வானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு

0

கற்பொழுதில் புகார் பட்டினத்தின் அரசியல் நிலை பரபரப்பாக இருந்தாலும் இரவு பொழுது நெருங்க நெருங்க மக்களின் நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருந்தது. பகற்பொழுதில் கேட்ட வாட்கள் உராயும் சத்தங்களும், அலறல்களும் கடந்து பட்டினத்தில் நிலவின் குளிர்ந்த ஒளி பெருக பெருக மக்களின் மனதிலும் காதல் பெருகி காதலர்களின் முத்தச்சத்தங்களும், தமிழ் மொழியில் பொருள் விளங்க இயலாதபடி அதே சமயம் தலைவன் மட்டுமே அர்த்தம் புரியும்படியான முனகல் சத்தமும் குணக்கடலின் புகார்க் கடற்கரையை நிரப்பிக்கொண்டிருந்தது. தலைவனும் தலைவியும் கூடும் நேரத்தில் கெண்டை மீன்கள் பயந்து தோற்று ஓடுவதைப் போலத் தலைவியின் கடைக்கண்கள் ஒன்றோடொன்று பிறழ்ந்து போரிட்டு வெல்ல முயலும். யார் வெல்வோம் என நடந்த இன்பச் சமரில் இருவருமே தோற்று உடல் தளர்ந்து பரவசம் எய்தும் ரீதியில் மனம் நெகிழும். பவளம் போன்ற அதரங்களில் காணப்பட்ட அழகிய சிவப்பு நிறம் வெளுத்து வெண்ணிறக் கடைக்கண்கள் இரண்டும் சிவந்து போகும் அளவிற்கு அன்பையும், முத்தங்களையும் பகிர்ந்து இருவரும் மகிழ்ந்த பின் சோர்வோடு அணைத்தபடியே படுத்திருக்கும் வேளையில் மெல்ல வீசி வரும் தென்றல் அவர்களின் உடல்களைத் தீண்டிக்கொண்டிருக்கும். கலவி முடிந்து சுய நினைவை அடைந்த போது காதல் மயக்கத்தில் துகில் அனைத்தும் களைந்து எறிந்த பின் நிலவொளியையே துகிலாக உடுத்தி அணைத்துக் கொண்டிருப்பதை இருவரும் எண்ணி நாணுகையில் நாணம் விலக அணைப்பின் இறுக்கமும் அதிகமாகும். அச்சூழ்நிலையில் வீசும் குளிர்ந்த தென்றலில் வியர்த்த இருவரது உடல் குளிர்ந்து சிலிர்த்து அவர்களின் மோகமும் அதிகமாகும் போது அங்கோர் இன்பச் சமர் மீண்டும் தொடங்கி இருவரும் வெல்ல ஆயத்தமாகப் போராடினாலும் கடைசியில் இருவரும் ஒருவர் மற்றவரிடம் தோற்று ஒய்ந்துவிடுவார்கள்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

இளந்திரையன்

இத்தகைய ரம்யமான காதல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த வான் நிலவு, தான் மட்டும் இரவில் தனிமையில் காய்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணி வருந்தியதால் நேற்று முழு நிலவாய் வலம் வந்தது இன்று ஒரு சுற்று தேய்ந்தே இளைத்துக் காணப்பட்டது.

ஆனால், இந்த முதல் சாம இரவு சூழ்நிலையில் பத்திரைத் தேவி மட்டும் அவளது நந்த வனக் குளக்கரையில் மனம் முழுக்கக் துயரத்தோடும், குழப்பத்தோடும் அமர்ந்திருந்தாள். காலையில் வானவல்லி அவசரப்பட்டுக் கவலையோடு சென்றுவிட்டதே அவளது மனத்துயருக்குக் காரணமாயிருந்தது. ஆனால் அவளது மனக் குழப்பத்திற்குக் காரணம் நேற்றிரவு சம்பாபதி வனத்தில் கண்ட கள்வர்களின் தலைவன் காளனாக இருந்தான்.

அவளது மனதில் இருவேறு மாறுபட்ட சிந்தனைகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. முதல் பார்வையிலேயே மனதைப் பறிகொடுத்த கள்வர் தலைவனை எண்ணிஎண்ணி ஏங்குகிறது ஒரு மனம். கள்வர் குடியில் இருப்பவனை எண்ணி உன் வாழ்வை நீயே சீரழித்துக்கொள்ளாதே எனப் பலமாக எச்சரிக்கை செய்கிறது மற்றொரு மனம்.

‘கள்வனாக இருந்தாலும் ஆண்மை மிக்கவனாக இருக்கிறான்’ என்கிறது ஒரு மனம்.

‘கள்வனைக் காதலிக்கிறேன் எனக் கூறினால் தந்தை ஏற்றுக்கொள்வாரா?’ எனத் தவிக்கிறது மற்றொரு மனம்.

‘உனது எண்ணத்தை மாற்றிக்கொள் என கடுமையாக வானவல்லி எச்சரித்தாளே!’ என்பதை எண்ணித் துயரமடைந்தது இன்னொரு மனம்.

‘அவன் தன் அன்பைப் புரிந்துகொள்வானா?’ ‘அப்படியே அவன் ஏற்றுக்கொண்டாலும் பின் தன்னைக் கைவிட்டுவிட்டால்…?’ ‘கள்வனை நம்பலாமா?’ எனப் பலவாறு குழம்பியது மற்றொரு மனம்.

‘அவன் கள்வனாக வாழ்ந்தாலும், தனது அன்பினால் அவனை எப்படியும் நல்வழிப் படுத்திவிடலாம்!’ என நம்பிக்கை கொண்டது மற்றொரு மனம்.

‘வானவல்லி கூறியதைப் போன்று காதல் என்பது வலி நிறைந்தது தானா? ஆனால் மனத்தைக் கவர்ந்தவனை எண்ணும் போதே மனதினில் இன்னதென்று அறிய இயலாத பெரும் இன்பப் பெருக்கு தோன்றுகிறதே! அது எப்படி மனதிற்கு வேதனையைக் கொடுக்கும். காதல் என்பது சிலர் பேரின்பம் என்கின்றனர்; சிலர் வேதனை என்கின்றனர். அப்படிக் காதலில் என்னதான் இருக்கிறது? அதனை அனுபவித்துப் பார்த்துவிட்டால் என்ன!’ எனப் பலவாறு சிந்தித்த அவளது மனம் இறுதியில் காதலித்துப் பார்த்துவிட வேண்டியதுதான் எனத் துணிந்து விட்டது!

