சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 2] – பௌசியா

<< காதல் நதியினிலே!!! – பகுதி 1

காதல் நதியினிலே!!! – பகுதி 3>>

3

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை”

குடகின் குலமகள் கன்னிக்காவிரி தன் நாயகனை தழுவி இன்பம் காணும் துறையை தன்னகத்தே கொண்ட கழாரின் பொழுது வழக்கத்திற்கு மாறாக இன்று வெகுவேகமாக புலர்ந்து கொண்டிருந்தது. கலம் செலுத்தி வணிகம் செய்யும் புகார் நகரத்திற்கு ஐந்துகல் தொலைவில் உள்ள கழார், இன்று புகார் நகரைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டது. மாளிகைகள், வீடுகள் அனைத்தும் புதுசுண்ணம்  வர்ணம் பூசி, வாயில்களில் தோரணம் கட்டப்பட்டு, வாயில்களில் வண்ணக்கோலங்கள் இடப்பட்டு கழார் நகரமே இந்திரலோகம் போலக் காட்சி தந்தது. கழாரின் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் நான்கு நாட்கள் முன்னரே, கழாரில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வரத் துவங்கிவிட்டிருந்தனர்.

புகார் மற்றும் கழாரில் உள்ள தங்கும் விடுதிகளில் உணவு சமைத்தவண்ணம் இருந்தது. காளையரும் கன்னியரும் தங்கள் காதல்மொழிகளை விழிகளால் பரிமாறிக்கொண்டனர். இத்தனை கோலாகலமும் ஆண்டுதோறும் கழார் நகரில் நடைபெறும் ஒன்று. இவற்றிற்கு எல்லாம் காரணம், புகாரில் கடலுடன் கலக்கும் காவிரி, இந்த கழார் ஆற்றுத்துறையில் செழிப்புற்று இருப்பாள். எனவே, இந்த கழார்துறை கன்னியரும், காளையரும் மகிழ்ந்து விளையாடும் புனல்விளையாட்டிற்கு பெயர் பெற்றது. நாளடைவில் இத்துறையில் நடைபெறும் “புனல்விழா” நாடு நகரங்களில் எல்லாம் பரவி பெரும்புகழை அடையத்துவங்கியது. இவ்வழக்கத்தை மேற்கொண்டு இந்த ஆண்டும் கழார், புனல்விழாவிற்கு தயாராகிவிட்டது. இதில் கலந்துகொள்ள சேர, பாண்டிய நாடுகளில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும். இவ்விளையாட்டுகளை காண மக்கள் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து வருவது வழக்கமாக இருந்தது.

கழாரின் ஆற்றுத்துறை இன்று வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புனல் விளையாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த நீச்சல் வீரர்களும், ஆடல்மகளிரும் தங்களுக்காக தரப்பட்ட இடத்தில் ஒப்பனைகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவில் சோழநாட்டின் மாமன்னர் கரிகால் பெருவளத்தான் தன் மகள் ஆதிமந்தியுடன் கலந்துகொண்டு சிறப்பிப்பார் என்பதனால் கட்டுக்காவல்கள் சற்று பலமாகவே இருந்தது. புனல்விழா துவங்க இன்னமும் ஏழரை நாழிகை நேரம் இருந்ததனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களுக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சிலர், வேற்று நாட்டில் இருந்து வந்திருந்த தங்கள் மனம் கவர்ந்த நீச்சல் வீரர்களை கண்டு பேசி மகிழ்ந்திருந்தனர். போட்டிகளில் கலந்துகொள்ள வந்திருந்த வீரர்களும், தங்களுடன் ஆடலில் கலந்துகொள்ளும் ஆடல் பெண்களிடம் இன்று நடைபெறவிருக்கும் போட்டியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மேலும் சில வீரர்கள் தங்களுடன் வந்திருந்த தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். நீச்சல் நடன விழாவை மேலும் சிறப்பிக்க வந்திருந்த கொம்பு, பறை இசை கலைஞர்கள் தங்களுக்கென தரப்பட்ட கூடாரத்தில் தங்கள் இசைக்கருவிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.

இத்தகைய ஆரவாரங்களுக்கிடையே ஒரே மனநிலை கொண்ட இரு உள்ளங்கள் எதிரெதிர் திசைகளில் வெறுமையாய் நின்றிருந்தன. இருவரையும் அவரவர் தோழியர் தேற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி நமக்கு முன்னமே அறிமுகமான ஆதிமந்தி. மற்றொருத்தி ‘காவிரி’.

