வானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை

0

கொற்கை என்பது சங்க காலப் பாண்டிய நாட்டின் இரண்டாவது தலைநகர். முதன்மைத் தலைநகர் கூடல் எனும் மதுரை மாநகர். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த பாண்டி நாட்டுத் துறைமுகங்களுள் கொற்கையும் ஒன்று. தாமிரபரணி ஆறு குணக்கடலோடு சங்கமிக்கும் இடத்திற்கு அருகில்,  குமரிக்கும் பாம்பன் தீவுக்கும் இடைப்பட்ட வளைகுடா பகுதியில் அமைந்திருந்தது. வளைகுடா பகுதியில் அமைந்திருந்ததனால் இத்துறைமுகம் முத்துக்குளிக்கும் இடமாகவும், சங்கு மற்றும் பவளம் எடுக்கும் இடமாகவும் விளங்கியது. 1தண்டனை விதிக்கப்பட்டு வெறுத்தொதுக்கப்பட்ட சிறைக் கைதிகள் அனைவரும் முத்துக்குளிக்கும் பணிக்கு விதிக்கப்பட்டிருந்தனர். கொற்கையில் எடுக்கப்பட்ட முத்துக்கள் உலகப் புகழ் பெற்றவை. இம்முத்துகளைத் தேடி யவனர்களும், மேலை நாட்டு களிங்கர்களும் வந்தனர். The Periplus of the Erithrean Sea எனும் நூலில் யவனர்கள் இதனை ‘கோல் கொய்’ எனக் கூறுகின்றனர். பாண்டிய நாட்டின் முதன்மைத் தலைநகர் கூடலில் அமர்ந்து அரசர் ஆட்சிபுரிந்தாலும், கொற்கையில் இளவரசர் அமர்ந்து ஆட்சி செலுத்தினர். கடல் கொண்ட கபாடபுரம் இந்தக் கொற்கையாக இருக்கலாம் என்பதும் சில அறிஞர்களின் கருத்து.

கொற்கையில் அமர்ந்து ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் தனது மகனைக் கண்டு சோழ அரசியல் நிலை பற்றி விவாதிப்பதற்காகப் பாண்டியன் தென்னவன் வருகை தந்திருந்தார். இருவருக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருந்தது. “சென்னியின் மகனுக்கு உரிய சிம்மாசனத்தை இருங்கோவேள் கைப்பற்றிக்கொண்டது தவறு என்றும், வளவனுக்கு நாம் உதவ வேண்டும்” என்றும் பாண்டிய இளவரசர் கருத்து தெரிவித்தார். ஆனால், அதனை நிராகரித்த பாண்டியர் தென்னவன், “சோழ வம்சத்தை நிர்மூலப்படுத்தக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் இது. இந்த அரிய வாய்ப்பை கைநழுவ விட்டுவிடக் கூடாது” எனத் திடமாகக் கூறிவிட்டார்.

தந்தையின் கருத்தில் உடன்பாடு இல்லாத பாண்டிய இளவரசர், “தங்கள் விருப்பம் அரசே!” எனக் கூறி அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.

பயிற்சிப் பாசறையில் தேர்ந்தெடுக்கப்பட வீரர்களின் திறமையையும், அணிவகுப்பையும் பார்வையிட்டுக்கொண்டிருந்த போது அரசரின் வீரன் ஒருவன் வந்து அவரிடம், “அரசே, உங்களைச் சந்திக்க இரும்பிடர்த்தலையர் அனுப்பிய தூதுவன் வருகை தந்துள்ளான்! அரசவைக்கு அழைத்துச் செல்லவா?” என வினவினான்.

“அரசவைக்கு வேண்டாம்! வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இந்தப் பயிற்சிப் பட்டறைக்கே அழைத்து வா! நமது வீரர்களின் திறமையையும் அவன் அறிந்துவிட்டுப் போகட்டும்” எனக் கட்டளையிட்டார்.

ஒரு நாழிகைப் பொழுதிற்குப் பிறகு பாண்டிய வீரன் செங்குவீரன் திருக்கண்ணன் மற்றும் தேர்ச் சாரதி மூவரையும் அழைத்து வந்தான்!

மன்னரிடம் வந்த செங்குவீரன் தனது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு இரும்பிடர்த்தலையர் கொடுத்தனுப்பிய ஓலையினை எடுத்து நீட்டினான்.

அதனை வாங்கிப் படித்த பாண்டிய மன்னர், “தூதுவனே, காலம் தாழ்ந்து விட்டது! சென்னியின் மகன் வளவன் சோழ சிம்மாசனத்தை மீட்க உதவிக் கேட்டுள்ளார் இரும்பிடர்த்தலையர். எனது முன்னோன் பெருவழுதிக்கு அனுப்ப வேண்டிய ஓலையை எனக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வோலையினால் எடுத்த முடிவில் எந்த மாறுபாடும் ஏற்படப்போவதில்லை.”

செங்குவீரன் எதுவும் பேசாமல் அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபடியே பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“தூதுவனே! சென்னியின் புதல்வனிடம் கூறு. இனி ஒரு நாளும் உறைந்தை சிம்மாசனத்தை அவனால் அடைய இயலாது என்று! இரும்பிடர்த்தலையர் வேண்டுமானால் இருங்கோவேளை முறியடித்துச் சென்னியின் மகனுக்குப் புகாரில் பட்டத்தை சூட்டியிருக்கலாம். ஆனால் விரைவில் புகாரும் விழப்போவது நிச்சயம்! உறைந்தை மாளிகையிலேயே சென்னியின் மகன் மடிந்திருக்க வேண்டியவன். அவன் வேண்டுமானால் மாளிகையிலிருந்து தப்பியிருக்கலாம். ஆனால் அவன் போர்க்களத்தில் மடிந்து புகார்  விழப்போவது மட்டும் உறுதி! சென்னியின் மகன் வளவன் இறந்தபிறகு உறைந்தையில் விற்கொடியும், புகாரில் கயல் கொடியும் ஏற்றப்படும்! புரிகிறதா?”

பாண்டிய மன்னர் தென்னவன் கூறியதைக் கேட்க கேட்க செங்குவீரனின் கோபமும், ஆத்திரமும் தலைக்கேறிக் கொண்டிருந்ததால் அவர் கடைசியில் கேட்ட “புரிகிறதா?” என்ற கேள்வி அவனுக்குக் கேட்காததால் அமைதியாகவே நின்றான்.

சிவந்த கண்களுடன் அமைதியாக நின்ற செங்குவீரனைக் கண்ட பாண்டிய மன்னர், “நான் கூறுவது உனக்குப் புரியவில்லையா? தெளிவாகவே கூறுகிறேன் கேள். சென்னியின் மைந்தன் இறந்த பிறகு இருங்கோவேள் மீண்டும் மலை நாட்டிற்கேச் சென்றுவிடுவான்! சோழர்களின் தலைநகரான உறைந்தைப் பட்டினத்தை சேர நாட்டோடும், செல்வம் செழிக்கும் உலகப் புகழ் பெற்ற பட்டினமான புகார் பாண்டிய நாட்டோடும் சேர்த்துக்கொள்ளப் படும். சோழ நாடு துண்டாக்கப்படுவது மட்டும் உறுதி. விரைவில் சோழ வம்சமே அழிக்கப்பட்டு தமிழகம் பாண்டியர், சேரர் என நாங்கள் இருவரே ஆட்சி செலுத்தப் போகிறோம்!” எனக் கூறிக்கொண்டிருந்த போதே இடைமறித்த படைத் தலைவன் செங்குவீரன், “அரசே, உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளோம் என்பதற்காக உங்கள் விருப்பப்படி எதையும் பேச வேண்டாம்!” எனக் கூறி அவரது விழிகளில் தனது பார்வையை நிலைக்கவைத்துக்கொண்டு நின்றான்.

