சிறுகதைப் போட்டி – 39 : வதுமை நன்மணம் – மா.மணிகண்டன்

“ஏலேய் இன்னும் கூட்டம் குறையல, பொறவாட்டி வா இல்லனா ஓரமா போய் நில்லு, அவசரம்னா கோயிலுக்கு பின்னாடிபக்கமா வந்து தொல. இனமா புளியோதரை சோறு போட்டா வீட்டுல இருக்குற பெரிய அண்டாவ தூக்கிட்டு வந்துருவானங்க,எச்சக்கல பயச்சாதி மவனுங்க”, என்று  சங்கிலியனைத் திட்டிக்கொண்டே தலயாரி வரிசையில் வந்து நின்ற பொற்கொடிக்கு புளியோதரையை இலையில் மடித்துக் கொடுத்தான்.

பெருமாக்கோயில் புளியோதரைக்கு அளவளாவிய மவுசு. புரட்டாசி சனிக்கிழம ஊரே பெருமாக்கோயில்ல தான் குடியிருக்கும். ஆனால் சங்கிலியன் போல சக்கிலிய சாதியில பொறந்தவங்களுக்கு பெருமாள் இடங்கொடுத்தாலும் ஊர் பெருமக்கள் இடங்கொடுப்பதில்லை. சங்கிலியனுக்கு மட்டும் இடங்கொடுத்தாள் பொற்கொடி.

சங்கிலியன் பெருமாக்கோயில் வாசலுக்குக்கு புரட்டாசி மாச எல்லா சனிக்கிழமையும் வர  ரெண்டே காரணம், பொற்கொடியும் புளியோதரையும். புளியோதரை மணத்திலயும் பொற்கொடி அழகுலயும் தலயாரி திட்டுனத காதுலயே வாங்கல சங்கிலியன்.

“ஏன்டா உனக்கு எத்தனை தடவைச் சொன்னாலும் புத்தி வராதா.அந்த திட்டு திட்றான் பல்ல ஈ னு இளிச்சுட்டு இருக்க?”, என்று தூக்குச்சட்டியில் பின்வாசல் வழியாக புளியோதரையை வாங்கி வந்தவனை சிறு இலைத்துண்டில் புளியோதரை வாங்கி வந்த பொற்கொடி கண்ணசைவில் அதட்டினாள்.

“என்ன கொடி அக்கம் பக்கம் தான் யாருமில்லல எதாச்சும் பேசேன் பிள்ள என் மேல கோவமா உன்ன பாக்கத்தன கோயில் வாசலுக்கு வந்து நின்னேன்.”

“அப்புறம் எதுக்கு தூக்குச்சட்டிய தூக்கிட்டு வந்த?”

“என்ன நீ இப்டி சொல்லிட்ட பெருமாக்கோயிலு அய்யர் செய்ற புளியோதரனா சும்மாவா ஊர் எல்லைச்சாமியே வாசன பிடிச்சு வந்துருவாரு. செட்டியார் கிட்ட வாங்குன நல்லெண்ணெய்ல உளுத்தம் பருப்பு வெந்தயம் பொடி வெங்காயம் எண்ணெய்லே வெடிச்ச கடுகும்,எண்ணெய்லயே குளிச்ச கறிவேப்பிலையும் போட்டு செய்றாரு. செட்டியார்கிட்ட வாங்குன எண்ணனா சும்மாவா, நல்ல வாக மரச்செக்குல இன்னும் காளமாட்டுக் கழுத்துல தங்கமணிக் கட்டி எண்ண ஆட்ற ஒரே ஆள் இந்த சில்லாலயே அவர் ஒருத்தர்தான். எண்ண மணமா இல்ல உங்கப்பா கை மணமா புளியோதரை அந்த மணம் மணக்குது.”

“அப்படினா என்னைய பாக்க வரல நீ சோத்துக்கு வந்துருக்க அப்படிதான,அப்படி இல்ல கொடி என்னக்கியாவது தான் இந்த மாதிரி நல்ல நாள் வருது. இப்போதான் நல்லச்சோறு எங்க ஆத்தாளும் அப்பனும் திங்கமுடியும்.”

“சரி சரி போதும் நிறுத்து ஒன் புராணத்த இந்தா இத நீ தின்னு”னு கையிலிருந்த சோற்றை சங்கிலியனுக்கு தந்து விட்டு, “தெருமுன வந்துட்டு நீ நில்லு நான் போனதுக்கு அப்பறமா வா”னு சொல்லிட்டு மின்னல் நடை போட்டு நடந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

பொற்கொடி பெருமாக்கோயிலு அய்யர் பொன்னுங்கறதால மந்திரம் கொஞ்சம் சொல்லுவா,அதே சமயம் பொதுவுடைமை தத்துவத்தையும் நிறையவே படிப்பா,பொதுவுடைமை கொள்கைய பேசுவா, தைரியமான பொன்னுன்னு ஊரே சொல்லும் இரேஷன் கடையில நடந்த கொள்ளைய தட்டி கேட்டு நெத்தில தழும்பு வாங்கி கிட்டவ.

சங்கிலியனுக்கு அஞ்சு நாள் ஈ.பி யில வேலை ஞாயிற்று கிழம மாட்டை வெட்டுற வேலை சனிக்கிழம கொடிய பார்த்து பேசுற வேல. மாட்டுகறி கடிச்சு பல்லெல்லாம் எழும்பா வச்சிருந்தான். கையும் காலும் பலமா வச்சிருந்தான்.