“ஆதிமந்தி” “உன்னைத்தான் அழைக்கிறேன்! கேட்கிறதா தேவி”, என்ற நித்திலாவின் குரலில் அன்பும் அரவணைப்பும் மேலோங்கி இருந்தது.

“………..” ”

இப்படி எதுவும் பேசாமல் சாளரத்தின் வழி காவிரியையே பார்த்துக் கொண்டிருந்தால் என்னவென்று நினைப்பது ஆதிமந்தி”, என்றபோது நித்திலாவின் குரல் பெரும் துயரத்தால் உடைந்திருந்தது.

தன் மௌனம் தன் தோழியை வருந்த செய்கிறதே என மனம் துன்பப்பட்ட ஆதிமந்தி, “நித்திலா என் மனதை நான் கூறித்தான் நீ அறிவாயா? என் நினைவுகள், இன்பம், துன்பம் அனைத்தும் நீ அறிந்ததுதானே! ஏற்கனவே வாடி நிற்கும் என்னை, உன் செய்கை மேலும் துவள செய்கிறது. என்னை தனிமையில் விட்டு விலகிச்செல்!”, என்றாள்.

“ஆதிமந்தி! இதே சம்பாஷணை நம்மிடையே பலமுறை நிகழ்ந்துள்ளது. உன் மனதை அறிந்து உன்னிடம் பலமுறை பரிசில் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் உன்னை விட்டு விலகிச்செல்ல வேண்டும் என்கிறாயே?! சொல் ஆதிமந்தி! நானுமற்ற தனிமை உன்னை மகிழ்விக்கும் எனில், இதோ நான் சென்றுவிடுகிறேன். உன் அமைதியும் மகிழ்ச்சியுமே எனக்கு முக்கியம். ஆனால் ஒன்று ஆதிமந்தி! உன்னை நான் தனிமையின் வசம் விட்டுச்செல்லும் அதே நேரத்தில், ஆட்டன் அத்தியின் நினைவுகள் உன்னை அலைக்கழித்துவிடுமே என்று எண்ணித்தான் வருந்துகிறேன்”, என்று சோகமே உருவாய் கூறிய நித்திலாவை, கண்ணீர் வழியும் விழிகளுடன் நோக்கினாள் ஆதிமந்தி.

“ஆம் ஆதிமந்தி! உன் நிழலாய் வாழும் எனக்கு உன் உள்ளம் என்னவென்று புரியாதா?”, என்ற நித்திலாவை ஓடிச்சென்று அணைத்த ஆதிமந்தி, அவள் தோளில் சாய்ந்து கண்ணீரை ஆறாகப் பெருக்கினாள்.

தோழியின் செய்கையால் ஒருகணம் திகைத்து நின்ற நித்திலா, நொடியில் தன்னை ஆசுவாசப்படுத்தி ஆதிமந்தியின் அழகிய முகவாயை பிடித்து கொஞ்சலானாள். “ஆதிமந்தி! சோணாட்டின் இளவரசி, எங்கள் மன்னர் கரிகால் பெருவளத்தானின் செல்வப் புதல்வி இப்படி அழலாமா? இப்போதாவது உன் உள்ளத்துயரை கூறிவிடு. என்னால் இயன்றதை செய்து உன் துன்பத்தை போக்குகின்றேன்”, என்ற நித்திலாவை ஆறுதலுடன் நோக்கினாள் ஆதிமந்தி.

கடந்த ஆண்டு இதே நாளில், தன் தந்தையுடன் படை பரிவாரங்கள் சூழ்ந்து வர, கழார் ஆற்றுத்துறையில் ஆட்டன் அத்தியை சந்தித்தது முதல், முதல் பார்வையிலேயே இருவரும் தத்தம் மனதை பறிக்கொடுத்தது வரையிலும், இவ்வாண்டு நிகழவிருக்கும் புனல்நீர் விளையாட்டில் தான் பெரும் வெற்றியின் பரிசாக மன்னரிடம் தன்னை பெண் கேட்டு திருமணம் செய்வதாகவும் கூறித் தன் கையடித்து வாக்கு தந்தது முதலான அனைத்தையும் ஒன்றுவிடாமல் தோழிக்கு உரைத்தாள் ஆதிமந்தி.