மன்னர் ஏதோ பேச வாயெடுக்க அதற்குள் முந்திக்கொண்ட செங்குவீரன், “அரசே, வீண் கனவில் தாங்கள் புரளவேண்டாம். போரைத் தவிர்த்து வேளிர்களையும், சேரனது உயிரையும் காப்பீர்கள் என எண்ணியே உங்களைத் தேடி வந்தேன் நான்! ஆனால் போரில் ஈடுபட்டுத் தாங்களும் அழியப்போவது நிச்சயம் என்பதை அகங்காரம் பிடித்த பேச்சிலிருந்தே அறிந்துகொண்டேன். கடைசியாகத் தங்களிடம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். வேங்கை தனித்திருந்தாலும் அதன் பலமும், வீரமும் ஒரு நாளும் குன்றியதில்லை! உங்களது படைகள் அனைத்தும் புலிப் படைக்கு முன் புறமுதுகிடப்போவது மட்டும் உறுதி! உங்கள் கோட்டைகளை அழித்து அதில் பறக்கும் கயல் கொடிகள் இறக்கப்பட்டு சோழரின் புலிக்கொடி விரைவில் ஏற்றப்படும். உங்கள் படைகளைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். செருக்களத்தில் சிந்திப்போம்!” எனக் கூறிவிட்டு பாண்டிய மன்னர் தென்னவனின் பதிலைக்கூட எதிர்பாராமல் அங்கிருந்துக் கோபத்துடன் திரும்பினான்.

செங்குவீரன் கூறியதைக் கேட்டுக் கோபம் அடைந்த மன்னர், “தூதுவனே, நில்!” எனக் கட்டளையிட்டார்.

மன்னரின் குரலைக் கேட்ட செங்குவீரன் அப்படியே நின்று மன்னரை நோக்கித் திரும்பினான். “நீ யார்?” எனச் செங்குவீரனை நோக்கிக் கேள்வி கேட்டார்.

“இரும்பிடர்த்தலையரும், முதன்மை அமைச்சர் வளவனாரும் அனுப்பியத் தூதுவன் நான்!” எனப் பதிலளித்தான் செங்குவீரன்.

“நீ தூதுவன் என்பது எனக்கும் தெரியும்! உனது பெயர் என்ன? புகாரில் நீ வகிக்கும் பொறுப்பு என்ன?” எனத் தனது முரட்டு மீசையைத் தடவியபடியே வினவினார் தென்னவன்.

“எனது பெயர் விறல்வேல். மௌரியரை வென்ற சோழ மாமன்னர் இளஞ்சேட்சென்னியின் மைந்தன் வளவனின் படைத் தலைவன் நான்!” என முகத்தில் சிறு புன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அமைதியாகப் பதிலளித்தான் செங்குவீரன்.

“ஓ! செங்குவீரன் என்பவன் நீ தானா? உனது துடுக்குத்தனம் நிறைந்த திமிர் பிடித்தப் பேச்சினைக் கேட்ட போதே நினைத்தேன். நீ நிச்சயம் வீரனாகத் தான் இருக்கவேண்டும் என்று! தூதுவனைக் கொன்று எங்களது வீரத்தைக் காட்ட நாங்கள் விரும்பவில்லை. நான் தெரிவித்த செய்தியை விரைந்து சென்று இரும்பிடர்த்தலையனிடம் கூறு! அது வரையாவது நீ உயிருடன் இருக்க வேண்டாமா?” எனச் சிரித்தபடியே ஏளனம் செய்தார் பாண்டிய மன்னர்.

பாண்டிய மன்னர் தென்னவனின் ஏளனப் பேச்சினை வேறு யாராவது கேட்டிருந்தால் கோபப்பட்டு திரும்பி வந்திருப்பர். ஆனால் பாண்டியனுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என எண்ணிய செங்குவீரன், “அரசே! இங்கிருக்கும் வீரர்கள் யாருக்காவது என்னிடம் நெருங்கும் துணிச்சல் இருக்கிறதா?” எனத் தனது விழிகளைச் சுழற்றிப் பயிற்சிப் பட்டறையை நோக்கியபடியே கேட்டான்.

“வீரனே உனக்கு எவ்வளவு துணிச்சல்?” எனக் கேட்டபடியே தனது இடையுறை வாளினை உருவி ஓங்கினார் பாண்டிய மன்னர் தென்னவன்.

ஓங்கிய வாளைக் கண்டு அச்சம் கொள்ளாமல், “பாண்டிய அரசே, உங்களைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன். தூதுவனாக வந்திருக்கும் நான் உங்களுடன் எனது திறமையைக் காட்டி உங்களை அவமானப்படுத்த விரும்பவில்லை. நான் விடைபெறலாமா?” எனத் தெரிவித்தான் செங்குவீரன்.

“வீரனே, என்னைச் சுற்றி நிற்கும் வீரர்கள் அனைவரும் எனது மெய்க்காவல் வீரர்கள்! என்னை எதிர்த்து நீ வாளினை உருவி அவர்களைக் கடந்து உன்னால் இங்கிருந்துச் சென்றுவிட இயலுமா?”

படைத்தலைவன் விறல்வேல் பாசறைக்குள் நுழையும் போதே அங்குப் பயிற்சி மற்றும் ஒத்திகை செய்துகொண்டிருந்த வீரர்களின் பலம், பலவீனம், திறமை என அனைத்தையும்  கண நேரப் பொழுதில் கணக்கீடு செய்திருந்தான்! ஆதலால், பாண்டிய மன்னரின் கேள்விக்கு, “அரசே, இங்கிருக்கும் வீரர்களில் எவனேனும் ஒருவனுக்கு எனது தேர் சாரதியை எதிர்க்கும் துணிவு இருக்கிறதா? வாள் சமரிட்டு எனது சாரதியைத் தோற்கடித்தால் அப்போதிலிருந்தே நான் உங்களுக்கு அடிமை! எனது சாரதியிடம் சமரிட உங்கள் வீரர்கள் தயாரா?” எனக் கோபத்தோடு வினவினான்.

செங்குவீரன் கூறியதைக் கேட்ட பாண்டிய மன்னர் அருகில் நின்ற புரவிச் சாரதியைக் கவனித்தார். சிரித்துக்கொண்டே, “வீரனே, உன் புரவி சாரதி என் வீரர்களின் அனுபவத்தில் பாதி வருடத்தைக் கூட கடந்திருக்க மாட்டான்! இவனை நம்பியா நீ சூளுரைக்கிறாய்?” என வினவினார்.