“டேய் எப்படா கல்யாணம் செய்யப் போற, தலயாரிக்கு இருக்குற ஒத்த கண்ணும் நம்ம மேலதான் இருக்கு.”

“முண்டஞ்சாமி கோயில் கொடை முடிஞ்சதும் ஒன்ன கல்யாணம் செஞ்சுக்கேறன் கொடி.தமிழுக்கு இந்த மாச கடேசி வெள்ளி கெழம கொட,கொட முடிஞ்ச கையோட நம்ம கல்யாணந்தான். மண்ணு அடிச்சு பந்தல்லாம் போட்டாச்சு. கண்ணியான் பாட்டு,கரகாட்டம், குறவன் குறத்தியாட்டம் எல்லாத்துக்கும் சொல்லியாச்சு கடேசி வெள்ளிக்கு இன்னும் பத்து பன்ணெண்டு நாள் தான் இருக்கு கொடி உங்கப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்கப் போறேன் குடும்பத்தோட வந்து.அவரு தரலனா தூக்கிட்டு வந்துறுவே”னு சொல்லிகிட்டே “நாளைக்கு ஞாயித்துக் கெழம மாடு பிடிக்க போகனும்”னு போயிட்டான்.

சங்கிலியன விரும்புறேனு அப்பாகிட்ட சொன்னப்ப, “அரசல் புரசலா என் காதுக்கு வந்துச்சே, தலயாரி ஒன்னயும் அவனையும் பெருமாக்கோயில் பின்னாடிப் வச்சு பாத்தானு சொன்னப்பவே நாங்க நாண்டுகிட்டு செத்துருக்கனும்”னு சொல்லிகிட்டே தலைல அடிச்சுகிட்டாரு அய்யர். “நீ மந்திரம் சொல்ற குடும்பத்துல பொறந்தவ அந்த பய மாட்ட வெட்டுற குடும்பத்துல பொறந்தவன் அய்யோ அய்யோ என்ன உசுரோட தீ வச்சு கொன்னூட்டாளே, இன்னும் நான் இருக்கனுமா”னு தூக்குல தொங்க போனவற சமாதான படுத்தி உக்கார வச்சா அய்யர் பொண்டாட்டி பத்மாவதி.

எட்டாங் கொட முடிஞ்சி மூனாம் நாளு, உழுந்தஞ்சோறு பொங்கி கருவாட்டு குழம்பு சங்கிலியன் வீட்ல,அவுங்க சொந்தகாரங்க எல்லாரும் மண்ணு மேல எலய போட்டு சாப்பிட உக்காந்தப்போ வீட்ட விட்டு ஓடி வந்த பொற்கொடிக்கும் சங்கிலியனுக்கும் எந்த அக்கினியையும் சாட்சியா வைக்காம முண்டஞ்சாமி சாட்சியா வச்சி, அய்யர் பொண்ணு கலியாணத்துக்கே மந்திரம் ஏதும் சொல்லாம.அக்னிய சுத்தாம அம்மி மிதிக்காம கல்யாணத்த ரெண்டு பேருக்கும் செஞ்சு வச்சிட்டாரு காம்ரேட் ஜிவானந்தம்.

சக்கிலியப் பையன மவா கல்யாணம் செஞ்சுகிட்டதனால பெருமாக்கோயிலுக்குள்ள அய்யர் போகவும் ஊர் பெருமக்கள் விடல. சனிக்கெழம ஊருக்குள்ள வந்த எல்லைச்சாமி வெளியவே நிக்கிறாரு.பொற்கொடிக்காக மாடு வெட்ற இடத்த மாத்திடாங்க, பொற்கொடி சங்கிலியனுக்காக மாட்டுக்கறி சமைக்க கத்துகிட்டா, ஊரே ஓடி போவுது, போலிஸ் வந்து விசாரிச்சுட்டு இருக்கு,ஆம்புலன்ஸ்க்கு சொல்லிவிட்டுருக்கு, அம்மங்கோயிலு அய்யர் மவா தீ வச்சிகிட்டாப்பா, நூறு பவுண் போட்டு சீமையில இருந்து பெரியச் சாமினா வச்சி மந்திரம் சொல்லி கட்டிக்கொடுத்து மூனே மாசத்துல போய்ட்டாளே சீதாலெட்சுமினு ஊரே முனுமுனுத்துச்சு, ச்சே பெருமாக்கோயிலு அய்யர் மவா குடுத்துவச்சவப்பா சங்கிலியன் அவள போட்டு தாங்குறானப்பா அக்கம் பக்கம் பேச்ச கேட்டு அய்யர் உள்ளுக்குள்ள கண்ணீர் விட்டு புளியோதரைய செஞ்சி எடுத்துகிட்டு சக்கிலியக்குடிக்கு மவள பாக்கப் போறாரு அய்யர். வாசம் பிடிச்சு எல்லச்சாமி ஊருக்குள்ள வர பெருமாக்கோயிலு சாவிய அம்மங்கோயிலு அய்யர் கிட்ட கொடுத்தாரு ஊர் பெருமக்கள் தலைவர்.

அகநானூறு பாடல் 86 நல்லாவூர் கிழார்

திணை – மருதம்

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;      

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென