தஞ்சை நாயக்கர்கள் அழிந்த கதை | துரோக வரலாறு - 1

மராத்தியர் தஞ்சையைக் கைப்பற்றிய துரோக வரலாறு

Sat Jul 19, 2025

தஞ்சை நாயக்கர்கள் வீழ்ச்சி 

தமிழகத்தைக் காவல் காக்க சோழர்களும் பாண்டியர்களும் இல்லாத இருண்ட காலம் அது. அதனால், தெலுங்கு நாயக்கர்கள், துலுக்கர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக் காரர்கள் என்று பலரும் தமிழ்நாட்டைக் கூறுபோட்டுக் கொண்டிருந்த 17 - ம் நூற்றாண்டு.

துலுக்கர்களை விரட்டுகிறேன் என்று தமிழ்நாட்டுக்குள் ஊடுருவிய விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக வந்தவர்கள் மதுரை, மற்றும் தஞ்சாவூரைக் கைபற்றி முடிசூட்டிக்கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டனர்.

விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் தான் விசுவநாத நாயக்கர். அக்காலகட்டத்தில் பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் ஏற்பட அதை அடக்குகிறேன் என்று தமிழ்நாட்டுக்கு வந்தவன் இவன். பிறகு, தலைமைக்குக் கட்டுப்படாமல் தானே மதுரையை நிர்வகிக்கத் தொடங்கினார். அதைப் பார்த்த அச்சுதராயர் வேறு வழி இல்லாததால், அவருக்கு முறையாக மதுரையின் நாயக்கராக முடிசூட்டினார். அப்படி வந்தவர்கள் தான் மதுரை நாயக்கர்கள். இவர்கள், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மதுரை நாயக்கர்கள் 1529 - லிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். இவர்கள் வழியில் வந்தவர் தான் சொக்கநாத நாயக்கர்.

இதே மாதிரி, தஞ்சாவூருக்கு வந்த தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அரசப் பிரதிநிதிகளுள் ஒருத்தர் தான் சேவப்ப நாயக்கர். 1535 - ல் வந்தவர் தஞ்சாவூரைக் கைப்பற்றிக்கொண்டு அரசாளத் தொடங்கிவிட்டார். சேவப்ப நாயக்கர் வழியில் வந்தவர் தான் விஜயராகவ நாயக்கர்.

நம் கதை நடக்கும் 1670களுக்கு வரும்.

தஞ்சை, மதுரை நாயக்கர்கள் இருவருமே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் இருவருக்கும் எப்போதுமே பகைமை இருந்து வந்தது. ஒரு சில முறை பெண் கொடுத்து, பெண் எடுத்தாலும் அந்தப் பகைமை அணையா நெருப்பாகவே இருந்து வந்தது. அதிலும் தஞ்சை விஜயராகவ நாயக்கருக்கும் மதுரை சொக்கநாத நாயக்கருக்கும் இடையே பகை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

அப்போது, சொக்கநாத நாயக்கர் மதுரையை மட்டுமல்லாது திருச்சியையும் ஆண்டு வந்தார். ஆனால், அவருக்கு மைசூர் தீராத் தலைவலியை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதனால், துணைக்கு வலிமையான ஒரு அரசின் துணை தேவைப்பட்டது. தஞ்சாவூர் நாயக்கரின் துணை இருந்தால் அரசியல் ரீதியாக நல்லது என்று நினைத்த மதுரை சொக்கநாத நாயக்கர், தஞ்சை விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் பெண் கேட்டு தூது அனுப்பினார்.

இதற்கு தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் இல்லாமல், இல்லை. முன்பு, மதுரை திருமலை நாயக்கர் விஜயராகவனின் சகோதரியை மணம் செய்து கொண்டிருந்தார். பிறகு என்ன காரணத்தாலோ அந்தப் பெண் மதுரையில் கொலை செய்யப்பட்டு விட்டாள். திருமலை நாயக்கர் தான் அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிட்டார் என்று விஜயராகவ நாயக்கருக்குக் கோபம். இந்த காரணத்தினால்தான் மதுரை சொக்கநாதனுக்குப் பெண் கொடுக்க விஜயராகவ நாயக்கர் விரும்பவில்லை. சகோதரியை இழந்த துயரம் அவரை வாட்டிக்கொண்டிருக்க, மகளையும் பலிகொடுக்க வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கரின் முடிவு சொக்கநாத நாயக்கருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

“எவ்வளவு திமிர் இருந்தால் என் கோரிக்கையை நிராகரிப்பான்?” என்று வெகுண்டெழுந்தார்.

இதனால், அவர் தஞ்சாவூர் மீதுபடையெடுத்தார். மதுரை படைக்கு தளவாய் வேங்கடகிருஷ்ணப்ப நாயுடு, பேஷ்கார் சின்னத்தம்பி முதலியார் ஆகியோர் தலைமை வகித்து படைநடத்தி வந்தனர். திருச்சியை விட்டுப் புறப்பட்ட இந்தப் படை முதலில் வல்லம் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. பிறகு தஞ்சாவூரை முற்றுகை இட்டது. அப்போது விஜயராகவ நாயக்கர் அரண்மனையில் சிறை வைத்திருந்த தனது மகன் மன்னாரு தாசனை மன்னித்து விடுதலை செய்து போரில் ஈடுபட வைத்தார்.

விஜயராகவ நாயக்கரின் மகன் மன்னாரு தாசன் எதற்காக சிறை சென்றான் என்பதையும் அறிந்துவிட்டு கதைக்குள் செல்வோம். தஞ்சை விஜயராகவரின் மகன் இளவரசன் மன்னாருதாசன் தஞ்சையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போது ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல் கொண்டிருக்கிறான். அவளும் இவனைக் காதலிக்கத் தொடங்கினாள். இந்த செய்தி, விஜயராகவ நாயக்கருக்குத் தெரியவர அவர் வெகுண்டெழுந்துவிட்டார். காரணம், அந்தப் பெண் பெயர் மங்களாம்பிகை. அவள் அமைச்சர் கோவிந்த தீக்‌ஷிதரின் மகள். வர்ணாசிரமத்தின் படி ஒரு பிராமின் சத்திரிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், ஒரு சத்திரியன் பிராமின் பெண்ணைக் கனவிலும் தீண்டக் கூடாது. வைதீக வர்ணாசிரமத்தில் மூழ்கிப் போயிருந்த விஜயராகவ நாயக்கர் இதை அனுமதிப்பாரா??? உடனே, மகனை சிறையில் தள்ளி அடைத்துவிட்டார்.

போர் வந்த பிறகு தான் அவருக்கு மகம் மன்னாருதாசனின் நினைவு வந்தது. மகனை விடுதலை செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு தஞ்சாவூரை முற்றுகையிட்ட மதுரைப் படையை விரட்டியடிக்கச் சென்றார்.

மதுரை முற்றுகைப் படையை எதிர்க்கச் செல்வதற்கு முன்பு விஜயராகவ நாயக்கர் ஒரு காரியத்தைச் செய்துவிட்டுச் சென்றார். அது என்னவெனில், தஞ்சாவூர் அந்தப்புரத்தில் வசித்த பெண்கள் அனைவரையும் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அதில், நாயக்கரின் உறவினர்கள், பணிப் பெண்கள், காதல் கன்னிகையர்கள் என்று ஒருவரையும் விடவில்லை. அனைவரையும் அறையில் வைத்துப் பூட்டி அங்கு வெடிமருந்துப் பொருட்களையும் வைத்துக் கட்டிவிட்டு, பொறுப்பை அக்கிராஜூ எனும் தன்னுடைய அந்தரங்க சேவகனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

அவனிடம் கொடுக்கப்பட்ட பணி ஒன்று தான். ”போரில் தோற்றால், வெடிமருந்தை வைத்து அந்தப்புரத்தைத் தகர்த்துவிடு. நம் அரண்மனைப் பெண்டிர் யாரும் மதுரை சொக்கநாதன் கையில் மட்டும் சிக்கிவிடக் கூடாது” என்பது தான் அந்தக் கட்டளை.

மதுரை சொக்கநாதர் படைக்கும், தஞ்சாவூர் விஜயராகவர் படைக்கும் போர் கடுமையாக நடந்தது. விஜயராகவ நாயக்கரின் படை பின்வாங்கிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் தஞ்சாவூர் படை தோற்றுவிடும் எனும் நிலை. மதுரைத் தளபதி வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கருக்கும் விஜயராகவ நாயக்கருக்கும் இடையே நேருக்கு நேர் சண்டை நடந்துகொண்டிருந்தது. கி.பி.1675 பிப்ரவரி 3ஆம் நாள் தஞ்சை வடக்கு வீதிக்கு அருகில் இருக்கும் ராஜகோபாலசாமி கோயில் அருகே, நடைபெற்ற போரில் விஜயராக நாயக்கர் தோற்றுவிட அவரது தலையை வெட்டிக் கொன்றுவிடுகிறார் வேங்கட கிருஷ்ணப்பன். விஜயராகவ நாயக்கரின் மகன் மன்னாரு தாசனும் போரில் கொல்லப்படுகிறான்.

