வானவல்லி முதல் பாகம் : 50 – விழுந்தது புகார்

கரிகாற் திருமாவளவன்

சோழ மாமன்னர் இளஞ்சேட்சென்னி மௌரியரை செருப்பாழியில் வென்று, கலகம் செய்து வந்த தென் பரதவரைப் போரில் அடக்கிப் பல்வேறு வீரச் செயல்களை செய்திருந்தாலும் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்றே புகழப்படுபவர். அவர் புரவித் தேரை செலுத்தும் அழகானது அவரது வீரச் செயல்களை எல்லாம் கடந்து புகழ் பெற்றிருந்தது. ஆதலால் தான் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை புலவர்கள் இளம்பெருஞ்சென்னி எனப் பாராட்டிப் பாடினாலும் அவரைப் ‘பொலந்தேர்மிசை  பொலிவு தோன்றி’ என்றே உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் புகழ்கின்றனர். இந்தப் புகழ்ச்சியிலிருந்தே சென்னியின் புரவித் தேரின் தோற்றத்தையும், அவன் புரவி செலுத்தும் அழகையும் ஊகிக்கலாம்.

பொலந்தேர் என்றால் பொன்னால் ஆகிய அழகியத் தேர் என்று பொருள். இளஞ்சேட்சென்னியின் புரவித் தேரானது பொன்னாலும், யானைத் தந்தத்தாலும் செய்யப்பட்டிருக்கும். தேரின் சக்கரத்தின் கால்கள் தந்தத்தால் செய்யப்பட்டுருக்கும். சக்கரத்தின் வட்டை, நடுப்பகுதியில் இருக்கும் அச்சு, குடம் போன்ற அனைத்து பாகங்களும் தங்கத்தால் செய்யப்பட்டு கடையாணிக்கு பதில் ஒரு நீண்ட யானையின் தந்தம் சொருகப்பட்டு ஒளிர்ந்துகொண்டிருக்கும். தேரின் விமானமும் தங்கத்தால் செய்யப்பட்டு அதில் பொதிக்கப்பட்டிருக்கும் வைரம், பவளம், மரகதக் கற்கள், வைடூரியம் போன்றவற்றால் உருவான தோற்றம் பிரம்மிக்க வைக்கும். இறக்குமதி செய்யப்பட்ட நான்கு அரேபிய வெண்குதிரைகளை வரிசையாகத் தங்க இழைக் கயிற்றால் கட்டிப் புரவித் தேரானது பிரம்மாண்ட அழகுடன் பவனி வரும். ஆகாயத்தையே குடையாகக் கொண்டு புலிக்கொடி பறக்க பாய்ந்து வரும் இளஞ்சேட்சென்னியின் தேரைக் கண்டவர்கள் வானில் ரதத்தில் பரிதி வலம் வருவதாக இதிகாசங்களில் குறிப்பிடுவார்களே! அந்தப் பரிதியின் ரதமானது இளஞ்சேட்சென்னியின் புரவித் தேரைப் போன்றுதான் இருக்குமோ? என எண்ண வைக்கும்படி பிரமாண்டங்களின் ஒட்டு மொத்த உருவமாய் காட்சியளிக்கும் இளஞ்சேட்சென்னியின் தேர்.

ஆதலினால் தான் சென்னி புரவித் தேர் செலுத்தும் அழகைக் காண ஒவ்வொரு வருடமும் புகாரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்! பதினெட்டு வருடங்கள் கழித்து எதிர்பாராத நேரத்தில் இளஞ்சேட்சென்னியின் அழகிய பொலந்தேர் புழுதி படர வந்துகொண்டிருந்ததைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அனைவரும் தங்களை மறந்து இருங்கோவேள் மேடையில் இருப்பதையும் பொருட்படுத்தாமல், “உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி வாழ்க!” “பொலந்தேர்மிசை இளஞ்சேட்சென்னி வாழ்க!” “செருப்பாழி எறிந்த இளம்பெருஞ்சென்னி வாழ்க!” “வெற்றிவேல் சென்னி வாழ்க!” எனப் பலவாறு ஆரவாரமிட்டனர்.

