வானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்

0

தனது ஒற்றர்கள் மூலம் செங்குவீரன் மட்டும் திரும்பவில்லை, சென்னியின் மகன் வளவன் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை அறிந்துகொண்டார் உறைந்தை மன்னர் இருங்கோவேள். வளவன் தப்பியிருந்தது அவருக்குப் பெருத்த ஆச்சர்யத்தை அளித்தது! தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பாழாக்கிய செங்குவீரன் மடிந்துவிட்டான். அவனது உடல் கூட கிடைக்காமல் மரக்கலத்தோடு எரிந்து குமரிக் கடலுக்குள் அமிழ்ந்து போனதை எண்ணி அவர் பெரிதும் மகிழ்ந்து ஆரவாரமிட்டார். செங்குவீரன் இல்லாத புகார் இனி அரண் இல்லாத கோட்டையைப் போன்றது. வேண்டிய நேரத்தில் போர் தொடுத்து புகாரைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்து அமைதி காத்தார்!

செங்குவீரன் இல்லாத புகார்ப் பட்டினம் உற்சாகமின்றி சோர்வுடனே காணப்பட்டது. உப தளபதிகள் மற்றும் படை வீரர்கள் அனைவரும் நம்பிக்கையிழந்துக் காணப்பட்டனர். கரிகாலரும், வளவனாரும் இயன்ற அளவு வீரர்களை உற்சாகப்படுத்த முயன்றனர். ஆனால் பலன் இல்லை! மாதங்கள் கடக்கக் கடக்க வீரர்களும் மாண்டவர்கள் மீளப்போவதில்லை என்பதை உணர்ந்து போருக்குத் தயாரானார்கள்!

செங்குவீரன் குமரிக்கடலில் அமிழ்ந்த மூன்று திங்களுக்குப் பிறகு உறைந்தையிலிருக்கும் இருங்கோவேளிடமிருந்து இரும்பிடர்த்தலையருக்கு எதிர்பாராத சமாதான ஒப்பந்தம் ஒன்று வந்தது. அதைக்கேட்ட இரும்பிடர்த்தலையர் திகைத்துவிட்டார். உறைந்தைத் தூதுவன் தன்னிடம் தெரிவித்துவிட்டுச் சென்ற சமாதான ஒப்பந்தத்தையும், நிர்பந்தத்தையும் வளவனாரிடம் விவாதிக்க இரும்பிடர்த்தலையர் அவரது மாளிகைக்குச் சென்றார்.

வளவனாரும் செங்குவீரனை எண்ணி கவலையுடனே அமர்ந்திருந்தார். வளவனாரின் முகத்தில் காணப்பட்ட கவலையைக் கண்ட இரும்பிடர்த்தலையர் வந்த காரியத்தை எப்படிப் பேசத் தொடங்குவது எனத் தெரியாமல் தயக்கத்துடனே அவரிடம் சென்றார்.

இரும்பிடர்த்தலையரைக் கண்ட வளவனார் ஆசனத்திலிருந்து எழுந்து வரவேற்று அமர வைத்தார்.

“வளவனாரே, வீரர்களுக்கு உற்சாகமளிக்க வேண்டிய தாங்களே கவலையில் தவிக்கலாமா? வீரன் என்றால் ஒரு நாள் மரணத்தைத் தழுவித்தானே ஆக வேண்டும்! இது தங்களுக்குத் தெரியாதா என்ன?”

“நடந்ததை மறக்க நானும் முயற்சித்துத் தான் பார்க்கிறேன். ஆனால், இயலவில்லையே! குணக்கடலில் அமிழ்ந்த திவ்யனைப் பற்றி கவலைப்படுவேனா? குமரிக் கடலில் எரிந்து போன விறல்வேலை எண்ணி வருந்துவேனா? இழக்கக் கூடாத இருவரையும் இழந்து கவலையில் வாடும் எனது மகளையும், மனைவியையும் எண்ணி வருந்துவேனா? இச் சூழ்நிலையில் போர் தொடங்கினால் தோல்வி என்பதை அறிந்தும் ஏதும் செய்ய இயலாமல் இருப்பதை எண்ணி வருந்துவதா? சென்னி மரணித்தபோது உங்களுடன் நானும் தானே இருந்தேன். சென்னியின் புதல்வன் வளவனை நிச்சயம் சோழ சிம்மாசனத்தில் அமர்த்துவோம் என்று கொடுத்த வாக்கினை எப்படிப் பிடர்த்தலையரே நிறைவேற்றப் போகிறோம்? அனைத்தையும் நினைத்தால் மனதே வெடித்துவிடும் அளவிற்கு கவலை கொள்கிறது மனம்! இக்குழப்பங்களிலிருந்து விடை தேடும் மார்க்கம் தான் எனக்குப் புலப்படவில்லை!”

“அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டது வளவனாரே!”

“தீர்வு கிடைத்துவிட்டதா?”

“ஆம்!”

“என்ன தீர்வு? விரைந்து கூறுங்கள்!”

அதனைக் கூற இயலாமல் தயங்கியபடியே அமர்ந்திருந்தார் இரும்பிடர்த்தலையர்.

“இரும்பிடர்த்தலையாரே, தயக்கம் வேண்டாம்! விரைந்து கூறுங்கள். தீர்வு என்ன?”

“அனைத்திற்கும் தீர்வு……”

“கூறுங்கள்!”

“வானவல்லி தான்!”

“வானவல்லியா?”

“ஆம்!”

“எனக்குப் புரியவில்லையே!”

“இருங்கோவேளிடமிருந்து சமாதானத் தூது வந்திருக்கிறது!”

“சமாதானமா?”

“ஆம்!”

“என்ன சமாதானம்?”

“சோழ தேசத்தை காலம் காலமாக உறைந்தையில் ஒருவரும், புகாரில் ஒருவரும் அமர்ந்து ஆளுவது மரபு தானே! அப்படியே இருங்கோ உறைந்தையிலும், கரிகாலன் புகாரிலும் ஆட்சி செலுத்த இருங்கோவேள் விழைகிறான்.”

“உறைந்தையை விட்டுக்கொடுக்க கரிகாலர் எப்படிச் சம்மதிப்பார்? சோழர்கள் ஒரு நாளும் 1கோழியூரை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்களே!”

“நாம் கரிகாலரை சமாதானம் செய்துவிடுவோம்! சில வருடங்கள் இருங்கோ உறைந்தையிலேயே ஆட்சி செலுத்தட்டும். படை பலத்தைப் பெருக்க நமக்கு கால அவகாசம் தேவை! ஆதலால் அவனுக்கு இப்போது நாம் பணிவதைத் தவிர வேறு வழி இல்லை!”

“நமது ஒரே நோக்கம் போரைத் தவிர்ப்பது மட்டுமே! எப்பாடு பட்டாவது இப்போது போர் மூள்வதைத் தவிர்த்துவிடவேண்டும். காலம் வரும்போது தக்கப் பதிலடியைக் கொடுக்கலாம். புகார் ஆசனத்தை இப்போது கரிகாலருக்குத் தக்க வைப்பதே நமது முதல் வேலை!”

“போர் மூளாமல் இருப்பதும், புகாரை இழக்காமல் இருப்பதும், சோழ தேசத்தின் எதிர்காலமும் இப்போது தங்கள் கையில் தான் இருக்கிறது வளவனாரே!”

“எனது கையிலா! நான் என்ன செய்வேன் இரும்பிடர்த்தலையரே? என்னால் ஆகவேண்டியது என்ன இருக்கிறது?”

“போர் மூளாமல் உறைந்தையும் புகாரும் சமாதானமாக இருக்க வேண்டுமென்றால் இருங்கோவேள் இரு நிர்ப்பந்தங்களை விதித்துள்ளான்!”

“இரண்டு நிர்பபந்தங்களா?”

“ஆம்!”

“என்னென்ன?”

“ஒன்று நீங்கள் மீண்டும் உறைந்தையில் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்! மற்றொன்று….”

“தயக்கம் வேண்டாம் பிடர்த்தலையரே! விரைந்து கூறுங்கள்.”

“மற்றொன்று உங்கள் மகள் வானவல்லியை இருங்கோவேளின் மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்கிறான்!”

“இரும்பிடர்த்தலையாரே! என்ன கூறுகிறீர்கள்?”

“ஆம், வளவனாரே! அவனது நிர்பந்தங்களை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்! இப்போதைக்கு அவனுக்கு அடங்கிப்போவதைத் தவிர வேறு வழியில்லை.”

“பிடர்த்தலையாரே, இருங்கோவின் மலை நாட்டுக் கோட்டையை தரைமட்டமாக்கி அவனைக் கைது செய்து சென்னியின் முன் அழைத்துச் சென்றவன் நான். அப்படியிருக்க என்னால் எப்படி அவனிற்கு கீழே பணியாற்ற இயலும்?”