அரசனும், இளவரசனும் போரில் இறந்த செய்தி அந்தப்புரம் எங்கும் பரவுகிறது. ஏற்கெனவே, கட்டளையிட்ட படி அக்கிராஜூ செயல்படுகிறான். அந்தப் புர பெண்கள் அனைவரும் வேண்டாம் என்று அழுகிறார்கள். உயிர் பிச்சை வேண்டிக் கதற்குகிறார்கள். அனைவரையும் கயிற்றில் கட்டிவைத்திருந்த அக்கிராஜூ வெடிமருந்துப் பொருட்களுக்குத் தீவைக்கிறான். அவ்வளவு தான், அந்தப் புரமே வெடித்துச் சிதறுகிறது.

உயிரும் உடலுமாய் இருந்த பெண்கள் அனைவரும் தசைப் பிண்டமாகி, உடல் சிதறி, குருதி தெறிக்க இறக்கிறார்கள். அதில் யாருமே தப்பவில்லை. மதுரை சொக்கநாத நாயக்கர் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இளவரசி உட்பட அனைவருமே இறந்து போனார்கள்.

இதில் உயிர் தப்பியது ஒரேயொரு தாதிப் பெண் மட்டும் தான். தஞ்சாவூர் விழுவதற்கு முன்பு மன்னாருதாசனின் மகனைத் தன்னுடன் தூக்கிக்கொண்டு தப்பி விடுகிறாள்.

அதன் பிறகு, தஞ்சை ராஜ்யம் மதுரையோடு இணைக்கப்படுகிறது. சொக்கநாதனின் ஒன்றுவிட்ட தம்பி அழகிரி நாயக்கரைத் தஞ்சைக்கு மன்னராக முடிசூட்டிவிட்டு, மதுரை சென்றுவிடுகிறார் சொக்கநாத நாயக்கர். 1675ஆம் ஆண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களத்தில் கொல்லப்பட்டதோடு தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.

மன்னாரு தாசனின் குழந்தையை மறைத்து எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற அந்தத் தாதி, செங்கமலதாஸ் என்று பெயரிட்டு, அந்தக் குழந்தையை நாகப்பட்டினத்தில் ஒரு செல்வந்தரான செட்டியாரிடம் கொடுத்து வளர்க்கச் செய்தாள். வசதியான குடும்பத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட நாயக்க வம்சத்து குழந்தையான செங்கமலதாஸ் நன்கு கல்வி கற்றான். போர்ப் பயிற்சியும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

அதே நேரம், ராயசம் வெங்கண்ணா என்று ஒரு மந்திரி. இவர் ஒரு தெலுங்கு நியோகி பிராமணர். ஆந்திரத்திலிருந்து நாயக்க மன்னர்களுடன் தஞ்சைக்கு குடிபெயர்ந்தவரின் வம்சம் இவர். இவருக்கு செங்கமல தாஸ் உயிருடன் இருக்கும் செய்தி கிடைக்கிறது. உடனே, திட்டமிடத் தொடங்குகிறார். இவர் இருநூறு நாயக்கப் படை வீரர்களைத் திரட்டிக் கொண்டு நாகப்பட்டினம் சென்று, அங்கு தஞ்சையிலிருந்து தப்பிச் சென்ற தாதியைப் பிடித்து, குழந்தை எங்கே என்று விசாரிக்கிறார். அவள் உண்மையைக் கூறிவிடுகிறாள். நேராக செட்டியாரிடம் சென்றவர், செங்கமல தாஸைத் தன்னுடன் சேர்த்துக் கொண்ட மந்திரி ராயசம் வெங்கண்ணா பீஜப்பூருக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு, பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவிடம் உதவி கேட்டார் மந்திரி ராயசம் வெங்கண்ணா.

“அநியாயமாக நடந்த போரில், தஞ்சாவூர் நாயக்கர் விஜயராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இறந்து போய் விட்டார்கள். எஞ்சியிருப்பது செங்கமல தாஸ் மட்டுமே. அவனுக்கு மீண்டும் தஞ்சாவூர் நாயக்கராகப் பட்டம் கட்டி ஆட்சி புரியவும், தஞ்சாவூரிலிருந்து மதுரைப் படையை விரட்டியடிக்கவும் உதவி செய்ய வேண்டும்” என்று உதவி கேட்டார்.

