வானவல்லி முதல் பாகம் : 35 – ஆசிவகர் வாக்கு

பௌத்த விகாருக்கு முன் விறலியுடன் விறல்வேலைக் கண்ட வானவல்லி ஆத்திரத்தில் உண்மை நிலையை அறிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுப் புகாரிலிருந்து உறைந்தைக்கு வந்துவிட்டாள். அன்றே விறல்வேலும் உறைந்தைக்கு வந்துவிட்டான். ஆனால் இருவருக்கும் மற்றவரைப் பற்றித் தெரியாது. ஆனால் இருவரும் எப்போதும் தத்தம் மற்றவரைப் பற்றியே எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

ஆசிவகர்

 

உறைந்தை வந்து தனது தோழி மரகதவல்லியைச் சந்தித்து அவளுடனே அவளது வீட்டில் தங்கிவிட்டாள் வானவல்லி. எங்கும் வெளியே செல்வது கிடையாது. சோகத்தில் எதையோ பறிகொடுத்ததைப் போலவே விறல்வேலை எண்ணியே கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். ஆண் சமூகத்தையே வெறுக்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிக்கொண்டாள். காரணமின்றித் திடீர், திடீரென விம்முவாள். மரகதவல்லியின் மடியில் படுத்து அழுவாள். மரகதவல்லியும் “ஏனக்கா இப்படி வந்ததிலிருந்து துயரத்துடன் இருக்கிறீர்கள்? உங்கள் துயர் என்னையும் வாட்டுகிறது! காரணம் கூறுங்கள் அக்கா!” எனக் கேட்பாள். வானவல்லி ஏதும் கூறாமல் மௌனத்துடன் இருந்துவிடுவாள். இரண்டு நாளும் அப்படித்தான் இருந்தாள். அதன் பிறகு தான் அவளது போக்கில் சிறு சிறு மாற்றங்களை மரகதவல்லி கண்டாள்.

வானவல்லியின் மனமாற்றத்தைக் கண்டு உற்சாகமடைந்த மரகதவல்லி, “அக்கா! வந்ததிலிருந்து தாங்கள் இப்படித்தான் வருத்தத்துடன் இருக்கிறீர்கள். வாருங்கள் காவிரிக் கரையோரம் நடந்து பேசிக் களிப்போம். நாம் இருவரும் சேர்ந்து கதை பேசி எத்தனை நாள் ஆகிறது!” என அழைக்கலானாள்.

இக்காலத்தில் உறைந்தைக்கு அருகில் காவிரியானது காவிரி கொள்ளிடம் எனப் பிரிந்து நாட்டினை வளப்படுத்துகிறது. ஆனால், அக்காலத்தில் காவிரியானது கொள்ளிடமாகப் பிரியாமல் ஒரே நதியாகவே புகாரில் சென்று குணக்கடலில் கலந்தது. மாதம் மும்மாரிப் பெய்த காலமாதலால் காவிரியில் எப்போதும் புனல் இரு கரையைத் தொட்டுக்கொண்டே ஓடிக்கொண்டு இருக்கும். காவிரியை எல்லா இடங்களிலும் புரவியால் கடக்க இயலாது. காவிரி அகல விரிந்து புனல் சமதளமாக அமைதியுடன் பாயும் சில இடங்களில் மட்டுமே புரவியினால் கடக்க இயலும்! மற்ற இடங்களில் எல்லாம் தோணி மற்றும் சிறு படகைத் தான் கரையைக் கடக்கப் பயன்படுத்துவர். உறைந்தையிலிருந்து புகாருக்கு காவிரி நதியின் வழியாகப் படகுப் போக்குவரத்து நடைபெற்றது. சோழ நாட்டில் விளைந்த நெல், இஞ்சி போன்ற விளைப் பொருள்கள் மரக்கலங்கள் மூலமே புகாருக்குக் கொண்டு செல்லப்பட்டு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். படகினால் பயணம் செய்யும் அளவிற்குக் காவிரி ஆழமாகவும், புனல் செறிந்ததாகவும் காணப்பட்ட காலம் அது.

