத்தில் ஒரு பங்கை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று. சாண்டியாகோ ஒப்புக்கொண்டான். அவனோட மனசு இப்போ தெளிவடைய ஆரம்பிச்சிது.

தன் கனவை நோக்கிப் பயணிக்க முடிவு செய்தான்.

புது உற்சாகத்தோட, தன் ஆடுகள் எல்லாத்தையும் ஒரு நண்பருக்கு வித்துட்டு, சாண்டியாகோ ஜிப்ரால்டர் வழியா மொரோக்கோவுல இருக்குற டாஞ்சியருக்கு படகு டிக்கெட் வாங்கினான். கப்பல் வர காத்திருக்கும்போது, சாண்டியாகோ ஆடு மேய்ச்சி வாழற பாதுகாப்பான வாழ்க்கைய விட்டுட்டு, ஒரு கனவுக்காக பயணிக்கிற முடிவைப் பத்தி யோசிச்சான். பாக்கெட்ல உரிம், தும்மிமோட எடை, பிரபஞ்சம் உதவும்னு அரசர் சொன்ன வாக்கை நினைவுபடுத்திச்சு. 

கப்பல் வழியா பயணம் செஞ்சி, மொரோக்கோ டாஞ்சியர்ல இறங்கினவுடனே, சாண்டியாகோ ஒரு அந்நிய உலகத்தைப் பார்த்தான். அரபி தெரியல, அங்க இருந்த யாரையும் தெரியல, தனிமையா உணர்ந்தான். அப்போ, ஒரு இளைஞன் பிரமிடுகளுக்கு வழிகாட்டுறேன்னு முன்வந்தான். ஸ்பானிஷ் பேசுறவனைப் பார்த்து நிம்மதியடைஞ்ச சாண்டியாகோ, அவனை மெடினாவோட சிக்கலான தெருக்களில் நம்பிக்கையோட பின்தொடர்ந்தான். தன்கிட்ட இருந்த பணத்தை சாண்டியாகோ பெருமையா அவன்கிட்ட காட்டினான் - ஆடுகளை வித்து வந்த பணம் அது. ஆனா, அந்தக் கூட்டம் நிரம்பி வழிஞ்ச தெருக்கள் வழியா அந்த இளைஞன் கூட போகும் போது, ஒரு நொடியில, அந்த வழிகாட்டி பணத்தைத் திருடிக்கிட்டு ஓடிப்போய்டுவான். சாண்டியாகோவை அந்நிய நாட்டுல மொழி தெரியாத, ஆள் தெரியாத ஊர்ல ஆதரவு இல்லாம நிப்பான்.

நொறுங்கிப்போன சாண்டியாகோ, சந்தையில அழுது, தன்னை முட்டாள்னு, தோல்வியடைஞ்சவன்னு நினைச்சு கவலைப் பட்டான்.. ஸ்பெயினுக்கு திரும்பி, ஆடு மேய்க்கற ஆட்டிடையன் வாழ்க்கைக்கு போயிடலாம்னு யோசிச்சான். ஆனா, மெல்கிசெடெக்கோட வார்த்தைகள் - சகுனங்கள், பிரபஞ்சத்தோட உதவி - நினைவுக்கு வந்தது. சந்தையைச் சுத்தி பார்க்கும்போது, ஒரு பளிங்கு கடையைப் பார்த்தான். வேலை தேடி, பளிங்கை சுத்தம் செய்ய முன்வந்தான், வாடிக்கையாளர்களை கவரலாம்னு நினைச்சான்.