“அரசே, புலி இளமையாக இருந்தாலும் அது ஒருநாளும் முதிர்ந்த ஓநாய்களைப் பார்த்து அஞ்சுவதில்லை. என் சாரதி புலிப் படையைச் சேர்ந்தவன்! திறமையிருந்தால் உனது வீரர்களைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்!” எனச் செங்குவீரன் கூறுவதைக் கேட்டு சுற்றி நின்ற பாண்டிய வீரர்கள் மூவரையும் சூழ ஆரம்பித்தார்கள்.

சூழ்ந்திருந்த பாண்டிய வீரர்களை விலக்கிய உப தலைவன் திருக்கண்ணன் சற்றுத் தொலைவில் கிடந்த ஒரு நீண்ட போர் வாள் மற்றும் சில வேல்களை எடுத்துக்கொண்டு வந்தவன் சாரதியிடம் போர்வாளை மட்டும் கொடுத்துவிட்டு ‘எதற்கும் இருக்கட்டும்’ என முன் எச்சரிக்கை உணர்வுடன் வேல்களைக் கையில் வைத்துக்கொண்டு நின்றான்.

போர் வாளை வாங்கிய சாரதி தயங்கி நின்றான். அதைக்கண்ட செங்குவீரன், “கரிகாலா! மடிந்தாலும், வெளியேறினாலும் வீரத்துடன் செல்வோம்! தயக்கம் வேண்டாம்!” என்றான்.

கரிகாலன் என்ற சொல்லைக் கேட்டதும் தேர்ச் சாரதிக்கு மட்டும் அல்ல திருக்கண்ணனுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சாரதியின் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தான். மாறுவேடமிட்ட கரிகாற் திருமாவளவன் தான்! அதுவரை இல்லாத தயக்கம், அச்சம், பரபரப்பு கண நேரத்தில் அவனைக் கவ்விக்கொண்டது! வளவன் தனது பெயரை கரிகாலன் என மாற்றிக்கொண்டாலும் எதிரிகளிடத்தில் அப்பெயர் சென்று சேர்ந்திருக்கவில்லை. ஆதலால் தான் செங்குவீரன் ‘கரிகாலா’ என அழைத்ததைக் கேட்டும் பாண்டிய மன்னர் தென்னவன் கவனத்தில் கொள்ளவில்லை.

போர் வாளைக் கையில் எடுத்தபடியே சமருக்குத் தயாராகச் சென்றார் கரிகாலர். பாண்டிய வீரன் ஒருவன் அவரைத் தாக்க முதலில் வந்தான். கண நேரத்தில் அவனது வாளினைத் தட்டிவிட்டார் கரிகாலர். அடுத்து இன்னொருவன் வந்தான். அவனது வாளும் காற்றில் பறக்கவிடப்பட்டது. வாளினை இழந்தவர்கள் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறலாயினர். கரிகாலரும் எந்தப் பாண்டிய நாட்டு வீரனையும் காயப்படுத்த வேண்டும் என எண்ணிச் சமர் செய்யவில்லை! பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவராக முதலில் வந்தவர்கள் பிறகு இருவர் இருவராக வந்து கரிகலாரைத் தாக்கினார்கள். அனைவரையும் திறம்படவே சமாளித்துக்கொண்டிருந்தார். நாழி ஆக ஆக போரின் போக்கும், உக்கிரமும் மாறிக்கொண்டிருந்தது! தொடர் தோல்விகளைச் சந்தித்த பாண்டிய நாட்டு வீரர்கள் ஆவேசத்துடன், கரிகாலரைக் காயம்படுத்த வேண்டும் என்ற நோக்குடனே சண்டையிடத் தொடங்கினர். கரிகாலரின் உடலில் சில இடங்களில் குருதி கசியவும் செய்தது! சண்டையின் போக்கு மாறிக்கொண்டிருந்ததை செங்குவீரனும், திருக்கண்ணனும் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று வாளினைப் பறிகொடுத்த பாண்டிய வீரன் ஒருவன் தனது தோல்வியைத் தாங்கிக்கொள்ள இயலாமல் கீழே கிடந்த  வேலினை எடுத்து கரிகாலனை நோக்கி எறியக் குறிபார்த்தான். அதைக்  கவனித்துவிட்ட திருக்கண்ணன் தனது கையில் இருந்த வேலினை பாண்டிய வீரனை நோக்கி வேகமாக எறிய, வேலானது அவனது மார்பில் பாய்ந்து முதுகு வழியாக வெளிப்பட அவன் மண்ணில் சரிந்தான்.

தனது  வீரன் ஒருவன் வேலினால் குத்தப்பட்டு இறந்ததைக் கண்ட பாண்டிய வீரர்கள் அனைவரும் கரிகாலரை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தார்கள்! அதுவரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த செங்குவீரனும், திருக்கண்ணனும் இனியும் அப்படியே நின்றால் பெரும் கேடு விளையும் என்பதை உணர்ந்தவர்களாய் தங்களது வாளினை உருவிக்கொண்டு பாண்டிய வீரர்களை எதிர்த்தனர்.

யார் வீரன் எனப் பரிசோதிக்கத் தொடங்கிய வாற்சமர் இப்போது பெரும் கொலைக்களமாக மாறியிருந்தது! கரிகாலர், செங்குவீரன், திருக்கண்ணன் மூவரும் முக்கோண வடிவில் நின்றுகொண்டு தங்கள் முதுகுப்புறம் யாரும் தாக்காத வண்ணம் வியூகம் அமைத்துக்கொண்டு பாண்டிய வீரர்களை எதிர்த்தார்கள். மூவரிடமும் சமரிட வந்த வீரர்கள் அனைவரும் வாட்களால் வெட்டப்பட்டு மடிந்து கீழே விழுந்தனர்! பாண்டிய வீரர்கள் அனைவரையும் வியூகம் அமைத்து எதிர்த்துத் தாக்கி வீழ்த்திக்கொண்டிருக்கும் மூவரின் வீரத்தைக் கண்ட மன்னர் திகைக்கவே செய்தார். பயிற்சிப் பாசறை கொலைக்களமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. பாண்டிய வீரர்களின் அலறல் சத்தம் கொற்கை அரண்மனையையே கதிகலக்கியது!

பாண்டிய வீரர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு வந்த சேனாதிபதி அதிகனும் மூவரது வாள் வீசும் வேகத்தைக் கண்டு மலைக்கவே செய்தார். வருடங்கள் பல கடந்திருந்தாலும் புகார் வீரனின் போர் முறையும், வேகமும் சிறிதும் தொய்வடைந்திருக்கவில்லை. மாறாக அவை பல மடங்கு வளர்ந்திருக்கவே செய்திருக்கிறது என நினைத்து சிறிது நேரம் நின்று மூவரின் வாற்சமரை வேடிக்கை பார்க்கவே செய்தார்! தன்னை மறந்த நிலையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், “இப்பேர்ப்பட்ட வாற்சமரைக் கண்டு எத்தனை வருடங்களாகிறது! செங்குவீரன் தன்னை மட்டுமல்ல புகார் தளபதிகளையும் தக்க பயிற்சியளித்து பெரும் வீரர்களாக மாற்றிவிட்டான்!” எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

இனியும் தாமதித்து வேடிக்கை பார்த்தால் மீதமிருக்கும் பாண்டிய வீரர்களும் மூவரிடமும் தோற்று மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் என எண்ணியவர் சமர் களத்திற்குச் சென்று, “நிறுத்துங்கள்!” எனக் கோபத்துடன் கட்டளையிட்டார்.

