வானவல்லி முதல் பாகம்: 7 – புரவிப் பிணம்

விறல்வேல்
வானவல்லி

ழு செங்கழுநீர் பூக்களின் இதழ்களை ஒன்றன் மீது மற்றொன்றை வரிசையாக வைத்து தேர்ந்த வீரனின் அம்பு துளைக்கும் கண நேரப் பொழுதை கணிகம் என்றும் ஏழு 1யோசனை உயரமுள்ள ஒரு மலையை நீண்ட பட்டுத் துணியைக் கொண்டு தேய்த்தால் அது முழுவதும் தேய ஆகும் காலம் 4கல்பம் என்றும் ஆசீவக மதப் பெரியோர்கள் கூறுவார்கள். விறல்வேலுக்கு அந்தச் சமயத்தில் ஒவ்வொரு கண நேர கணிகப் பொழுதும் ஒரு கல்பமாகவே நீண்டு அவனை வதைத்துக் கொண்டிருந்தது. ஆசீவக மதத்தாரின் கொள்கைப் படி உலகம் அழியும் எண்பத்து நான்கு மகா லட்ச கல்ப காலம் இன்றோடு முடிந்தாலும் மகிழும் தருவாயில் தான் அவன் அனைத்தையும் துறக்கும் மன நிலையோடு நடந்துகொண்டிருந்தான்.

Vaanavalli
வானவல்லி

ஒரு வில் வீரன், ஒரு யானை, ஐந்து காலாட்படை வீரர்கள், மூன்று குதிரை வீரர்கள் சேர்ந்த குழுவிற்குப் பட்டி என்று பெயர். மூன்று பட்டி சேர்ந்தது ஒரு சேனாமுகம். மூன்று சேனாமுகம் சேர்ந்தது ஒரு குல்மா. மூன்று குல்மா சேர்ந்தது ஒரு கனம். மூன்று கனம் சேர்ந்தது ஒரு வாகினி. மூன்று வாகினி சேர்ந்தது ஒரு பிரிதனா. மூன்று பிரிதனா சேர்ந்தது ஒரு சம்மு. மூன்று சம்மு சேர்ந்தது ஒரு அனிகினி என்று பெயர். பத்து அனிகினி கூடியது அக்செளனி. ஒரு அக்செளனி படைப் பிரிவில் 21,870 வில் வீரர்கள், அதே எண்ணிக்கையிலான யானை, 1,09,380 காலாட்படை வீரர்கள், 65,610 குதிரை வீரர்கள் அடங்கியிருப்பர். கிட்டத்தட்ட இரண்டு அனிகினி படையின் எண்ணிக்கைக்கும் அதிகமான எண்ணிக்கையிலான வீரர்களைக் கொண்ட படைப்பிரிவிற்குத் தலைவன் தான் செங்குவீரன் எனும் விறல்வேல். அரசப் படையின் உபதலைவன் அவன் தான். இவனே, ஒற்றர் பிரிவின் தலைவனுமாகையால், சுற்றியுள்ள எந்தத் தேசத்திலும் இவனுக்குத் தெரியாமல் எந்த அரச காரியங்களும் நடைபெறாது. அந்த அளவிற்குத் தனது ஒற்றர்களை அனைத்து தேசங்களிலும் ஊடுருவ வைத்திருந்தான். அண்டை நாட்டு அரசர்களின் மனப் போக்கினையும் புகாரில் இருந்தபடியே கணித்துக் கொண்டிருந்த செங்குவீரனால் அவன் விரும்பும் கன்னியின் மனக் குறிப்பை அறிய இயலாதவனாய் வேதனையில் சிக்கித் தடுமாறினான். அரண்மனையில் இளவரசர்களோடு வீற்றிருக்க வேண்டிய அவன், ஒரு வஞ்சிக் கொடியின் பிரிவால் அனைத்தையும் துறந்து வேதனையில் அலைந்து கொண்டிருந்தது அனைவருக்கும் பேராச்சர்யத்தை அளித்தது.