முப்பது வருஷமா அந்த அமைதியான மலையில தன்னோட பளிங்கு கடைய நடத்தி வந்த முஸ்லிம் வணிகர், முதல்ல சாண்டியாகோ மேல சந்தேகமா இருந்தாலும், அவனோட வேலைக்கு பதிலா சாப்பாடு கொடுக்க ஒத்துக்கிட்டார். அன்னைக்கு, சாண்டியாகோ கடையில இருக்குற எல்லா பளிங்கு பொருட்களையும் சூரிய வெளிச்சத்துல மின்னுற அளவுக்கு சுத்தம் செஞ்சு மெருகூட்டினான். ரெண்டு வாடிக்கையாளர்கள் வந்து பளிங்கு வாங்கிட்டுப் போனாங்க. இதை நல்ல சகுனமா பார்த்த வணிகர், சாண்டியாகோவை நிரந்தரமா வேலைக்கு வச்சுக்கிட்டார். அவனுக்கு சாப்பாடு போட்டு, தங்க இடம் கொடுத்த நல்ல சம்பளமும் கொடுத்தாரு.

கடையில வேலை செஞ்சுக்கிட்டே, சாண்டியாகோ முன்னேறுற வழிகளை கவனிக்க ஆரம்பிச்சான். மலை மேல ஏறி வர்ற களைப்பான பயணிகளுக்கு, பளிங்கு கிளாஸ்ல தேநீர் விக்கலாம்னு ஒரு புது யோசனை சொன்னான். இது கடையோட வியாபாரத்தை அமர்க்களமா உயர்த்திச்சு. காட்சி பெட்டியை தெரு வரை நீட்டி, கடைய பளபளப்பா மாத்தி எல்லாரையும் வரவேற்கிற மாதிரி மாத்தணும்னு முன்மொழிஞ்சான். ஒவ்வொரு யோசனையும் வெற்றி பெற, வணிகரோட கடை செழிக்க ஆரம்பிச்சிது, சாண்டியாகோ எகிப்து பயணத்துக்குப் பணம் சேர்க்க ஆரம்பிச்சான்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் இப்படியே ஓடிப்போச்சு. சாண்டியாகோ, ஸ்பெயினுக்கு திரும்பி, முன்ன இருந்தத விட ரெண்டு மடங்கு ஆடுகளை வாங்குற அளவுக்கு பணம் சேர்த்திருந்தான். ஆனா, முன்னோடி ஆடு மேய்ச்ச வாழ்க்கையோட மகிழ்ச்சி இப்போ அவனுக்கு அவ்வளவு கவர்ச்சியா தெரியல. தன்னோட இலட்சியத்தை தொடரணும்னு மனசு சொல்லிச்சு. பளிங்கு வணிகர், சாண்டியாகோவை அன்போட பார்த்தாலும், அவனோட தனிப்பட்ட இலட்சியத்தை புரிஞ்சுக்கிட்டார். அவரே மெக்காவுக்கு யாத்திரை போகணும்னு கனவு கண்டவர், ஆனா அந்த எண்ணத்தை இப்போ அவர் கை விட்டுட்டவர். அதனால, அவரு சாண்டியாகோவோட பயணத்துக்கு ஊக்கமளிச்சாரு.

சேமிச்ச பணத்தோட, சாண்டியாகோ சஹாரா பாலைவனத்தைக் கடந்து எகிப்து போற ஒரு வணிகக் கூட்டத்துல சேர்ந்தான். அந்தக் கூட்டம் தயாராகுற கிடங்குல, புத்தகங்களுக்கு நடுவுல இருந்த ஒரு ஆங்கிலேயரை சந்திச்சான். அவர் இரசவாதம் படிச்சுக்கிட்டு, அல்-ஃபயூம் ஓயாசிஸ்ல இருக்குற இருநூறு வருஷமா வாழுற இரசவாதியை தேடுறதா சொன்னார். அந்த இரசவாதி மருத்துவத்துல கை தேர்ந்தவர், பித்தளைய தங்கமா மாத்துவார்னு சொன்னான் அந்த ஆங்கிலேயன்.