அதே நேரம், மதுரை நாயக்க மன்னர் குடும்பத்தில் தகறாறு ஏற்பட்டுவிட்டது. மதுரையை ஆண்ட அண்ணன் சொக்கநாதனுக்கும் தஞ்சாவூரை ஆண்ட தம்பி அழகிரிக்கும் மோதல் ஏற்பட்டிருந்தது. மதுரைக்கு தஞ்சாவூர் அடிபணியவில்லை. தஞ்சாவூர் அழகிரி சுதந்திரமாக செயல்படத் தொடங்கியிருந்தார். அவர்களின் முன்னோர்கள் செய்த அதே பாணியைத் தான் அழகிரியும் செயல்படுத்தினான்.

இந்த நேரத்தில் தான், பீஜப்பூரில் வெங்கண்ணா உதவி கேட்டு போன இடத்தில் சுல்தான் அலிஅடில்ஷா இவர்கள் தஞ்சையை மீண்டும் மீட்டெடுக்க உதவி புரிவதாக வாக்களித்தான்.

சுல்தான் அலிஅடில்ஷா அப்போது பெங்களூரில் தங்கியிருந்த ஏகோஜியை அழைத்து விஜயராகவ நாயக்கரின் மகனுக்கு உதவி செய்யும்படி பணித்தார். இந்த ஏகோஜி வேறு யாரும் இல்லை. மராத்திய மன்னர் சிவாஜியின் ஒன்றுவிட்ட தம்பி. அதாவது, சிவாஜியின் தந்தையான ஷாஜியின் மற்றொரு மனைவியின் மகன்.

பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷா ஏகோஜியிடம், ”செங்கமல தாஸுக்கு உதவி செய்து அவனை ஆட்சியில் அமர்த்திவிடு. அவனே இனி தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டு, படையெடுப்புச் செலவையும், பேஷ்கஷ் ( அதாவது கப்பம்) பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்துவிடு” என்று கட்டளையிட்டார்.

சுல்தானின் உத்தரவுப்படி ஏகோஜி பெங்களூர் ராஜ்யத்தை தனது உதவியாளராக இருந்து வந்த காகால்கர் காடேஜு ஜாகா என்பவனிடம் ஒப்புவித்து விட்டு, பீஜப்பூரின் வஜீர்களான கலாஸ்கான், அபுதல் அலீம் தளபதிகள் இருவரும் தலைமை தாங்கிய சுல்தான் படையுடன் தன் படையையும் இணைத்து ஒட்டுமொத்த படைக்கும் தலைமை தாங்கி தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார் ஏகோஜி.

ஏகோஜி பெங்களூரில் இருந்து கிளம்பி தஞ்சையை நோக்கி வருகிற வழியில் ஆரணியில் இருந்த கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டார். அங்கு ஆரணி நிர்வாகத்தை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அங்கு அப்போது ஆட்சி புரிந்து வந்த மதுரை சொக்கநாத நாயக்கரின் தம்பியான அழகிரியைத் தோற்கடித்து திருச்சிக்கு விரட்டிவிட்டு தஞ்சாவூர் நாயக்க அரசுக்குச் சொந்தமானவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார். தஞ்சை நாயக்க மன்னர்களிடமிருந்து வரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை வசூல் செய்து கொண்டு திரும்புமாறு தனது இரு வஜீர்களான கலாஸ்கான், அபுதல் அலீமுக்கும் உத்தரவிட்டுவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பத் தொடங்கினார். அப்படி அவர் திரும்பி வரும் வழியில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து திருமழபாடி எனும் ஊரில் தங்க நேர்ந்தது. காரணம் அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிகளில் ஒருத்திக்குப் பிரசவ நேரம் நெருங்கியிருந்தது. திருமழபாடியில் முகாமிட்டிருந்த ஏகோஜியின் மனைவிக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சரபோஜி.

ஏகோஜிக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது. அதே நேரம், அரசியல் சூழலும் மாறிக்கொண்டிருந்தது.

அதாவது, வடக்கே டில்லி முகலாய அரசன் ஔரங்கசீப்பின் பார்வை தென்னிந்தியாவின் மீது திரும்பியிருந்தது. தக்ஷிண சுல்தான்கள் ஒவ்வொருவரையும் போரில் வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தார். இந்த செய்தி ஏகோஜிக்கும் வந்துகொண்டிருந்தது. அதே நேரம், ஏகோஜியின் சகோதரன் சிவாஜியும் மராத்தியில் வலிமையான அரசை உருவாக்கிக் கொண்டிருந்தான். அதுவேறு ஏகோஜியை உருத்திக்கொண்டிருந்தது.

பீஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷா மட்டும் முகலாய மன்னனுக்குக் கட்டுப்பட்டுவிட்டால், தனது நிலைமை என்ன ஆகும் என்று யோசித்தார். மீண்டும் பெங்களூருக்குச் செல்வது பெரும் ஆபத்து என்பதையும் உணர்ந்தவர் மீண்டும் தஞ்சைக்கே திரும்பி, தஞ்சைக்கு வெளியே முகாமிட்டிருந்த தனது படையுடன் சேர்ந்துகொண்டார் ஏகோஜி.

அவரது மனதில் பலவிதமான எண்ணங்கள் உருவாகி எரிந்து கொண்டிருந்தன. அந்த எண்ணங்களுக்கு பெட்ரோல் ஊற்றுவதைப்போன்று தஞ்சையின் சூழ்நிலையும் அமைந்துகொண்டிருந்தது.

தஞ்சையில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. யார், யாருக்கு அடிபணிவது என்பதில் சிக்கல். ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த செங்கமல தாஸ், அமைச்சர் ராயசம் வெங்கண்ணா, உறவினர்கள் என்று பலரும் அதிகாரத்துக்குப் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் போட்டியில் உதவிய பீஜப்பூர் சுல்தான், துணைக்கு அழைத்து வந்த பீஜப்பூர் படை, அவர்களின் தளபதி ஏகோஜி, பேஷ்கஷ் வாங்கிச் செல்ல காத்திருந்த வஜீர்களையும் மறந்து போய் அலட்சியம் செய்து வந்தனர். கடந்த காலங்களில் உதவிக்கு வருகிறேன் என்று வந்த சுல்தானியப் படையினர் முதுகில் குத்திய பல வரலாற்றுச் சம்பவங்களையும் தஞ்சையின் ஆட்சியாளர்கள் மறந்தே போயினர். செங்கமல தாஸ் தனக்கு உதவிய அமைச்சர் ராயசம் வெங்கண்ணாவுக்குப் பதில் தனது உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுத்தான். இது ராயசம் வெங்கண்ணாவுக்கு கோபத்தை வரவழைத்தது.

ஏகோஜி தஞ்சையின் அரசியல் சூழ்நிலையையும், வடக்கே டெல்லி சக்ரவர்த்தி ஔரங்கசீப்பின் எழுச்சியையும், பீஜப்பூர் சுல்தானின் நிலையையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரால், இப்போதைக்கு பெங்களூர் செல்ல முடியாது. தஞ்சாவூர் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். இந்த நேரத்தில் தான் ராயசம் வெங்கண்ணா கட்சி மாறி ஏகோஜியை சந்தித்து தஞ்சையைக் கைப்பற்றிக்கொள்ள தான் உதவி செய்வதாகக் கூறினான்.

ராயசம் வெங்கண்ணா கூறியதைக் கேட்ட ஏகோஜி தஞ்சாவூரை கைப்பற்றி, தானே முடிசூடிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார். தனது படையுடன் இரண்டு வஜீர்களின் படையையும் சேர்த்துக்கொண்டு ஊரே உறங்கும் ஒரு அதிகாலை வேளையில் தஞ்சாவூரின் வடக்கு வாசலைத் தாக்கினார்.

தஞ்சாவூர் ஆட்சியாளர்களான நாயக்கர்களுக்கு எதுவும் புரியவில்லை. உதவிக்கு அழைத்து வந்த ஏகோஜி மற்றும் சுல்தானின் படையினர் திடீரென்று தாக்குவார்கள் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

காவல் காரர்கள் கத்தினார்கள்.

“உதவிக்கு வந்த ஏகோஜி முதுகில் குத்துவிட்டான்” என்று சொல்லி கோட்டையின் அபாய மணியை எழுப்பினார்கள்.