இரும்பிடர்த்தலையர் எதையும் பேச இயலாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

“சரி, நானாவது கரிகாலருக்காக உறைந்தை சேனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் உயிருக்கு உயிரான தனது காதலனை எண்ணிக் கைம்பெண் கோலத்தில் காட்சியளிக்கிறாள் எனது புதல்வி! வஞ்சி மாநகரில் சிறை வைக்க முயன்றவனையே நீ மணந்து கொள் என்று எப்படி என்னால் வானவல்லியிடம் கூற இயலும்?”

வளவனாரின் கேள்விகளுக்குப் பதில் கூற இயலாமல் இரும்பிடர்த்தலையர் திணறினார்.

“இருங்கோ விதித்துள்ள நிர்பந்தமும், சமாதானமும் கரிகாலருக்குத் தெரியுமா?”

“அவனுக்குத் தெரியாது! உங்கள் ஒப்புதலையும், வானவல்லியின் ஒப்புதலையும் பெற்ற பிறகு கரிகாலனைச் சமாதானப்படுத்தி விடலாம் என நான் நம்புகிறேன்!”

“சரி, கரிகாலரை ஒப்புக்கொள்ள வைத்துவிடுவீர்கள்! ஆனால் உப தளபதிகளையும், படை வீரர்களையும் பற்றி நீங்கள் சிந்தித்தீர்களா? செங்குவீரன் கட்டளையிட்டுச் சென்றான் என்ற ஒரே காரணத்திற்காக நம் இருவரையுமே எதிர்த்தவர்கள் அவர்கள்! என்ன செய்யப் போகிறீர்கள் பிடர்த்தலையரே!”

“உப தலைவர்கள் மற்றும் வீரர்களைப் பற்றிய கவலையை விடுங்கள்! செங்குவீரன் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பேச்சு வார்த்தையே அவசியமில்லை. அவன் தான் மடிந்துவிட்டானே! தாங்கள் என்ன கூறுகிறீர்கள் வளவனாரே?”

“சோழ வம்சத்தின் மேன்மையே எனது மூச்சு! சோழ வம்சத்திற்காக எனது மகனை இழந்தேன். இப்போது மகளையும் எதிரிக்கு மணமுடித்துக் கொடுத்து நானும் அவனுக்கு சேனாதிபதியாகிவிடுகிறேன்!” என்றவர் அமைதியாகி நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, “ஆனால் ஒன்று பிடர்த்தலையரே! என்னைப் போல எனது மகளை ஒப்புக்கொள்ள வைத்துவிடலாம் என எண்ணிவிடாதீர்கள்! அவள் உள்ளே தான் இருக்கிறாள். நீங்களே சென்று பேசிக்கொள்ளுங்கள்!” என்றவாறே அங்கிருந்து எழுந்துக் கிளம்பிச் செல்லலானார்.

வளவனாரிடம் இருங்கோவேளின் முடிவைக் கூறியபோது தயங்காதவர் வானவல்லியிடம் பேச வேண்டியதை எண்ணிய போதே அவரது மனதில் திகிலும், அச்சமும் சூழ்ந்து கொண்டது. செல்லலாமா? அல்லது வேண்டாமா? எனத் தயங்கியவாறே வானவல்லியின் அறையை நோக்கி மெல்ல நகர்ந்தார் இரும்பிடர்த்தலையர்.

வானவல்லியின் அறைக்குள் சென்றார். அங்கு பத்திரைத் தேவி மற்றும் மரகதவல்லி சூழ வானவல்லி சோகமே வடிவாய் அமர்ந்திருந்தாள். “விறல்வேலை எண்ணி வருந்திக் கொண்டிருப்பவளிடம் எப்படி இன்னொருவனை மணந்து கொள் எனக் கூறுவேன்?” எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டவர் மனம் வருந்தித் திரும்பலானார். அறை வரை வருகை தந்த இரும்பிடர்த்தலையர் ஏதும் கூறாமல் திரும்பிச் செல்வதைக் கண்ட மரகதவல்லி, “அய்யா, நில்லுங்கள்! வந்தவர் ஏன் திரும்பிச் செல்கிறீர்? வாருங்கள்!” எனக் கூறி அழைத்துவந்தாள்.