குணக் கடலின் புகார்க் கடற்கரையில் தன் தோள் மீதமர்ந்த புறாவை பற்றிக்கொண்டு வெளிச்சமிகுந்த இடத்தை நோக்கி விரைவாக நடந்து சென்றான். சற்றுத் தொலைவில் கடற்கரையில் பரதவர் தெருவில் எரிந்து கொண்டிருந்த நெய் விளக்கை எடுத்து புறாவை நோக்கினான். புறாவானது நன்கு வளர்ந்து வல்லூறு அளவிற்குச் செழிப்பாகப் பெரியதாகக் காணப்பட்டது. அந்தப் புறா அவனது கைகளில் அமர்ந்திருந்த விதத்திலிருந்தே, அது அவனுடன் நன்கு பழக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழகத்தில் காணப்படும் புறாக்களை விட இரு மடங்கு செழித்து வளர்ந்திருந்த அந்தப் புறாவானது எரித்திரியக் கடல் பிரதேசத்தைச் சார்ந்த தீவுப் பகுதிகளில் மட்டுமே காணக் கிடைக்கும் புறா வகையைச் சார்ந்தது. அந்தத் தீவு வழியாகப் பயணம் மேற்கொள்ளும் யவனர்கள், அதனைப் பிடித்து, ஒற்றறிதலுக்குச் செய்திகளை ரகசியமாகப் பரிமாறும் பொருட்டு நன்கு பழக்கப் படுத்தியிருந்தனர். தமிழகத்தில் புகார் நகருக்கு வாணிபம் மேற்கொள்ள வரும் யவனர்களிடமிருந்து இந்தப் புறாக்களைப் பெற்று மிக முக்கியத் தகவல்களை நம்பகத்தன்மையுடன் பரிமாறுவதற்குச் செங்குவீரன் பழக்கப் படுத்தியிருந்தான்.

பரத்தையர் தெருவில் எரிந்துகொண்டிருந்த விளக்கிற்கருகில் சென்ற செங்குவீரன், புறாவின் தலையை மெல்ல தடவியபடியே, அதன் உடலை மெல்லச் சோதனை செய்ய ஆரம்பித்தான். கால்களில் எதுவும் காணாததால் அதன் உடலை சோதிக்கத் தொடங்கினான். அவன் உடலைத் தொட்ட உடனேயே அது தன் இரண்டு இறக்கைகளையும் விரித்துக் காட்டியது. நன்கு, இறுகி காப்புக் காய்ந்திருந்த அவனது விரல்களால் பட்டு போன்ற மென்மையான இறகுகளைக் கொண்ட அதன் இறக்கையை மெதுவாகத் தொட்டு அழுத்தியபடியே ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்தான். அவனது விரல்கள் புறாவின் இடது பக்க இறக்கையின் மேற்புரத்தைத் தடவியவுடன் “கொர்..”. “கொர்..” என்று மெல்ல சத்தம் எழுப்பியது. அவ்விடத்தை நன்கு அழுத்தி பரிசோதனை செய்த போது புறாவின் இறக்கையில் எளிதில் கண்டறிந்து இயலாத படி, சுருட்டி மறைத்து வைத்திருந்த ஒரு பட்டுத் துணியைக் கண்டறிந்தான்.

பட்டுத் துணியைப் பிரித்து விளக்கு ஒளி மிகுந்த இடத்தில் விரித்துத் தூக்கிப் பிடித்து வாசிக்கலானான்.

விறல் வேலா,

பத்திரையும், அவர்களைச் சார்ந்தவர்களும் இந்த இரவில் முதல் சாமம் முடியும் தருவாயில் சம்பாபதி வனத்தைக் கடந்து புகார் வருகிறார்கள், நான் தடுத்தும் பயனில்லை. இதை நீ வாசிக்கும் தருவாயில் அவர்கள் வனத்தினுள் நுழைந்திருக்கலாம். செய்ய வேண்டியவற்றை உடனே செய்…

——— ஈழவாவிரையர்

ஈழவாவிரையர் வழிப் போக்கர்களுக்கு உதவும் பொருட்டு, அன்ன சாவடி நடத்திக் கொண்டிருந்தாலும் செங்குவீரனுக்கு வேண்டிய ஒற்றுத் தகவல்களை அவர்தான் தொகுத்துக் கொண்டிருந்தார். பல தேசங்களில் வேளாதனின் பெயரில் ஈழவாவிரையரின் மேற்பார்வையில் நடைபெறும் அன்ன சத்திரங்களில் இவரது ஒற்றர்கள் பணிபுரிந்து கொண்டு வேண்டிய தகவல்களை ஈழவாவிரையர் வழியாகச் செங்குவீரனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பிறகு அவை செங்குவீரனின் கட்டளைக்கேற்ப வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப் பயன்பட்டன. செங்குவீரனின் எண்ணத்திற்கேற்ப எங்கெங்கு யாரை அனுப்ப வேண்டும் என அவன் எண்ணத்திற்கு ஏற்ற கருவியாக ஈழவாவிரையர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். செங்குவீரனுக்கும் ஈழவாவிரையர் மேல் பெரும் மதிப்பும். மரியாதையும் உண்டு. இவனது உற்ற ஆலோசகரும் அவர்தான். இவனெடுக்கும் முடிவுகள் அனைத்திலும் அவரது ஆலோசனைகள் கலந்திருக்கும்.

வேளாதன் மகள் பத்திரைத் தேவியின் மேல் ஈழவாவிரையருக்கு இருந்த தனிப்பட்ட அக்கறையின் பேரில் தான், அவர் இந்தப் புறாவில் அவசரமாகச் செய்தி அனுப்பியுள்ளார் என்பதை அவன் புரிந்துகொண்டான். அவர் தூக்கி வளர்த்தப் பெண் தானே பத்திரை என்பதையும் அவனால் நினைவு படுத்திக் கொள்ளாமல் இருக்க இயலவில்லை. ஈழவாவிரையரின் ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் உறுதியான காரணம் இருக்கும் என்பதை உணர்ந்த அவன், இரவில் தானே அவர்கள் வருகிறார்கள், காவலுக்குத் தான் வனக் காவலர்கள் இருக்கிறார்களே! புறாவில் இப்படி அவசரமாகச் செய்தி அனுப்பவேண்டிய அவசியம் என்ன? என்றும் யோசித்தான், ஆனால் பெரும் அனுபவம் வாய்ந்த அந்தப் பெரியவர் ஈழவாவிரையரின் இந்த அவசரச் செய்தியை அவனால் புறந்தள்ளி விடவும் இயலவில்லை.

பட்டுத் துணியில் அவர் வரைந்துள்ள எழுத்துகளை அவன் தொட்டுப் பார்த்தான். அதிலிருந்த கருஞ்சாந்தெழுத்தின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்கவில்லை. அவர் இந்தக் கடிதத்தை எழுதி ஒன்றிலிருந்து இரண்டு நாழிகைப் பொழுதுகள் தான் ஆகியிருக்கும் என்பதை அந்த எழுத்தின் ஈரத்திலிருந்து அவன் உணர்ந்துகொண்டான்.

வானத்தைப் பார்த்தான், அந்தப் பங்குனி இரவில் பௌர்ணமி நிலவு வானம் முழுக்க வெள்ளிக் கதிர்களை நிரப்பிக் கொண்டிருந்ததால் அவனால் நட்சத்திரங்களின் இருப்பிடத்தை அறிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் முழுநிலவின் இருப்பிடத்திலிருந்து பொழுது கடந்து இரண்டு சாமம் ஆகியிருக்கும் என்பதைச் சரியாகவே கணிக்கச் செய்தான்.

இந்த நேரம் சம்பாபதி வனத்தினுள் அவர்கள் நுழைவதாக வைத்துக் கொண்டாலும், இன்னும் ஒரு ஓரைப் பொழுதில் சம்பாபதி வனத்தின் மையப் பகுதியை அடைந்துவிடுவர். அங்குதான் அவர்கள் கள்வர்களால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகம், ஈழவாவிரையர் அவர்களைத் தனியாக அனுப்பியிருக்க மாட்டார். நிச்சயம், சில காவல் வீரர்களைத் துணைக்கு அனுப்பியிருப்பார். அவர்கள் கள்வர்களுடன் சண்டையிட்டாலும் ஒரு நாழிகைப் பொழுதுதான் தாக்குப் பிடிப்பர். பிறகு அவர்கள் எதிர்த்து நிற்கும் வலிமையிழந்து விடுவர். அவர்களுக்குக் கள்வர்களால் ஆபத்து ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் எப்படி விரைவாகச் சென்றாலும் இன்னும் ஒரு முகூர்த்தப் பொழுதிற்குள் அவர்களை அடைந்துவிட வேண்டும், அதன் பிறகு சென்றாலும் பயனில்லை என்பதைக் கண நேரப் பொழுதில் அவன் யோசனை செய்து கொண்டான்.

எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செல்லத் தீர்மானித்துக் கொண்டு அவனது வெண்ணிறப் புரவியை நோக்கினான். அவனது எண்ணக் குறிப்பை உணர்ந்துகொண்ட அவனது புரவி அவனருகே வந்து நின்றது. அதன் மீது ஏறிக்கொண்ட செங்குவீரன், புரவியில் வேகமாகப் பறந்தான். அவனது மனதின் வேகத்தை அவனது கால்கள் புரவியின் வயிற்றில் அழுத்தியிருந்த அழுத்தத்தைக் கொண்டு உணர்ந்த புரவி வேகமாகச் சென்றது. கடற்கரையில் அவனது புரவியின் குளம்புகள் பதித்த தடத்திலிருந்து எழுந்த புழுதி வெகுநேரம் கடற்கரையில் பறந்துகொண்டிருந்தது.

கடற்கரையில் புறப்பட்ட அவனது புரவியானது முதலில் மருவூர்ப்பாக்கத்தைச் சென்றடைந்தது. இரண்டாம் சாமமும் முடியும் தருவாயில் இருந்ததால் மருவூர்ப் பாக்க வீதிகள் அனைத்தும் ஆளரவம் எல்லாம் அடங்கி அமைதியாகக் காட்சியளித்தது. மருவூர்ப் பாக்க வீடுகளின் வாசல்களிலும், திண்ணைகளிலும் சாய்த்திருந்த போர் வால்களும், நீண்ட ஈட்டிகளும், அகன்ற வேல்களும் வீதிக்கு பெரும் கம்பீரத்தை அளித்தது. வீட்டு வாசல்களில் வைத்திருந்த இந்தப் பேராயுதங்கள் புகார் நகர மக்களின் வீரத்தை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. இவை அனைத்தையும் கவனிக்காமல் சென்றவன் வானவல்லியின் வீட்டிற்கு முன் வந்ததும் அங்கு யாரையோ நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வானவல்லியின் தாயார் அவனது கவனத்தை ஈர்த்தார்.

வானவல்லியின் தாயார் வாசலில் நின்றுகொண்டே வானவல்லிக்காகக் காத்திருந்தார். இன்று இரவு முதல் நாழிகைக்குள்ளாகவே வந்து விடுவதாகச் செய்தி அனுப்பிய அவர்கள் இரண்டாவது சாமம் முடிந்தும் வீடு வந்து சேராதது அவருக்குப் பெரும் பீதியை அளித்திருந்தது. பொழுது சாய்ந்து ஒரு ஓரைப் பொழுதிற்குப் பின், அவள் பத்திரையின் பட்டினப் பாக்கத்து வீட்டிற்கும் சென்று விசாரித்து வந்துவிட்டாள். இன்னும் திரும்பாததால் அவள் பெரும் கவலையுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து மீண்டும் மீண்டும் வீதியையே நோக்கிக் கொண்டிருந்தாள். இந்த நேரத்தில் தான் விறல்வேல் அந்த வீதியை வேகமாகக் கடந்துகொண்டிருந்தான். விரைவாகச் சென்றவன் வானவல்லியின் தாயாரின் நிலையைப் பார்த்ததும், குதிரையின் கடிவாளத்தைப் பற்றி அதன் வேகத்தைக் குறைத்து, மெல்ல வானவல்லியின் தாயாரை நோக்கி அருகில் சென்றான். அவன் பார்வையிலிருந்து, அவனது கேள்வியைப் புரிந்துகொண்ட வானவல்லியின் தாயார், “மரகதவல்லியைக் காண நாங்கூர் சென்ற பத்திரையும் வானவல்லியும் இன்றிரவு முதல் நாழிகைக்குள்ளாகவே வீடு திரும்புவதாகச் செய்தி அனுப்பினார்கள். கூறியபடி இன்னும் வீடு திரும்பவில்லை, அவளைத் தான் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன்!” என்று கவலையுடன் கூறினாள்.

“தாங்கள் வானவல்லி பற்றி எந்தவொரு வருத்தமும் கொள்ளத் தேவையில்லை, நிம்மதியாக உறங்குங்கள். விரைவில் அவள் வீடு வந்து சேர்வாள்!” என்று அவரை ஆறுதல் படுத்தினான்.

வானவல்லியின் தாயார், வானவல்லி பற்றிக் கூறக் கேட்டதும், ஈழவாவிரையர் பத்திரையும், பத்திரையைச் சார்ந்தவர்களும் என்று பட்டுத் துணியில் கருஞ்சாந்துக் குழம்பால் அழுத்தமாக எழுதியதன் காரணம் அவனுக்கு அப்போது தான் புரிந்தது.

உடனே செங்குவீரன், “ஈழவாவிரையரிடமிருந்து தற்பொழுதுதான் அவர்களைப் பற்றிச் செய்தி வந்தது. அதன் காரியம் பொருட்டுத் தான் விரைவாகச் சென்றுகொண்டிருந்தேன், தாங்கள் கவலையுடன் நின்றதைக் கண்டு விசாரிக்கலாமென வந்தேன். நான், விரைந்து செல்ல வேண்டும், காலம் தாழ்த்த இயலாது!” என்று கூறிய படியே வானவல்லியின் தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு அவனது மனதைக் கொள்ளைக் கொண்ட பெண்ணைக் காண விரைந்தான்.

வானவல்லியின் தாயாரின் பேச்சைக் கேட்டதும், வானவல்லி உள்ளவரை பத்திரைக்கு ஏதும், எந்தத் துயரும் நேராது என நினைத்து அவனது மனம் சற்று நிம்மதி அடைந்தது. ஆனால், வானவல்லிக்கு ஏற்படப் போகும் துயரத்தை நினைத்ததும் மீண்டும் அவன் மனம் சொல்ல இயலாத துயரத்தை அடைந்தது.