‘அவனை மீண்டும் எப்படி என்னால் சந்திக்க இயலும்! இரவு பயணம் மேற்கொண்டால் தானே அவனைக் காண இயலும். அவனை நினைத்தாலே மனதில் இனம்புரியாத இன்ப வேதனை தோன்றிவிடுகிறதே! இதுதான் காதலா! அவனை எண்ணினாலே படபடவென துடிக்கிறது என் இதயம், மனதில் உள்ள அன்பை அவனிடம் எப்படி வெளிப்படுத்துவேன்!’ என எண்ணியவள் ‘அந்தக் கள்வனைக் காணும் பொறுப்பை மனதில் உள்ள காதலிடமே விட்டுவிடுவோம். அது அவனை மீண்டும் சந்திக்க வைத்தால் காதலை வளர்த்துக்கொள்வோம். அவனை எண்ணி இப்போது ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்’ எனக் கடைசியாக ஒரு முடிவிற்கு வந்து சமாதானமடைந்து அமைதியடைந்தாள்.

இனம் புரியாத இன்ப எண்ண ஓட்டத்தில் சிக்கியிருந்த பத்திரை தான் கள்வனை சந்திப்போமா அல்லது மாட்டோமோ என எண்ணி ’கூடலிழைத்து’ப் பார்த்துவிடுவது என மணலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு கோடு இழுக்கத் தொடங்கினாள். கண்களை மூடிக்கொண்டு கைகளால் தரையில் வரைந்த கோடு வட்டமாக சேர்ந்துள்ளதா எனப் பார்க்க கண்களைத் திறந்த வேளையில் பின்புறமாக உள்ள கொல்லைப்புறத்தில் எழுந்த ‘தொப்’ என்று விழும் சத்தம் அவளைக் கனவுலகிலிருந்து நனவுலகிற்குக் கொண்டு வரவே, சத்தம் எழுந்த திசையை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் பத்திரைத் தேவி.

கொல்லைப் புறத்தில் உள்ள உயர்ந்த மதிற் சுவரிலிருந்து விழுந்து கிடந்தான் ஒருவன். அவன் அருகில் செல்லவே அச்சப்பட்ட பத்திரைத் தேவி மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தாள். நிலவொளி பரிபூரணமாக நிறைந்திருந்தாலும் அடர்ந்த மரங்களைத் தாண்டி ஊடுருவ இயலாததால் மர நிழலில் கருப்பாகத் தெரிந்த அவன் முகம் இருளில் புலப்படவில்லை. கீழே கிடந்தவன் மயங்கிக் கிடந்தான். அவனை எழுப்ப முயன்று தோற்ற பத்திரை உதவிக்கு யாரையாவது அழைக்கலாமா என சிந்தித்தவள் பின் இரவில் உறங்குபவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி அவளே அவனைக் கைத்தாங்களாகத் தூக்கிக் கொண்டு சென்றாள்.

விழுந்து கிடந்தவன் பாதி மயக்கத்திலும், சிறிது சோர்விலும், சிறிது விழிப்பிலும் இருந்ததனால் அவள் அவனைத் தூக்கும் போது அவன் முழு ஒத்துழைப்போடு அவளுக்குச் சிரமம் ஏதும் அளிக்காமல் அவளுடனே நடக்கலானான். அவனைத் தோளோடு சாய்த்து கைத்தாங்கலாக அருகிலுள்ள அறைக்குச் சென்று படுக்கையில் கிடத்தியவள், நெய் விளக்கைத் தூண்டவே வெளிச்சம் அறை முழுவதும் நிரம்பியது.

வெளிச்சத்தில் அவனது முகத்தைக் கண்டாள் பத்திரை. ஆச்சரியமும், ஆனந்தமும் தாங்கவில்லை அவளுக்கு. ‘அவனை மீண்டும் காண நேரிட்டால் காதலை வளர்ப்போம்’ என அவனைக் காணும் பொறுப்பைக் காதலிடம் விட்டோமே! அது அவனை என்னிடம் சேர்ப்பித்து விட்டதே!’ என எண்ணி மகிழ்ச்சியடைந்தாள்.

அவன் விழுந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த மற்றொரு இரு கண்களும் பத்திரை சுமந்து வந்ததைக் கண்டுவிட்டது. மகிழ்ச்சியும், காதலும் அவளது சிந்தையை அபகரித்துவிடத் தன்னை மறைவாகக் கண்காணித்துக் கொண்டிருந்தவனை அவள் கவனிக்கவில்லை.

ஏதோ சிந்தித்தவள், அவசரமாகத் தோட்டத்திற்குச் சென்று வேலியில் படர்ந்திருந்த  ஊமத்தைச் செடியின் காய்களை செடிக்கு நோகாமல் கிள்ளி எடுத்துவந்து விளக்கில் காட்டி சூடுபடுத்தினாள். காயிலிருந்து பச்சையும் கருமையும் கலந்த நிறத்தில் அடர்ந்த புகை எழுந்தது. தனது மூக்கினை சேலை முந்தானைத் துணியால் இறுக மூடிக்கொண்டவள், கரும்புகையைப் பாதி மயக்கத்தில் கிடந்த கள்வர்களின்  தலைவன் காளனின் மூக்கினுள் செலுத்த அவன் முழுவதுமாக மயங்கி சுய நினைவினை இழந்துவிட்டான்.

யாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள இவன் மதிலைத் தாண்டி குதித்திருப்பான் எனச் சிந்தித்த பத்திரைத் தேவி விளக்கினை அருகில் எடுத்து அவனைப் பரிசோதித்தாள். வலது தோள் பகுதியிலிருந்த பெரும் கட்டினைப் பார்த்தவள், வானவல்லியினால் ஏற்பட்ட காயம் தானே இது! என எண்ணி குருதி கசிந்து கொண்டிருந்த கட்டினை அவிழ்த்து தூர எறிந்தாள். காயம் ஆழமாகக் காணப்பட்டது. வானவல்லியின் கைகளின் மென்மையை அறிந்த பத்திரை, “அவ்வளவு மென்மையான கைகளை உடையவள், இப்படி ஆழமான காயங்களை உண்டாக்கும் அளவிற்குக் குறுவாள் எறிய யாரிடமிருந்து கற்றாளோ!” எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டவாறே காயத்திலிருந்து வெளியேறிய குருதியினைத் துடைத்தவள், மேற்கொண்டு குருதி வெளியேறா வண்ணம் துணியினால் நன்கு மூடினாள்.