மக்களின் வாழ்த்து முழக்கங்கள் போதாதென்று வானத்து மங்கையும் சிறு மேகக்கூட்டங்களை உச்சி வானில் திரளச் செய்து தூறல்களை விழச்செய்து வாழ்த்தத்தான் செய்தாள். மேற்கு வானில் நிலைகொண்டிருந்த பரிதியை உச்சி வானில் திரண்டிருந்த மேகக்கூட்டங்களால் மறைக்க இயலவில்லை. மாலை நேரத்துக் கதிரவனின் செங்கதிர்கள் தூறல்களில் விழுந்து எதிரொளித்ததால் மேகமானது பொன் துகள்களைத் தான் சென்னியின் புரவித் தேரின் மீது விழச் செய்கிறதோ என எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டார்கள். புரவித் தேரையும் வானிலிருந்து விழும் பொன் துகள்களைக் கண்ட பிறகு மக்களின் ஆராவாரக் கூச்சல் கணத்திற்கு கணம் அதிகமாகியது.

வேகமாக வரும் புரவித் தேரினால் எழுப்பப்பட்ட புழுதியானது அந்த மண்டலத்தையே மறைத்திருந்தது. புரவித் தேரினால் கிளம்பிய புழுதிதான் வானத்தில் மேகமாகத் திரண்டு மழையைப் பொழியச் செய்கிறதோ? என எண்ணுமளவிற்கு  புரவி அதிவேகமாக வந்துகொண்டிருந்தது.

விழா மேடையை நோக்கி வந்துகொண்டிருந்த இளஞ்சேட்சென்னியின் புரவித் தேரை பதற்றத்துடனே பார்த்துக்கொண்டிருந்தார் இருங்கோவேள். புரவித் தேர் நெருங்க நெருங்க அதன் பிரமாண்ட தோற்றமும் அழகும் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது! அதிவேகமாக வரும் புரவித் தேரில் யார் அமர்ந்திருக்கிறார்கள்? என உற்றுப் பார்த்தவரின் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தது. “புரவித் தேரில் அமர்ந்திருப்பது இளஞ்சேட்சென்னி அல்லவா? இறந்தவனால் எப்படி உயிரோடு மீண்டு வர இயலும்? அதுவும் வயதாகி இறந்தவன் இப்போது இளமையுடன் அல்லவா உயிரோடு வந்திருக்கிறான்! இது எப்படி சாத்தியம்!” என அதிர்ச்சியுடனே வாய்விட்டுத் தனக்குத்தானே கேட்கலானார்.

அவரது கேள்வியைக் கேட்ட யுவராஜனும், வைதீகரும் என்ன பேசுவதென்று தெரியாமல் திக்பிரமை பிடித்தது போலவே புரவித் தேரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்! அந்த நேரத்தில் மூவரின் திக்பிரமையும் களையுமளவிற்கு மக்கள் கூட்டத்திலிருந்து, “இயல்தேர் வளவன் வாழ்க! “திருமாவளவன் வாழ்க!” “செருப்பாழி வென்ற சென்னியின் புதல்வன் வாழ்க! “வெற்றிவேல் உருவப்பஃறேர் இளையோன் வாழ்க!” என வாழ்த்து முழக்கங்கள் எழுந்தன. இருங்கோவேள் புரவித் தேரை உற்றுப் பார்த்தார். செங்குவீரன் கம்பீரத்துடன் அமர்ந்து புரவித் தேரை செலுத்த பின்னால் திருமாவளவன் ஆத்திமாலை சூடி வைரம், பவளம், முத்து பதிக்கப்பட்ட தங்க இழையாலான உடை,, மரகதக் குண்டலம், நெற்றித் திலகம் மற்றும் போர் வாள் சூடி இளவரசனாகப் பவனி வந்துகொண்டிருந்தான். கோட்டைச் சுவர்களில் அம்பாரி அமைத்து நின்றிருந்த வீரர்கள் மலர் மாரி தூவ, கார் மேகம் பொன்மாரி  தூவ, மக்களின் ஆரவார முழக்கச் சத்தங்களுக்கு மத்தியில் புரவித் தேரானது மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தது.