காவிரியின் கரைகளில் வளர்ந்திருந்த பல விதமான மரங்களான புங்கை, கடம்பம், வேம்பு, இலுப்பை போன்ற மரங்களும் மேலும் பலவித செடிகளும், கொடிகளும் பூத்துக் குலுங்கி கரையையும் கரைக்கு அப்பால் சோழ வள நாட்டையும் சொர்க்க புரியாகச் செழிக்க வைத்துக் கொண்டிருந்தது நதி. காவிரியானது சோழ வள நாட்டில் நெல்லினை விளைவித்துச் சோறுடைய நாடாக்கி பொன்னி நதி எனவும் பெயர் பெற்றது. பொன்னி நதியினால் பூத்துக் குலுங்கும் சோழ நாட்டின் கரையைக் கண்டு மகிழ்ந்து பெரும் உற்சாகத்துடன் வானவல்லியும் மரகதவல்லியும் பேசிக்கொண்டே நடக்கலானார்கள்.

அந்நேரத்தில் இருவரும் எதிர்பாராதபடி காவிரிக் கரையினில் சற்றுத் தொலைவிலிருந்து பலத்துறவிகள் எதிர்புறத்திலிருந்து இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்ட இருவரும் அவர்களுக்குப் பாதையை விட்டு ஒதுங்கி நின்றனர்.

உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

திரையா னரையான் ரெரிவில் லுருவம்

வரையா வகையா னிடுவில் லனையன்

புரையா வரிகிற் புகழ்பூ ரணனே.

எனும் பாடலை அவர்கள் பாடிக்கொண்டு வந்ததிலிருந்து அவர்கள் ஆசிவகத் துறவிகள் என்பதை வானவல்லி அறிந்துகொண்டாள். ஆசிவகத் துறவிகள் எனப்படுபவர்கள் பெரும் ஞானிகள், அறிவு மேதைகள், அவர்கள் வாதம் செய்ய ஆரம்பித்தால் ஒரு கிழமை கூட முடிவடையாமல் தொடர்ந்து நீளும்! எதையும் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அடுத்தக் கிழமை புகாரில் இந்திரத் திருவிழா தொடங்குவதால் அங்குப் பலவித அறிஞர்களும் குழுமி வாதம் செய்வர். அதற்குத்தான் அவர்கள் புகார் செல்ல உறைந்தைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் ஊகித்துக்கொண்டாள்.

பாதையை விட்டு விலகி நின்ற இருவரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் துறவிகள் அனைவரும் பூரணனின் புகழ் பாடிய படியே சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு ஆசிவகத் துறவி மட்டும் அவர்களைப் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டார். அவர்தான் அங்கு இருந்த துறவிகளுக்கெல்லாம் தலைவர். ‘வழியில் பெண்களைக் கண்டாலே ஒதுங்கிச் செல்லும் நம் தலைவர் இன்று ஒதுங்கி நிற்கும் இரு பெண்களைக் கண்டு சிலையாக நிற்கிறாரே! காரணம் யாதோ!’ என மற்ற அனைத்து துறவிகளும் அங்கேயே நின்றுவிட்டனர்.

மரகதவல்லி மற்றும் வானவல்லியைக் கண்ட ஆசிவகத் தலைவரின் கண்களில் பிரமிப்பு தழும்பிற்று. ஆச்சர்யத்தோடு பார்த்தபடியே இருவரையும் அருகில் அழைத்தார். இரு பெண்களும் அவரைக் கண்டு தயங்கினாலும் அவர் முன் சென்று இருவரும் பணிந்து வணங்கினார்கள். “பூரணன் அருளுடன் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வீர்களாக!” என இருவரையும் வாழ்த்தியபடி மரகதவல்லியை நோக்கினார்.

“தாயே! உனது பெயர் என்ன?” என மரகதவல்லியிடம் வினவினார்.

தயக்கத்துடன் அவள், “மரகதவல்லி” என்றாள்.

“பொருத்தமான பெயர்” எனக் கூறிவிட்டு அவளது முகத்தையே பரிவுடன் பார்த்தார்.

மரகதவல்லி ஏதும் கூறாமல் பணிவுடன் நின்றுகொண்டிருந்தாள்.