அவனது மேலங்கியைப் பார்வையிட மேலங்கியில் குருதி திட்டுத்திட்டாகப் படிந்து உறைந்து போயிருந்தது. மேலங்கியை நீக்கினாள். அவனது மார்பினில் வாள்களினால் வெட்டப்பட்ட காயங்களைக் கண்ட பத்திரை இவனைச் சில பேர் தாக்கியிருக்கிறார்கள்! எதிர்த்துச் சண்டையிட்டு  அவர்களிடமிருந்து தப்பிக்கவே தனது வீட்டு உயர்ந்த மதிலைப் பயன்படுத்தியிருக்கிறான் எனப் புரிந்துகொண்டாள். அவனது மார்பில் இருந்த விழுப்புண்களின் தழும்பும், காயங்களும் அவனுக்குப் பெரும் கம்பீரத்தையும் ஆண்மையையும் அளிப்பதை அவள் கண்டு களிக்கவே செய்தாள்.

அவனது முதுகில் ஏதாவது காயம் இருக்கிறதா எனப் பார்க்க அவனைப் புரட்டிப் போட்டவள், அங்குச் சிறு தழும்புக் கூடக் காணப்படாமல் தேக்கு போன்ற திண்மையான தேகம் பளிங்கு போலப் பளிச்சிடுவதைக் கண்டவள், “இவன் கள்வனாக இருந்தாலும் இதுவரை யாரிடமும் புறமுதுகு காட்டாதவன்!” என அவனது வீரத்தை எண்ணிப் பெருமையும் பட்டுக் கொண்டாள்.

பின்னர் ஈரத் துணியினால் அவனது உடலிலிருந்த குருதிக் கரைகள் முழுவதையும் துடைத்து எழுந்தவள் வெளியே சென்று சில மூலிகைச் செடிகளைத் தேடலானாள்.

மஞ்சள் வண்ணத்தில் கொத்தாகப் பூந்தாதுக்களையும் அதனைச் சுற்றி மும்மூன்று இதழ்கள் இணைந்து ஐந்து தொகுதிகளாகச் சுற்றியிருந்த சிறிய பூவை அந்த நிலவொளியிலும் கண்டுபிடித்துவிட்டாள் பத்திரை. மேலும் மலரை உறுதி செய்துகொள்ள மலரின் மலர்க்காம்பின் நீளத்தைப் பார்த்தாள். அது இலையிலிருந்து பலமடங்கு நீண்டு பூத்திருந்தது. செடியின் தண்டு, இலை, காம்பு என மலரைத் தவிர்த்த அனைத்து பகுதிகளிலும் சிறு சிறு முட்கள் போன்ற பகுதிகளைக் கையின் பின்புறத்தை வைத்து மெல்ல தேய்க்க அந்தச் சிறு சிறு முட்கள் அவளை வலிக்காமல் குத்தியது. ஒவ்வொரு இலைக் காம்பிலும் பல கொடிகள் படர்ந்ததிலிருந்து இதுதான் வெட்டுக் காயங்களுக்குப் போடும் வெட்டுவாப் பச்சிலை என அந்த நிலவொளியிலும் கண்டு பிடித்தவள் செடியோடு பிடுங்கிக் கொண்டாள்.

காய்ந்த குச்சியாய் சிவந்து நீண்ட தண்டினையும், அதன் பசுமையான கிளைகளில் நான்கு நான்கு இலைகளைக் கொண்ட செடியான நாயுருவியையும் அடையாளம் கண்டு செடியோடு பிடுங்கிக் கொண்டாள். மேலும் அதனோடு அரிவாள்மனைப் பூண்டு, மஞ்சள், மற்றும் சில மூலிகைச் செடிகளைப் பறித்தவள் தன்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்தவள் சட்டெனத் திரும்பி பின்னால் பார்த்தாள். ஆனால், அவள் கண்களுக்கு யாரும் தெரியாததனால் காளனிடம் திரும்பினாள்.

மருத்துவத்தில் பல முறைகள் உள்ளன. சில மருத்துவ முறைகள் மிகவும் கடினமானவை, வலி மிகுந்தவை. ஆனால் நோயும், வலியும் விரைவில் குணமாகிவிடும். சில மருத்துவ முறைகள் கடைபிடிப்பதற்கு எளிதானவை. நோய் குணமடைய நீண்ட காலம் ஆகும்

அப்படித்தான் பௌத்த மருத்துவ முறைக்கும், சமணர்களின் மருத்துவ முறைக்கும் வேறுபாடுகள் பல. பௌத்தர்கள் எந்த உயிர்களுக்கும் எந்தவித தீங்கும், வலியும் ஏற்படுத்த கூடாதென நினைப்பவர்கள். மனித உயிர்கள் உட்பட. அதைப்போலவே அவர்களின் மருத்துவ முறைகளும் வலி இல்லாமல் இருக்கும். நீண்ட காலம் நோய் குணமாகப் பிடிக்கும். ஆனால் சமணர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். வலி மற்றும் சுய உணர்வுகள் உட்பட! எந்த உயிர்க்கும் அறியாமல் கூட தீங்கிழைக்கக் கூடாதென எண்ணுபவர்கள். நடக்கும் போது கூட மயிலிறகால் தரையை விசிறிக்கொண்டே நடப்பவர்கள். ஆனால் அவர்கள் தங்களைத் தாங்கள் முழுவதுமாக வருத்திக் கொள்பவர்கள். அதன்படி அவர்களின் மருத்துவ முறையும் கடினமாகவும், வலி நிறைந்ததகாவும் இருக்கும். ஆனால் விரைவில் குணமடையச் செய்யும் தன்மையுடையது. உடல் வலி மற்றும் நோய் ஒரே நாளில் போகிறேன் என்று சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும். அவ்வளவு வீரியமான மருத்துவ முறை. பத்திரைத் தேவி சமண முனிவர்களிடம் கல்வியையும், மருத்துவத்தையும் பயின்றவள். அவள் செய்யும் மருத்துவம் வலி நிறைந்ததாக இருக்கும். ஆதலால் தான் கடும் வெட்டுக் காயங்களுடன் கண்ட காளனை ஊமத்தைப் புகை மூலம் மயக்கமடையச் செய்துவிட்டாள். அவள் அளிக்கும் மருத்துவத்தின் போது அவள் விழித்துக் கொண்டிருந்தால் அந்த வலியில் கத்தியே ஊரைக் கூட்டிவிடுவான் என்பதை அவள் ஏற்கெனவே அறிந்திருந்தாள்.