“அடிக்கள்ளி, நான் ஒருத்தி உனக்கு நிழலாய் இருக்கிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கிறேனே. அத்தனையும் பொய் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. ஆனாலும் இந்த ஆட்டன் அத்தி, நீச்சலில் மட்டுமல்ல தோழிப்பெண் அறியாது தலைவியின் உள்ளத்தை களவாடுவதிலும் வல்லவன் போலிருக்கிறதே” என்ற நித்திலாவை கோவப்பார்வை பார்த்தாள் ஆதிமந்தி.

“விளையாடுவதற்கு இதுவா நேரம் நித்திலா? என் மனம் படும்பாடு எனக்கு மட்டும்தானே தெரியும்” என்ற ஆதிமந்தியின் விழிகள் மீண்டும்கலங்க, “அய்யய்யோ வேண்டாம் அம்மா! மீண்டும் நீ அழுவதை காண என்னால் இயலாது. சரி, ஒன்றுமட்டும் எனக்கு தெளிவுபடுத்து ஆதிமந்தி. நீ கூறிய நிகழ்வுகளில் இருந்து அத்தி இந்த ஆண்டு நீச்சல் விழாவில் வெற்றி பெற்றால், அடுத்து நீ சேரநாட்டு மகாராணி என்பதில் ஐயமில்லை. இதற்கு நீ மகிழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? அதைவிடுத்து நீ அழுவதேன்?” என்ற தன் சந்தேகத்தை ஆதிமந்தியின் முன்வைத்தாள் நித்திலா.

“உண்மை தான் நித்திலா! அவர் கூறியவை அனைத்தும் உண்மையே. ஆனால், இன்று இன்னமும் ஏழரை நாழிகையில் போட்டிகள் ஆரம்பிக்க இருக்கிறன. போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் வீரர்கள் நேற்றே கழாருக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால்….”

“ஆனால்? என்ன ஆனால்?”

“ஆனால், நேற்று முதல் நான் எங்கு தேடியும் அத்தியை காணமுடியவில்லை. ஒருவேளை, இந்த ஓராண்டு காலத்தில் அவர் என்னை மறந்திருப்பாரோ? நேரம் ஆக, ஆக இந்த எண்ணம் மேலோங்குகிறது. அத்தியை காணாதது, அவர் என்னை மறந்திருப்பாரோ என்ற நினைவு என இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை புயலில் சிக்கிய சிறுபடகாய் உடைந்துபோக செய்கின்றன. நானும் மனத்தால் மிகவும் உடைந்துதான் போய்விட்டேன்” என்று சொல்ல சொல்லவே குரல் தழுதழுக்க மீண்டும் அழத்தொடங்கினாள் ஆதிமந்தி.

ஆதிமந்தியின் மனதை முழுதும் அறிந்துகொண்ட நித்திலா, அவள்மீது இரக்கம் கொண்டாள். ஆதிமந்தியின் மனத்துயரை நீக்க ஏதுவான தேற்றுதல் மொழிகளை கூற ஆரம்பித்தாள்.

“ஆதிமந்தி, அத்தியை நீ நேரில் சென்று தேடினாயா? ஆச்சர்யம். எங்கெல்லாம் தேடினாய் என்று கூறமுடியுமா?”

“கூறுகிறேன் நித்திலா! நேற்று மாலை தந்தையிடம் கழாரை சுற்றிப்பார்க்க விரும்புவதாக கூறினேன். இன்று புனல்நீர் விழா என்பதனால் கழார் புதுப்பொலிவுடன் விளங்கும் என்பதை கூறிய தந்தை, எனக்கென பல்லக்கும், வீரர்களையும் தந்து நகர்வலம் வர சம்மதம் தெரிவித்தார். அவ்வகையில் நான் முதலில் சென்றது, பல்வேறு நாட்டில் இருந்து வந்த வீரர்களும் கூடியிருந்து மாலைப்பொழுதில் தத்தம் வீரத்தை பறைசாற்றிக்கொள்ளும் மள்ளர் பாசறைக்கு. அங்கு சேர, பாண்டிய தேசத்து மள்ளர்கள், சோழநாட்டு மள்ளர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இருபெரும் மலைகள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல அவர்களின் தாக்குதல், இவற்றின் இடையே நாம் அப்பாசறை முழுதும் அத்தியை  தேடினேன். ஆனால், அவர் அங்கு இல்லை. இங்கு இல்லையென்றால் துணங்கை நடனம் ஆடும் ஆடுகளத்தில் இருப்பார் என்று எண்ணி அங்கு சென்றேன். ஆனால் அத்தி அங்கும் இல்லை. ஒருவேளை, நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமின்றி வராது இருப்பாரோ?” என்று விம்மினாள் ஆதிமந்தி.