“குழந்தாய்! உன்னைப் பார்ப்பதற்கு நான் எப்பிறப்பில் எந்தப் புண்ணியம் செய்தேனோ! உன்னிடம் பூரணனின் அருளும், ஆசியும் நிரம்பியிருப்பதை என் கண்களால் காண இயலுகிறது. பிறப்பிலே மிகவும் உயர்ந்ததான தூய வெண்மைப் பிறப்பைச் சேர்ந்தவள் நீ. உன்னை மணப்பவன் இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான்” என மரகதவல்லியிடம் கூறியபடியே அங்கிருந்து கிளம்பத் தயாரானார். ஆனால் ஏதோ நினைத்தவர் மீண்டும் வானவல்லியை நோக்கி “தாயே! உனது முகத்தைப் பார்க்கையில் அடுத்து வரும் காலங்கள் உனக்கு மிகவும் கடினமானது எனத் தோன்றுகிறது. எச்சரிக்கையுடன் இரு! ஆனால் உனது நம்பிக்கையையும் பிரார்த்தனையையும் கைவிட்டு விடாதே! நீ வணங்கும் கடவுள் தான் உன்னைச் சேர்ந்தவனைக் காக்க வேண்டும்” எனக் கூறியபடியே இருவரது மறுமொழியைக் கூட எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!

ஆசிவகர் கூறிச் சென்றபின் சிறிது நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் இருவரும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். வானவல்லிக்கு பெரும் அதிர்ச்சியும் மரகதவல்லிக்கு திகைப்பும் ஏற்பட்டிருந்தது. ‘அவர் உன்னைச் சேர்ந்தவர் என யாரைக் குறிப்பிட்டார்? ஏற்கெனவே தமையனை இழந்தவள் நான். இன்னும் யாரை இழக்கப் போகிறேனோ?’ என எண்ணும்போதே அவளது மனதில் திகில் குடிகொண்டது. ‘உபதலைவனைத் தான் அப்படிக் குறிப்பிட்டிருப்பாரோ?’ என அவள் எண்ணியபோதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுப்பது போல இருக்க மரகதவல்லி முன் தான் எந்தக் கவலையையும் வெளிப்படுத்த கூடாதென எண்ணியவள் மனக்குமுறல்களை அடக்கிக்கொண்டு அமைதியுடன் நடந்தாள்.

ஆனால், மரகதவல்லியின் நினைப்பு வேறு மாதிரியாக இருந்தது. இவள் திகைத்துப் போயிருந்தாள். அவரது கூற்றையும் இவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான் என்பதை எந்த அர்த்தத்தில் அவர் தெரிவித்திருப்பார்?’ என அறிந்துகொள்ள இயலாமல் முதலில் திகைத்தாள். ஆனால் பிறகு அவர் வானவல்லியைப் பற்றிக் குறிப்பிட்டவை நினைவிற்கு வந்ததும் இவளும் கலங்கவே செய்தாள்.

மரகதவல்லி வானவல்லியைப் பார்த்தாள். அவள் அமைதியாக நடந்துகொண்டிருந்தாள்.

“அக்கா!” என அழைத்தாள் மரகதவல்லி.

“சொல் மரகதவல்லி!”

“அவர் கூறுவதைத் தாங்கள் நம்புகிறீர்களா?”

“அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“எனக்குத் துளியளவும் அதில் நம்பிக்கை எழவில்லை அக்கா!”

“ஏன் மரகதவல்லி? அவர் என்னைப் பற்றிக் கூறியதை எண்ணி நீ கவலை கொள்கிறாயா?”

மரகதவல்லி பதில் கூறாமல் அமைதியுடன் நடந்தாள்!

“அவர் பெரும் மகான். பல நூல்களைக் கற்றவர். கடுமையாகத் தவம் இருப்பவர். அவர் கூறுவதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நான் துயரப்பட வேண்டும் என்பது என் தலை விதியானால் அதை யாரால்தான் மாற்ற இயலும்!” என்றாள் வானவல்லி.

“அந்த ஆருகதத் (சமண) துறவி ஏனக்கா அப்படிக் கூறிச் சென்றார். தாங்கள் சில தினங்களாகவே என்னிடம் கூடத் தெரிவிக்காமல் துயரில் வாடுகிறீர்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் தங்களைப் பற்றிக் கூறிச்சென்றது எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது அக்கா” என வருந்தினாள் மரகதவல்லி.

அவள் கூறியதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த வானவல்லி, “ஆருகதத் துறவியா? யாரை ஆருகதத் துறவி என்கிறாய்!” எனச் சிரித்தபடியே வினவினாள்.

