சிறுகதைப் போட்டி – 21 : பசலைக்கோர் பச்சிலை – இன்னம்பூரான்

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து

– திருக்குறள் .1183

வக்கீல் நெல்லையப்பப்பிள்ளை அவர்கள் கோர்ட் கச்சேரிக்குக்  கிளம்பறதே கண்கொள்ளாக்காட்சி. அவருடைய வண்டியை ஓட்டும் அகமதுக்கே மேலப்பாளையம் பள்ளி வாசலில் மரியாதை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இரட்டை மாட்டு வில்வண்டி. இரண்டு மாடும் கம்பீரமாக, சாயம் தோய்த்த கொம்புகளுடன், நிமிர்ந்து ஊரையே இளக்காரத்துடன் பார்க்கும். தார்க்குச்சிக்கு நோ சொல்லி விட்டார். டயர் சக்கரம்;

வண்டியின் கூடு அலங்காரமாக இருக்கும். பச்சைக்கலர்; சிவப்பு பார்டர் நெடுக. ஒரு பக்கம் கிருஷ்ண லீலை ஓவியம்; மறுபக்கம் ஆடவல்லானின் தாண்டவ நிருத்யம். உள்ளே நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளும் பிரத்யக்ஷம் என்றே சொல்லலாம்; அத்தனை அழகிய படம் அவர் சொன்னமாதிரி தான் லோக்கல் ரவி வர்மா பிச்சைக்கோனார் வரைந்திருந்தார், நிறங்களின் பேதங்களை நுட்பமாக கையாண்டு. சொகுசு மெத்தை. சாய்ந்து கொள்ள இரண்டு திண்டு. அவருக்கும் சரி; அகமதுக்கும் சரி; வீரனுக்கும், தீரனுக்கும் சரி (காளை மாட்டுக்கும் பேர் உண்டு, ஐயா.)  அவருடைய பழைய திருநெல்வேலி ஜாகையிலிருந்து பாளையங்கோட்டை ரோட்டில் இருக்கும் கச்சேரி வரைக்கும் சவாரி போவது டில்லி தர்பார் ஊர்வலம் மாதிரி. ஆடம்பரம், ஜம்பம், களை, ஆனந்தம், நிறைவு எல்லாம் கலந்த ஜில்ஜில் ரசவாதம் அந்த சவாரி. ஊர் ஜனங்கள் கூட இந்த அதிசய யாத்திரையை வந்து பார்த்து விட்டுப்போவார்களாம். பிள்ளைவாளுக்குக் கோர்ட்டிலும் ஏகப்பட்ட க்யாதி; சுற்று வட்டாரத்திலும் வெகுமதிப்பு. அவர் நாட்தோறும், பார்வதி மாமியுடன் நெல்லையப்பரை தரிசனம் செய்ய வருவதைப் பார்த்தால் தெரியும், அவருடைய அடக்கமும், இன்முகமும். தெக்கத்திய ஜமீன்கள் எல்லாரும் இவருடைய கட்சிக்காரர்கள். மறவர் குல பண்புகளை நன்கு அறிந்தவர். ஒரு நாள் ஊற்றுமலை ஜமீனுக்காக வாதாடுவார். மற்றொரு நாள் பாலவனத்தம் ஜமீன் கேஸில், ஊற்றுமலை தரப்பை வறுத்து எடுத்து விடுவார். ஆனாலும் யாருக்கும் அவரிடம் விரோதம் கிடையாது. ஏன்? மெச்சத்தக்கநட்பு தான் ஓங்கி நிற்கும். ஏதோ எனக்குத் தோன்றிய பெயர்களை சொல்கிறேன். உள்ளதை உள்ளபடி சொன்னால், நமக்குத்தான் பொல்லாப்பு. பாளையக்காரர்களும், 24 ஜமீன்களும் பத்துக்கு மேற்பட்ட சமஸ்தானங்களும் பிள்ளைவாளுக்கு வேண்டப்பட்டவர்கள். அப்போது போய் நான் ஊரையும், பேரையும் சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டுமா என்ன? ஒரு உள்ளுறையை குறிப்பால் உணர்த்துகிறேன். ஊற்றுமலையும் சரி, நாலாவது தமிழ்ச்சங்க புகழ் பாண்டித்துரை தேவரின் பாலவனத்தமும் சரி, அவர்களால் தான் இன்று தமிழ் வாழுகிறது.  பெரியதனக்காரர்கள்

