சிறுகதைப் போட்டி – 30 : பிரிவு – பானுரேகா பாஸ்கர்

மீனாட்சி படுக்கையை விட்டு எழாமல் பிரமை பிடித்தது போல் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உயிருக்கு உயிரான செல்லமகள் ப்ரியா அவளைப் பிரிந்து ஒரு மாதமாகிவிட்டதே என்று நினைத்து தயரத்துடன் படுத்துக் கொண்டிருந்தாள்.

மீனாட்சி மணி தம்பதிகளுக்கு ப்ரியா ஒரே மகள் , அவளை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர், அதனால் பிடிவாதம் பிடித்து எதையும் சாதித்துக் கொள்வாள் ப்ரியா. கல்லூரியில் படித்த போது அவள் காதல்வயப் பட்டு அவனையேதான் மணம் புரிந்து கொள்வேன் என பிடிவாதம் பிடித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாள்.

மீனாட்சியின் கணவரோ மகளைச் சென்று பார்க்கவோ பேசவோ கூடாது என தடை விதித்து விட்டார். பிறந்த வீட்டில் ஒரு வேலையும் செய்யத் தெரியாத மகள் தனியாக என்ன செய்கிறாளோ என நினைத்து துன்பம் கொண்டாள் மீனாட்சி.

அன்று மகளின் பிறந்த நாள் அவள் என்ன செய்வாள் என்னை நினைப்பாளா என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த வசந்தா மீனாட்சி ஏன் இப்படி புலம்பி உன் உடம்பை கெடுத்துக்கிற நான் வேணாப் போய் ப்ரியா எப்படி இருக்கானு பார்த்துட்டு வரவா என்றாள்.

வசத்தா அந்த வீட்டின் சமையல் மேற்பார்வை என சகலும் அவள்தான். ப்ரியாவை வளர்த்தில் பெரும்பங்கு அவளுக்கு உரியது எனவே அவளுக்கும் ப்ரியாவை பார்க்க மிக்க ஆர்வம் கொண்டிருந்தாள்.

வசந்தா , உண்மையாவா நீ போய் பார்த்து வரியா போய்ட்டு வா வசந்தா இப்பவே கிளம்பு மகிழ்ச்சியுடன் கூறினாள் மீனாட்சி.

காலையில் போன வசந்தா மணி 2ஆகியும் காணமல் மீனாட்சி பதட்டத்துடன் காத்திருந்தாள்.
வசந்தாவும் வந்தாள். ஆவலோடு எதிர் கொண்ட மீனாட்சி என்ன வசந்தா , ப்ரியா எப்படி இருக்கா சொல்லு சொல்லு ,
அத கேக்கற மீனாட்சி , அவ நம்ம ப்ரியாவே இல்ல இப்போ ,இங்க இருக்கும் போது துணிர ஒரு துளி அழுக்கு இருந்தா அப்படி கத்துமே அவங்க வீட்ல அவ புருஷனுக்கு மோர்க் குழம்பு னா பிடிக்கும்னு தயிர் கடைஞ்சி அது விரலெல்லாம் தயிர் பட்டு அத அப்டியே புடவைல துடைச்சிக்கிட்டு ஆபிஸ் போற அவ புருஷன சாப்பாடு போட்டு கைல வேற கட்டிக் கொடுத்து வழி அனுப்பி வைக்கறதீ நீ பாக்கனுமே நான் அப்டியே திகைச்சி போய்ட்டேன்.

இனிமே உன் மகள நினைச்சி கவலைப் படாம அவ புருஷன அவ கவனிக்கிற மாதிரி நீயும் உன் புருஷன கவனி என்று கூறி சிரித்தாள்.

மனதின் பாரம் அனைத்தும் இறங்கிய மீனாட்சியும் அவளுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.

குறுந்தொகை – 167
திணை-முல்லை
பாடியவர்-கூடலூர் கிழார்
கூற்று-கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.