அவர்களைக் காக்க சம்பாபதி வனத்தின் மையப் பகுதியை நோக்கி மின்னலென விரைவாகச் சென்றுகொண்டிருந்த அவனது புரவி, சில மணித்தியாலங்களில் மருவூர்ப் பாக்கத்தின் எல்லையை அடைந்துவிட்டிருந்தது. மருவூர்ப் பாக்கத்திற்கும் பட்டினப் பாக்கத்திற்கும் இடையில் இரண்டிற்கும் எல்லையாக அமைந்திருந்த பண்டக சாலைக்கு நாளங்காடி எனப்பெயர். இரவு நேரத்தில் நாளங்காடிக்கு  அல்லங்காடி3 என்று பெயர். அந்த அல்லங்காடி இரண்டாவது சாமத்தைக் கடந்த வேளையிலும் பரபரப்புக் குறையாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அல்லங்காடியின் கூட்டம் அவனது புரவியின் வேகத்தைச் சற்று மட்டுப் படுத்தவே செய்தது.  நாளங்காடித் தெருவைக் கடந்து அவனது புரவி பல அடுக்கு மாட மாளிகைகளைக் கொண்ட பட்டினப் பாக்கத்தின் தெரு வழியே விரைந்துகொண்டிருந்தது. பட்டினப் பாக்கத்தைச் சுற்றாமல், குறுக்கு வழியாகப் பட்டினப் பக்கத்தின் எல்லையில் அமைந்திருந்த சம்பாபதி அம்மனின் 2கோட்டமான குச்சரக்குடிகை கடந்து சம்பாபதி வனத்தினுள் நுழைந்தான் செங்குவீரன்.

சம்பாபதி வனத்தினுள் கழுத்து நிறைய மண்டையோட்டுடனும், பருத்த தொந்தியுடன் இருட்டுச் சமயத்தைச் சார்ந்த கபாலிகர்கள் ஓதும் சுடுகாட்டு மந்திர ஒலி தூரத்திலிருந்து அவனது காதுகளை அடைந்துகொண்டிருந்தது. வழியின் இருபுறங்களிலும் விழுந்து கிடந்த மண்டையோடுகள் அவற்றில் பட்டு எதிரொளித்த பௌர்ணமி நிலவொளிக்குப் பயங்கரத்தை அளித்துக்கொண்டிருந்தது. இந்த மண்டையோடுகளும், தூரத்து மந்திர சத்தங்களும் அந்த வழியாக வருவோருக்குப் பயத்தை அளித்து நடுங்க வைக்கும்படியாக இருந்தது. இவை எவற்றிலும் தன் கவனத்தைச் செலுத்தாமல், வானவல்லி மற்றும் பத்திரைக்கு எந்தவித ஆபத்தும் நேரவிடக் கூடாது என்பதை நினைத்து ஒரே மூச்சாகச் சென்றுகொண்டிருந்தான். இவனது மனம் அவர்களுக்கு எந்தவிதத் துயரமும் நேர்ந்துவிடக் விடக் கூடாது எனத் துடித்துக் கொண்டிருந்தது.

செங்குவீரனால் கபாலிகர்களின் ஆபத்து நிறைந்த இந்த வழியைத் தவிர்த்தும் சென்றிருக்க இயலும். ஆனால் அந்த வழி ஒரு நாழிகைப் பொழுது அதிகமாகப் பயணிக்க வேண்டியதை நினைத்தே அவன் சம்பாபதி வனத்தின் மையப் பகுதியை அடைய குறுக்கு வழியில் விரைவாகச் சென்று கொண்டிருந்தான்.

ஒரு முகூர்த்தப் பொழுதிற்கு முன்புதான், செங்குவீரனிடம் அவனது காவலர்கள், சம்பாபதி வனத்தைச் சுற்றி பார்வையிட்டு வந்துவிட்டதாகவும், ஐயம் கொள்ளும்படி எந்தவொரு காட்சிகளும் தென்படவில்லை என்று கூறிவிட்டு இரவு உணவுண்ட பின் மீண்டும் சென்று பார்வையிட்டு வருகிறோம் என்று கூறிச்சென்றனர்.

சம்பாபதி வனத்தில் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்தால் சம்பாபதி வனத்தின் மையப் பகுதியான அடர்ந்த காட்டு விலங்குகள் நிறைந்த காவலற்ற பகுதியில்தான் ஏற்படும் என அவன் ஊகித்தான். கடந்த ஒரு திங்கள் காலமாகக் கள்வர்களால் எந்தவொரு இடையூறும் பயணியர்களுக்கு ஏற்படவில்லை என்ற நினைப்பு அவனுக்குச் சற்று மன நிம்மதியையும், ஆறுதலையும் அளித்தது. இருப்பினும் ஒரு திங்கள் காலத்திற்குப் பின் காவல் குறைந்து காணப்படும் அந்தத் தருணங்களில் அவர்கள் துணிந்து தாக்கக் கூடும் என்பதையும் அவன் சிந்திக்கத் தவறவில்லை.  ஒருவேளை அவர்கள் சம்பாபதி வனத்தின் காட்டு விலங்குகளிடம் சிக்கியிருந்தால் என்று நினைக்கும் போதே அவனது மனம் பதறியது. எந்தச் சூழ்நிலையிலும் கலங்காத செங்குவீரனின் மனம் சமீப காலமாக வானவல்லியின் பிரிவு அவனுள் பல உளவியல் மாற்றங்களைச் செய்துகொண்டிருந்ததை அவன் உணரவே செய்தான்.