வீட்டுக்கல்யாணங்களில் இவருக்குத்தான் முதல் தாம்பூலம். தலைப்பாகையும், கோட்டும், டையும், பாம்பே நூறாம் நம்பர் வேஷ்டியை அவர் பஞ்சக்கச்சம் இழுத்துக்கட்டி, கால்ஜோடு ஃபாரினாகவும், என்னத்தான் டீக்டாக் ஆக நடை, உடை, பாவனைகளை அவர் கடைப்பிடித்தாலும், அவரிடமிருந்து ஒரு சிவனடியார் தோற்றம் தான் வெளிப்படும். முகவிலாசம் அப்படி. என்னே திருநீர் பட்டை நெற்றியில், ஒரு வட்டக்குங்கும திலகம்; அதற்க்குள் ஒரு சந்தன கீற்று! மெலியதொரு கரிக்கோடு. கட்சிக்காரர்கள் அவரை தெய்வமாகவே பார்த்தார்கள். ஒரு சமஸ்தானம், ‘நான் ப்ளெஷர் கார் வாங்கித்தாரேன்’ என்றார். இவரோ, ‘வேண்டாமப்பா! கார் ஓடினா செலவு. மாட்டு வண்டி நின்னா செலவு’ என்று சொல்லி சிரித்தார். மென்மையான நகைச்சுவை அவருடைய அலாதி சுபாவம். அவர் கோர்ட்டுக்கும் போகும் பெரும்பாலான வழக்குகளை முன்னாலேயே சமரசம் செய்து, தனக்கு வரவு குறைந்தாலும், கட்சிக்காரனுக்கு மிச்சம் பிடித்துக்கொடுப்பார். கோர்ட்டார் நேரத்தை வீணடிக்கமாட்டார். அதனாலே, கொஞ்சம் சுணங்கினாலும் எதிர்க்கட்சி வக்கீல்கள் கூட இவருடைய பேச்சை மீறமாட்டார்கள். ஆகமொத்தம் அவரொரு சான்றோன். அடடா! எதையோ சொல்ல வந்து, இவருடைய வரலாறு எழுதுகிறேனே! விஷயத்துக்கு வருவோம்.

ஒரு நாள் வீரவநல்லூரிலிருந்து அவருடைய பால்ய சிநேகிதன் சங்கரசுப்ரமணிய ஐயர் வந்திருந்தார். அங்கே ஜவுளிக்கடையில் குமாஸ்தா. கிட்டத்தட்ட குசேலர் கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க வந்திருந்த மாதிரி என்றாலும், ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்தது அவர்கள் வரலாற்றில் கிடையாது. எல்லாம் ஈக்வல் ஃபுட்டிங் தான். அவர் இரண்டு நாட்கள் டேரா போட்டிருந்தார். லோகாபிராமமாக எத்தனை பேசியிருந்தாலும், அவர் வந்த விஷயத்தைச் சொல்ல வில்லை. இவரும் கேட்க வில்லை. அவரவர் சுபாவம் அப்படி. தொக்கி நின்றது என்னமோ அந்தக்காலத்து வில்லங்கம் ஒன்று.  என்ன என்று கேட்கிறிர்களா? பொறுத்தாள்க.

உங்களுக்கு உமை நாச்சியாரை தெரியுமோ? அதான் ஊற்றுமலை ஜமீனின் வாரிசு ஒரே மகள். செல்லமாகத்தான் வளர்த்தார். ஆனாலும் ஜமீன் பண்பு, சம்பிரதாயங்கள், ராஜ குடும்பத்து நடை, உடை, பாவனை, குலக்கட்டுப்பாடு ஆகியவற்றை அவள் கடைபிடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே தான் படிப்பு; பாட்டுக்ளாஸ் உண்டு; ஆனால் நாட்டியத்துக்குத் தடா. அவள் சாரா டக்கர் காலேஜில் இண்டர்மீடியேட் படித்து வந்தாள். காரில் தான் போய்வருவாள். அதனாலேயே அவள் ஓரளவுக்கு தனிமையாக இருக்க நேர்ந்தது என்றால் மிகையாகாது. கூடப்படித்த சிவகாமி மட்டும் நெருங்கிய நட்பு. இருவரும் எங்கும் சேர்ந்தே தென்படுவார்கள். இருவருக்கும் தமிழ் மீது ஆர்வம் இருந்தது. அது வம்ச பரம்பரை சொத்து. சாரா டக்கர் காலேஜ் 1895ல் பெண்களுக்காக இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்டது. அங்கு சூடிகையான உமை நாச்சியாரை படிக்கவைக்கவேண்டும் என்று சிபாரிசு செய்ததே பிள்ளை அவர்கள் தான். திருநெல்வேலி-ராமநாதபுரம் பிராந்தியத்தில் எந்த விதமான ஆலோசனைக்கும் அவரைத்தான் அணுகுவார்கள்.