“ஆம் அக்கா. அத்துறவிகள் பார்ப்பதற்குச் சமணர்கள் போலத் தானே காட்சியளித்தார்கள்!”

“அவர்கள் சமணர்கள் போலத் தான் தோற்றத்தில் ஒத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் சமணர் அதாவது ஆருகதர் அல்ல.”

“அப்படியானால் அவர்கள் யார் அக்கா?”

“அவர்கள் ஆசிவகத் துறவிகள். ஆருகதம், பௌத்தம் போன்றே வட நாட்டிலிருந்து தமிழகம் வந்த மதம். அவர்களின் கடவுள் மற்கலி. அவரை நம்மவர்கள் பூரணர் எனவும் அழைப்பர்” என்றாள் வானவல்லி.

ஆசிவகம் பற்றி மரகதவல்லி ஏற்கெனவே ஓரளவு அறிந்திருந்தாலும் வானவல்லியின் மனதைத் திசைமாற்றும் பொருட்டு, “அக்கா! ஆருகதம் தானே கேள்விப்பட்டுள்ளேன். அது என்ன அக்கா ஆசிவகம்?” என ஆச்சாரத்தோடு கேட்கலானாள்.

வானவல்லி எப்போதும் கதை கேட்பதிலும், கதை கூறுவதிலும் பெரும் ஆர்வமுடையவள். ஆதலால் மரகதவல்லி ஆசிவகம் பற்றிக் கேட்கத் தொடங்கியதும் அவளும் ஆர்வமுடன் கூறத் தொடங்கினாள்.

“மரகதவல்லி ஆசிவகம் என்பது வடநாட்டில் மஸ்கரி புத்திரர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம். அவரைப் பாலியில் மக்கலி புத்த எனவும், நம் மொழியில் மற்கலி, பூரணர் எனவும் அழைப்பர். மேலும் இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் என நம்புவதால் அவரை ‘கோசல மக்கலி புத்த’ எனவும் அழைப்பார்கள்”

“மற்கலி’ பெயரே வித்தியாசமாக இருக்கிறதே! மற்கலி என்றால் என்ன அர்த்தம் அக்கா?”

“வட நாட்டில் இரந்துண்டு வாழும் மக்கள் கூட்டத்திற்கு மக்கலி எனப் பெயர். அக்கூட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கருதுவதால் இவரை மக்கலி புத்த என அழைப்பர். சிலர் மக்கலி என்பது அவரது தந்தையின் பெயர் எனவும் கருதுவர்”

“பெயர் இருக்கட்டும் அக்கா. இவர்கள் பார்ப்பதற்கு ஆருகத மதத்தாரின் திகம்பரர்கள் போன்று காணப்படுகிறார்களே! ஏன் அக்கா?”

“இந்த மற்கலியும் ஆருகத மதத்தை உண்டாக்கிய மகாவீரரும் ஒரே காலத்தவர். மகாவீரர் சமண அதாவது ஆருகதக் கொள்கையை உலகத்தார்க்குப் போதித்த காலத்தில் மற்கலியும் சில காலம் அவரது சீடராக இருந்தார். பிறகு மற்கலி மகாவீரரின் கருத்துகளிலிருந்து மாறுபட்டுத் தாம் உணர்ந்தவற்றிலிருந்து புது மதத்தை உருவாக்கிப் போதித்தார். அது ஆசிவகம் எனப்பட்டது. வடக்கில் அதன் செல்வாக்கு அதிகம். ஆனால் இங்கு அதன் செல்வாக்கு குறிப்பிடும்படி இல்லை” என்றாள் வானவல்லி.

“மகாவீரரின் சீடராகச் சில காலம் மற்கலி தங்கியிருந்ததால் சில கொள்கைகளில் ஒற்றுமை கொண்டு இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிக்கின்றனர். அப்படித்தானே?”

“அப்படித்தான் மரகதவல்லி.”

“அவர் என்னைப் பார்த்து தூய வெண்மைப் பிறப்பு என்றாரே அது ஏன் அக்கா?”