மற்றக் காலங்களில் அவன் இந்த இரவில் பௌர்ணமி நிலவில் புகார் நகர அழகையும், இந்தச் சம்பாபதி வனத்தின் இரவு நேர எழிலையும் ரசித்துக் கொண்டே வானவல்லியிடம் மனதைப் பறிகொடுத்த நிகழ்வுகளை எண்ணி கனவுலகில் லயித்திருப்பான். ஆனால் இப்பொழுது இரவில் அவர்கள் சம்பாபதி வனத்தைக் கடந்துகொண்டிருப்பதனால் அவர்களுக்கு எந்தவித துன்பமும் ஏற்படுமுன் அவர்களைச் சென்றடைந்து விடவேண்டும் என அவனது உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, வானவல்லியை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் அவனது மனதில் பல மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியிருந்தது. இதுவரை அவளது பிரிவில் வாடிய அவனுள்ளம், அவளைச் சந்திக்கப் போகிறோம் என நினைத்தவுடன் அவனது உள்ளத் துயரெங்கும் ஓடி மறைந்து குதூகலமடையத் தொடங்கியிருந்தது.

இப்படி அவன் மனம் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அவன் உள்ளம் புரவியைப் பாதை மாறாதவாறு சம்பாபதி வனத்தினுள் யாவரும் எளிதில் செல்ல இயலாத முட்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையினூடே விரைந்துகொண்டிருந்தது. இடையிடையே தாக்குவதுபோலத் தாழ்ந்திருந்த முள் மரக் கிளைகளால் எந்தவித ஆபத்தும் நேராமல் அவனது உள்ளுணர்வின் வழிகாட்டலின் படி குனிந்தும், தாழ்ந்தும் புரவியை செலுத்திக்கொண்டிருந்தான். எச்சரிக்கையுடன் சென்றும் அவனைத் தாக்கிய சில முட்களால் அவனது முகத்திலும், மார்பிலும் சில குருதித் துளிகள் சிந்தவே செய்தன.

ஒரு ஓரைப் பொழுது பயணம் செய்திருப்பான். வனத்தில் விரைந்துகொண்டிருந்த வேளையில் தூரத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றி மறைவது போலத் தோன்றியது. அந்தச் சிறு ஒளிக்கீற்று அவனது மனதை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தது.

அந்த ஒளிக்கீற்று தோன்றிய இடம் சம்பாபதி வனத்தின் மையப் பகுதிதான் என்பதை அறிந்திருந்த அவன் இன்னும் விரைவாக நானூறு புரவிகளின் வேகத்தில் தனது புரவியைச் செலுத்தினான்.

வானவல்லியின் கத்தியால் குத்துபட்ட கள்வன் அந்த இடத்திலேயே கீழே விழுந்து செத்து மடிந்தான். எரிந்துகொண்டிருந்த ஒரேயொரு தீப்பந்தமும் கீழே விழுந்துவிட்டதால், அது அணைந்து அவ்விடத்தை இருள் கவ்வியிருந்தது. புரவித் தேரின் கீழே எரிந்துகொண்டிருந்த, சிறு விளக்கு மட்டுமே வெளிச்சத்தைக் கொடுத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பத்திரையின் கரங்களைப் பற்றி இருளான இடத்திற்கு நகர்த்திச் சென்றுவிட்டாள் வானவல்லி.

வலது தோளில் குறு வாளால் தாக்கப்ப்பட்ட கள்வர்களின் தலைவன் காளனோ வலியால் துடித்துக் கொண்டிருந்தான். தனது வலது தோளில் பாய்ந்த கத்தியைப் பிடுங்கும் போது ஏற்பட்ட வலியால் அலறிய காளன், “அனைவரையும் கொன்று போடுங்கள்” என்று உரக்கக் கத்தினான். அவனது தோளில் கத்தி பாய்ந்த இடத்திலிருந்து குருதி குபுகுபுவென வெளியேறியது. தனது இடது கையால் காயத்தை அடைத்து குருதி வெளியேறா வண்ணம் அடைத்துக் கொண்டான் காளன்.