நோக்குக: அப்பீல் கிடையாது.

இண்டெர்மீடியட் தேர்வில் முதலிடம் பெற்ற உமைக்குத் தமிழில் நல்ல மார்க்; சிவகாமிக்கு அடுத்த இடம். அவள் கடம்பூர் ஜமீனின் தாயாதி ஒருவரின் இரண்டாவது மகள். செல்வந்தர் குடும்பம். இருவரும் மேல்படிப்பு எங்கே என்ன? என்று நினைக்கும்போது, அவர்களின் பெற்றோர்கள் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். தமிழாசிரியர் சிவஷண்முகம் பிள்ளை திட்டவட்டமாக இருவரும் தமிழ் படித்து முன்னேறவேண்டும் என்று பெற்றோர்களிடமும் சொல்லி விட்டார். சாரா டக்கர் போதாது; மதுரையோ, சென்னையோ தான் இலக்கு. தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரம் அவர்களின் சீடரான மு.வரதராசனிடம் (இருவரும் ‘னார்’ போட்டுக்கொள்வதில்லை). பாடம் கேட்கும் தருணம் கிட்டினால், அது ‘பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல’ என்று ஆசையும் காட்டி விட்டார். மிகவும் தயங்கிய தந்தைமார் இருவரும் பிள்ளை அவர்களை அணுகினர். அவரும் சென்னை செல்வதை ஆதரித்து, அதற்கு முன்னால் பெற்றோர்கள் திருமணம் செய்விக்க விரும்பினால், அதுவும் நடக்கட்டும் என்று சொல்லி பசங்களை சிக்கலில் மாட்டி விட்டார், புன்சிரிப்புடன். பாட்டி இருக்க பயமேன்? இருவரும் அவரவர் பாட்டிகளிடம் தஞ்சம் புகுந்தனர். தற்காலத்தில் செவிலித்தாய் பாட்டி தான். பாட்டிகளிடம் சுற்றி வளைத்துப் பேசவேண்டாம்.  அவர்களின் க்ரீன் சிக்னல் அப்பன்மார்களை கட்டிப்போட்டு விட்டது. இருவரையும் மதராஸ் கிருத்துவ கல்லூரி வரவேற்றது. வந்து எல்லாவற்றையும் ஆச்சா! போச்சா! என்று தீர விசாரித்த பெற்றோர்களுக்கும் திருப்தி. பெண்கள் தங்க வசதி, உணவு, பாதுகாப்பு எல்லாமே நன்றாக இருந்தது. முனைவர் விருது பெறும் வரை அங்கேயே இருந்து படிக்கலாம். பிரின்சிபால் ஏ.ஜே. பாயிட் துரையை போன்ற நல்ல மனிதரை கண்டதில்லை என்று இரண்டு ஜமீன்களும் அடித்துக்கூறினர். துரை அவர்களே இருவரும் மு.வ. அவர்களை சந்தித்து ஆசி பெற ஏற்பாடு செய்து கொடுத்தார். ஊற்றுமலை ஒரு கார் வாங்கிக்கொடுக்க விரும்பினார். பிரின்சிபால் அனுமதி மறுத்து விட்டார். இருவரும் முதுகலை படிக்கத்தொடங்கிய போது தான் சிவகாமி உமையிடம் அந்த ஐயர் வீட்டுப்பையனை பற்றி வினவினாள். உமை மவுனம் சாதித்தாள். இதான் விஷயம். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சிவாச்சாரியார் கோவிந்த தீட்சிதர் அவர்களின் அருமந்த மைந்தன் முனைவர் கோ.சந்திரசேகரன் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் உதவி பேராசிரியர். ஒரு நாள் இவர்களுடைய கல்லூரிக்கு வந்து சங்கத்தமிழ் பற்றி உரையாற்றினான்.

 

காட்சி:

பாங்கி தலைவியின் தோழி. அவளுடைய அந்தரங்கம் அறிந்தது மட்டுமல்லாமல்,  தலைவன்வரும் நேரம் ‘பூப்பறிக்க’ சென்றுவிடுவாள். அத்தனை சூதானம்.  தலைவி பசலையால் வாடும் போது, அதை குறிப்பால் உணர்ந்து, ஆறுதல் கூறி, தலைவனுக்கு தக்கதொரு அறிவுரை கூறி, அவனை கொணர்ந்து, தலைவியை அவனுடன் உடன்போக்கு அனுப்ப திட்டமிடுவாள்; தலைவியை சமாதானம் செய்து,அதை நிறைவேற்றுவாள். அன்னை, செவிலித்தாய் எல்லாரையும் பின்னர் கவர்ந்து விடுவாள். பசலைக்குப் பச்சிலை மருத்துவம் அவளுடைய கைப்பக்குவம் தான் என்று உவமை கூறலாம்.