உப தலைவன் விறல்வேலையும், இளவரசன் வளவனையும் கண்ட இருங்கோவேளின் முகம் ஏமாற்றத்தில் கடுகடுக்க ஆரம்பித்தது! வைதீகர் மற்றும் யுவராஜனையே திரும்பத் திரும்ப புரியாமல் பார்த்தார். சென்னியின் வசந்த மாளிகையில் இறந்து போன செங்குவீரனும், வளவனும் எப்படி உயிர்பெற்று வருகிறார்கள்? கடவுளே, நான் காண்பது கனவா? அல்லது நனவா? இது எப்படி சாத்தியம்? நான் தான் ஏமாற்றப்பட்டேனா? எனப் பலவாறு எண்ணியவரின் முகமானது கோபத்தில் சிவந்து விகாரமாகியது!

புழுதி கிளப்ப வேகமாக வந்த புரவித்தேரானது மேடைக்கு முன்பு நிற்க செங்குவீரன் முதலில் புரவித் தேரிலிருந்து குதித்து தடுப்பினை நீக்க கரிகாலனும் கீழே குதித்தார். அக்காட்சியைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் காண்பது கனவா? அல்லது நனவா? எனக் குழம்பியபடியே மீண்டும், “வளவன் வாழ்க!” “இயல்தேர் வளவன் வாழ்க!” “பொலந்தேர்மிசை வளவன் வாழ்க!” “வெற்றிவேல் வளவன் வாழ்க!” “வீரவேல் வளவன் வாழ்க!” எனப் பலவாறு ஒவ்வொருவரும் ஆரவாரமிட்டுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

மக்கள் ஆரவாரத்தைக் கேட்ட இருங்கோவேள் திக்பிரமைப் பிடித்தவரைப் போல அசைவற்று நிற்க இருங்கோவேளின் தளபதிகள், வீரர்கள் சூழ்ந்த மேடைக்கு இளவலை அழைத்துச் சென்றான் விறல்வேல். ஒரே மேடையில் இருங்கோவேள், வைதீகர், யுவராஜன், செங்குவீரன், வளவன் நிற்க மக்கள் கூட்டமே அசைவற்று அக்கண நேரத்தில் செய்வதறியாது திகைத்து நின்றது. காண இயலாத அக்காட்சியைக் கண்ட குணக் கடலும் கூட அலைகளின்றி அமைதியாகவே காட்சியளித்தது!

எவ்வளவு துணிச்சலும், துணிவும் இருந்தால் வளவனைத் தன் முன்னே அழைத்து வந்திருப்பான் செங்குவீரன் என கடும் கோபம் கொண்ட மன்னர் இருங்கோவேள், “செங்குவீரா! பெரும் பிழையைச் செய்துவிட்டாய்! நீங்கள் இருவரும் இறந்துவிட்டதாய் அல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்! வளவனை உயிரோடு அழைத்து வந்து அவனது இறப்பிற்கு நீயே காரணமாகப் போகிறாய்” என எகத்தாளத்துடன் சிரித்தவர் செங்குவீரனின் அருகில் வந்து அவனது கண்களைப் பார்த்தபடியே, “நீ முயன்றுகொண்டிருக்கும் காரியம் ஒரு நாளும் நிறைவேறாது வீரனே! முடிசூட்டிக்கொள்ளப் போகிறவன் எனது புதல்வன்! நீ கைப்பற்றி வைத்திருக்கும் புகாரை மட்டுமல்ல நீ மணக்கத் துடிக்கும் வளவனார் மகளையும் மணந்து ஆளப் போகிறவனும் என் புதல்வனே! இருவரும் சாகப்போகிறீர்கள்!” எனச் சத்தமிட்டு ஆக்ரோஷத்துடன் கூறலானார்!

இருங்கோவேள் கூறியதைக் கேட்டு விறல்வேலின் கோபம் தலைக்கேறி, கண்கள் சிவக்க ஆரம்பித்ததைக் கண்டவர் குரலை உயர்த்தி, “வேந்தா! இன்னும் ஏன் தாமதிக்கிறாய்! நமது திட்டங்கள் அரங்கேறட்டும்!” எனக் கட்டளையிட்டார்.

மன்னர் இருங்கோவேளின் கட்டளையைக் கேட்ட வேந்தனும் தனது வீரர்களுக்கு, “வீரர்களே, தாக்குங்கள்!” எனக் கட்டளையிட மேடையின் வலப்புறமாக ஒன்று சேர்ந்து திரண்டிருந்த வீரர்கள் அனைவரும் பெரும் ஆரவாரத்துடன் தத்தம் ஆயுதங்களை உயர்த்தியபடியே மரத்தினால் செய்யப்படத் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இருங்கோவேளின் வீரர்கள் என்பதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சத்தில் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு ஓட எத்தனித்தார்கள்!