இளவரசி ஆதிமந்தி மாபெரும் துயரத்தில் சிக்கிவிட்டாள் என்று எண்ணிய நித்திலாவிற்கு, ஆதிமந்தியின் பதில் சிரிப்பை வரவழைத்தது. “அய்யோ தேவி! இதற்காகவா இத்தனை அழுகையும் சோகமும். இதனை முன்னரே என்னிடம் கேட்டிருந்தால் நானே கூரியிருப்பேனே” என்ற நித்திலாவை மலர்ந்த தாமரையின் மொட்டாய் விழிகள் விரிய மகிழ்ந்து நோக்கினாள் ஆதிமந்தி.

“என்ன? நீயே கூறியிருப்பாயா? அப்படியென்றால் உனக்கு தெரியுமா அவர் எங்கு உள்ளார் என்று? நீ அவரைப் பார்த்தாயா? நலமாக இருக்கிறாரா? என்னைப் பற்றி ஏதேனும் கேட்டாரா? என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன ஆதிமந்தியை கையமர்த்திய நித்திலா, “போதும், போதும் தேவி. இதோடு நீ தொடுக்கும் கேள்விக்கணைகளை நிறுத்திக்கொள். இதற்கு மேல் என்னால் முடியாது” என்று அவளை வம்பு செய்த நித்திலா தொடர்ந்தாள், “தேவி, ஓராண்டு காலமாய் தங்களுக்காக தேக்கி வைத்த காதலில் வெற்றிமாலை சூட, அத்தி பயிற்சி மேற்கொண்டு இருப்பானா என்பதை பார்த்தீர்களா?” என்றாள்.

“நித்திலா!!” என்று துள்ளியோடி வந்து நித்திலாவை கட்டிக்கொண்ட ஆதிமந்தி, “ஆம், நித்திலா நான் அவரை அங்கு தேடவில்லை. இவ்விரண்டு இடங்களிலும் அவர் இல்லாததினால், மனம் துயரம் மேலிட, அரண்மனைக்கு திரும்பிவிட்டேன்..” என்றவளை இடைமறித்த நித்திலா, “அரண்மனைக்கு வந்ததும், கண்ணீரில் கடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டீரோ?” என்று கேலி செய்ய, முகம் சிவந்த ஆதிமந்தி தன் முகத்தை செம்பஞ்சு வர்ணம் தீட்டிய விரல்களால் மூடிக்கொள்ள, “இப்படியே முகத்தை விரலுக்குள் சிறைப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தால், நாழிகைகள் நமக்காக காத்திராது. இந்த தாமரை முகத்தை காணாது அத்தி, நீரில் எதை தேடுவாரோ?” என்ற தோழியை செல்லமாக காதைப்பிடித்து திருகி, “சரி.. சரி.. பேச நேரமில்லை. பல்லக்கை தயார்படுத்து ஆற்றுத்துறைக்கு கிளம்புவோம்” என்ற ஆதிமந்தியின் கட்டளையை சிரம் மேற்கொண்டு வாயிற்காவலர்களை தேடி ஓடினால் நித்திலா.


4

“பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு”