தலைவன் மிகவும் தயங்குவான். பாலைநிலத்தைக் கடந்து தான் அவனுடைய ஊருக்கு செல்ல இயலும். கல்லும் முள்ளுமாக, பாதையோ கடினமான பாதை. பாங்கியோ, அதையும் சமாளிக்கும் வழி சொல்லும் கெட்டிக்காரி.

நும்மொடு வரின் தலைவிக்குப் பாலை இனியதாகும்

என்று தட்டிக்கொடுத்து அவனுக்கு ஊக்கமளிப்பாள்.:

 

“…நீர்க்கால் யாத்த நிரையிதழ்க் குவளைஇனியவாம் நும்மோடு வரினே..” 

என்பாள். சென்னை தமிழில், ‘ நீ எதுக்கண்ணா இருக்கே’?. இங்கு தான் மென்மையான காட்சி. வழியிலே ‘கண்டோர்’

இவ்விருவரும் புவியின் கண் உறையும் மானிடரோ?’                          

அல்லது

விண்ணுலகின் கண் உறையும் தேவரோ

என்று மாய்ந்த்து மாய்ந்து வியந்து போவார்களாம். அதாவது, உலகம் மையலின் எனிமி அல்ல. மையலின் மயங்குறவைக்கும் மையல் தான்அவர்களை ஆட்க்கொள்ளும் போதை/இலாகிரி.

அவ்வையார் எடுத்துரைத்த குவளை மலர் உவமையை முனைவர் சந்திரசேகரன் விரித்து, ‘பாட்டும் பாடமும் ஆக’ உவந்து அளிப்பதே தனி அழகு. நீர்கால்…’ என்று தொடங்கும் பாடலை ‘கணீர்’ என்ற குரலில் பாடி, என்ன தான் காற்று பலமாக வீசினாலும், ‘நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற வரிசையாகிய இதழ்களையுடைய குவளை மலரானது வாடாது; பாலை நிலத்தில் யானையே வாடும், மரக்கிளைகளை பிளக்கும் வலிமை இல்லாததால். ஆனால், தலைவிக்கு உன் துணை பெரிது; அவள் எளிதாகவே பாலையை கடப்பாள். அஞ்சேல்.’ என்கிறாளாம்.

தலைவி நும்மோடு வரின் பாலைநிலம் அவளுக்கு இனியதேயாகும்…”

என்ற கருத்தை,

நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை

கோடை ஒற்றினும் வாடா தாகும்

கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ

உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன

முளிசினை பிளக்கு முன்பின் மையின்

யானை கைமடித் துயவும்

கானமும் இனியவாம் நும்மொடு வரினே”.

-அவ்வையார்: குறுந்தொகை 388

என்ற பாடல் மூலம் சங்கத்தமிழ் கூறுவதை அருமையாக அந்த ‘ஐயர் வீட்டுப்பையன்’ விளக்கியதை நினைத்து, நினைத்து மருகுவாள், உமை. சிவகாமியும் அவளை ‘குவளை மலராள்’ என்றழைத்து எள்ளல் செய்வாள்.

தன் உரையில்

‘மகளிர் மன்றம் கூடி, தலைவி மீது அலர் தூவுவார்கள். தகப்பன் தடி எடுப்பானே, அண்ணன்மார் வாள்மறவர்கள் ஆச்சுதே என்று அஞ்சி, அன்னை அவளை இற்செறிப்பாள்: வேறு மணவாளன் தேடுவாள். ‘ஐயோ பாவம்’ என்று, பாங்கி, தலைவன் அவளை உடன்போக்கு செய்ய சூழ்ச்சி செய்வாள்.’

என்று உணர்ச்சியுடன் விவரித்த முனைவர் சந்திரசேகரன், திடீரென்று இடைக்கால இலக்கியத்துக்குப் பாய்ந்து,

 வெற்பா! …எம் ஐயன்மார்நீ கடல் சூழ்ந்த உலகத்தையே தந்தாலும் கொள்ளார்இவளை நின் ஊருக்கு உடன்கொண்டு செல்வாயாகவேறு வழியில்லை…”

என்று தஞ்சை வாணன் கோவை 305லிருந்து மேற்கோள் காட்டவே, யாவரும் கரவொலி எழுப்பி அதை வரவேற்றனர். நாணம் மிகுந்து தலை குனிந்த உமையின் குறிப்புணர்ந்தவர்கள் சிவகாமியும், சந்திரசேகரனும் மட்டும் தான் என்று நினைக்காதீர்கள். உள்ளுறை பின்னர் வரும்.