முதலில் நாயுருவிச் செடிகளை விளக்கினில் காட்டி மெல்ல சூடு செய்து கொண்டாள். பின்னர் எள்ளினைக் காயவைத்து ஆட்டியெடுத்த தூய நல்லெண்ணெய்யை கொதிக்கவைத்து அதில் முதலில் அரிவாள் மனைப் பூண்டையும் பின் அதில் நாயுருவி இலைகளைப் போட்டு நன்கு வதக்கினாள். பின் வதங்கிய நாயுருவி இலைகளைக் கசக்கி சூடான நாயுருவிச் சாரினையும் சேர்த்து மிதமான சூட்டுடன் குறுவாள் காயத்தில் விட்டாள். காயத்தின் ஆழத்தில் இறங்கிய மிதஞ்சூடான எண்ணெய் மற்றும் பூண்டு ஆகியவை கடும் எரிச்சலையும் வலியையும் கொடுக்க மயங்கிய நிலையிலும் காளன் வலியால் துடிக்கவே செய்தான். காயத்தின் அடி ஆழம் வரை பச்சிலைச் சாறு இறங்கி உடலில் ஊடுருவும் வகையில் காயத்தை இலக்கி பச்சிலைச் சாற்றினைப் பிழிந்து விட்டுக் கொண்டே இருந்தாள்.

பின்னர் வெட்டுவாய் பச்சிலையை உள்ளங்கையில் வைத்து கசக்கி அதன் சாறினை தோள் காயத்தில் விட அது குளிர்ச்சியுடன் ஊடுருவிய போது ஏற்பட்ட எரிச்சலிலும் அவன் துடிதுடித்துப் போனான்.

பின்னர் உடலில் உள்ள மற்ற வெட்டுக் காயங்களில் வெட்டுவாய் பச்சிலைச் சாற்றினை விட்டுப் பின் நுண் கிருமிகள் மற்றும் பூச்சிகள் அண்டாத வண்ணம் ஒவ்வொரு காயத்தின் மீதும் கல்லின் மீது தேய்த்த மஞ்சள் தூளைப் பூசி விட்டாள்.

அவனது உடலின் காயங்களைச் சுற்றி வீக்கங்களைக் கண்டவள் அவனுக்கு ஒத்தடம் கொடுக்கத் துணியைத் தேடியவள் கிடைக்காமல் அவளது முந்தானைத் துணியைக் கிழித்து அதில் வதக்கிய நாயுருவி இலைகளைப் உருண்டையாகச் சுருட்டி மிதமான சூட்டுடன் அவனது உடல் முழுவதும் ஒத்தடம் கொடுத்தாள். அவள் ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க வீக்கம் காணாமற் போய்க்கொண்டிருப்பதைக் கண்டவள் தனது மருத்துவத் திறமையை எண்ணி கர்வம் கொள்ளவே செய்தாள்.

கை, கால், உடலில் ஏற்பட்ட பெருங்காயங்களில் தனது முந்தானைத் துணியினால் வதங்கிய நாயுருவி இலைகளை வைத்து கட்டு கட்டவும் செய்தாள்.

பின் அவனுக்குக் காயத்தினால் காய்ச்சல் வராமல் தடுக்கக் கொண்டு வந்த பச்சிலைகளை அரைத்து அவனது நெற்றி மற்றும் மார்புப் பகுதிகளில் பூசி பத்துபோட்டு விட்டாள்.

மயக்க மருந்திற்கு மாற்று மருந்து கொடுத்து அவனை எழுப்பி விடலாமா எனச் சிந்தித்தவள் பின் அவன் இந்தக் காயங்களுடன் வலியுடன் விழித்திருப்பதை விட மயக்கத்தில் உறங்குவதே சிறந்தது என எண்ணி அவனது விழிகளையும் நாடியையும் பார்த்தவள் அவன் எப்படியும் நாளை மதியத்திற்குப் பிறகு தான் கண் விழிப்பான் என்பதை உணர்ந்து அந்த அறையிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டாள்.

பத்திரைத் தேவி மாளிகையில் யாரும் பார்க்காத வண்ணம் தனது அறைக்கு வந்தபின் நெடுநேரம் உறங்கவே இல்லை. தான் செய்திருப்பது சரிதானா? எனப் பலவாறு சிந்தித்தாள். டாள்தொபியாஸ் இவனைச் சல்லடை போட்டுத் தேடும் போது இவனை இங்கு மறைத்து வைத்திருப்பது முறையில்லை என்பதை அவள் உணரவே செய்தாள். சோழ வீரர்களுக்குத் தகவல் கொடுத்துக் காளனைக் காட்டிக்கொடுத்து விடலாமா? என எண்ணினாள். இறுதியில் விடிந்ததும் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொள்வோம் என உறங்கிவிட்டாள்.

கண் விழித்துப் பார்த்தான் காளன். வெளியிலிருந்த பிரகாசமான வெளிச்சம் அவனது கண்களைக் கூச இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டு தான் எங்கிருக்கிறோம், நேற்றிரவு என்ன நேர்ந்தது? எனச் சிந்தித்து நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் கொண்டு வந்தான்.

டாள்தொபியாஸ் அறையை விட்டுச் சென்ற பிறகு நிதானமாகச் சிந்தித்தான் காளன். மரணத்தின் நாள் அறிந்து கொண்டால் உடல் உணர்ச்சிகளும், வலிகளும் மனதினை விட்டு நீங்கிவிடும் அல்லவா! அப்படித்தான் மரணத் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என அறிந்த பின் அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்ற சிந்தனையில் அவனது உடல் ரணத்தின் வலி மறைந்தே போய் விட்டது அவனுக்கு. மெல்ல கட்டிலிலிருந்து எழுந்து இத்தனை காவல் வீரர்கள் சூழ்ந்த பாதுகாப்பான அறையைவிட்டு எப்படித் தப்பிப்பது எனத் தீவிரமாகச் சிந்திக்கலானான்.