வானவல்லியின் தாக்குதலினால் கோபமடைந்திருந்த கள்வர்கள் காளனின் கட்டளையினால் அனைத்து வீரர்களின் தலையையும் கொய்ய வாளை உருவி அவர்களை நெருங்கிய சமயத்தில் கள்வன் ஒருவன் “அய்யோ” என்று அலறியபடியே கீழே சாய்ந்தான். அவனது மார்பில் குறுவாள் ஒன்று தைத்திருந்தது.  அருகில் நின்ற கள்வர்கள் ஏன் அவன் இப்படிச் சாய்ந்தான் எனத் திகைத்து நின்றனர். அவர்களின் திகைப்பு அடங்குவதற்குள் தூரத்திலிருந்து புரவியின் குளம்புச் சத்தம் இவர்களை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. புரவியில் அமர்ந்திருந்தபடியே செங்குவீரன் தனது நீண்ட வாளை கள்வர்களை நோக்கி வீசியபடி அவர்களை நெருங்கினான். சிறிது நேரத்திலேயே அந்த இடம் ஒரு சிறிய சண்டைக் களமாகியது.

இந்த இரவில் படைத்தலைவனும், காவல் தலைவனுமான செங்குவீரனை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. கள்வர்கள் யாரும் எதிர்பாராத நேரத்தில் செங்குவீரனின் தாக்குதலால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன் சுழற்றியதில் நின்றுகொண்டிருந்த கள்வர்களின் மார்பிலும், தலையிலும் பாய்ந்த அவனது வாளினால் கள்வர்களின் அலறல் சத்தம் சம்பாபதி வனமெங்கும் எதிரொலித்தது. தமது தலைவன் செங்குவீரனைக் கண்டதும், சோர்வுற்றிருந்த காவல் வீரர்களும் புத்துணர்வு பெற்று ஆயுதங்கள் இல்லாமலே, நின்று கொண்டிருந்த கள்வர்களைத் தாக்கினர். இனியும் இவர்களைச் சமாளிக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டிருந்த கள்வர்களும், அவர்களின் தலைவன் காளனும் இருளைப் பயன்படுத்தித் தப்பித்தோடினர்.

மார்பிலும், தலையிலும் வாளினால் தாக்கப்பட்டு உயிர் பிரியாமல் துடித்துக் கொண்டிருந்த பிழைக்க வாய்ப்பில்லாத கள்வர்களின் மேல் வீரர்கள் கருணை கொண்டு போர் தர்மப் படி அவர்களுக்கு வலியில்லாமல் மோட்சமளித்தனர். அணைந்து போயிருந்த தீப்பந்தத்தை மீண்டும் புரவித் தேரின் அடியிலிருந்த விளக்கிலிருந்து ஏற்றி வானவல்லியையும், பத்திரையையும் தேடலானான் செங்குவீரன்.

செங்குவீரனால் வெட்டப்பட்டு அலறிய கள்வர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட வானவல்லியும், பத்திரையும் அந்த அலறல் கள்வர்களால் வெட்டப்பட்ட காவல் வீரர்களின் குரல் தான் என நினைத்து பயந்து நடுங்கினர். எதற்கும் அஞ்சாத மன வலிமையுடைய வானவல்லி கூட அந்த மரண ஓலத்தைக் கேட்ட போது சற்று அச்சங்கொள்ளவே செய்தாள். ஆனால் அந்தச் சமயத்தில் பத்திரையின் நிலை முற்றிலும் பரிதாபப் படும்படியாகவே இருந்தது. அவர்களை நோக்கி நெருங்கி வந்த தீப்பந்த ஒளியைப் பார்த்து அவள் கள்வர்கள் தான் தம்மைத் தேடுகிறார்கள் என்று பயந்துகொண்டிருந்தாள்.

தீப்பந்தம் அருகில் நெருங்கி வந்துவிட்டதும், தீப்பந்தத்தை வைத்திருப்பது செங்குவீரன் தான் எனப் பார்த்ததும் அவள் ஓடிவந்து அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு மகிழ்ச்சியில் தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளை ஆறுதல் படுத்திய செங்குவீரன், அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளைத் துடைத்துவிட்டு, “அதுதான் நான் வந்துவிட்டேனே! இனி என்ன அச்சம் உனக்கு? இனி கவலையில்லை:” என்று கூறியபடியே, அவளது முதுகைத் தழுவி அவளை அமைதிபெறச் செய்தான். ஆனால் அவனது கண்கள் மட்டும் வானவல்லியைத் தேடின.

பத்திரையிடம் “வானவல்லி எங்கே? தாங்கள் இருவரும் தானே, வந்துகொண்டிருப்பதாக வானவல்லியின் தாயார் கூறினார். நீ மட்டும் இங்குத் தனியாக நிற்கிறாய், அவள் எங்கே? அவளுக்கு என்ன ஆனது” என்று பதறிக்கொண்டே கேட்டான்.