சங்க இலக்கியத்தில் செவிலித்தாய் முக்கியமான கதாபாத்திரம்.  அவளுக்கு வேண்டியதெல்லாம் தலைமகளின் நலம் மட்டுமே. தலைவனுடன் தலைவி உடன்போனதை அறிந்த செவிலித்தாய், தன் மகள் சென்ற வழியில் இன்னல்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்று கடவுளை வணங்குகிறாள். அவள்,

“ பெருமானே! இவர்களுக்கு எல்லாமே இனியதாக அமைய வேண்டும்.”

என்று தெய்வத்திடம் வேண்டுவதை, கீழ்க்கண்ட பாடலை மாணவர்களையே பாட வைத்து சுவை கூட்டீனார்,அவர்.

ஞாயிறு காயாது மரநிழற் பட்டு

மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்

தண்மழை தலையின் றாக நந்நீத்துச்

சுடர்வாய் நெடுவேற் காளையொடு

மடமா அரிவை போகிய சுரனே.

– கயமனார்: குறுந்தொகை 378

“நம்மைப் பிரிந்து, ஒளி பொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, அழகையும் மாந்தளிர் போன்ற நிறத்தையும் உடைய தலைவி, சென்ற பாலைநிலத்தில், கதிரவனின் வெயில் படாமல், மரத்தின் நிழல் படிந்து, மலையில் உள்ள சிறிய வழியில், மணல் மிகுதியாகப் பரவி,  குளிர்ந்த மழை பெய்வதாக.” என்று அளித்த விரிவுரை ஏற்புடையாக அமைந்திருந்தது. இதை ஒரு நன்நிமித்தமாகவே கருதினாள், பாங்கி சிவகாமி. அதை குறிப்பால் உணர்ந்த சந்திரசேகரன் ஒரு நாலடியார் மேற்கோளை எடுத்து விட்டான்.  முதலில் பொருள் காண்போம். தலைவியின் வாய் செவ்வல்லி மலர் போல மணக்கிறது;  அழகிய இடை; செம்மை நிறைந்த பஞ்சுக் குழம்பை எடுத்து கொண்டு பூசினாலும் பின்னே இழுத்துக்கொள்ளும் மென்மையான பாதங்கள். இன்று படுக்கைக் கற்கள் நிறைந்த பாலைவனத்தின் கொடுமையை அவை எப்படித்தான் தாங்கினவே என்று தாய் கலங்குகிறாள். செய்யுள் இதோ:

அரக்கு ஆம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ!

பரல்கானம் ஆற்றின் கொல்லோ – அரக்கர்ந்த

பஞ்சிகொண்டு ஊட்டினும் “ பைஎனப் பைஎன “ என்று

அஞ்சிப்பின் வாங்கும் அடி ”

-நாலடியார் 396

அத்துடன் முடிந்தது அன்றைய பாடம். ஆனால் உமை தன் பாதங்களை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்த வண்ணம் உள்ளாள், உலகை மறந்து. சபையோர் அவளை ஆதுரத்துடன் நோக்குகிறார்கள். காலத்துக்குத் தேய்பிறை; உமை-சந்திரசேகரன் மையலுக்கு வளர்பிறை. சந்திரசேகரனுக்கும் உமைக்கும் கூடல், ஊடல் ஆக சந்திப்புகள் நிகழ்கின்றன. எல்லாவற்றிற்கும் சிவகாமி உள்கை. மூவருக்கும் இந்த உடன்போக்கை வரைவாக மாற்றும் வித்தை தெரியவில்லை. இரு பக்கமும் பெற்றோர்களை அணுகும் விதம் புரியாமல் தவிப்பு.