இரும்பிடர்த்தலையரைக் கண்ட பத்திரைத் தேவி அறைக்குள் சென்று குளிர்ந்த மோரினைக் கொண்டு வந்து நீட்ட அதனை வாங்கிப் பருகினார். இரும்பிடர்த்தலையரைக் கண்ட வானவல்லி ஏதும் பேச இயலாமல் அமைதியாகவே சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள். அவளது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் கூட துடைக்கப்படாமல் காய்ந்து போயிருந்தது!

வானவல்லியின் தோழிகள் இருவரிடமும், “அம்மா, நான் வானவல்லியிடம் சற்றுத் தனிமையில் பேச வேண்டும். சற்று வெளியே காத்திருக்கிறீர்களா?” எனக் கூற பத்திரைத் தேவியும், மரகதவல்லியும் வெளியே செல்லலானார்கள்!

“அம்மா, வானவல்லி. நான் கூறுவதைக் கேட்டு என்னை சுய நலம் பிடித்தவன் நெஞ்சில் ஈரமில்….” எனக் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த வானவல்லி, “அய்யா! பீடிகை எதுவும் கொடுக்க வேண்டாம். கூற வந்ததை நேரடியாகவே கூறுங்கள்!” என அழுது அழுது கம்மியிருந்த அவளது  குரலால் கூறினாள்.

“அம்மா, சோழ தேசத்தின் எதிர்காலம் இப்பொது உனது கைகளில் தான் இருக்கிறது!”

“எனது கைகளிலா?”

“ஆம் வானவல்லி!”

“ஐயா, நான் ஒரு அபலைப் பெண்! என் தமையனையும், திருமணத்திற்கு முன்னரே என் தலைவனையும் இழந்துவிட்ட பாவி நான்! எனது கைகளிலா சோழ தேசத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!” எனக் கூறிய வானவல்லியின் பதிலைக் கேட்ட இரும்பிடர்த்தலையர் துயரப்பட்டார்.

“இன்னொரு முறை நீ அபலைப் பெண் எனக் கூறாதே வானவல்லி! உனக்காக ஒரு வசந்த வாழ்வு காத்திருக்கிறது.”

அவர் கூறியதைக் கேட்டு சிரித்த வானவல்லி, “அத்தான் இல்லாத வாழ்வு எனக்கு எப்படி அய்யா வசந்தமாக ஆகும்!”

“இறந்தவன் எப்படி அம்மா, திரும்பி வருவான்? அவனை எண்ணி நீ கவலையில் உய்த்திருப்பது அனைவரையுமே வாட்டுகிறது!”

“யாரை அய்யா குறிப்பிடுகிறீர்கள்?”

“படைத் தலைவன் செங்குவீரனைத் தான் குறிப்பிடுகிறேன்!”

“அத்தான் இறக்கவில்லை!”

“இறக்கவில்லையா?”

“ஆம்! அவர் வருவார்!”

“வானவல்லி என்ன கூறுகிறாய்?”

“ஆம் அய்யா! என் தலைவர் நிச்சயம் வருவார்.”

“எந்த நம்பிக்கையில் இறந்தவன் வருவான் எனக் கூறுகிறாய்?”

“என் காதல் மீது இருக்கும் நம்பிக்கை தான் இரும்பிடர்த்தலையரே!”

“அம்மா, நீ காதல் மயக்கத்தில் உளறுகிறாய். செங்குவீரன் மரக்கலத்தோடு எரிந்ததை கரிகாலர் பார்த்திருக்கிறார்!”

“கரிகாலர் பார்த்தார் என்பதற்காக என் தலைவர் இறந்தவர் ஆகிவிடுவாரா?”

“வானவல்லி…!”

“தலைவர் மரக்கலத்தில் சிக்கிக் குமரிக் கடலில் மூழ்கியிருக்கலாம். அனால் அவர் இன்னும் இறக்கவில்லை! அது மட்டும் எனக்கு நன்கு தெரியும்!”

“உனக்குத் தெரியுமா?”

“ஆம்!”

“எப்படி அம்மா?”

“என் தமையன் குணக் கடலில் பயணிக்குமுன் என் மனம் என்னை எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் உப தலைவர் விடயத்தில் அப்படி இல்லை! இன்னும் அவர் எங்கோ உயிருடன் இருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்!”

“அப்படி அவன் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் திரும்பி வந்திருப்பான்! மூன்று திங்கள் கடந்துவிட்டதே!”

“மூன்று திங்கள் அல்ல! முன்னூறு வருடங்கள் ஆனாலும் அவருக்காக நான் காத்திருப்பேன்.” எனக் கூறி அமைதியானாள்.