திடீரென்று எழுந்த சேனாதிபதியின் கட்டளையைக் கேட்ட பாண்டிய வீரர்கள் அனைவரும் சண்டையிடுவதை நிறுத்தினர். கடும் கோபத்துடன் அங்கு வந்தவர், “முட்டாள்களே, நம்மைத் தேடி வந்திருக்கும் தூதுவர்களிடம் இப்படியா நாகரிகம் இன்றி போரிடுவது! சண்டையிடச் சொல்லி கட்டளையிட்ட மூடன் யார்?” எனக் கத்தினார்.

சேனாதிபதியின் கடும் கோபத்தைக் கண்ட வீரர்கள் நடுநடுங்கி மன்னரின் பக்கம் பார்வையைச் செலுத்தினர். அனைவரது பார்வையும் ஒரு பக்கமாகத் திரும்புவதைக் கண்ட சேனாதிபதி அதிகனும் அவரது பார்வையைத் திருப்பினார். அங்குப் பாண்டிய மன்னர் தென்னவன் நின்றுகொண்டிருந்தார்.

மன்னரிடம் ஓடி வந்த சேனாதிபதி அதிகன், “அரசே! மன்னிக்கவேண்டும். தாங்கள் இருந்ததைக் கவனிக்கவில்லை. நமது வீரர்கள் தான் தூதுவர்களிடம் வம்பிழுத்தார்களோ என எண்ணிவிட்டேன்!” எனப்பணிந்து தனது மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார்.

மன்னரும், சேனாதிபதியும் மூவரால் கொல்லப்பட்ட பல பாண்டிய வீரர்களின் உடல்களைப் பார்த்தார்கள். மன்னரிடம் வந்த செங்குவீரன், “அரசே! எப்படி வெளியேற இயலும் எனக் கேட்டீர்களே? இப்படித்தான்! எங்கள் மூவரிடம் அகப்பட்டு இறந்த இவர்களைப் போலவே ஒட்டுமொத்த தென்னகத்தின் படையும் போர்க்களத்தில் மொத்தமாக மடியப்போகிறது!” என எச்சரிக்கை செய்தவன் சேனாதிபதியிடம், “அய்யா, நான் புறப்படுகிறேன்! தங்கள் உதவிக்கு நன்றி!” எனக் கூறியபடியே அவரது பதிலை எதிர்பாராத செங்குவீரன் கரிகாலர் மற்றும் திருக்கண்ணனை அழைத்துக் கொண்டு கொற்கை அரண்மனையிலிருந்து வெளியேறினான்.

மூவருமே ஏதும் பேசாமல் அமைதியுடனே புரவித் தேரை நோக்கி நடந்தார்கள். அப்போது கரிகாலர் தான் முதலில் கேட்டார், “தலைவரே, மாறுவேடத்தில் இருந்த என்னை நீங்கள் எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்?” என்று.

“எனது அரசரை என்னால் அடையாளம் காணாவிட்டால் படைத்தலைவன், ஒற்றர் தலைவன் என்றப் பொறுப்புகள் எனக்கு எதற்கு? தாங்கள் தேர்ச் சாரதியாக வந்து அமர்ந்த போதே அடையாளம் கண்டுகொண்டேன்!”

“பின்னர் ஏன் அதனை என்னிடம் தெரிவிக்கவில்லை?”

“எந்தக் காரியத்திற்காக தாங்கள் மாறுவேடமிட்டு என்னுடன் வருகைத் தருகிறீர்கள் எனத் தெரியாததால் உங்கள் வேடத்தைக் கலைக்க வேண்டாம் என எண்ணினேன்! உப தளபதி திருக்கண்ணனால் உங்களை அடையாளம் கண்டறிய இயலாததால் நீங்கள் தேர்ச் சாரதியாக வருவதே நல்லது எனவும் நினைத்தேன்.”

செங்குவீரனின் பதிலைக் கேட்ட கரிகாலர் சிரிக்கலானார்.

இருவரும் பேசுவதைக் கேட்டு திகைப்புடன் நடந்து வந்துகொண்டிருந்த திருக்கண்ணனிடம் செங்குவீரன், “திருக்கண்ணா பாண்டிய நாட்டிற்கு சாரதியாக வந்திருக்கும் கரிகாலரைக் கண்டதற்கே திகைத்து விட்டாயா! கரிகாலர் புகாருக்கு வருவதற்கு முன் அவர் செய்த காரியத்தை நீ அறிந்துகொண்டால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிடுவாய் போலிருக்கிறதே!” என்றான்.

ஆர்வத்துடன் திருக்கண்ணன், “என்னென்ன காரியங்கள் தலைவரே?” என வினவினான்.

“திருக்கண்ணா, புகாரைக் கைப்பற்ற முயற்சித்த இருங்கோவேளின் அனைத்து திட்டங்களையும் கரிகாலர் கண்டறிந்து  எப்படி முறியடித்தார் என தெரியுமா?”

“தெரியாது தலைவரே!” எனத் திருக்கண்ணன் தெரிவித்த வேளையில் குறுக்கிட்ட கரிகாலர், “தலைவரே, நான் முறியடித்தேன் எனக் கூறாதீர்கள்! நாம் என்று கூறுங்கள். புகாருக்கு மன்னனாக முடிசூடப் படுவேன் என்பதை அப்போது தான் நானே அறிந்துகொண்டேன். அனைத்து திட்டங்களுக்கும் சூத்திரதாரி தாங்கள் தான்!” என்றார்.

“அரசே! அரசியல், போர் இவற்றில் வெற்றி, தோல்வி என எது நேர்ந்தாலும் அனைத்திற்கும் பொறுப்பு அரசன் மட்டுமே! அதன் படி அனைத்திற்கும் உரிமையானவர் தாங்கள் தான்! இன்னும் சில வருடங்களில் எங்களது பெயர் அனைத்தும் காலத்தால் மறக்கடிக்கப்படும். ஆனால் அனைத்திற்கும் தலைவராகிய தங்களது ‘கரிகாலர்’ எனும் பெயர் தான் ஆயிரமாயிரம் வருடங்களைக் கடந்து சரித்திரத்தில் நிலைபெறப் போகிறது! ஆதலால் புகாரின் வெற்றியின் முழு பங்கும் தங்களுக்கே உரியது!”

செங்குவீரன் கூறிய மறுப்பினைக் கேட்ட கரிகாலரும் அமைதியாகிவிட திருக்கண்ணன், “தீப்பற்றிய சென்னியின் வசந்த மாளிகையிலிருந்து இளவலைக் காப்பாற்றி பொன்னி நதியில் குதித்துவிட்ட பிறகு தாங்கள் இருவரும் தலைமறைவு ஆகிவிட்டீர்களே! இடைப்பட்ட காலத்தில் என்ன தலைவரே நடந்தது?” எனப் பெரும் ஆர்வத்துடன் வினவினான்.

“இடைப்பட்ட காலத்திலா? நாங்கள் இருவரும் இருங்கோவேளின் சேவகர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம்!” எனச் சிரித்துக்கொண்டே பதிலளித்தான் செங்குவீரன்.

“தலைவரே! என்ன கூறுகிறீர்?” வியப்புடன் வினவினான் திருக்கண்ணன்.