படை வீரர்களும் ஆட்சியாளர்களும் எழுந்து ஏகோஜியைத் தாக்குவதற்குள் கோட்டை வாசல் உடைக்கப்பட்டு, ஏகோஜி தன் படையுடன் உள்ளே நுழைந்தான். எதிர்த்த படை வீரர்கள் கொல்லப்பட்டார்கள். மராத்தியப் படைகள் தஞ்சை நகரத்துக் கோட்டைக்குள் நுழைந்த போது, தஞ்சை நாயக்க அரச குடும்பத்தினரும் அவரது பரிவாரங்களும் எதிரே வந்து எதிர்த்தார்கள். அங்கு அரச பரிவாரங்களுக்கும், மராத்திய படையினருக்குமிடையே ஏற்பட்ட கைகலப்பில் தஞ்சை நாயக்கரும் அவரது உறவினர்களும் கொல்லப்பட்டனர். தஞ்சை நாயக்கரின் உறவினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஒருவர் கூட உயிர்தப்பவிடவில்லை. காரணம் நாளை யாரும் நான் தான் பட்டத்துக்கு உரியவன் என்று செங்கமல தாசைப் போல வரக் கூடாது அல்லவா?

எதிர்த்தவர்களும், பட்டத்துக்கு உரியவர்களும், அமைச்சர்களும் கொல்லப்பட தஞ்சாவூர் கோட்டையானது மராத்தியரான ஏகோஜி வசம் விழுந்தது. தஞ்சை கோட்டையை மராத்தியர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்ற செய்தி அறிந்து ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகளும் சிறிது நேரத்தில் ஓய்ந்து போயின. வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்த மராத்தியரின் படை வெற்றிக் களிப்புடன் கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தனர்.

தஞ்சாவூரைக் கைப்பற்றிய ஏகோஜி உடனடியாக அரசனாகப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம், பீஜப்பூர் சுல்தான் மீதிருந்த பயம் தான். இப்படியே இரண்டு மாத காலம் கடந்தது. இந்த சூழலில், ஏகோஜி நினைத்ததைப் போலவே, முகலாய மன்னன் ஔரங்கசீப் தக்ஷிண சுல்தான்கள் அனைவரையும் போரில் வென்று, அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்.

வடக்கே நிலவும் குழப்பம், சுல்தானுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நெருக்கடி இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஏகோஜியும் தஞ்சைக்குத் தன்னைத் தானே மன்னராக அறிவித்துக் கொண்டார். ஏகோஜி, 1676 ஏப்ரல் மாதம் தஞ்சாவூர் ராஜ்யத்தின் முதல் மராத்திய மன்னனாக முடிசூட்டிக் கொண்டார்.

தஞ்சை மன்னனாக முடிசூட்டிக் கொண்டு ஏகோஜி தனது எஜமானன் பீஜப்பூர் சுல்தானுக்கு துணிமணி, செல்வம், தங்கம், நகைகள் என்று ஏராளமான பரிசுப் பொருள்களும், பேஷ்கஷ் கப்பமும் அனுப்பி தான் தஞ்சை அரியணையை ஏற்றுக்கொண்டது குறித்துக் கடிதம் எழுதினார்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்ற தூதுவன் பீஜப்பூர் சுல்தனைன் கோபம் ஏகோஜின் மேல் திரும்பாத வண்ணன் பணிவுடன் சொன்னான்.

“நம்மை உதவிக்கு அழைத்துச் சென்ற தஞ்சாவூர் நாயக்கர் படையினர் துரோகம் இழைத்துவிட்டார்கள். பேஷ்கஷ் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள். அவர்களின் வஞ்சக எண்ணத்தை அறிந்துகொண்ட பிறகு வேறு வழியில்லாமலும், தஞ்சாவூர் மக்கள் அனைவரும் விரும்பி, வேண்டிக் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் ஏகோஜி தஞ்சாவூரை கைப்பற்றினார்” என்று சொன்னான் தூதுவன்.

ஏகோஜி காட்டிய பணிவு, மரியாதை, பரிசுப் பொருட்கள் இவற்றைக் கண்டு மனம் மகிழ்ந்த பீஜப்பூர் சுல்தான் ஏகோஜியை வாழ்த்தி, இனி தஞ்சாவூர் ராஜ்யத்தை வம்ச பரம்பரையாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளும்படி சாசனம் பண்ணிக் கொடுத்தனுப்பினார்.

தமிழ் வேந்தர்களான சோழர்கள் உருவாக்கி, செழுமைப் படுத்திய தஞ்சாவூரைக் கைப்பற்றிக்கொண்டு தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய காலம் போய், எங்கோ இருக்கும் பீஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரை மராத்தியனுக்கு சாசனம் செய்து கொடுத்த கொடுமை வேறு எங்கும் நடக்காது.

உதவி செய்கிறேன் என்று வந்து, முதுகில் குத்திய வரலாற்று நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்ப்போம்…

Writer C. Vetrivel
Author of Venvel Senni, Karikalan and Vaanavalli.