வானவல்லியிடம் என்ன கூறுவதெனத் தெரியாமல் இரும்பிடர்த்தலையர் தடுமாறியபடியே அமர்ந்திருந்தார். ‘செங்குவீரன் இறந்துவிட்டான் என்பதைக் கூட இன்னும் நம்ப இயலாமல் அவன் நிச்சயம் திரும்புவான் எனப் பெரும் நம்பிக்கையில் இருக்கும் இவளிடம் இன்னொருவனை மணந்து கொள் என எப்படி என்னால் கூற இயலும்’ என நினைத்த இரும்பிடர்த்தலையர், “நான் புறப்படுகிறேன் வானவல்லி. கவனமாக இரு!” எனக் கூறியபடியே கிளம்பினார்.

இரும்பிடர்த்தலையர் செல்வதைப் பார்த்த வானவல்லி, “அய்யா! வந்த காரியம் பற்றி பேசாமல் அதற்குள் செல்கிறீர்கள். சற்று அமருங்கள்!” எனக் கூறி அமர வைத்தாள்.

வானவல்லியின் பேச்சினைக் கேட்டுத் திகைத்த இரும்பிடர்த்தலையர், “உன்னை சந்திக்கத்தான் வந்தேன் வானவல்லி. சந்தித்துவிட்டேன், அதான் கிளம்புகிறேன்!” என்றார்.

“பிடர்த்தலையாரே, பொய் உரைக்க வேண்டாம்!”

“அம்மா!”

“தாங்கள் என் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டேன்!”

“கேட்டுவிட்டாயா?”

“ஆம்!”

“எதனை?”

“நீங்கள் பேசிய அனைத்தையும் தான்!”

“சரி வானவல்லி. எப்படிப் பேசலாம் என நினைத்ததை நீயே அறிந்துகொண்டாய். உனது முடிவு என்ன?”

“எனது முடிவா?”

“ஆம்!”

“தாங்கள் அனைத்து முடிவையும் எடுத்துவிட்டுத் தானே வந்தீர்கள்! பிறகு என்னிடம் எதற்கு சம்மதத்தை எதிர்பார்க்கிறீர்?”

இரும்பிடர்த்தலையர் எதையும் பேச இயலாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

“பிடர்த்தலையாரே, சில கேள்விகள் நான் கேட்க வேண்டும். கேட்கலாமா?”

“கேள் மகளே!”

“தங்கள் விருப்பப்படி நான் இருங்கோவேள் மகனை மணந்து கொள்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு என்ன நடக்கும்!”

வானவல்லியின் மனமாற்றத்தைக் கண்ட இரும்பிடர்த்தலையார் உற்சாகமடைந்தார். பெரும் ஆர்வத்துடன், “நீ உறைந்தையின் இளவரசி ஆகுவாய்!” என்றார்.

“அதன் பிறகு?”

“இருங்கோவேளுக்குப் பிறகு முடி சூடும் யுவராஜனுக்கு நீ பட்டத்தரசியாக அவனருகில் அமர்வாய்!”

“அதன் பிறகு?”

“உனது திருவயிற்றில் உதிக்கும் குழந்தைகள் நாடாள்வார்கள்!”

“அதன் பிறகு?”

இக்கேள்விக்கு இரும்பிடர்த்தலையர் பதில் கூற முடியாமல் திணறினார்.

“அதன் பிறகு என்ன நடக்கும் என நான் கூறுகிறேன் பிடர்த்தலையரே! எனக்குக் குழந்தைகள் பிறக்க ஆகும் இரண்டு வருடத்தில் புகாரில் அமர்ந்திருக்கும் கரிகாலர் தனது படைகளை வலிமையாக்கி உறைந்தை மீது போர் தொடுப்பார்! போரின் இறுதியில் யார் யாரெல்லாம் கரிகாலரை எதிர்த்தார்களோ அவர்களெல்லாம் அழிக்கப்பட்டிருப்பார்கள்! நான் கைம்பெண்ணாக நிற்பேன்!” எனக் கோபத்துடன் கூறிய வானவல்லியின் சொற்களைக் கேட்டுத் திகைத்துப் போனார் இரும்பிடர்த்தலையர்.

உடனே சுதாரித்துக் கொண்டவர், “மகளே நீ நினைப்பதைப் போல எந்த விபரீதமும் நடக்காது! போரில் தோற்றாலும் கரிகாலர் இருங்கோவின் மகனுக்கு மலை நாட்டை வழங்கி ஆட்சி செலுத்தப் பணிப்பார். ஒரு நாளும் உன்னை கைம்பெண்ணாகக் காணும் காலம் நேராது!” என்றார்.