“ஆமாம் திருக்கண்ணா. நான் உண்மையைத் தான் கூறுகிறேன். உனக்கு சந்தேகமாக இருந்தால் கரிகாலரிடமே கேட்டுக்கொள்ளேன்.”

செங்குவீரன் கூறுவதில் நம்பிக்கை கொள்ளாத திருக்கண்ணன் கரிகாலரைப் பார்த்தான். கரிகாலரும் சிரித்தபடியே, “ஆமாம் உபதளபதியாரே! நம் படைத் தலைவர் கூறுவது அனைத்தும் உண்மை. அவர் என்று பொய் கூறியிருக்கிறார்?” என்றார்.

“கரிகாலரது உடல்நிலை முழுவதும் தேறியபிறகு அவர் இருங்கோவேளின் புரவித் தேரைச் செலுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நான் புகாரைக் கைப்பற்ற முனைந்திருந்த இருங்கோவேளின் தலைமை ஒற்றன் வேந்தனின் படைப் பிரிவில் ஊடுருவி உறைந்தைப் போர் வீரனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆதலால் தான், ஒரே நேரத்தில் நமது எதிரிகளின் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைத்து செயல் திட்டங்களையும்  நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களை எளிதில் வீழ்த்தவும் முடிந்தது!” எனக் கூறி முடித்தான் செங்குவீரன்.

இடைப்பட்ட சில கிழமைகளில் கரிகாலர் மற்றும் செங்குவீரன் செய்த அசாதாரண செயல்களை எண்ணி வியந்த திருக்கண்ணன் மேற்கொண்டு எதையும் பேச இயலாமல் அவர்களுடன் நடக்கலானான்.

பிறகு, தங்களுடன் வந்திருப்பது கரிகாலர் தான் என்பதை அறிந்துகொண்ட பிறகு திருக்கண்ணன் தேர்ச் சாரதியானான். அரசரையும், படைத் தலைவனையும் அமரவைத்து திருக்கண்ணன் புரவித் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.

“திருக்கண்ணா, கொற்கையில் எங்கும் நிறுத்த வேண்டாம்! நாம் கொற்கையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்! இங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்துதான்!” எனக் கூற திருக்கண்ணன் புரவிகளை விரட்ட ஆயத்தமானான்.

அவர்களை நோக்கி தூரத்திலிருந்து எய்யப்பட்ட அம்பு ஒன்று அதிவேகத்தில் வந்து கரிகாலரும், செங்குவீரனும் புரவித் தேரில் அமர்ந்திருக்க இருவரின் தலைகளுக்கும் நடுவில் குத்திட்டு நின்றது. திடீரென்று எய்யப்பட்ட அம்பினைக் கண்ட செங்குவீரன் எச்சரிக்கை செய்யப் புரவிகளை இழுத்து தேரை நிறுத்தினான் திருக்கண்ணன். தேரிலிருந்து கரிகாலருடன் குதித்த செங்குவீரன் தனது குறுவாட்களை உருவிக்கொண்டு சுற்றிலும் அசைவு தெரிகிறதா எனக் கவனிக்க திருக்கண்ணனும் குதித்து செங்குவீரனுடன் கரிகாலருக்குப் பாதுகாப்பாக நின்றுகொண்டான்.

சுற்றிலும் பெரும் மாளிகைகளே இருக்க அவர்களால் யாரையும் காண இயலவில்லை! குத்திட்டு நின்ற அம்பினைக் கண்டான் திருக்கண்ணன். பாய்ந்து வந்த அம்பானது சிறிது விலகியிருந்தாலும் படைத்தலைவர் அல்லது அரசரைக் கொன்றிருக்கும் என்பதை உணர்ந்துகொண்டான். குறி தவறிய அம்பினால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது கடவுளின் கருணை தான் என எண்ணினான் திருக்கண்ணன்!

செங்குவீரன் சுற்றியிருந்த பகுதிகளைத் தனது விழிகளால் அலச, திருக்கண்ணன் அம்பினைப் பார்வையிடலானான். அம்பின் நுனியில் சிறு பட்டுத் துணி கட்டப்பட்டிருப்பதைக் கண்ட திருக்கண்ணன், “தலைவரே, அம்பினில் பட்டுத் துணி ஒன்று கட்டப்பட்டுள்ளது!” எனக்கூற செங்குவீரன் தேரில் ஏறி அம்பினைக் கவனிக்கலானான்.

தேரில் சொருகியிருந்த அம்பினில் கட்டப்பட்டிருந்த பட்டுத்  துணியை அவிழ்த்தான் செங்குவீரன்! அவிழ்க்கும்போதே துணியில் ஏதோ எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்கவே செய்தான். துணியைப் பிரிக்காமலே அம்பு வந்த திசையைக் கவனித்தான். தூரத்தில் ஒரு மாளிகையின் உப்பரிகைத் துணி விலகியிருந்தது. அம்பினை எய்தவன் தங்களைக் குறிவைத்து எய்திருந்தால் நிச்சயம் மூவருள் ஒருவரது உயிரை இந்நேரம் இவ்வம்பு குடித்திருக்கும். ஆனால், இத்துணியை அம்பினில் கட்டி தன் திறமையில் பெரும் நம்பிக்கையுடன் இருவரது தலைக்கும் இடையில் எய்திருக்கிறான் என்றால் அவனது திறமையையும், நம்பிக்கையையும் கண்டு திகைக்கவே செய்தான் செங்குவீரன்.

திடீரென்று ஏற்பட்டுவிட்ட பரபரப்புடன் சுருட்டியிருந்த பட்டுத் துணியைப் பிரித்தான்.

‘செங்குவீரா… இளவலின் உயிருக்குப் பெரும் ஆபத்து! வழியிலேயே உங்கள் மூவரையும் கொலை செய்ய நமது எதிரிகள் திட்டம் வகுத்திருக்கிறார்கள். எச்சரிக்கை!’ என எழுதியிருந்தது. துணியில் எழுதியிருந்த கருஞ்சாந்துக் குழம்பைத் தடவிப் பார்த்தான். அதன் ஈரத்திலிருந்து அத்துணி கண நேரத்திற்கு முன்னர் தான் எழுதப்பட்டு அம்புடன் கட்டப்பட்டு எய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டவன் திரும்ப திரும்ப அதனை வாசித்தான்.

பட்டுத் துணியைப் பார்த்தபிறகு செங்குவீரனின் பாவனைகள் முழுவதும் மாறிவிட்டதைக் கவனித்த திருக்கண்ணன் அப்பட்டுத் துணியை வாங்கிப் படிக்கலானான். படித்தவன், “தலைவரே, அம்பு நம்மைக் கொல்ல எய்யப்பட்டது அல்ல!” என்றான்.

“ஆமாம் திருக்கண்ணா!”

“கொற்கையில் நமக்கு உதவுவதற்கு யார் தலைவரே இருக்கிறார்கள்?”

“பட்டுத்துணியைக் கவனி அதில் பெயர் இருக்கிறது!”

“பெயரா?”

“ஆம்!”

“பட்டுத்துணியில் செய்தி மட்டும் தான் தலைவரே எழுதப்பட்டுள்ளது. எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லையே!”

“துணியின் கீழ் உற்றுப்பார். உனக்கான பதில் கிடைக்கும்!”