ஆதிமந்தி வெகு துரிதமாக கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டு இருந்த அதே நேரத்தில் காவிரியும் சில கட்டளைகளை தம் தோழியருக்கு கூறிக்கொண்டிருந்தாள். காவிரி, நீச்சல் ஆடல்மங்கை. நீருக்குள் மீனின் துள்ளலுடன், இசைக்கேற்ப நடனமாடும் காவிரி, பாண்டிய நாட்டு இளம்பெண். தன் நீச்சல் திறமையால் எட்டுத்திக்கும் இவளுக்கென ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொண்டவள். இவளுடன் நீச்சல் போட்டியில் வெற்றிகொண்டோர் எவரும் இருந்ததில்லை என்ற பெருமை சென்ற ஆண்டோடு முடிவுக்கு வந்தது. ஆம், கழார் நீர்விழாவிற்கு கடந்த ஆண்டு கலந்துகொண்டோரில் காவிரியும் ஒருவள். நீர்விளையாட்டில் அத்தியின் ஆடல் திறனில் கவனம் செலுத்தியவள், பின் ஆட்டன் அத்தியிடம் தோற்றே போனாள். போட்டியில் ஏற்பட்ட தோல்வி காவிரிக்கு வருத்தத்தை தரவில்லை. மாறாக அத்தியின்மீது அவளுக்கு மாளாத காதல் தோன்றியது. தன்னை வென்றவன், தன்னை ஆளவேண்டும் என்று முடிவெடுத்தாள். அந்நொடி முதல், அத்தியை தன் காதலனாய் வரித்துக்கொண்டாள் காவிரி.

காவிரி, போட்டியில் தோற்றதும் அவள் முகம் வாடாததும், அவள் நாணம் சற்றுமின்றி அத்தியையே வைத்தக்கண்வாங்காமல் பார்த்ததையும் கண்ட அத்தியின் நண்பன் மகிழன், காவிரி அவனை பார்ப்பதைக் கூறி அத்தியை வம்பிழுத்தான். தான் பேசும்போதும் நண்பன் நினைவு வேறெங்கோ உள்ளதை அறிந்த மகிழன், “நண்பா! அத்தி. சோழநாட்டில் நீ காட்டிய வீரவலையில் பாண்டியநாட்டு மீன்கள் அகப்படுகின்றனவே. விந்தையல்லவா?” என்று ஆரம்பிக்க, ஆதிமந்தியின் காதலில் தன்னை மறந்திருந்த அத்தி, காவிரியை பற்றிய சிந்தனையே இல்லாதவனாக, “மகிழன், என்ன மீன்? வலை? என்கிறாய் எனக்கு ஒன்றுமே புரியவில்லையே” என வினவினான்.

“ஒன்றுமே புரியவில்லையா? நல்லதாக போயிற்று. அப்படியென்றால் காவிரியை நீ பார்க்கவேயில்லையா?” என்ற நண்பனை கேள்வியுடன் நோக்கிய அத்தி, “காவிரியை பார்க்காமல் என்ன? அதில் நான் புரிந்த சாகசம் தானே, இன்று என்னை வெற்றி வீரனாக அனைவரும் கொண்டாட வழிவகுத்தது” என்ற நண்பனை அடக்கமுடியாத சிரிப்புடன் பார்த்தான் மகிழன். அவன் செய்கையால் கோபம் கொண்ட அத்தி, “மகிழா! எதுவாக இருப்பினும் தெளிவாக பேசு. சூட்சுமம் வேண்டாம்” என்றான்.