அதற்குப் பத்திரை, புரவி ரதத்தை நோக்கி பார்வையைச் செலுத்தினாள். பந்தத்தைப் பத்திரையிடம் கொடுத்துவிட்டு வண்டியை நோக்கி வானவல்லியை சந்திக்கப் போகும் பேரார்வத்தில் அவளை நோக்கி முன்னேறினான். ஆனால் அவளோ, இவனைக் காண விருப்பப் படாதது போலப் புரவித் தேரின் நிழலில் மறைந்து நின்றாள். அவளைக் காண வேண்டுமென்ற துடிப்பில் இவன், அவள் நின்றதைக் கண்டதும், ஒரு அடி முன்னால் வைத்தான். அவள் மீண்டும் தீப்பந்த ஒளி படராத இடத்தில் இரண்டு அடி பின்னால் சென்று மறைந்தாள்.

அவள் மறைந்து அலட்சியப்படுத்தி, நிராகரித்து இவனைச் சந்திக்கவே விருப்பமில்லாமல் விலகி நின்று கொண்டிருந்தது இவனுக்குப் பெரும் வேதனையை அளித்தது. யாரை சந்தித்தால் அவனது மனத்துயர் அனைத்தும் விலகிவிடும் என்று நினைத்தானோ? அவளைக் கண்டதும் அவளாலே அவனது துயர் அனைத்தும் பல மடங்கு பெருகிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.

தன் மேல் அவளுக்குக் கோபம் உண்டென்பதை அவன் அறிவான். ஆனால் அருகில் இருந்தும், தன்னைக் காணக்கூட விருப்பமில்லாமல் அவள் விலகி நின்றது அவனுக்குப் பெரும் வலியை அளித்தது.

பெண்ணின் விருப்பமில்லாமல் அவள் பார்வையைத் தீண்டுவது கூடப் பாவம் என்பதை அறிந்த அவன், இனி அவள் முன் செல்வது சரியாக இருக்காது என்பதை உணர்ந்து, முன் செல்லத் துடித்த அவனது கால்களைக் கட்டுப்படுத்திப் பின்வந்து, அருகில் இருந்தவர்களைப் பார்த்து “நீங்கள் அனைவரும் பத்திரமாகச் செல்லுங்கள்” என்று வீரர்களுடன் பத்திரையையும், அவளைச் சார்ந்தவர்களையும் அனுப்பிவைத்தான். இரு வீரர்களை அழைத்து, “ஈழவாவிரையருக்கு நடந்த நிகழ்வுகளைத் தெரிவியுங்கள்” என்று கட்டளையிட்டான். இறந்தவர்களின் உடல்களைக் காலையில் பொழுது புலர்ந்ததும் பார்வையிட்டுக் கொள்ளலாம் என நினைத்துவிட்டுப் புரவி மீது தாவினான்.

கள்வர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் வந்த துயரம் அனைத்தும் விலகி புத்துயிர் பெற்று பெரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

ஆனால், விறல்வேல் மட்டும் அவனது உயிர், உணர்வுகள் என அனைத்தையும் அங்கேயே இழந்து புரவிப் பிணமாகவே தன் இருப்பிடம் நோக்கித் திரும்பினான்.

 

பின் குறிப்பு:

ஒரு நாழிகை = 24 நிமிடம்

2.5 நாழிகை = 1 ஓரை = 60 நிமிடங்கள் = 1 மணித்தியாலம்

3.75 நாழிகை = 1 முகூர்த்தம்

7.5 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 சாமம்

60 நாழிகை = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்

7 நாள் = ஒரு கிழமை

15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம் (திங்கள்)

2 பட்சம் = 1 மாதம் (திங்கள்)

1.ஒரு யோசனை உயரம் என்பது 30 மைல் தூரம்

  1. குச்சரக் குடிகை என்பது சம்பாபதி அம்மனின் கோயிலுக்குப் பெயர். கோயில்- கோட்டம். இதனை மற்ற மதத்தோர் சுடுகாட்டுக் கோட்டம் எனவும் பவுத்தர்கள் இதனை சக்கரவாளக் கோட்டம் எனப் போற்றினார்கள். இதற்கு முதியாள் கோட்டம் என்ற வேறு பெயரும் இருந்தது.
  2. புகாரின் இரு பிரிவுகள் மருவூர்பாக்கம், பட்டினப் பாக்கம். இவற்றின் மத்தியில் இருந்த பண்டக சாலைப்பகுதிக்கு நாளங்காடி என்று பெயர். இந்த நாளங்காடி அக்காலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்தது. இரவு முழுவதும் பரபரப்புடன் இயங்கும் பண்டகசாலை. (சிலப்பதிகாரம்…. புகார்க்காண்டம் இந்திரவிழவு எடுத்த காதை 69-75)
  3. கல்பம் என்றால் 432 × 107 ஆண்டுகள்.