அந்த வேளையில் தான் அவனுக்கு அவனது நண்பன் வில்லவனின் நினைவு வந்தது. வில்லவன் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். வெளியே அத்தனை அறைகள் வெற்றிடமாக இருக்க உட்புறமாக இந்த அறையில் தன்னைத் தங்க வைத்ததிற்கும் நிச்சயம் காரணம் இருக்கும் என நம்பியவன், அறையின் ஒவ்வொரு பகுதியையும் துருவித் துருவி ஆராயலானான். அவன் படுத்திருந்த கட்டில், அறையின் சுவர் என ஒவ்வொன்றாக ஆராய்ந்து எதையும் கண்டறிய இயலாமல் சோர்ந்தவன் கடைசியில் அவனது பார்வை அந்த அறையிலிருந்த புத்தரது உருவச் சிலையின் மீது நிலைகொண்டது.

புத்தர் சிலையின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான் காளன்.

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நனவும் நீஇ! கனவும் நீஇ!

வன்மை நீஇ! மேன்மை நீஇ!

மதியும் நீஇ! விதியும் நீஇ!

இம்மை நீஇ! மறுமை நீஇ!

இரவும் நீஇ! பகலும் நீஇ!

செம்மை நீஇ! கருமை நீஇ!

சேர்வும் நீஇ! சாரவும் நீஇ!

என்ற புத்தரைப் புகழும் ஒத்தாழிசைக் கலிப்பாவை மனமுருகிப் பாடி வணங்கிவிட்டு, தான் தப்பிக்க உதவுமாறு புத்தரது பாதங்களைச் சரணடைந்தான்.

புத்தர் சிலைக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களைச் சாரை சாரையாகச் சிற்றெறும்புகள் புத்தர் சிலைக்குக் கீழே கொண்டு சென்றுகொண்டிருந்தன. சிற்றெறும்புகளைக் கண்டவனது முகத்தில் இதுவரை இல்லாத உற்சாகம் தோன்ற ஆரம்பித்தது. உணவுத் துகள்களை எறும்புகள் புத்தர் சிலைக்குக் கீழே கொண்டு செல்கிறதென்றால் அங்குப் பெரும் இடமோ அல்லது சுரங்க வழிகளோ நிச்சயம் இருக்க வேண்டும் என யூகித்தவன் அதனைக் காணும் வழியைத் தேடலானான். சுரங்க வழியைத் திறக்க வேண்டுமெனில் இரகசியப் பொறியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணி அந்த முயற்சியில் இறங்கினான். வெளியே இருக்கும் காவலர்கள் உள்ளே வந்துவிட்டால் என்ன செய்வது எனச் சிந்தித்தவன் அமைதியாக அவர்கள் என்ன செய்கிறார்கள் எனச் சென்று பார்த்தான். அவர்கள் கடமையே கர்மமாக அறைக்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று தொந்தரவு கொடுக்க வேண்டாம் என டாள்தொபியாஸ் கட்டளையிட்டது அவனது நினைவிற்கு வர, அவனது கட்டளையை மீறி யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் புத்தர் சிலை மர்மத்தைத் தேடலானான்.

மனதில் இருந்த அச்சத்தை விலக்கி வைத்துவிட்டு, புத்தர் சிலையை அப்புறமாகவும், இப்புறமாகவும் இழுத்தும், தள்ளியும் நகர்த்த முயற்சித்தான். அவன் தான் நகர்கிறானே தவிரப் புத்தர் சிலை அசைந்தபாடில்லை. உலகையே ரட்சிக்கும் கடவுள் அல்லவா? எப்படி அசைவார். புத்தர் சிலைக்கு முன் இருந்த படையல்கள் படைக்கும் பலி பீடக் கல்லையும் அசைத்துப் பார்த்தான். அதிலும் தோல்வியே ஏற்படத் தனது விதியை நொந்தவன் ஏதேனும் வேறு மார்க்கம் இருக்குமா எனப் புத்தர் சிலையையே சுற்றி சுற்றி வந்தான்.

புத்தரது வலது கையின் விரல்களைக் கண்டவனது முகம் தப்பிக்கும் மார்க்கம் கிடைத்துவிட்டது போலப் பரவசமடைந்தது. புத்தர் சிலையின் நான்கு விரல்களும் மடங்கியிருக்க ஆட்காட்டி விரல் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தது. விரல் நீட்டிக்கொண்டிருந்த திசையில் ஏதேனும் வழி இருக்குமா என ஆராய்ந்தவன் அங்கும் ஏதும் தப்பிக்கும் மார்க்கம் தென்படாததால் அவனது முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் தென்படத் தொடங்கியது.

ஏமாற்றத்துடன், புத்தரை வணங்கி தப்பிக்கும் மார்க்கத்தைக் காட்டுங்கள் என நீண்டுகொண்டிருந்த புத்தரின் ஆட்காட்டி விரலைப் பற்றி இழுத்தான். அவ்வளவு தான் விரலைப் பிடித்து நகரும் குழந்தை போல  மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல அவனது கையோடு புத்தர் சிலை அவ்விடத்தைவிட்டுப் பெயர்ந்தது.

புத்தர் சிலைக்குக் கீழே இருந்த இரகசிய வழி காளனுக்குத் தென்பட்டது. இரகசியப் பாதையைக் கண்ட பிறகு தான் அவனது முகத்தில் மகிழ்ச்சியின் சாயலே தோன்றியது. வீரர்கள் யாரேனும் காணுமுன் இவ்விடத்தை விட்டு உடனடியாகத் தப்பித்துவிட வேண்டும் என்ற நோக்கில் விரைவாகச் செயல்படத் தொடங்கினான். அந்த நேரத்தில் அவனது நண்பன் வில்லவனையும் எண்ணி மகிழ்ச்சியடைந்து கொண்டான்.