வணிகக் கூட்டம் பாலைவனத்து பயணத்துல, சாண்டியாகோவும் ஆங்கிலேயரும் அவங்க தேடல்களைப் பத்தி பேசினாங்க. ஆங்கிலேயர் எப்போதும் ரசவாதம் பத்தி மட்டும் தான் பேசுனாரு. ஆனா, சாண்டியாகோ இயற்கையில சகுனங்களைப் படிக்கவும், உள்ளுணர்வை நம்பவும் கத்துக்கிட்டவன். ஆங்கிலேயரோட கடுமையான அறிவு, சாண்டியாகோவோட உலகத்தை உணர்ந்து புரிஞ்சுக்குற இயல்பான புரிதலோட ஒப்பிடப்பட்டது.

எல்லாரும் சகானா பாலைவனம் வழியா கூட்டுவண்டில போய்கிட்டு இருந்தாங்க. அப்போ, வணிகக் கூட்டத் தலைவர், பாலைவனத்துல பழங்குடி போர்கள் பத்தி எச்சரிச்சாரு. பயணிகள் கடுமையான பாலைவனத்தைக் கடக்கும்போது எச்சரிக்கையோட இருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்துல, சாண்டியாகோ ஒட்டக ஓட்டிகள்கிட்ட அரபி கத்துக்க ஆரம்பிச்சான். ஆங்கிலேயர்கூட இரசவாதம் பத்தி பேச்சை தொடர்ந்தான்.

ஆங்கிலேயர், 'மாஸ்டர் வொர்க்' பத்தி சொன்னார் - உலோகங்களை சுத்திகரிச்சு ஈயத்தை தங்கமா மாத்துற தத்துவஞானிகளோட கல், எல்லா நோயையும் குணப்படுத்துற ஜீவ எலிக்ஸிர், இவையும் ஆன்மீக சுத்திகரிப்பும் ஒரு தொடர்புல இருக்குனு விளக்கினார்.

பல நாள் பயணத்துக்கு பிறகு, வணிகக் கூட்டம் அல்-ஃபயூம் ஓயாசிஸை அடைஞ்சுது. பேரீச்ச மரங்களும் கிணறுகளும் நிறைஞ்ச, பல நூறு மக்களுக்கு அடைக்கலம் தர்ற செழிப்பான இடம். அங்க, சாண்டியாகோ முதல் முறையா ஃபாத்திமாவை பார்த்தான் - கிணற்றுல தண்ணி எடுக்க வந்த பாலைவனப் பெண் அவ, அப்போ அவங்களோட கண்ணும் கண்ணும் சந்திச்சுது. சாண்டியாகோ, இதுவரை உணராத ஒரு ஆழமான காதலை அவகிட்ட உணர்ந்தான் - உலகத்தோட மொழியில பேசின காதல், பாலைவனத்தை மணல் கடலாக்கி, சூரியனை வழிகாட்டி விளக்காக மாத்தின காதல்.

தினமும், சாண்டியாகோ ஃபாத்திமாவை பார்க்க கிணற்று பக்கமா காத்திருந்தான். அவங்க வாழ்க்கை, கனவுகளைப் பத்தி பேசினாங்க. பிரமிடுகள்ல புதையல் தேடுறதைப் பத்தி அவன் சொன்னப்போ, ஃபாத்திமா அவனோட இலட்சியத்தோட முக்கியத்துவத்தை உடனே புரிஞ்சுக்கிட்டா. மத்தவங்களை மாதிரி அவகூடவே தங்கிக்கச் சொல்லாம, "பயணத்தை முடிச்சுட்டு திரும்பி வா, நான் உனக்காகக் காத்திருப்பேன்"னு சொன்னா.

"பாலைவனம் நம்ம ஆளுங்களை எடுத்துக்கிட்டு எப்பவும் திருப்பி அனுப்பாது. ஆனாலும் நாங்க அதை ஏத்துக்கறோம். நீ நிச்சயம் திரும்பி வா,"னு உறுதியளிச்சா.