பட்டுத் துணியை உற்றுப்பார்த்த திருக்கண்ணன் எதையோ கண்டு கொண்டவனாய், “ஆம் தலைவரே! வேல் வரையப்பட்டு அருகில் புலி உருவமும் வரையப்பட்டிருக்கிறது! புலி வேலினைத் தாக்குவதைப் போலவே கருஞ்சாந்துக் குழம்பினால் வரையப்பட்டிருக்கிறது! புலியின் கண்கள் மட்டும் செஞ்சாந்துக் குழம்பினால் வரையப்பட்டிருக்கிறது!” என்றவாறே வரையப்பட்டிருந்த புலியின் கண்களைத் தொட்டுப்பார்த்து  நுகர்ந்து பார்த்த திருக்கண்ணன், “தலைவரே, இல்லை! இல்லை! செஞ்சாந்துக் குழம்பு இல்லை. அது இரு துளிக் குருதி. கருஞ்சாந்துக் குழம்பினால் வரையப்பட்டு கண்கள் மட்டும் குருதியினால் சித்திரம் எழுதியிருக்கிறார்கள்!” என்றவாறே பதற்றத்துடன் கூறலானான்.

“திருக்கண்ணா, வேலினைத் தாக்கும் புலி இல்லை! நன்றாக உற்றுப் பார், புலியைக் காக்கும் வேல் அது!”

உற்றுப்பார்த்த திருக்கண்ணன், “ஆமாம் தலைவரே! ஆமாம்! புலியை… இல்லை இல்லை புலிக்குட்டியைப் பாதுகாக்கும் வேல்! அப்படியானால்…..?

“இது வேளக்காரப் படையின் தலைவர் நமக்கு எழுதியிருக்கிறார்!”

“வேளக்காரப் படைத் தலைவரா?”

“ஆம், திருக்கண்ணா. நமது கடவுளான முருகனை வேளக்காரன் என்றும் அழைப்போம் அல்லவா!”

“ஆமாம்!”

“முருகனின் ஆயுதம் வெற்றி வேல். அதையே தான் வேளக்காரப் படைத் தலைவரும் குறிப்பிட்டு இருக்கிறார்!”

“அருகருகே அமர்ந்திருக்கும் இருவருக்கு இடைப்பட்ட ஒரு பகுதியைக் குறி வைத்து வெகு தொலைவிலிருந்து குறி தவறாமல் எய்திருக்கிறார் என்றால் அவரது நம்பிக்கையையும், திறமையையும் எண்ணிப் பார்த்தால் என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை தலைவரே! அவர் எதற்காக நம்மை நேரில் சந்தித்து எச்சரிக்காமல் அம்பினை எய்து தெரிவிக்கிறார்? வேளக்காரப் படை என்ற ஒன்றையே நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே! இதனைத் தாங்கள் நம்புகிறீர்களா?”

“திருக்கண்ணா… வேளக்காரப் படையின் தலைவர்கள் இளவலின் உயிரைக் காப்பதாகவும், அவரை நிச்சயம் உறைந்தை சோழ சிம்மாசனத்தில் அமர்த்துவேன் என்றும் சென்னியின் சாம்பலில் சத்தியப் பிரமாணம் செய்தவர்கள். வேளக்காரப் படைத் தலைவர்கள் இருவர். ஒருவர் எனது நண்பன் திவ்யன், மற்றொருவர் யார் எனத் தெரியவில்லை. நானும் முயன்றுவிட்டேன். இக்கேள்விக்குப் பதில் வளவனார், இரும்பிடர்த்தலையருக்குக் கூடத் தெரியவில்லை. விரைவில் அவர் நம்மை சந்திப்பார் என நம்புகிறேன் திருக்கண்ணா”

செங்குவீரனும், திருக்கண்ணனும் பேசியதை ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்த கரிகாலர், “தலைவரே, தாங்கள் கூறுவது மெய் தானே! எனக்குத் தெரியாமல், என்னைக் காக்க வேளக்காரப் படையா?” என வினவினார்.

“ஆம் அரசே! வேளக்காரப் படையின் உறுப்பினர்களே மொத்தம் இருவர் தான்! இருவருமே தலைவர் தான்.”

“இருவர் தானா?” கரிகாலர் மற்றும் திருக்கண்ணன் இருவரும் ஒரே நேரத்தில் ஆச்சர்யத்துடன் கேட்டனர்.

“ஆம்! ஒற்றர் தலைவனாக இருந்து என்னால் கண்டறிய இயலாத மிகப் பெரிய ரகசியம் இந்த வேளக்காரப் படையின் மர்மம் தான்! எனது நண்பன் திவ்யன் இல்லாத அந்த மற்றொருவன் யார் என்பது பெரும் மர்மத்திலும் மர்மமாகவே இருக்கிறது!” எனக் கூற அங்குப் பெரும் அமைதி நிலவியது!

திருக்கண்ணா, வேளக்காரப் படைத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கையை என்னால் புறந்தள்ள இயலாது! தரை வழியாக நாம் பயணிக்க வேண்டாம். துறைமுகத்திற்குச் சென்று மரக்கலம் வழியாகப் பயணிப்போம்! பாதுகாப்பானது, அதே நேரம் நாளையே நாம் புகார் சென்றுவிடலாம்! வைகாசி மாதக் காற்றும் நமக்கு சாதகமாகத்தான் வீசுகிறது!” எனக் கூறத் திருக்கண்ணன் புரவியை துறைமுகத்தை நோக்கிச் செலுத்தலானான்.

வானவல்லி மற்றும் வில்லவனுக்குத் தெரிந்த காளன் எனும் இளந்திரையன் தான் வேளக்காரப் படையின் தலைவன் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது! இளந்திரையன் கூறியது பெரும் ரகசியம் என்பதால் வில்லவனும், வானவல்லியும் அவனைப் பற்றி யாரிடமும் எதையும் தெரிவித்திருக்கவில்லை. காளன் வில்லவனிடம் தெரிவித்தபடியே காளனிடம் இலச்சினைப் பதக்கத்தைத் திருடித் தாக்கிவிட்டு வானவல்லியை சிறை மீட்டு வந்தேன் என்றே அனைவரிடமும் தெரிவித்திருந்தான். ஆதலால் டாள்தொபியாஸ் இருங்கோவேளிடம் வில்லவனைப் போன்ற ஒற்றர்கள் தங்கள் படையில் ஊடுருவியிருக்கலாம் என்று கூறியே அவர்களை சிறைப்படுத்தியிருந்தான். கரிகாலரும் வில்லவனுக்கு உபதலைவர் பதவியை வழங்கிய போது நண்பரை எதிர்த்து சண்டையிட்டு வஞ்சி மாநகரில் சிறைபட இருந்த சோழ நாட்டின் மானத்தை மீட்டு வந்திருக்கிறீர்கள் எனக் கூறியதிலிருந்தே வில்லவனும், வானவல்லியும் காளன் பற்றிய ரகசியத்தை யாரிடமும் தெரிவித்திருக்கவில்லை என்பதை அறியலாம்.