இரகசிய சுரங்கப்பாதை முழுவதும் துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருளில் மண்டிக்கிடப்பதைக் கண்டவன் புத்தர் சிலைக்கு முன் எரிந்துகொண்டிருந்த விளக்கினை எடுத்துக் கீழே இறங்கி சுரங்கத்தில் இருந்த பந்தத்தைக் கொளுத்திக்கொண்டான். பின்னர் அங்கிருந்த மற்றொரு பொறியை நகர்த்த புத்தர் சிலை மீண்டும் நகர்ந்து பழைய இடத்தை அடைந்துவிட்டது. சுரங்கப் பாதை செல்லும் வழியில் பந்த வெளிச்சத்தைக் கொண்டு நடக்கலானான். சுரங்கப் பாதை கடைசியாகப் பட்டினப்பாக்கத்தின் புத்த விகாரில் கொண்டு போய்க் காளனைச் சேர்த்தது. பொழுது சாயும் வரை சுரங்கப் பாதையிலேயே பொறுத்திருந்தவன் பின் அங்கிருந்து வெளியேறினான்.

அறையிலிருந்து காளன் எப்படி மாயமாக மறைந்தான் என்பதை அறியாத டாள்தொபியாஸ், அவன் நிச்சயம் ஏதேனும் சுரங்கப்பாதை வழியாகத்தான் தப்பித்திருப்பான் என ஊகித்தான். தமிழகத்தில் அடிக்கடி போர் ஏற்பட்டுக்கொண்டிருந்தமையால் அரண்மனை மற்றும் முக்கியக் கோட்டைகளில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருப்பதை டாள்தொபியாசும் நன்கு அறிவான். ஆனால் அவன் பௌத்த விகாரில் சுரங்கப் பாதை இருக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. பௌத்த விகாரில் தொடங்கிய சுரங்கப்பாதை நிச்சயம் மற்றொரு பௌத்த விகாரில் தான் முடிவடையும் என ஊகித்தவன் ஒவ்வொரு பௌத்த விகாரிலும் காவல் வீரர்களை நிற்கச் செய்திருந்தான்.

பொழுது மேற்கில் சாய்ந்த பின் இரவு முதல் சாமத்தில் சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறினான், காளன். பௌத்த விகாரிலிருந்து காளன் வெளிப்படுவதைக் கண்ட மறைந்திருந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். வீரர்கள் தன்னைச் சூழ்ந்துகொள்வார்கள் என்பதை எதிர்பார்த்திராத காளன் அவர்களை எதிர்க்க தனது வாளை உருவினான்.  இவர்களிடமிருந்து தப்பித்தால் தான் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள இயலும் என்பதைப் புரிந்துகொண்ட காளனுக்கு அப்போது அவ்வளவு பலம் எங்கிருந்து தான் வந்ததோ? அவனது வலிகள் அனைத்தும் மறைந்து இரண்டு கைகளினாலும் மாறி மாறி வாளைச் சுழற்ற அவனைச் சூழ்ந்த வீரர்கள் அவனிடம் தாக்குப்பிடிக்க இயலாமல் கீழே விழுந்தனர். காளன் போர்க் கலைகளை நன்கு பயின்றவன். வாள் வீசுவதிலும் வல்லவன். இரும்பிடர்த்தலையரின் தம்பியாகையால் அவனும் அனைத்து வித வித்தைகளையும் நன்கு கற்றிருந்தான். வாள் வீசுவதில் அவன் வல்லவனாக இருந்தாலும் அவனது உடல் சோர்வு மற்றும் காயத்தின் வலி என அவன் சற்றுத் தடுமாறவே செய்தான். அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட வீரர்கள் அவனைத் தாக்க  காளனின் மார்பு, வயிறு, கை, கால் என ஆங்காங்கே வீரர்களின் வாள் அவனது குருதியைச் சுவைக்கவே செய்தன. வாள்கள் உராயும் சத்தத்தைக் கேட்டு மேலும் சில வீரர்கள் தூரத்திலிருந்து ஓடி வருவதைக் கண்டவன் இனியும் இங்கிருந்தால் ஆபத்து என எண்ணி தடுத்துக்கொண்டிருந்த வீரர்களைத் தள்ளிவிட்டுப் பின் அங்கிருந்து வேகமாக இருளை நோக்கி ஓடினான். வீரர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த பெரும் மதில் சுவரை அருகில் வளர்ந்திருந்த மரத்தைப் பயன்படுத்தி ஏறித் தாண்டிக் குதித்துவிட்டான். அவனைத் துரத்திக்கொண்டு வந்த வீரர்கள் இவ்வளவு உயர்ந்த, பெரிய மதிலை அவன் தாவி குதித்திருக்க மாட்டான் என எண்ணி அங்கிருந்து சென்று வேறு பகுதிகளில் அவனைத் தேடலாயினர்.

உயரமான மதிலிலிருந்து குதித்தவன் அதிர்ச்சியினால் மயங்கி விட்டான். அப்போது மயங்கியவன் கண் விழித்துப் பார்க்கும் போது தான் எங்கிருக்கிறோம் என அடையாளம் தெரியாத முன்பின் அறியாத  இடத்தில் இருப்பது வரை நடந்தது ஒவ்வொன்றாக அவன் தனது மனத்திரையில் கொண்டு வந்தான். கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியிலிருக்கும் பிரகாசமான வெளிச்சத்திற்குக் கண்களைப் பழக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவனால் ஏதும் அறிந்துகொள்ள இயலாமல் அறையிலிருந்து வெளியேறி நந்த வனத்தில் உள்ள குளக்கரையை யாரும் அறியாத வண்ணம் அடைந்தான்.

தனது உடலில் போடப்பட்டிருந்த மூலிகைப் பத்துகளையும், மருந்துகளையும் கண்டவன் பின் தனது உடலில் வலி காணாமல் போயுள்ளதை உணர்ந்து ஆச்சர்யப்பட்டுப் போனான். ஒரே நாளில் இப்படி மாயம் செய்து உடலைக் குணப்படுத்த இயலுமா எனச் சிந்தித்தவன் காயத்தில் இருந்த சீலைத் துணிக் கட்டைக் கண்டான். கட்டுப் போட்டிருந்த துணியை அவிழ்த்து பார்த்தவன், அது கட்டியிருந்த துணியிலிருந்து தான் கிழுத்துக் கட்டப்பட்டது என்பதை அறிந்த பிறகு அந்தப் பெண் மருத்தவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் பெருகியது.