தன் முன் நடக்கும் நிகழ்வுகள் முழுவதையும் தன் மனதில் படம்பிடிக்கும் திறன் கொண்ட நண்பன் அத்தி, தன்னோடு போட்டியிட்ட காவிரியை எவ்வாறு கவனியாது இருந்தான் என்ற குழப்பத்திலேயே, காவிரியைப் பற்றி வர்ணித்தான். “அத்தி, காவிரி பாண்டிய தேசத்து நீச்சல் வீராங்கணை. காவிரி நீரில் நீந்தி விளையாடும் போது, அவளது மலர்ந்த விழிகளைக் கண்ட வண்டினங்கள் இது தாமரையோ என்று மயக்கம் கொண்டு அவள் விழிமலர்களில் தேங்கி நிற்கும் மதுவை சுவைக்க பறந்தோடி செல்லும், வண்டுகள் வரும் வேகத்திற்கு நதியின் நாயகி காவிரி, சிறு துள்ளலுடன் நீரினுள் மூழ்கி வண்டினங்களை திணறடிக்க செய்வாள். வண்டுகளோடு, இவள் நீச்சல் விளையாட்டை காண வந்த காளையரும் கூட நீருக்குள் மூழ்கி போவர். நீருக்குள்ளும் சுவாசிப்பாளோ என்னவோ? எத்தனை நேரம் நீரில் மூழ்கி இருந்தாலும் அத்தனை நேரமும் மூச்சடைக்கும் திறன் பெற்றவள். நம் சேரநாட்டு யானைகள் விரும்பம் அழகிய மூங்கிலைப் போன்ற அவளுடைய வலிமை மிக்க தோள்கள், நீரில் நீந்தும் காவிரியின் அழகை பன்மடங்கு எடுத்துக்காட்டும். இவளது நெற்றி, வானில் தோன்றும் பிறைச்சந்திரன் நீரிலிருந்து எழுகின்றானோ என எண்ணவைக்கும்..” என்று தொடர்ந்து கொண்டே சென்ற நண்பனின் பேச்சை பாதிகேட்டும் கேட்காமலும் இருந்த அத்தியின் கவனம் மீண்டும் ஓரிடத்தில் நிலைப்பெற்றது. ஆட்டன் அத்தி தன்னிலை இழந்து இரசித்துக்கொண்டு இருந்தது, நம் சோழநாட்டு இளவரசி ஆதிமந்தியின் புன்னகை பூத்த முகத்தை தான். சேரநாட்டில் தன் நீச்சல் விளையாட்டில் தன்னை மறந்த பெண்கள் பலரும் அத்தியிடம் தங்கள் மனதை வெளிப்படுத்த, யாரிடமும் தன் மனதை செலுத்தாது, தன் நீச்சல் பயிற்சியில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த அத்தியை முதன்முதலாய் கவர்ந்திழுத்தது இந்த அழகு முகம். யார் என்றே அறியாத இவள், தன்னோடு காலம்காலமாக வாழ்ந்தவள் என்ற உணர்வை ஏற்படுத்தியது அவளது பார்வை. ஆதிமந்தியும் அத்தியை அப்பொழுதுதான் நேராக பார்த்தாள். பார்த்த நொடியே இவன் தன் மணாளன் என்று ஆயிரம் தேவதைகள் கூடி பண் இசைப்பதுபோல் உணர்ந்தாள். தன் தந்தை அருகில் உள்ளார், தாம் சோழநாட்டு இளவரசி என்ற எண்ணங்கள் எதுவும் மனதில் தோன்றாது தன்நிலை மறந்திருந்த ஆதிமந்தி, ஆட்டன் அத்திக்கு அரசர் பரிசு வழங்கும் போது தான் சுயநினைவை அடைந்தாள். அந்நேரத்தில் அவன் விழியால் கூறும் குறிப்பை எப்படித்தான் படிக்கமுடிந்ததோ, தன் தோழியர், காவலர் என யாரும் அறியாது ஆட்டன் அத்தியை தனிமையில் சந்தித்தாள். இருவரும் தத்தம் காதலை வெளிப்படுத்தி இவ்வாண்டு போட்டியில் வெற்றியோடு ஆதிமந்தியையும் தான் பெறப்போவதாக கூறியதைக்கேட்டு..” இதோ இவை அனைத்தும் நடந்து முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது.

ஆட்டன் அத்தியின் மீது காதல் கொண்ட காவிரிக்கு, தான் விரும்பும் அத்தியின் பார்வை சோழநாட்டு இளவரசியின் மீது இருப்பதை உணர்வது கடினமான ஒன்றாக இருக்கவில்லை. இந்த ஓராண்டு காலத்தில் அத்தியுடன் பேசிவிட எவ்வளவோ முயன்றும் அவளால் இயலவில்லை. அத்தியின் நிழலைக்கூட அவளால் நெருங்கமுடியவில்லை. அத்தி-ஆதிமந்தியின் காதல் வலிமையை அறிந்த காவிரி, ஆதிமந்தியை பிரிந்தால் மட்டுமே அத்தி தனக்கு மாலைசூடுவான் என்று விபரீதமாக எண்ணத் துவங்கினாள். அதன் முதல்கட்டமாக, இன்று நிகழவிருக்கும் நீச்சல் போட்டியில் அத்தியின் துணை ஆட்டக்காரியாக காவிரி தேர்ந்தெடுக்கப்பட்டது இவளின் அதிர்ஷ்டம் என்றே எண்ணி மகிழ்ந்தாள் காவிரி. ஆனால், நதியின் போக்கைப் போன்றே விதியின் போக்கும் அற்ப மனிதர் அறிந்தது இல்லை அல்லவா? விதி தன் வேலையை துவங்கியது, காவிரியின் காதலாக!

<< காதல் நதியினிலே!!! – பகுதி 1

காதல் நதியினிலே!!! – பகுதி 3>>