ஏற்கெனவே தனது ஒற்றர்கள் மூலம் இருங்கோவேளின் நடவடிக்கைகளைக்  கண்காணித்த டாள்தொபியாஸ் தயாராக வைத்திருந்த மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தினான்! அவனது கட்டளைக்கேற்ப கோட்டை மதிலில் நின்றிருந்த வீரர்கள் அனைவரும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய உறைந்தை வீரர்களின் முன் நெருப்பு அம்புகளைத் தூவினார்கள்! ஏற்கெனவே அங்கு எரி எண்ணெய் மற்றும் கற்பூரத்தை புதைத்து வைத்திருந்ததால் அவை தீப்பற்றி வேகமாக முன்னேறிய வீரர்களைத் தடுத்துவிட்டது! மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக நின்ற செங்குவீரனின் வீரர்கள் அனைவரும் சரமாரியாக தாக்க பல்லாயிரக்கணக்கான உறைந்தை வீரர்கள் அனைவரும் சிதறத் தொடங்கினார்கள்.

உறைந்தை வீரர்களின் முன்னும் வலப்புறமும் புகார் வீரர்களின் எரியம்புகள் தாக்குவதால் குணக்கடல் மற்றும் காவிரியாற்றில் குதித்துத்தான் தப்ப இயலும் என்பதை உணர்ந்தவர்கள் பின் வாங்கி ஆயுதங்களைப் போட்டுவிட்டு புறமுதுகிடத் தொடங்கினார்கள்! குணக் கடலிலும், காவிரி ஆற்றிலும் மரக்கலங்களில் நின்ற வீரர்களும் ஒரே நேரத்தில் தாக்க உறைந்தை வீரர்கள் நடுவில் அகப்பட்டுக்கொண்டார்கள்! நாலாபுறமும் புகார் வீரர்கள் உறைந்தை வீரர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்க ஆயுதங்களைப் போட்ட பல்லாயிரக்கணக்கானவர்களும் சரணடைந்தார்கள்!

உறைந்தை வீரர்களை நோக்கி புகார் வீரர்கள் அம்பினை எய்யத் தொடங்கியதுமே நூற்றுக்கணக்கான யவன வீரர்களும் வரிசையாக நின்று கேடையத்தால் தடுப்பு அமைத்துக்கொண்டு பெரும் கவசமாக  மேடைக்கு முன் நின்று சூழ்ந்துகொண்டார்கள்! அவர்களைத் தாக்கி ஊடுருவி எவாராலும் மேடைக்கு வர இயலாது என்பதையும் இருங்கோவேள் ஊகித்துக்கொண்டார்!

பல வருடங்களாக சிறுக சிறுக செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தையும் கண நேரப் பொழுதில் முறியடித்து தன்னைத் தோல்வி அடையச் செய்துவிட்ட செங்குவீரனைக் கண்ட இருங்கோவேள் கடும் கோபத்தோடும், விரக்தியோடும் நின்றுகொண்டிருந்தார்!

இருங்கோவேளிடம் கோபமாக வந்த விறல்வேல், “இருங்கோ, சற்று முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் கூறினாயே, முடிசூடப் போகிறவன் உன் மகன் தான் என்று! அது ஒரு நாளும் நடக்காது! முடி சூடிப் புகாரை ஆளப்போகிறவன் வளவன்!” என்றவன் கோபத்தோடு, “டாள்தொபியாஸ்!” என சத்தத்துடன் அழைக்கலானான்.

செங்குவீரன் அழைத்ததைக் கண்டு துணியால் மூடப்பட்ட ஒரு தாம்பூலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்தான் டாள்தொபியாஸ்.

மூடியிருந்த துணியை இழுத்தான் செங்குவீரன்! டாள்தொபியாசின் கையில் இருந்த புலி வடிவம் பொருந்திய வைர மணி மகுடத்தைத் தூக்கி அருகில் நின்ற கரிகாலனின் தலை மீது சூட்டிப் புகாருக்கு மன்னனாக அறிவித்தான்!