சொன்னால் நம்பமாட்டீர்கள். நடப்பதை எல்லாம் மோப்பத்தினாலேயே அறிந்த பிரின்சிபால் ஏ.ஜே. பாயிட் அவர்கள் அவ்வப்பொழுது நலம் விசாரிப்பார், இன்முகத்துடன். அவருக்கு இல்லாத அனுபவம் யாருக்குத்தான் கிட்டும்? சந்திரசேகரை வருவித்து ஒரு நாள் பேசினார். அவனுடைய இயலாமையை/சங்கடத்தைப் புரிந்து கொண்டார். முதற்கண்ணாக தீட்சிதர் அவர்களை தன்வசம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானித்தார். சிவகாமியிடம் குடும்ப பின்னணிகளை கறந்து கொண்டார். தமிழ்நாடு முழுதும் அவருடைய பழைய மாணாக்கர்கள் பரவி இருந்தனர். அவரின் அன்புகட்டளைக்கு அவர்கள் என்றும் காத்து இருந்தினர் என்றால் மிகையல்ல. ஜமீந்தார்கள் பத்தாம் பசலி. அவர்களை மாற்றுவது கடினம். வசப்படுத்துவது முடியும். அதற்கு வக்கீல் நெல்லையப்பப்பிள்ளை அவர்கள் மீது வலை வீச வேண்டும். அவர் நேரடி தாக்குதலுக்கு மசிய மாட்டார். தூது செல்ல, வீரவநல்லூர் சங்கரசுப்ரமணிய ஐயரை மிஞ்ச ஆள் கிடையாது. எனவே, இந்த காலகட்டத்தில் தான் முன்பே கூறிய இரண்டு நாள் டேரா நிகழ்வு. எல்லாருமே அனுபவசாலிகள் தாம். அதனால் வந்த விஷயத்தை சொல்லாமல் திரும்பி விட்டார், அவர். பக்குவமாக ஒரு வேலை செய்தார். வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரபலம். இந்தக் கோயிலில் மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதைக் கண்டு பரவசம் அடைவார்கள், பக்தர்கள்.

‘மாசி மாதம் நடக்கிறது. கோவிலுக்கு ஒரு நடை வந்து போ. சித்திரை மாதம் திருமணம் நடக்கவேண்டுமல்லவா.’, என்று சங்கரசுப்ரமணிய ஐயர் பிள்ளை அவர்களுக்கு ஒரு தபால் போட்டு விட்டார். இதென்ன பூடகமாக எழுதியிருக்கிறானே என்று பிள்ளை அவர்கள் வியந்தாரே தவிர, வீரவநல்லூருக்குப் புறப்பட்டு விட்டார், மற்ற ஜோலிகளை ஒத்திப்போட்டு விட்டு. பால்ய நண்பர்கள் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொண்டார்கள். பிரின்சிபால் நினைத்த மாதிரியே, இருவரும் உமை சந்திரசேகரனை மணப்பது தான் அறம் வளர்க்கும் செயல் என்று தீர்மானித்தார்கள். முதலில் அடம் பிடித்தாலும், ஊற்றுமலை தன் தாயாரின் கட்டளைக்கு அடி பணிந்து, வக்கீலின் சொல்லை மீற திராணி இல்லாததாலும், இந்த திருமணத்துக்கு சம்மதித்தார். பந்தக்கால் நடுவதை பற்றி உடனேயே யோசிக்கத்தொடங்கி விட்டார். பெண்வீட்டுக்காரன் தான் பிள்ளைவீட்டை அணுகவேண்டும் என்று பிள்ளைவாள் ஆணையிடவே, ஊற்றுமலை, கடம்பூர், பிள்ளை அவர்கள், சங்கரசுப்ரமணிய ஐயர் எல்லாரும் தம்பதி சகிதம் சென்னை வந்தடைந்தனர். பிரின்ஸிபால் துரைக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் ஏற்கனவே கோவிந்த தீட்சிதர் அவர்களை சம்மதிக்க வைத்து விட்டார். அதா அன்று. ‘இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்து ஆண்டாளை மகட் பேசியது போல…’ நாங்களே வருகிறோம் என்று தீட்சிதர் கூற, மதராஸ் கிருத்துவ கல்லூரிக்கே களைகட்டியது. பிரின்ஸிபால் துரையின் விசாலமான அறையில், தன் குடும்பத்துடன் வந்து, தீட்சிதர்வாள் சாங்கோபாங்கமாக,

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து

நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை

ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்

போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

-திருப்பொன்னூசல் 329

என்று திருவாசகம் பாடி பெண் கேட்டபோது, உணர்ச்சிப்பெருக்கால் ஊற்றுமலை அழுதே விட்டார். சிறிது நேரம் கழிந்து அவையை நோக்கி, பிரின்ஸிபால் துரையின் கோரிக்கைக்கு இணங்கி, பிள்ளை அவர்கள் சங்க இலக்கியங்களிலிருந்து, இடம், பொருள், ஏவலுக்கு இணங்க, சில அறிவுரைகள் வழங்கினார், எடுத்தவுடன்,