“அதுவா! அவர்களின் கருத்துப்படி எண்பத்து நான்கு மகா இலட்ச கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலும். அந்தக் காலம் முடிந்த பிறகுதான் அவர்களால் வீடுபேறடைய முடியும் என நம்புவர். அக்கொள்கையின்படி உயிர்கள் கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் அதில் தூய வெண்மைப் பிறப்புதான் மிக மிக உயர்ந்த பிறப்பு என்பர். இந்தத் தூய வெண்மைப் பிறப்பினை அடைந்தவர் தான் வீடுபேறடைய இயலும். நீ தூய வெண்மைப் பிறப்பு என அவர் நம்புவதனால் தான் உன்னை மணப்பவன் இமயம் வரை வெற்றிக் கொடியை நாட்டுவான் எனவும் கூறினார். அவர் பெரும் மகான். அவர் எப்படியோ உன்னை அடையாளம் கண்டுவிட்டார்” என மகிழ்ச்சியுடன் கூறி மௌனமானாள் வானவல்லி.

“அக்கா! இதில் எனக்கு நம்பிக்கையில்லை.”

“எதில்?”

“ஆசிவக மதக் கொள்கையில் தான்!”

“ஏன்?”

“எண்பத்து நான்கு இலட்ச மகா கல்ப ஆண்டுகள் வரை உயிர்கள் மோட்சமடையாமல் பிறந்து இறந்து உழன்றே ஆக வேண்டும் என்பதில் தான்! நாம் செய்யும் நன்மை, தீமை, பாவம், புண்ணியம் இவைகளைக் கொண்டுதானே நாம் வீடுபேறடைய இயலும்?”

“ஆதலால் தான் அவர்களின் மதம் செல்வாக்குப் பெறாமல் தாழ்ந்து இருக்கிறது. இருந்தாலும், நீ கூறும் மறுப்பிற்கு அவர்கள் தகுந்த விளக்கம் வைத்துள்ளனர் மரகதவல்லி. அதாவது ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் அது நீளும். அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ நீளாது! அதைப்போலவே உயிர்களும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நற்செயல்களைச் செய்பவன் விரைவில் வீடு பெறான். அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரை அவன் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்றே ஆக வேண்டும். இது அவர்களின் கொள்கை. நம்பிக்கை”

“இதைத் தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“நான் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்காவிட்டால் என்ன! அனைத்து மதக் கொள்கைகளையும் நான் மதிப்பவள். அதைப்போலவே இந்த மதத்தையும் மதித்து அறிந்துகொண்டேன்.”

“அக்கா, இதனை எங்குக் கற்றீர்கள்!”

“அவர்களின் மதக் கொள்கைகளை விளக்கும் நூலிற்கு ‘நவகதிர்’4 எனப்பெயர். அதைப்படித்துத் தான் தெரிந்துகொண்டேன்.”

“அக்கா! இன்னொரு கேள்வி?”

“உன்னைக் கதையும் கேள்வியையும் கேட்க விட்டால் பொழுது போவது கூடத் தெரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பாய்! பேசியபடியே நீண்ட தூரம் வந்துவிட்டோம். வா, திரும்பிச் செல்வோம்” எனக் கூறி வானவல்லி மரகதவல்லியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.

வீடு வந்ததும் இருவரும் காவிரிப் புனலில் நீராடிவிட்டு, பட்டினத்தின் மையத்தில் இருந்த முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டனர். இரவில் அங்குக் கூத்துக் கட்டவும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட வானவல்லிக்குக் கூத்தினைக் காண ஆர்வம் தலைதூக்கியது. தன் விருப்பத்தை மரகதவல்லியிடம் கூற அதற்கு அவள், “அக்கா! ஆசிவகத் துறவியைச் சந்தித்ததிலிருந்து மனம் சங்கடத்தில் தவிக்கிறது. தாங்கள் வேண்டுமானால் பார்த்துவிட்டு வாருங்கள். நான் வீட்டில் தங்களுக்குக் காத்திருக்கிறேன்” என்றாள். வானவல்லியின் மனமும் சங்கடத்தில் இருந்ததால் அவளுக்குத் தனிமை தேவையாகயிருந்தது. ஆதலால் மரகதவல்லியை மட்டும் அனுப்பிவைத்துவிட்டு அவள் கோயிலிலேயே தங்கிவிட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் பொழுது சாய்ந்தது. கூத்தும் ஆரம்பமானது. வானவல்லி தன் மனத் துயரை மறந்துவிட்டு கூத்தினைக்கண்டு களிக்கத் தொடங்கினாள்.