இதற்கிடையில, ஆங்கிலேயர் இரசவாதியை தேடி அலைஞ்சு, கொஞ்சம் வெற்றி கிடைச்சுது. ஆனா, சாண்டியாகோவுக்கு வேற மாதிரி அனுபவம் காத்திருந்தது. ஒரு மாலை நேரத்துல, ஓயாசிஸோட விளிம்புல உக்காந்திருக்கும்போது வானத்துல இரண்டு பாலைவனக் கழுகுகள் சண்டை பொடும். அப்போ அவனுக்கு ஒரு வினோதமான காட்சி மனசுல தோன்றி மறையும். ஒரு படை இந்த அமைதியான இடத்தை தாக்குற மாதிரி தோனுச்சி. உரிம், தும்மிம் கற்களோட வழிகாட்டுதலை பின்பற்றி, அவன் இந்த எச்சரிக்கையை ஓயாசிஸ் தலைவர்களுக்கு சொன்னான்.

அந்நியர்கள் வார்த்தையை கேக்கணும்னு சொல்லுற பழைய பாரம்பரியத்தால, அவனோட எச்சரிக்கையை அவங்க சீரியஸா எடுத்துக்கிட்டாங்க.

ஓயாசிஸ் எதிர் தாக்குதலுக்கு தயாரானது. பெண்கள், குழந்தைகள் எல்லாத்தையும் பாதுகாப்பான இடத்துல தங்க வச்சாங்க. ஓயாசிஸ்ல இருந்தவங்க பாலைவனச் சோலைல பதுங்கி ஆயுதங்களோட தயாரா இருந்தாங்க. சாண்டியாகோ சொன்ன மாதிரியே ஒரு மாலை நேரப் பொழுதுல, ஐந்நூறு ஆயுதமேந்திய பழங்குடியினர் ஓயாசிஸ தாக்க தயாரா வந்தாங்க. அவுங்களத் தாக்குறதுக்குத் தயாரா காத்திருந்த ஓயாசிஸ் பாதுகாவலர்கள் உடனே தாக்குதல் தொடுத்து, அவங்களை சுலபமா தோற்கடிச்சாங்க.

நன்றி நிறைஞ்ச ஓயாசிஸ் தலைவர்கள், சாண்டியாகோவுக்கு தங்கமா வெகுமதி கொடுத்து, ஓயாசிஸோட ஆலோசகர் பதவியையும் வழங்கினாங்க. போர்க்காலத்துல, இரசவாதி மாதிரியான முக்கியமான ஆளுங்க மட்டுமே பாலைவனத்துல சுதந்திரமா நடமாட முடியும்னு சொன்னாங்க.

அன்னிக்கு இரவு, கருப்பு உடையில, தோள்ல ஒரு பருந்தோட வந்த குதிரை வீரர் ஒருத்தரு சாண்டியாகோ முன்னால நின்னார். அவர் தான் இரசவாதி! சாண்டியாகோவை கவனிச்சு வந்தவரு, அவன் இரசவாதக் கலைகளுக்கு தகுதியான சீடன்னு உணர்ந்தாரு. சாண்டியாகோ புதையலை கண்டுபிடிக்க முடியும்னு சகுனங்கள் காட்டுதுன்னு தெரிஞ்சிகிட்டவர், பிரமிடுகளுக்கு வழிகாட்ட முன்வந்தார்.

ஆங்கிலேயர், இரசவாதி வந்ததை கேள்விப்பட்டு, சந்திக்க ஆசைப்பட்டார். ஆனா, அவருக்கு அவர் எதிர்பார்த்த பதில் கிடைக்கல. ஏமாற்றமடைஞ்ச ஆங்கிலேயர், நடைமுறை இல்லாத அறிவு முழுமையில்லைனு புரிஞ்சுக்கிட்டு, வேற இடத்துக்கு தன் ஆராய்ச்சிய தொடர புறப்பட்டார்.

சாண்டியாகோ, ஃபாத்திமாவுக்கு உருக்கமா விடை கொடுத்து, திரும்பி வரேன்னு வாக்கு கொடுத்தான்.

இரசவாதி, "நீ உன் இலட்சியத்தோட பகுதியா இருந்தா, அவ புரிஞ்சுப்பா,"னு நினைவுபடுத்தினார்.