பெண்ணை பெற்றால், அவளை கவர ஒருவன் வருவான்

என்று ஒருபோடுபோட்டார். சற்றே மவுனம். பின்னர் கலித்தொகையிலிருந்து ஒரு செய்தி சொன்னார்.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை/ மலையுள் பிறப்பினும் மலைக்கு அவை தான் என் செய்யும்?/ சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை/ நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை என் செய்யும்?/ ஏழ்புனர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை/ யாழுலே பிறப்பினும் யாழ்க்கு அவை தான் என் செய்யும்?/ சூழுங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே…”

-கலித்தொகை -9 : 12-20

சந்தனம், முத்து, இசை ஆகியவை மீது, குறிப்பிட்ட காலம் வரை தான் மலைக்கும், கடலுக்கும், யாழுக்கும் உரிமை உண்டு. பின்னர் அவை பூசுபவர்க்கும், அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் அல்லவா சொந்தமாகின்றன? அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் உன் மகள் குறிப்பிட்ட பருவம் வரைதான் உனக்கு உரியவள்; அதன்பின் அவள் காதலுக்குரிய காதலனுக்குத்தான் உரியவள் என்று அவர் சொன்ன பின் , சற்றே நிதானித்து,

 

வீணையடி நீ எனக்கு மேவு விரல் நானுனக்கு.’

என்றாரே பார்க்கலாம். மிகவும் வெட்கப்பட்டு, முகம் சிவந்து தலை குனிந்தது பார்வதி அம்மையார். களங்கமில்லாத பேச்சினால் சபையில் களை கூடியது. தெரியாமலா சொன்னாள், அவ்வை பிராட்டி, இல்லறம் அல்லது நல்லறம் அன்று’  என்று? பின்னர் அவர் மென்மையாக செவிலித்தாயின் அவத்தையை வருணித்தார்.

வாழ்க்கையின் போக்கை முன்கூட்டி சொல்லமுடியுமோ? தலைவியின் பசலை வெளிப்படை. ஏற்கனவே அலர் பரவியதால் அவளுடைய காதல் பற்றி சிறிதளவு செவிவாய் கேள்வி, செவிலித்தாய்க்கு. தலைமகளை காணவில்லை.  ‘ஆலாய் பறக்கிறாள்’, செவிலி.  நாற்திசையும் அலைந்து அலைந்து களைத்துப்போகிறாள். திக்குத் தெரியவில்லை; சுவடு ஒன்றும் காணோம். கயமனார், பாலைத்திணையில், ‘மகட்போக்கிய செவிலித்தாய், சுரத்திடை பின்சென்று நவ்வி, பிணையினை கண்டு சொல்லியது’ என்றது போல.

முலைமுகம் செய்தன, முள் எயிறு இலங்கின,/தலைமுடி சான்றபேதை அல்லை, மேதையம் குறுமகள்,/ பெதும்பைப்பரவத்து ஒதுங்கினை, புறத்துஎன/…ஈங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையோடு என் மகள்/ இச்சுரம் படர்தன் தோளேசிறுகுடிக் கானவன் மகளே.” என்று எஃப். ஐ. ஆர். தாக்கல் செய்கிறாள், செவிலி. யாரிடம்? ஒரு நவ்வியிடம் (பெண் மான்)! ‘அன்னிக்கே சொன்னேனே! நீ பேதை அல்ல. பெதும்பை பருவம் மலர்ந்து விட்டது. கொத்திண்டு போய்டுவாங்க இந்தக்காலத்து பசங்க. (அந்தக்காலத்திலும் அப்படித்தான் என்று அறிக.) வீட்டில் அடைந்து கிட. உன் நற்றாயிடம் சொல்லி, அவள் மூலமாக, உன் அப்பனையும், அண்னனையும் உசுப்பி, உனக்கு மணமகன் தேடுவதாக இருந்தேனே’ என்றெல்லாம் புலம்பினாள், அந்த நவ்வியிடம். அந்த விடலைப்பையனும், இந்த பெண்குழந்தையும் ‘ எப்படி ஓடினரோ?’ என்று வியந்தாள். கவலைப்பட்டாள். முதல் கவலை, பாலை கடுஞ்சுரம் ஆயிற்றே. பரலைக்கல்கள் உன் மென்பாதங்களை பதம் பார்க்குமே. முள் குத்துமே. அடிப்பாவி! உன் தலையில் வெயில் காயுமே! உன் சிற்றாடையை வீட்டிலேயே கடாசி விட்டாயே, என்று. இதற்கெல்லாம் பிறகு தான் கதறினாள்,