வீடு வந்து சேர்ந்த பிறகு தனிமையில் இருந்த மரகதவல்லியின் மனதில் இருந்த மனக் குழப்பங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கின. அவளுக்குப் பொழுதே நகரவில்லை. அக்காவோடு அங்கேயே இருந்திருக்கலாமோ? எனக் கூட எண்ணினாள். வானவல்லியும் மரகதவல்லியும் இணை பிரியா தோழிகள். மரகதவல்லி இளையவள். இருந்தும் தனது மனதில் உள்ள அனைத்து அந்தரங்க செய்திகளையும் முதலில் அவள் பகிர்ந்துகொள்வது இவளிடமாகத்தான் இருக்கும். அப்படியிருக்கக் கடந்த சில தினங்களாகத் தனது தோழி வானவல்லி தன்னிடம் எதையும் வெளிப்படுத்தாமல் மனவருத்தத்தில் தவித்துக்கொண்டிருந்தது இவளுக்கும் கவலையை அளித்தது. ஆனால், அவளது மனக் கவலை இன்னதாகத்தான் இருக்கும் என ஊகித்திருந்தாள்.

அக்கால மக்களின் வாழ்வியல் ஒழுக்கம் ஒருவிதமாகவும் அரசர்களின் ஒழுக்கம் மற்றொருவிதமாகவும் இருந்தது. மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வார்கள். ஆனால் அரசர்கள் மட்டும் அரசினை பலப்படுத்திக்கொள்ளப் பல சிற்றரசர்களின் மகள்களை மணந்து கொள்வார்கள். இவளால் தனது ஆடவனை அப்படி நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை. தனது கணவன் தனக்கு மட்டுமே உடையவன் என எண்ணுபவள். ஆதலால் ஆசிவகத் துறவி கூறியதைக் கேட்டு மனங்கலங்கியிருந்தாள்.

அவர், ‘இமயம் வரை வெற்றிக்கொடி நாட்டுவான்’ என ஏன் கூறியிருப்பார். மறைமுகமாக வேறு பொருள் ஏதேனும் இருக்குமா? எனவும் ஆராயத்தொடங்கினாள். எதுவுமே அவளுக்குத் தோன்றவில்லை. ஆசிவகர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றாக மறைந்து அவள் தனது எதிர்காலக் கணவனை எண்ணி விழித்துக்கொண்டே கனவு காணத் தொடங்கினாள்.

கண்ணில் காட்சிகள் படர்ந்தன. மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் மறைந்து இனம்புரியாத மகிழ்ச்சி கரைபுரளத் தொடங்கியது. உடலில் ஆங்காங்கே பரவசம் கிளர்ந்தெழத் தொடங்கியது. அவளது மனதில் தோன்றிய மகிழ்ச்சியும், உடலில் தோன்றிய பரவசமும் இணைந்து அவளது முகத்தில் பலவித பாவனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. அவளது இல்லத்தில் அவள் மட்டும் தனிமையில் இருந்ததனால் விலகியிருந்த அவளது ஆடையைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் மெத்தையில் தலையணையில் படுத்துக்கொண்டு ஒரு கால் மேல் மற்றொரு காலினைப் போட்டுப் பிண்ணியபடி படுத்திருந்தாள். அவள் படுத்திருந்த விதமானது வளைந்த, நெளிந்த அவளது உடற்பரிமாணத்தைச் சிறப்பாக எடுத்துக்காட்டியது. பேரழகியாகக் காட்சியளித்தாள். அந்த அறையில் ஒரு சிறு விளக்கு மட்டுமே எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது. அந்தச் சிறு வெளிச்சம் அவளது அழகினைத் தீண்ட முயற்சித்துக்கொண்டிருந்த இருளை விரட்ட கடும் சிரமப்பட்டது.