ரெண்டு பேரும் பிரமிடுகளை நோக்கி பாலைவனத்தைக் கடந்து பயணிச்சாங்க. வழியில ஆல்கெமிஸ்ட் சாண்டியாகோவுக்கு வெறும் வார்த்தைய விட, அனுபவத்தோட கத்துக்கொடுக்கறாரு.

அவர் சொல்லித்தர்ற முக்கியமான விஷயங்கள்:

உலகத்தோட ஆன்மாவ புரிஞ்சுக்கறது:

  • “இந்த உலகத்துல எல்லாமே ஒரே ஆன்மாவோட பாகங்கள்தான்—நீ, நான், காற்று, மரம், பாலைவனம் எல்லாம்.” இந்த உலகத்தோட ஆன்மாவோட ஒரு கனெக்ஷன் வச்சுக்கிட்டா, எதுவுமே சாதிக்க முடியும்னு சாண்டியாகோவுக்கு புரிய வைக்கறாரு. இது அவனுக்கு இயற்கையோட இணைஞ்சு பயணிக்க உதவுது.

மனச கேட்க கத்துக்கொடுக்கறது:

  • “எப்பவுமே உன் மனச கேளு, அது உனக்கு சரியான வழிய காட்டும்”னு ஆல்கெமிஸ்ட் அடிக்கடி சொல்றாரு. மனசு உலகத்தோட ஆன்மாவோட பேசும்னு சொல்லி, சாண்டியாகோவுக்கு தன்னோட உள்ளுணர்வை நம்ப கத்துக்கொடுக்கறாரு. குழப்பமோ, பயமோ வந்தாலும், மனசு சொல்றத பின்பற்றணும்னு உறுதியா சொல்றாரு.

பயத்தை ஜெயிக்கற வழி:

  • “பயம் உன்னோட கனவுக்கு நடுவுல வரும், ஆனா அத மீறி போனாதான் உன்னோட இலக்கு உனக்காகக் காத்திருக்கும்”னு ஆல்கெமிஸ்ட் சொல்றாரு.

ரசவாதத்தோட உண்மையான அர்த்தம்:

“ரசவாதம்னா பொருள மாத்தறது மட்டுமில்ல, உன்னோட ஆன்மாவ மேம்படுத்தறதுதான்.” ஈயத்த தங்கமா மாத்தறது பத்தி பேசும்போது, இது உண்மையில ஒரு ஆன்மீக மாற்றம்னு சாண்டியாகோவுக்கு புரிய வைக்கறாரு. இது அவனுக்கு வாழ்க்கையோட ஆழமான புரிதலை கொடுக்குது.

அறிகுறிகள புரிஞ்சுக்கறது:

“நீ உன்னோட கனவை தொடர்ந்தா, உலகம் உனக்கு அறிகுறிகள அனுப்பும். அத கவனிச்சு பின்பற்று”னு ஆல்கெமிஸ்ட் சொல்றாரு. இந்த அறிகுறிகள புரிஞ்சு, சரியான முடிவெடுக்க சாண்டியாகோவுக்கு கத்துக்கொடுக்கறாரு. உதாரணமா, பயணத்துல வர்ற சின்ன சின்ன விஷயங்கள் வழிகாட்டியா இருக்கும்னு சொல்றாரு.

தனிப்பட்ட கனவை நிறைவேத்தறது:

சாண்டியாகோவோட “தனிப்பட்ட புராணம்” (Personal Legend) பத்தி ஆல்கெமிஸ்ட் மறுபடி உறுதிப்படுத்தறாரு. “நீ உன்னோட உண்மையான கனவை தொடர்ந்தாதான் உன் வாழ்க்கை நிறைவடையும்”னு சொல்றாரு. இது சாண்டியாகோவுக்கு தன்னோட இலக்கை மறக்காம இருக்க உதவுது, குறிப்பா ஃபாத்திமாவ பார்த்து அவனுக்கு தயக்கம் வரும்போது.