சிறுகுடியின் பெருமகன் அல்லவோ, உன் தந்தை. அவனுக்கு இழுக்கு விளைவித்தாயே’ , என்று, விட்டேனா பார் என்று மேலும் செவிலி ஓடினாள். நவ்வியிடம் மேலும் சொல்வாள், இந்த பெதும்பையின் பொலிவை, நவ்வியை அந்த உடன்போக்கு பெண்ணாக பாவித்து,

நின் முலைகள் பருத்தன, விழுந்து முளைத்த புதிய பற்கள்ஒளி வீசின. கூந்தலை அள்ளி முடித்தாய். தண்ணிய தழை அணிந்தாய்’ என்றெல்லாம். இயலாமை புலம்புகிறது. ‘தன் சிதைவு அறிதல் அஞ்சி…‘என்று கொஞ்சல் கலந்த அங்கலாய்ப்பு. ‘நீ அவளை கண்டாயோ?’ என்ற கேள்வி. பதிலில்லை. மேலும் ஓடும்போது செவிலி முக்கோலையும், கமண்டலத்தையும் ஏந்திய பகவரை கண்டு தலைவியும் தலைவனும் சென்றதை கண்டீர்களோ என்று வினவுகிறாள். அவர்கள் இஃது அறம் என்று அருமை சாற்றினார்கள், இந்த உடன்போக்கு முறையானதே என்பதை தெளிவு படித்தினர் என்ற நுட்பத்தை பிள்ளை அவர்கள் அனுபவரீதியாக விளக்கினார்.

தமிழும் ஆங்கிலமும் கலந்த அவருடைய உரையை கவனமாக கேட்ட பிரின்ஸ்பால் அவர்கள், ‘முக்கோலையும், கமண்டலத்தையும் ஏந்திய முனிவர்கள் இங்கு யார்?’ என்று வினவினார். உடன் வந்த பதில்: ‘நாமிருவரும்’. இதை கேட்டு அவையே ஆர்பரித்தது. வினா தொடுக்க, சிவகாமிக்கும் துணிவு வந்தது. காதல் ஒரு நோயா? என்று அவள் வினவினாள். நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம் மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய் என்றும் அதற்கு மருந்தும் காதல் தான் என்ற பிள்ளை அவர்கள்

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்கபாசி யற்றே பசலை காதலர்தொடுவுழித் தொடுவுழி நீங்கிவிடுவுழி விடுவுழிப் பரத்த லானே”.

-பரணர்: குறுந்தொகை.399

என்றதலைவிக்கூற்றையேஅருளினார். பொருள்: ஊர்மக்கள் தண்ணீர் உண்ணும் கேணியில் படர்ந்துள்ள பாசி கை வைத்து அலசும்போது விலகிக்கொள்ளும். கையை எடுத்தவுடன் மீண்டும் மூடிக்கொள்ளும். அதுபோல என் மேனியில் படர்ந்துள்ள பசலை நோய் அவர் தொடும்போது விலகிக்கொள்கிது. அவர் கையை விட்டவுடன் என் உடலை மூடிக்கொள்கிறது.

சபை கலையும் முன் கடம்பூர் ஒரு சந்தேக நிவாரணம் நாடினார், சிவகாமியிடம். ‘நீயும் தலைவனை தேர்ந்து எடுத்து விட்டாயா?’ என்று. அவள் பதில் சொல்லவில்லை. அதனால் என்ன? முன்னோடி இருப்பதால், அவளுக்கு சிக்கல் ஏற்படாது என்பது உறுதி.

அடுத்த சித்திரை மாதம் உமை-சந்திரசேகரன் திருமணம் இனிதே நிறைவேறியது. ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர்களின் இரண்டாவது தலைமுறை பாஸ்டனிலும், சிட்னியிலும், லண்டனிலும் கொடி கட்டி பறக்கிறார்கள். என்ன தான் நான் மழுப்பினாலும், இந்த உண்மைக்கதை அவர்களுக்குப் புரிந்து விடும் என்பதால், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறேன்.

-#-

அடிக்குறிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட

சங்கப்பாடல்

 1. திருவள்ளுவர்: திருக்குறள் .1183
 2. அவ்வையார்: குறுந்தொகை 388
 3. கயமனார்: குறுந்தொகை 378
 4. நாலடியார் 396 (தொகை நூல்)
 5. கலித்தொகை -9 : 12-20
 6. பரணர்: குறுந்தொகை.399
 7. கயமனார்: அகநானூறு 7

மற்றவை:

 1. தஞ்சை வாணன் கோவை 305;
 2. மாணிக்கவாசகர்: -திருப்பொன்னூசல் 329
 3. ஆண்டாள்: நாச்சியார் திருமொழி 53
 4. மகாகவி சுப்ரமண்ய பாரதியார்.