அல்லி மலரின் மையத் தண்டானது வெண்மையும், மஞ்சளும் கலந்த தனியொரு நிறத்தில் இருக்கும். அந்த நிறத்தினைக் கொண்டவள் தான் மரகதவல்லி. அங்கங்கள் எப்படியெப்படி இருக்க வேண்டுமோ அப்படியே அதன் இலக்கணம் சிறிதும் நழுவாமல் பெற்றிருப்பவள். சில இடங்களில் அந்த இலக்கண வரைமுறையைக் கடந்தும் அதிகமாகப் பெற்றிருப்பவள். அழகு என்றால் பலவிதமுண்டு. பார்த்தவுடனே அழகில் மயங்கச்செய்து அடிமைப் படுத்துவது ஒரு விதம். உடல் கிளர்ச்சிகளைக் கிளரச் செய்து அத்துமீற நினைக்க வைப்பது இன்னொரு விதம். கண்டவுடன் பெரும் மரியாதையையும், மதிப்பையும் தோற்றுவிக்கச் செய்வது மூன்றாவது விதம். மேற்கூறியவற்றில் மரகதவல்லி மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவள்.

நீள்வட்ட அவளது முகம், குங்குமம் சூடிய அழகான பிறை வடிவ நுதல், அதன் கீழ் வில்லின் நுனியைப் போன்று நீண்டு, வளைந்திருந்த அவளது கருத்த அடர்ந்த புருவங்கள், அதன் கீழே இருக்கும் நீல நிற விழிகளில் வெளிப்படும் பார்வை அம்புகளில் அகப்பட்டவர்களால் எளிதில் அதிலிருந்து விடுவித்துக்கொள்ள இயலாது. இவளைக் காண்பவர்களை அடிமைப்படுத்தும் வித்தையை அவளது நீல நிற விழிகள் இயற்கையிலேயே பெற்றிருந்தது. பட்டு போன்ற மிருதுவான கன்னம், அதற்கிடையில் இருந்த அவளது சிவந்த இதழ்களைக் கொண்ட அதரம், அதன் மேலே அளவுடனும், சற்றே கூர்மையாகயும் வளைந்து வளர்ந்திருந்த நாசி, புகார் துறைமுகத்தில் காணப்படும் கடற் சங்கினைப் போன்ற வடிவமும், மலர்களை விட மிருதுவான அவளது காதுகள் என அனைத்தும் அழகுடன் காணப்பட்டன. அவளது காதணியில் பதிக்கப்பட்ட மரகதக் கல், நாசியில் இருந்த ஒற்றைக் கல் மூக்குத்தி அவ்விளக்கொளியில் பசுமை நிறத்தில் பிரகாசித்து அவளது அழகுக்கு அழகு சேர்த்தன. அவளது கன்னத்திற்கும், காது மடலிற்கும் இடையில் செவியில் நீண்டிருந்த சிறு குழல்கற்றை அவளது முக அழகைப் பேரழகாக்கிக் கொண்டிருந்தது.

அவளது தலையிலிருந்து நீண்டு வளர்ந்திருந்த கருங்குழல்கள் அவளது உடலின் மீது படர்ந்து போர்த்தி இருந்தது. அதனை அவள் வருடிக்கொண்டே படுத்திருந்ததனால் அவளது உடலில் பரவியிருந்த கருங்குழல்களுக்கு உள்ளே மறைந்திருந்த செழித்து வளர்ந்திருந்த அவளது நகிலின் பரிமாணம் அவ்வபோது வெளிப்பட்டு மறைந்தன. வேலியே பயிரை மேய்வதைப் போல இருளை விரட்டிக் கொண்டிருந்த விளக்கு வெளிச்சமும் அவளது அழகினைக் கண்டு திகைக்கவே செய்தது. வாயிருந்தால் அவ்விளக்குக் கூறியிருக்கும். ‘நாட்டை ஆளும் இளவரசிகளுக்கு இவள் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல. அழகினில் இளவரசி இவள் தான்’ என்று! இருளை அண்டவிடாமல் தூர விரட்டிவிட்டு விளக்கு மட்டும் அவளைத் ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட காற்று அந்த அறைக்குள் வேகமாக வீசியது. உடனே விளக்கு அணைவது போல ஆடி அதன் வெளிச்சம் சற்றுக் குன்றியது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட இருளும் அவளைத் தீண்டவே செய்தது. ஆனால் மீண்டும் வெளிச்சம் தோன்ற இருள் அச்சத்தில் மறைந்து ஓடிவிட்டது.