இயற்கையோட சக்திய பயன்படுத்தறது:

உலகத்தோட ஆன்மாவோட இணைஞ்சா, காற்று, சூரியன், பாலைவனம்னு எல்லாமே உனக்கு உதவும்னு சொல்றாரு. சாண்டியாகோ இத செயல்படுத்தி, ஒரு அதிசயத்தை நிகழ்த்தறான், இது அவனுக்கு உலகத்தோட சக்திய புரிய வைக்குது.

இந்த மாதிரி பல விஷயங்களைக் கத்துக்கிட்டே சாண்டியாகோ அவர் கூட பயணம் மேற்கொண்டான். அவுங்களோட பயணம் போரிடுற பழங்குடியினர் கட்டுப்படுத்துற பகுதிகள வழியா போச்சு. ஒரு கட்டத்துல, போர்வீரர்கள் அவங்களை சிறைபிடிச்சு, கொல்லப் போறதா மிரட்டுறாங்க. இரசவாதி, அமைதியா, பழங்குடித் தலைவர்கிட்ட சாண்டியாகோ ஒரு இரசவாதின்னும், ஒரே காற்று வீச்சுல முகாமை அழிச்சு, தன்னை காற்றா மாத்த முடியும்னு சொன்னார். சந்தேகப்பட்டாலும் ஆர்வமான தலைவர், சாண்டியாகோவுக்கு மூணு நாள் நேரம் கொடுத்தார். அவங்க உயிரு தராசுல தொங்கிச்சு.

ரெண்டு நாளா, சாண்டியாகோ காற்றாக மாற முயற்சி செஞ்சி பாலைவனத்தோட பேசினான். மணல், காற்று, இறுதியா சூரியன்கிட்டயே பேசி, தன் தேவையையும், அன்போட மாற்றும் சக்தியையும் விளக்கினான்.

அந்த தூய தருணத்துல, உலகத்தோட ஆன்மாவோட தொடர்புல, சாண்டியாகோ படைப்புகளோட ஒற்றுமையை உணர்ந்தான்.

மூணாவது நாள், பழங்குடியினர் முன்னால, சாண்டியாகோ மணல்ல கைய வச்சு பிரார்த்தனை செஞ்சான். காற்று வீச ஆரம்பிச்சுது, மெல்ல மெல்ல வீசுன காத்து பிறகு பலமா அடிக்க ஆரம்பிச்சிது. ஒரு பெரிய மணல் புயல் முகாமை சூழ்ந்தது. புயல் அடங்கினப்போ, சாண்டியாகோ தொடங்கின இடத்துல இருந்து தொலைவுல நின்னான் - ஒரு நொடிக்கு, அவன் உண்மையிலேயே காற்றாக மாறியிருந்தான்.

பிரமிச்சுப் போன பழங்குடியினர், சாண்டியாகோவையும் இரசவாதியையும் விடுவிச்சு, பயணத்தை தொடர விட்டாங்க.

பிரியறதுக்கு முன்ன, இரசவாதி ஈயத்தை தங்கமாக மாத்தி, அதை பிரிச்சு, சாண்டியாகோவுக்கு ஒரு பகுதி கொடுத்தார். ஆனா, தங்கத்தை விட விலைமதிப்பு மிக்கதா இரசவாதி சொன்ன ஞானம் இதுதான்: "உன்னோட இதயத்தைக் கேள், உன்னோட தனிப்பட்ட புராணத்தை (Personal Legend) நிறைவேத்து."