கொற்கைத் துறைமுகத்தில் மரக்கலத்தில் ஏறியிருந்தார்கள் மூவரும். மரக்கலமும் புறப்படத்தயாரானது. திடீரென செங்குவீரனுக்கு உறுத்தவே மரக்கலத்தின் மேல் தளத்திற்கு வந்து பார்த்தான். அவன் எதிர்பார்த்ததைப் போன்று மேல்தளத்தில் கற்பூரம் ஏதும் இல்லை. வெற்று இடமாக இருந்த மேல் தளத்தைப் பார்த்த பிறகுதான் அவனது மனதில் நிம்மதியே தோன்றியது. மரக்கலம் துறைமுகத்திலிருந்துப் புறப்பட்டது. குமரிக் கடலிலிருந்து மரக்கலம் புகாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது! கடற்பரப்பைக் கவனித்தான் செங்குவீரன். கடலில் குற்றவாளிகள் முத்துக் குளித்துக்கொண்டிருந்தார்கள். அருகினில் சங்கரா எனும் நாட்டுக் கப்பலுடன் ஒற்றைப் பாய்மர நாட்டுக் கப்பல்கள் பிணைக்கப்பட்டு கடலில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டான். அருகினில் யவன மரக்கலங்கள் 2கானா’விற்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தன. இவற்றைப் பார்த்துகொண்டிருந்தவன், சற்றுத் தொலைவில் ஒரு பெரிய மரக்கலம் ஒன்று இவன் செல்லும் மரக்கலத்தை நோக்கி வேகமாக வருவதைக் கண்டவன் திடீரெனப் பெரும் பரபரப்பானான்!

வேகமாக வந்த மரக்கலத்தைக் கண்டு எச்சரிக்கையானவன் உடனே மரக்கல கலாபதியை அழைத்து ஒரு சிறு படகை மரக்கலத்திலிருந்து கீழிறக்கச் சொல்லிக் கட்டளையிட்டான். திடீரென்று செங்குவீரனின் கட்டளையைக் கேட்ட திருக்கண்ணனும், கரிகாலரும் திகைக்கலானார்கள். கடலில் இறக்கிய படகினில் கரிகாலரையும், திருக்கண்ணனையும் செல்லக் கட்டளையிட்டான். கயிற்றின் வழியே முதலில் கரிகாலர் படகுக்கு இறங்கிச் சென்றார். திருக்கண்ணன் இறங்க கயிற்றைப் பிடித்தான். அவனிடம், “திருக்கண்ணா, இளவலைக் கவனமாகப் பார்த்துக்கொள். அவருக்கு எந்த ஆபத்தும் நேராமல் புகாருக்கு அழைத்துச் சென்று விடு!” எனக்கூறிக் கொண்டிருந்த போதே இடைமறித்த திருக்கண்ணன், “தலைவரே, நீங்கள்?” எனக் கேள்வி எழுப்பினான்.

“நான் உங்களுடன் வரப்போவதில்லை!”

“தலைவரே, நீங்கள் இல்லாமல் நானும் செல்லப்போவதில்லை!”

“திருக்கண்ணா… அதோ தொலைவில் வருகிறதே, அது இந்த மரக்கலத்தோடு மோதப்போகிறது! எனது நண்பன் திவ்யனை குணக்கடலில் அழுத்தியதும் அதே மரக்கலம் தான்! பல வருடத்திற்குப் பிறகு இம்மரக்கலத்தை நான் பார்க்கிறேன். என் நண்பனைக் கொன்றவர்களை நான் கண்டறிய வேண்டும்!”

“தலைவரே, உங்களுக்குத் துணையாக நானும் இருக்கிறேன்! வாழ்வோ சாவோ உங்களுடனே வருகிறேன்!”

“திருக்கண்ணா, நீ கூறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அது இயலாது. நாம் இறந்தால் இரு கிழமைகளில் மறந்துவிடுவார்கள்! ஆனால் இளவல் இறந்தால் சோழ வம்சமே அழிந்துவிடும்! சோழ நாட்டின் எதிர்காலத்தையே உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். எனது உப தளபதியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கட்டளையை நிறைவேற்று!”

“உங்களது வாழ்வை மீண்டும் பணயம் வைக்கிறீர்கள். உறைந்தை மாளிகைக்குள் சென்றபோதும் என்னை அழைத்துச் செல்லவில்லை! இப்போதும் தங்களுடன் இருக்கவும் அனுமதிக்க மறுக்கிறீர்கள்!” என வருந்தினான் திருக்கண்ணன்.

“திருக்கண்ணா, அன்று உன்னிடம் கூறியது தான். வாழ்வு என்பது மரணத்தை விட மேன்மையானது என்பதை அரும்பாடு பட்டாவது அறிந்துகொள்ள வேண்டும்! அந்த உயர்ந்த வாழ்வினை அடைய  மரணத்தை அடைய நேர்ந்தாலும் கவலை கொள்ளக் கூடாது! இளவலுக்கு முடிசூடி விட்டேன். போர் மூண்டாலும் எனது தளபதிகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். என் நண்பனைக் கொன்றவனை நான் நிச்சயம் பழி தீர்த்தே ஆகவேண்டும்! மரக்கலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விரைந்து செல்!”

“சரி தலைவரே, இனி உங்களுடன் வாதிட்டு என்னால் வெல்ல இயலாது! கிளம்புகிறேன். உங்களை எங்கே நாங்கள் சந்திப்பது!”

“நாளை மாலை வரை பாம்பன் தீவில் காத்திருங்கள்! வரவில்லையேல் புகார் கிளம்பிவிடு!”

“அப்படியே ஆகட்டும்!” என்றவாறே கயிற்றில் இறங்கினான் திருக்கண்ணன்.

“திருக்கண்ணா சற்றுப் பொறு!” என்றவாறே தனது கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைக் கழட்டி திருக்கண்ணனிடம் கொடுத்தான்.

“தலைவரே…!”

“நான் திரும்பி வராவிட்டால் இதனைக் காட்டு. புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்வார்கள்!”

“தலைவரே…!” எனப் பதறினான் திருக்கண்ணன்.

“விரைந்து செல்! இளவல் பத்திரம்!” எனக் கூறிக்கொண்டிருந்த போதே திருக்கண்ணன் படகுக்குச் சென்று துடுப்பினைத் துழாவினான். படகு மரக்கலத்திலிருந்து விலகி கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

திருக்கண்ணனிடம் கரிகாலர், “தலைவர் வரவில்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

திருக்கண்ணன் பதில் கூறாமல் வேகமாக படகினைத் துழாவிக்கொண்டிருந்தான்! திடீரென கொற்கை துறைமுகத்தில் இடி விழுந்ததைப் போன்ற ஒரு பெரும் சத்தம் எழுந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். விறல்வேல் இருந்த மரக்கலம் மீது பெரும் மரக்கலம் மோதியதால் முற்றிலும் நொறுங்கிப்போயிருந்தது. கற்பூரத்தையும் நெருப்பையும் மாறி மாறி தூவ நொறுங்கிய மரக்கலம் குபீரென்றுத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

எரியும் மரக்கலத்தைப் பார்த்த கரிகாலர் துடித்து, “தலைவரைக் காப்பாற்ற வேண்டும்!” எனக் கூறியபடியே நீருக்குள் தாவ முயன்றார். கரிகாலரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட திருக்கண்ணன், “தலைவர் நாளை மாலைக்குள் பாம்பன் தீவுக்கு வந்துவிடுவதாக வாக்களித்துள்ளார்! அவர் இதுவரை வாக்கு தவறியதில்லை! உங்களைக் காப்பதாகவும் வாக்களித்துள்ளேன் நான்!” என்றான்.