அங்கிருந்து தப்பித்துச் சென்று விடலாமா என ஒரு கணம் எண்ணியவன் வீரர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றித் தனக்கு மருத்துவம் பார்த்தவரை சந்தித்து நன்றி கூறாமல் செல்வது தவறு என எண்ணி அவரைச் சந்தித்த பின்தான் செல்லவேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டு நாயுருவி செடியினால் பல் துலக்கி, குளத்து நீரில் தன்னையும் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அறைக்குச் சென்றான்.

அறைக்குச் சென்றவனுக்குப் பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்குப் பத்திரைத் தேவி ஒரு கையில் பழத்தட்டையும் மற்றொரு கையில் குறுவாளையும் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.

பத்திரைத் தேவியைக் கண்டவன் சம்பாபதி வனத்தில் கண்ட பெண் இவள் தான் என உடனே அடையாளம் கண்டுகொண்டான். தான் கட்டியிருந்த துணியைக் கிழித்துத் தனக்கு வைத்தியம் பார்த்தவள் இவளாகத்தான் இருக்க வேண்டும் எனக் கணப் பொழுதில் தீர்மானித்துக்கொண்டவன் நன்றி கலந்த பார்வையை அவளது கண்களின் மீது நிலைநாட்டினான்.

“என்னை வீரர்களிடம் காட்டிக்கொடுக்காமல் மருத்துவம் பார்த்தது நீங்கள் தானா?” என வினவினான்.

அவள் கண்கள் நிறைய அன்போடு அவனைப் பார்த்து “ஆமாம்” எனத் தலையாட்டினாள்.

அவள் கையிலிருந்த குறுவாளைப் பார்த்தபடியே, “பெண்ணே! உனது இரு விழிகளும் தான் கொலை வேல் போல இருக்கிறதே! கையில் மற்றொரு குறுவாள் எதற்கு?” என வினவினான்.

அதற்குப் பத்திரை, “கள்வர்களின் தலைவர் வேல் விழிகளை விடக் குறுவாளுக்குத் தானே அச்சப்படுகிறார்!” என்றாள்.

சம்பாபதி வனத்தில் அச்சத்தில் வியர்த்து, மூச்சு வாங்கியபடி நடுங்கிக் கொண்டு நின்றவள் இப்போது தைரியத்துடன் பேசுகிறாளே! என ஆச்சர்யமடைந்தவன் “கள்வன் கட்டுப்படாமல் ஏதேனும் செய்தால் என்ன செய்வதாய் உத்தேசம்” எனக் கட்டிலில் அமர்ந்தபடியே கேட்டான்.

பழத்தட்டை கீழே வைத்தவள், அவனருகில் சென்று குறுவாளை அவனது கழுத்தில் வைத்து “மேற்கொண்டு இப்போது பேசுங்கள் பார்ப்போம்!” என மிரட்டிய படி கூறினாள்.

தனது கழுத்தில் குறுவாளை வைப்பாள் என எதிர்பார்க்காத காளன்  கண நேரத்தில் மிரண்டு விட்டான். மிரட்சியுடன் அவளை நோக்கினான். அவளது கைகள் தான் கொலை வாளைத் தாங்கியுள்ளதே தவிர அவளது கண்கள் எந்த வித கோபத்தையும் காட்டாமல் அன்பு பெருகி வழிவதையும் கண்டான்.

பத்திரைத் தேவி அவளது அன்பை காளனிடம் தெரிவிக்காமல் இருந்தாலும் வீரர்களிடம் தன்னைக் காட்டிக்கொடுக்காமல் அணிந்திருந்த உடையைக் கிழித்தே தனக்குக் கட்டுபோட்டு மருத்துவம் பார்த்ததிலிருந்தும், அவளது பார்வையிலிருந்தும் அவளது உள்ளத்தில் உள்ள பேரன்பை அவன் புரிந்துகொண்டான்.

அவள் கையிலிருந்த குறுவாளையும், அவளது முகத்தையும் மாறி மாறி நோக்கியவன் அவளே எதிர்பாராத விதமாக அவனது வலது கையால் பத்திரையின் தலையை அழுத்தி முன்னால் இழுத்தவன் அவளது அதரத்தில் தன் அதரத்தால் முத்தம் ஒன்றைப் பதித்தான்.

காளனின் இந்த எதிர்பாராத முத்தத்தால் அதிர்ச்சியினால் உடல் நடுங்கியவள் தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாலும் பின் அவனுக்கு ஒத்துழைப்பையே நல்கினாள்.

அவளது குறுவாள் இவனது கழுத்தில்; ஆனால் அவளோ இதழ்களோ இவனிடம்!

அவனது எதிர்பாராத முத்தத்தில் தன்னிலையிழந்தவள் குறுவாளை பிடிக்க இயலாமல் நழுவவிட, நழுவிய குறுவாளோடு அவளது முந்தானைத் துணியும் உடலிலிருந்து நழுவ, அவள் உடலில் அவன் தன் கைகளால் எதையோ தேடலானான்.

அவனது கை விரல்கள் தன் உடலில் தீண்டுவதிலிருந்து சுய நினைவடைந்தவள், அவனைத் தள்ளிவிட்டு அவனது தழுவலிலிருந்து வலுக்கட்டாயமாகத் தன்னை விடுவித்துக்கொண்டாள்.

அதுவரை எந்த ஆண் மகனின் தீண்டல்களையும் உணராதவள், முதன் முதலில் ஒருத்தனின் முரட்டு முத்தத்தினால் உடல் குலுங்க, அவளது அன்பும், உணர்ச்சிகளும், கவலைகளும் கண்ணீராய் அவளது கண்களில் பெருகியது.

தவறிழைத்தது அவன் தான். ஆனால், முன் பின் அறியாத ஒரு ஆடவனிடம் தான் தன்னிலை இழந்து தன்னையே இழக்கத் துணிந்த தனது அவல நிலையை எண்ணிய அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. இத்தனை நாட்களாகக் கடைபிடித்த அறிவு, சுய ஒழுக்கம், தன்னடக்கம், கற்பு என அனைத்தையும் கண நேரத்தில் மறந்து விட்டதை எண்ணி அவள் அவமான உணர்வுடன் தரையையே பார்த்துக்கொண்டு தேம்பிக்கொண்டிருந்தாள்.