வானவல்லி, மரகதவல்லி இருவருள் யார் அழகு என ஒப்பிட்டுப் பார்க்க முயன்றால் அது இயலாத காரியம். வானவல்லியைக் கண்டால் மனதில் அச்சம் கலந்த மரியாதை தோன்றிவிடும். ஆனால் மரகதவல்லியைக் கண்டாலோ மதிப்பு கலந்த மரியாதை தோன்றிவிடும். ஒருத்தி பொழுது சாயும் பரிதியைப் போன்று எழிலுள்ளவள். இன்னொருத்தி பரிதியைக் கண்டு அடிவானில் சிவந்து ஒளிரும் நிலவைப் போன்று நகையுடையவள். முன்னவள் செந்தாமரை மலரைப் போன்று அழகானவள், பின்னவள் அல்லியைப் போன்ற அழகுடையவள். முன்னவள் அழகினில் ராட்சசி, பின்னவள் மோகினி. இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் அவ்வளவுதான்!

இப்பேற்பட்ட பேரழகியான மரகதவல்லி அக்கா விரைவினில் வந்துவிடுவாள் என எண்ணி கதவினைக் கூடத் தாழிடாமல் உறங்காமல் படுத்துக்கிடந்தாள். இரவு சாமம் இரண்டினைக் கடந்துகொண்டிருந்தாலும் அவளுக்கு உறக்கம் இன்னும் வந்தபாடில்லை. ‘தன்னை மணந்து ஆளப்போகிறவனை என்றுதான் நான் சந்திக்கப் போகிறேனோ?’ என எண்ணி அந்த இரவினில் தவித்துக்கொண்டிருந்தாள். என்னை இங்குத் தனிமையில் தவிக்கவைத்துவிட்டு அவன் மட்டும் அங்கு மகிழ்ச்சியாக எப்படித்தான் இருக்கிறானோ? என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு அவளது கனவிலிருந்து விடுபட்டாள்.. பஞ்சு மெத்தையிலிருந்து எழுந்தவள் விலகியிருந்த தனது துணியைச் சரிசெய்து கொண்டு அக்காதான் வந்துவிட்டார் என எண்ணிக்கொண்டு முன் கதவை நோக்கிச் சென்றாள்.

முன் கதவு தாழிடாமலே இருக்கச் சத்தம் தாழிட்ட பின் கதவிலிருந்து வந்தது. ‘அக்கா வந்திருந்தால் முன் கதவு வழியாகத்தானே வருவார். இந்த நள்ளிரவில் கதவைத் தட்டுவது யாராக இருப்பார்கள்?’ என எண்ணிக்கொண்டு கதவைத் திறக்கச் சென்றாள். மீண்டும் கதவு படபடவென தட்டப்பட்டது! அச்சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டவள் ஒரு கணம் அச்சத்துடனே சிந்திக்கலானாள்.

கலையில் தான் உறைந்தை வீரர்கள் மரகதவல்லியின் தந்தையைத் தேடிவிட்டுச் சென்றிருந்தனர். அவர்கள் தான் ஒருவேளை மீண்டும் வந்திருக்கிறார்களா? இந்த நேரத்தில் அவர்கள் ஏன் வரப்போகிறார்கள்? என எண்ணியவள் சுவற்றில் வைத்திருந்த குறுவாளை எடுத்து மடியில் மறைத்துக்கொண்டு பதற்றத்துடனே தாழினை நீக்கிக் கதவினைத் திறந்தவள் அக்கணம் அதிர்ச்சியடைந்து சிலையானாள்.

அடிக்குறிப்பு

நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி. பட்டினப்பாலை வரி : 30. (பஃறி -படகு)

புரையா வரிகிற் புகழ்பூ ரணனே. நீலகேசி: ஆசிவக வாத சுருக்கம். செய்யுள் 15. வரி: 4.

நவகதிர் என்பது ஆசிவக மதத்தாரின் கொள்கையை விளக்கிக் கூறும் மறை நூல். ஆதித்தியம் என்ற நூலும் இவர்களின் மத நூலே! ஆசிவகம் என்ற மதத்தின் சுவடே இப்போது தமிழகத்தில் கிடையாது. பௌத்தம் போன்றே தமிழகத்தில் ஆசிவகமும் இறந்துவிட்ட மதம். ஆருகதராவது (சமணர்) தமிழகத்தில் எஞ்சி வாழ்கின்றனர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் புகழ் பெற்ற பாடலும் ஆசிவகக் கொள்கைப் பாடல் தான். இப்பாடலிலிருந்து நாம் ஆசிவகத்தின் மதக் கொள்கையை அறியலாம்!

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….