திருக்கண்ணனின் பிடியிலிருந்து கரிகாலரால் விடுபட இயலவில்லை. படகு அலைகளாலே தள்ளப்பட்டு கரையை அடைந்திருந்தது! கரையில் நின்றபடியே மரக்கலத்தைப் பார்த்தார்கள்! மரக்கலம் முற்றிலும் எரிந்து நீருக்குள் அமிழ்ந்திருந்தது! எரிந்த மரக்கலத்திலிருந்து யாராவது தப்பிக்க முயல்கிறார்களா  எனப் பார்த்தபடியே பெரிய மரக்கலம் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது!

கரையில் கரிகாலரும், திருக்கண்ணனும் செங்குவீரனை எண்ணி வருந்தியபடியே எரிந்த மரக்கலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்! அவர்களால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய இயலவில்லை.

வருந்திய கரிகாலர், “திருக்கண்ணா, படைத் தலைவரும் படகிற்கு வந்துவிடுவார் என்றே நான் கீழே இறங்கியிருந்தேன். அவர் மரக்கலத்திலேயே தங்கிவிடுவார் என நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. என் வாழ்வினில் நான் செய்த பெரும் பிழை இது!” எனக் கூற அவரது கடை விழியிலிருந்து வெளிப்பட்ட இரு துளிக் கண்ணீர் கடற்கரை மணலில் விழுந்தது.

தலைவர் நிச்சயம் பாம்பன் தீவுக்கு வருவார் எனச் சமாதானம் செய்துகொண்ட இருவரும் புரவித் தேரையும், சாரதி ஒருவனையும் அமர்த்திப் பாம்பன் தீவுக்குக் கிளம்பினார்கள். தேர் சாரதி வேறு யாரும் இல்லை வேளக்காரப் படைத் தலைவனான இளந்திரையன் எனும் காளன் தான். மாறுவேடத்தில் அமர்ந்திருந்தான்!

வேந்தனுக்கு ஏற்கெனவே காளன் மீது சந்தேகம் இருந்ததனால் வளவன் மற்றும் செங்குவீரனைக் கொலை செய்ய முயலும் போது காளன் அருகில் இருப்பதை விரும்பாதவன், “மன்னர் உன்னை உறைந்தைக்கு அழைத்திருக்கிறார். கிளம்பு!” என அனுப்பி வைத்திருந்தான்.

காளனும் கொற்கையிலிருந்து கிளம்புவதைப் போன்று கிளம்பி மாறுவேடத்தில் திரும்பி அவர்களையே கவனித்துக்கொண்டிருந்தான். தரை மார்க்கமாகப் பயணிக்க முடிவு செய்திருந்த செங்குவீரனை அம்பு எய்து எச்சரிக்கையும் செய்திருந்தான்.

வேந்தன் மரக்கலத்தில் ஏறி வளவனையும், செங்குவீரனையும் கொலை செய்ய ஆயத்தமான வேளையில் செங்குவீரனை எச்சரிக்கை செய்யலாம் என எண்ணியபோது செங்குவீரனே வளவனை திருக்கண்ணன் பாதுகாப்பில் படகில் இறக்கிவிட்டதை மற்றொரு படகிலிருந்துக் கவனித்தவன் விரைந்து கரைக்கு வந்து புரவித் தேர் ஒன்றை சம்பாதித்துச் சாரதியாகவும் அமர்ந்திருந்தான்.

பாம்பன் தீவுக்கு எப்படி செல்லலாம் என தவித்துக் கொண்டிருந்த போதுதான் காளன் தான் புகார் செல்வதாகவும், யாரேனும் வருவதாக இருந்தால் நான் அழைத்துச் செல்கிறேன் எனக் கூவினான். அவனிடம் சென்ற திருக்கண்ணன் கையிலிருந்த தங்கக் காசுகளை கூலி கொடுத்துப் பின்  அப்புரவித் தேரில் பயணித்தார்கள்.

அன்று மாலை பரிதி மேற்கில் சாய ஒரு நாழிகைப் பொழுதிற்கு முன்னரே புரவித் தேர் பாம்பன் தீவினை அடைந்திருந்தது. இரு நாள் காத்திருந்துப் பார்த்தார்கள். செங்குவீரன் திரும்பவேயில்லை.

கள்வனான காளனுக்கு ஆபத்தான பாதை எவை என அறிந்திருந்ததால் கவனமுடன் தேரை செலுத்திப் புகாரில் கரிகாலரையும், திருக்கண்ணனையும் சேர்ப்பித்தான்.

கரிகாலரும், திருக்கண்ணனும் புகாருக்கு வந்துவிட்ட செய்தியைக் கேட்ட வானவல்லி விறல்வேலும் வந்திருப்பான் என எண்ணி ஆரத்தியுடன் அரண்மனை வாயிலில் காத்திருந்தாள்.

தாழை மலரால் கூந்தலைப் பின்னித் தன்னை நன்கு அலங்காரம் செய்து அழகு படுத்தியிருந்த வானவல்லியைக் கண்ட கரிகாலர் என்ன சொல்வதென்றுத் தெரியாமல் திகைத்தார்.

இருவருக்கும் ஆரத்தி எடுத்த வானவல்லி பெரும் எதிர்பார்ப்புடன், “படைத் தலைவர் எங்கே? குன்றுத் துறைக்குச் சென்றுள்ளாரா?” என வினவினாள்.

கரிகாலர் பதில் கூற இயலாமல் தலையை தொங்க போட்டுக் கொண்டார். அருகில் நின்ற திருக்கண்ணன், அவனிடமிருந்த முத்துமாலையை எடுத்து வானவல்லியிடம் நீட்டினான்!

முத்து மாலையை வாங்கியவள், “நான் அவருக்கு அணிவித்த முத்து மாலையாயிற்றே! ஒரு நாளும் அவர் இதனைக் கழற்றிப் பார்த்தது இல்லையே! அவர் எங்கே? அவருக்கு என்னாயிற்று?” எனப் பதறியபடியே கேட்கலானாள்.

கலங்கிய கண்களுடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் திருக்கண்ணன்  தெரிவிக்க “அத்தான்!” எனக் கதறியபடியே விழுந்த வானவல்லி மூர்ச்சையடைந்தாள்!

 

  1. From comari toword the south this region extends to Colchi, Where the pearl-fisheries are; (They are worked by the condemned criminals.); and it belongs to the pandian kingdom. – The Periplus of the Erithrean Sea – Paragraph: 59.
  2. கானா- யவன (கிரேக்க) தேசத்திலிருந்து தமிழகம் வரும் மரக்கலங்கள் அனைத்தும் அரேபியத் தீபகற்பத்தில் இருக்கும் கானா’விலிருந்தே புறப்படும். அதே போன்று தமிழகத்திலிருந்து கிளம்பும் மரக்கலங்கள் கானா சென்ற பிறகே செங்கடல் வழியாக கிரேக்கத்திற்குச் செல்லும்.

Sourse: This whole voyage as above described, from Cana and Eudaemon Arabia, they used to make in small vessels, sailing close around the shores of the gulf.

The Periplus of the Erithrean Sea – Paragraph: 57.