அவர் கூறியதைக் கேட்ட வானவல்லி, “பிடர்த்தலையரே! நீங்கள் யாரை மணந்துகொள்ளச் சொல்கிறீர்கள் தெரியுமா? யாரைக் கொல்லாமல் என் தலைவர் என்னை மணக்க மாட்டேன் என மக்கள் திரள் முன் சூளுரைத்தாரோ அவனையே நான் மணக்க வேண்டும் என்று என்னிடமே அறிவுரை கூறுகிறீர்கள்…” என்றவாறே கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள். பிறகு “பிடர்த்தலையாரே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! என் தலைவரை அணைத்த எனது மார்புகளை இன்னொருவன் அணைக்க நேர்ந்தால் எனது மார்புகளை அறுத்துக்கொண்டு மரணிப்பேனே தவிர, இன்னொரு ஆடவனை நான் மணப்பேன் என்று கனவிலும் எண்ணாதீர்கள்!” எனக் கூற இரும்பிடர்த்தலையரின் கால்கள் அச்சத்தில் சற்று நடுங்கவே செய்தன. மன்னிப்புக் கேட்டுவிடலாம் என எண்ணி வாயைத் திறந்தார். அதற்குள் முந்திக்கொண்ட வானவல்லி, “நீங்கள் இங்கிருந்துப்  புறப்படலாம்!” என எழுந்து வாசலை நோக்கி கையைக் காட்ட தனது சுயநலத்தையும், தவறையும் எண்ணியவர் வெட்கி நாணம் கொண்டு தலையைத் தொங்க போட்டபடியே அங்கிருந்து வெளியேறினார்.

இரும்பிடர்த்தலையர் சென்ற பிறகு தனது அறையைத் தாழிட்டுக்கொண்டுத்  தேம்பித் தேம்பி அழுதாள் வானவல்லி. அழுதபடியே படுக்கையிலிருந்து எழுந்தவள் ஆடைகளுக்கிடையில் வைத்திருந்த முத்து மாலை மற்றும் ஓலைச் சுவடிகளை எடுத்து திரும்ப திரும்ப புரட்டினாள். அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் விறல்வேல் எழுதிய காதல் பாக்கள்.

விறல்வேல் அணிந்திருந்த முத்து மாலையை எடுத்துக் கன்னத்தில் வழிந்த கண்ணீர்த் துளிகளோடு முகத்தில் அணைத்துக்கொண்டாள். முத்துமாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டவள், ஓலைச் சுவடிகளுடன் கிடந்த தாழை மடலை எடுத்து வாசித்தாள்.

விளம்பிடத்தான்

    எத்தனித்தேன்…

புலம்பல்களைச்

    சித்தரித்தேன்…

தாழையிது உன்கை

    தவழ்கையில்…

செழுமையாய் என்நெஞ்சில்

    ஆணிவேர் விட்டாயடி…!

தாழை மடலில் எழுதியிருந்த பாடலை வாசிக்க வாசிக்க அவளது கண்களில் இருந்து கண்ணீர் நேரத்திற்கு நேரம் அதிகமாக வழிந்துக்கொண்டிருந்தது.

தாழை மடலை எடுத்து அணைத்தவள், “அத்தான்!” “கருத்தான்!” “இங்கு உங்களை எண்ணியே நான் காத்திருக்கிறேன். எங்கிருக்கிறீர்கள்? உங்களை இனி நான் சந்திப்பேனா?” எனப் புலம்பியபடியே தேம்பித் தேம்பி அழுதாள். அவளது கண்களில் இருந்து வெளிப்பட்ட கண்ணீர்த் துளிகள் முகத்திலிருந்து வழிந்து வானவல்லி மார்பில் அணைத்திருந்த காய்ந்து சருகாகிப் போன தாழை மடலின் மீது துளித் துளியாக விழுந்து நனைத்துக்கொண்டிருந்தது!

  1. உறைந்தைக்கு கோழி அதாவது கோழியூர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கொழியூரை ஆண்டவர் கோழியர் எனச் சோழரை சிறப்பித்து அழைக்கும் வழக்கமும் உண்டு.

ஆதாரம்: சங்க காலத் தமிழக வரலாறு – 2. பக்கம்: 57.

(முதல் பாகம் முற்றும்)