செங்குவீரன் தனக்கு முடிசூட்டுவான் எனக் கரிகாலனும் அத்தருணத்தில் எதிர்பார்த்திருக்காததால் அவர் வியப்படைந்தார். அவரது வியப்பு தோன்றி அடங்குவதற்குள் விறல்வேல், “செருப்பாழி எறிந்த, உருவப்பக்ஃறேர் இளஞ்சேட்சென்னியின் புதல்வன் சோழ மன்னர் கரிகாலன்” எனக் கூற சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தினர் அனைவரும் “வாழ்க” “வாழ்க” என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து மக்கள் “சோழ சக்கரவர்த்தி கரிகால் வளவன் வாழ்க!” “சோழ மன்னர் கரிகாற் பெருவளத்தான் வாழ்க!” என ஒவ்வொருவரும் ஓவ்வொருவிதமாக ஆரவாரமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார்கள்.

தனது மெல்லிய, நீண்டப் போர்வாளை உருவிய விறல்வேல் ஆரவாரமிட்ட மக்கள் கூட்டத்தை நோக்கி உயர்த்தினான். உயர்த்தப்பட்ட வாளைக் கண்டதும் மக்கள் கூட்டத்தினர் அமைதியானார்கள். கடற்கரை மணலில் பஞ்சு விழுந்தாலும் சத்தம் எழும் அளவிற்கு அந்தத் திரளே அமைதியானது! உருவிய போர் வாளினைத் தனது இடையுறைக்குள் போட்டுக்கொண்ட விறல்வேல் இருங்கோவேள் முன் வந்து நின்று, “இருங்கோ! சோழ சிம்மாசனத்திற்கான யுத்தம் இன்றோடு முடிந்துவிட்டது. ஆனால், நமக்கான யுத்தம் இன்றுதான் தொடங்கவிருக்கிறது! எப்போது வளவனார் மகளை சிறைவித்து என்னைக் கட்டுப்படுத்தலாம் என உனது மகன் எண்ணினானோ, அன்றே அவனது முடிவையும் தேடிக்கொண்டான்! இது எனது தன்மானத்திற்கும், சுய கௌவரத்திற்கும் விடப்பட்ட அறைகூவல் என்றே நான் கருதுகிறேன்! உங்கள் இருவரிடமும் எனது திறமையைக் காட்டி வெற்றிபெற நான் விரும்பவில்லை! அன்று உன்னிடம் கூறியதைப் போன்றே இன்றும் கூறுகிறேன். உறைந்தையில் உன் படையைத் திரட்டு! போர்க்களத்தில் யார் பலசாலி என்பதை நாம் முடிவுசெய்துக் கொள்வோம்! உங்களைப் போரில் தோற்கடித்தே தனக்குரிய உறைந்தை அரச உரிமையைக் கரிகாற் வளவன் மீட்பான்! வானவல்லியை சிறை பிடித்த உனது மகனையும், உன்னையும் அதே போர்க்களத்தில் கொன்று எனது பழியைத் தீர்த்துக்கொள்வேன்! அதுவரை என் காதலியின் அழகிய இளம் தோள்களை நான் தழுவப்போவதில்லை! என் சபதத்தை நான் நிறைவேற்றா விட்டால் மனதில் காதலின்றி செல்வத்திற்காகப் பல ஆடவர்களுடன் கூடும் கணிகையரின் மார்புகளைத் தழுவும் பெரும் சாபம் எனது தோள்களுக்குக் கிடைக்கட்டும்!” எனக் கோபம் பொங்க கண்கள் சிவக்க வெஞ்சினம் உரைத்த போது அங்கு நின்ற இருங்கோவேள் மட்டுமல்ல அந்தக் கூட்டமே அதிர்ச்சியில் நடுங்கிப்போனது!