சாண்டியாகோ தனியா பிரமிடுகள நோக்கிப் பயணிச்சான். அங்க அடைஞ்சதும், மணல்ல முழந்தாளிட்டு, இதயத்தோட வழிகாட்டுதல்படி ஒரு இடத்துல தோண்ட ஆரம்பிச்சான். இரவு வந்தும் புதையல் கிடைக்கல. அப்போ, பழங்குடி போர்கள்ல இருந்து தப்பின அகதிகள் கூட்டம் அவனை கண்டுபிடிச்சுது. அவனை அடிச்சு, என்ன தேடுறனு கேட்டாங்க. திரும்பத் திரும்ப வந்த கனவு புதையலை சொன்னப்போ, ஒரு திருடன் சிரிச்சு, தன்னோட கனவை சொன்னான் -

“எனக்கும் தான் ஒரு கனவு அடிக்கடி வந்து தொலையும். ஸ்பெயின்ல, அத்தி மரம் வளர்ந்த இடிஞ்ச தேவாலயத்துல புதையல் புதைஞ்சிருக்குனு. நான் ஸ்பெயினுக்குப் போகணும்னா, பாலைவனம், கடல்னு தாண்டிப் போகணும். எவனாவது கனவை நம்பி இவ்ளோ தூரம் பயணம் செஞ்சி வருவானா?”

அவன் சிரிச்சிக்கிட்டே சொல்லி, சாண்டியாகோவ அடிச்சி, அவன்கிட்ட இருந்த தங்கத்தைத் திருடிக்கிட்டு போய்டுவான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் சாண்டியாகோவுக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சி. ஏன்னா, அவனோட கனவுல வந்த அந்த அத்தி மரம் தான் சாண்டியாகோ எப்போதும் படுத்துத் தூங்கின தேவாலயம்னு உணர்ந்து, பயணத்தோட இறுதி முரண்பாட்டை புரிஞ்சுக்கிட்டான். அவன் தேடின புதையல், அவன் ஆரம்பிச்ச இடத்துலயே இருந்தது! பிரபஞ்சம் அவனை பொருள் புதையலுக்கு மட்டும் இல்ல, ஞானம், காதல், இலட்சியத்தை தேடுறதுல வந்த சுய அறிவுக்கும் வழிநடத்திச்சு.

சாண்டியாகோ ஸ்பெயினுக்கு திரும்பி, அத்தி மரம் இருக்குற பழைய தேவாலயத்துக்கு போனான். மரத்தோட வேர்களை தோண்டி, ஒரு பெட்டியைக் கண்டுபிடிச்சான் - ஸ்பானிஷ் தங்க நாணயங்கள், விலையுயர்ந்த கற்கள், தங்க முகமூடிகள், நகைகளால அலங்கரிக்கப்பட்ட கல் சிலைகள், நூற்றாண்டுகளுக்கு முன்ன ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுட்டு போன புதையல் அது.

அன்னைக்கு இரவு, காற்று வீசினப்போ, ஃபாத்திமா காத்திருக்குறதா அது சொல்லிச்சு. பொருள் புதையல் கிடைச்சு, ஞானத்தோட பெரிய புதையல் பெறப்பட்டு, சாண்டியாகோ தான் நேசிச்ச பெண்ணிடம் திரும்ப தயாரானான். அவன் பயணத்தோட வட்டத்தை முடிச்சிருந்தான், இலட்சியத்தோட இரசவாதத்தால ஈயம் தங்கமாக மாற்றப்பட்டவனா உருமாறியிருந்தான்.

சாண்டியாகோவோட கதை நமக்கு சொல்லுறது ஒன்னே ஒன்னு தான். - இலக்கை அடையறது மட்டும் தேடலோட உண்மையான நோகம் இல்லை. அந்தத் தேடலின் போது கிடைக்கும் அனுபவமும், அது ஏற்படுத்தும் மாற்றமும் தான். நாம நம்மை விட சிறந்தவனா மாற முயற்சிக்கும்போது, நம்மை சுத்தி எல்லாமே சிறப்பாகுது.”

இந்த உலகளாவிய உண்மையில தான் "தி அல்கெமிஸ்ட்"டோட உண்மையான புதையல் இருக்கு - நம்ம கனவுகளை தைரியத்தோட, நம்பிக்கையோட தேடும்போது, நாம தேடுறதை மட்டும் இல்ல, நாம ஆகணும்னு நினைச்சவங்களையும் அடையறோம்...!

Writer C. Vetrivel
Author of Venvel Senni, Vaanavalli and Karikalan