தனது அரசரையும், யுவராஜனையும் போர்க்களத்தில் கொல்வேன் என வெஞ்சினம் உரைத்த விறல்வேலைக் கண்ட மலை நாட்டு வீரர்கள் இருவர் யாருடைய கட்டளையையும் எதிர்பாராமல் ஆவேசத்துடன் கத்திக்கொண்டே வாளினை உருவிக்கொண்டு விறல்வேலை நோக்கி ஓடி வந்தார்கள்! ஓடி வந்தவர்களைக் கண்டு அவர்களின் வாள்களுக்கு அகப்படாமல் குனிந்துகொண்ட விறல்வேல் தனது வாளினை உருவி அவர்கள் இருவரையும் நோக்கி விசிறினான்! அவன் வாளினை உருவியதையும் யாரும் பார்க்கவில்லை. மலை நாட்டு வீரர்களை நோக்கி வாளினை ஓங்கியதையும் யாரும் பார்த்திருக்கவில்லை! ஓடி வந்த உறைந்தை வீரர்கள் இருவரும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள இயலாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்! அவர்கள் இருவரும் விறல்வேலைப் பார்க்க அவனது வாளிலிருந்து குருதி சொட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் மலைநாட்டு வீரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டார்கள். அடுத்த கணம் அவர்களின் தலை உடலிலிருந்து தனியாகக் கீழே விழ அவர்கள் இருவரின் உடலும் மேடையில் சரிந்தன!

தனது கோபமும் ஆவேசமும் அடங்காத செங்குவீரன், “டாள்தொபியாஸ்!” என மீண்டும் அழைக்கலானான்.

அதைக்கேட்ட டாள்தொபியாஸ் அருகில் ஓடிவர, “டாள்தொபியாஸ் இவர்களை நான் போர்க்களத்தில் சந்திக்க விரும்புகிறேன்! இந்தக் கயவர்களைப் புகார் நகர எல்லை வரை எந்தத் தீங்கும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நமது வீரர்களை விட்டுவரச் சொல்! இனியொரு முறை புகாரில் இவர்களை நான் சந்திக்கக் கூடாது!” எனக் கட்டளையிட்டவன் கோபத்தில் மூச்சு வாங்கிக்கொண்டு அருகில் நின்ற வைதீகரைப் பார்த்தவன், “இந்த மலை நாட்டுக் கயவர்களுக்கு துர்போதனை புகட்டும் இந்த வைதீகனை இனியொரு முறைப் புகாரில் பார்த்தால் இவனது தலையைக் கொய்துவிடு!” எனக் கட்டளையிட்டபடியே வழியில் கிடந்த மலை நாட்டு வீரனின் தலையை உதைத்தபடி அங்கிருந்து சென்றான் விறல்வேல்!

அவன் மேடையை விட்டு இறங்கியதைக் கண்ட புகார் வீரர்களும் மக்கள் கூட்டத்தினரும் “விறல்வேல் வாழ்க!” “செங்குவீரன் வாழ்க!” எனப் பலவாறு வெற்றி முழக்கமிட்டனர்! அவர்களின் வெற்றி முழக்கத்தைக் கண்டுகொள்ளாமல் ஆவேசத்துடன் கூட்டத்தைக் கடந்து சென்றபோது வழக்கமாகப் புரவித் தேர் போட்டியில் வெற்றிபெற்றுத் தனக்கு மாலையிடக் காத்திருக்கும் பல நாட்டுப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி நிற்பதைக் கண்டான் விறல்வேல். மேடையில் நடந்தக் களேபரத்தைக் கண்ட பெண்கள் அனைவரும் மலர் மாலையுடன் அச்சத்துடன் நின்றார்கள்! பலநாட்டுப் பெண்களுடன் வானவல்லியும் அங்கு மலர் மாலையோடு நிற்பதைப் போல அவனது கண்களுக்குத் தோன்றியது! அந்நேரம் அவனுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த  விறலி பூங்கோதையின் பெருந்திணைக் காதல் அவனது நினைவிற்கு வர கலங்கிய கண்களுடன் அங்கிருந்துப் புறப்பட்டான்!

செங்குவீரனின் உத்தரவுப்படி இருங்கோவேள், யுவராஜன், வைதீகர் மற்றும் பல உறைந்தைத் தளபதிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தான் டாள்தொபியாஸ்! திடலில் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட உறைந்தை வீரர்களுள் பெரும்பாலோனோர் கரிகாலனைக் கண்டதும் கண்டதும், “வளவன் வாழ்க!” “மன்னர் வாழ்க!” என முழக்கமிட்டபடியே புகார் படைப் பிரிவுடன் இணைந்துகொண்டார்கள். இதர ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த டாள்தொபியாஸ், திருக்கண்ணன், பரதவன் குமரன், செங்கோடன் முதலான உப தளபதிகளை அழைத்த கரிகாலன் அவர்களின் செயல்களைக் கண்டு பாராட்டிப் பரிசளித்து அவர்கள் அனைவருக்கும் படைத் தளபதிகளாகப் பதவி உயர்வையும் வழங்கினார்.

பிறகு டாள்தொபியாசை அழைத்த கரிகாலன் அவனது கையைப் பிடித்து, “யவனத் தளபதியாரே! இந்தத் தழும்பு இன்னும் மறையவில்லையா?” என வினவினார்.

கரிகாலன் வினவியதைக் கண்டு திகைத்த டாள்தொபியாஸ், “அரசே! இங்குத் தழும்பு இருப்பது தங்களுக்கு எப்படித் தெரியும்?” என ஆச்சர்யத்துடன் வினவினான்.

“உங்களை எதிர்த்துச் சண்டையிட்டவன் எனது நண்பன் தான்! உங்களிடமிருந்து வாளைப் பறித்தக் கதையைத் தினமும் என்னிடம் கூறி பெருமையுடன்  தம்பட்டமடித்துக் கொள்வான்!”

“ஓ! மாடு மேய்க்கும் இளைஞன் தங்களது நண்பனா?”

“ஆம் தளபதியாரே!”

“அவனை மட்டும் நான் இனியொரு முறை காண நேரிட்டால்…!” என்றபடியே வாக்கியத்தைப் பாதியில் முடித்தான் டாள்தொபியாஸ்.

“படைத் தளபதியாரே! அவன் மீண்டும் உங்களை வம்புக்கு இழுத்தால் என்ன செய்வதாய் உத்தேசம்?”

“அவனது உருவத்தைக் கண்டு அவனைச் சாதாரணமாக நினைத்த எனது கவனமின்மையால் நான் தோற்றுவிட்டேன்! இனியொருமுறை அவனைக் கண்டு நிச்சயம் அவனை நான் வாட்போரில் வீழ்த்துவேன்!”

“அப்படியா! சிறிது நேரம் இங்கேயே காத்திருங்கள்! நான் அவனை அனுப்பி வைக்கிறேன்!” எனக் கூறிவிட்டு அங்கிருந்துத் தனது புரவித் தேரில் கிளம்பிய கரிகாலன் ஒரு நாழிகை நேரம் கழித்து யாராலும் கண்டறிய இயலாதபடி மாறுவேடமிட்டு மாடு மேய்க்கும் இளைஞனைப் போலவே சாட்டையுடன் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார்.

டாள்தொபியாஸ் கரிகாலனுடன் பேசியதை மற்ற தளபதிகளால் என்னவென்று புரிந்துகொள்ள இயலாமல் கரிகாலன் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றபிறகு டாள்தொபியாசிடம் வினவினார்கள்! டாள்தொபியாசும் மாடு மேய்த்த சிறுவன் செய்த வம்பினை விரிவாகக் கூறி அவனது திறமையைப் பற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தான். அந்நேரத்தில் தனக்குப் பின்னால் யாரோ வெகு அருகில் கடந்து செல்வதை உணர்ந்த டாள்தொபியாஸ் திரும்பினான். இரு வருடங்களுக்கு முன் வம்பிழுத்த அதே இளைஞன் சென்றுகொண்டிருந்தான். அவனது தோள்களைப் பற்றிய டாள்தொபியாஸ் அவன் முன் சென்று அவனது முகத்தைப் பார்த்தான்!

டாள்தொபியாசின் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தது! திகைத்தான். திகைப்பிலிருந்து அவன் மீளாதவனாய், “அரசே! மன்…” என ஏதோக் கூற வாயெடுத்தான். அதற்குள் முந்தியவன், “தளபதியாரே! தாங்கள் மீண்டும் என்னுடன் போர் புரிய வேண்டும் என ஆசைப்பட்டீர்கள் அல்லவா? வாளினை உருவுங்கள்!” எனக் கட்டளையிட்டான்.

டாள்தொபியாசிற்கும், மாடு மேய்க்கும் இளைஞனுக்கும் இடையில் துவந்த யுத்தம் கடற்கரையில் தளபதிகளின் முன்னிலையில் தொடங்கியது!

திடீரென யவனத் தளபதிக்கும் சாதாரண இளைஞனுக்கும் இடையில் தொடங்கிவிட்ட வாற்சமரைக் காண மக்கள் கூட்டத்தினர் ஓடி வந்து அவர்களை சூழத் தொடங்கி ஆரவாரமிடத் தொடங்கினார்கள்!