அவளது நிலையை உணர்ந்த காளன், அவளது அருகில் சென்று அவளது நாணத்திலும், கோபத்திலும் சிவந்திருந்த அழகிய வதனத்தை மேலே உயர்த்தி அவளது கண்களை நோக்கினான்.

அவளது கண்களில் தனது பார்வையை நிலைநாட்டியபடியே, “பத்திரை! மனதில் வருத்தமோ, குழப்பமோ வேண்டாம்; கள்வனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டேன் என எண்ணியும் துயரப்பட வேண்டிய அவசியமில்லை. நேற்று மயங்கிய நிலையிலிருந்த என்னைக் காப்பாற்றி, யாரிடமும் காட்டிக்கொடுக்காமல் இருந்ததிலிருந்தே உனது அன்பையும், மனதிலிருக்கும் ஆசையையும் புரிந்து கொண்டேன். உனது காதலை நான் அறிந்துகொண்டேன் என உனக்குக் கூறி, எனது அன்பையும் தெரிவிப்பதற்காகவே இந்த முத்தம். இது நமது அன்பினை உறுதி செய்துகொள்வதற்காகத் தான். உன்னை எந்தச் சூழ்நிலையிலும் பிரிந்து விட மாட்டேன். இது சத்தியம்!” என்றான்.

அதற்கு அவள், “அன்பை இப்படித்தான் முரட்டுத் தனமாக வெளிப்படுத்துவீர்களா?” எனப் பொய்யாகக் கோபம் கொண்டு ஊடலாடியவள், காதல் பார்வை கொண்டு அவனையே பார்த்தாள்.

அவளது அந்தக் காதல் பார்வையில் அவன் கட்டுண்டு, அவனது சப்த நாடிகளெல்லாம் அவளிடம் சரணடையச் செய்துவிட்டது. அப்படிப்பட்ட பார்வை அது.

அவளது கண்களில் கசிந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்த படியே காளன், “நான் கள்வனாக மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்து  தலைமறைவாக வாழும் நிலை இன்று இருக்கலாம் பத்திரை. ஆனால், ஒருநாள் நீ இந்தக் கள்வனை எண்ணி நிச்சயம் பெருமை கொள்ளப் போகிறாய். அந்தக் காலம் விரைவில் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை வணங்குவோம்” என்றவன் பின் எதையோ யோசித்துவிட்டு “மரணத்தை எதிர் நோக்கியுள்ளவனின் மீது நீ கொண்டுள்ள காதலை நான் எனது வாழ்வின் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் பத்திரை” என அவளை அணைத்துக் கூறிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தான்.

அமர்ந்தவன் தனது கண்களில் பெருகும் கண்ணீர்த் துளிகளைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றான். ஆனால் இயலவில்லை! அவனது முயற்சிகளையும் தாண்டி வெளியேறிய கண்ணீர்த் துளிகளைக் கண்ட பத்திரை, “தாங்கள் ஏன் கண் கலங்குகிறீர்கள்?” என வினவினாள்.

“உனது அன்பைப் பார்க்கும் போது எனது தாயின் நினைவு வந்துவிட்டது. ஒருவேளை எனது தாய் என்னுடன் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது பத்திரை. தாயில்லாமல் வளர்ந்தவன் முரடனாகி, கள்வனாகி விட்டேன். உனது இந்தத் திடீர் அன்பு என்னைத் திக்குமுக்காடச் செய்து கண்ணீர் சிந்த வைத்துவிட்டது” என்றவன் கண்களைத் துடைத்தபடி “நான் கள்வனாக இருந்து கவர்ந்தவற்றில் ஈடு இணையில்லாதது உனது அன்பு ஒன்று தான் பத்திரை!” எனக் கண்களில் கண்ணீரோடு முகத்தில் சிரிப்போடும் மகிழ்ச்சியோடும் கூற, பத்திரை வழிந்த அவனது கண்ணீர்த் துளிகளைத் துடைத்து அவனது முகத்தை அவளது மார்போடு அணைத்துக்கொண்டாள்.

அன்பு மிகுதி இருவருக்குமே கண்ணீர்த் துளிகளாக வெளிப்பட, அவளது கண்ணீர் அவனது தலையிலும் அவனது கண்ணீர் அவளது மார்பிலும் விழுந்து நனைத்துக் கொண்டிருந்தது. அவளது அணைப்பினில் காளனது கோபம், கர்வம், முரட்டுத்தனம், என அனைத்தும் கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை அவன் உணரவே செய்தான்.

திடீரென்று அவளது அணைப்பிலிருந்து விடுபட்ட காளன், “நான் புறப்படுகிறேன் பத்திரை!” எனக் கூறியபடித் தனது வாளுறையை இடுப்பில் கட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானான்.

புறப்பட்டக் காளனைப் பத்திரைத் தேவி ”கள்வரே நில்லுங்கள்!” என நிறுத்தி “உணவருந்திவிட்டுச் செல்லுங்கள்” என அவனிடம் பால் மற்றும் பழத்தட்டை நீட்டினாள்.

“அதான் பசி மறக்கும் அளவிற்கு அமுதினை உண்டுவிட்டேனே!” எனத் தனது அதர இதழ்களைத் தடவியபடியே கூறினான்.

அவன் தன்னை முத்தமிட்டதைப் பற்றிக் கூறியதைக் கேட்டவள் நாணம் கொண்டாலும் அதனை மறைத்துக் கோபப்பட்டது போல காட்டிக்கொண்ட பத்திரை, “கள்வர் தலைவர் பேச்சிலும் வல்லவர் என்பதைத் திரும்பத் திரும்ப நிரூபிக்க வேண்டியதில்லை” எனக் கூறிக்கொண்டு பழங்களை எடுத்துக்கொடுத்தாள்.

பழங்களை உண்டு கொண்டிருந்தவனிடம் பத்திரை, கேட்கலாமா அல்லது வேண்டாமா எனச் சிந்தித்தவள் இறுதியில் “கள்வரே! உங்களது பெயர்?” என அச்சத்துடனே கேட்டு விட்டாள்.

“நீ கள்வன் என அழைப்பதே அழகாகத் தானே உள்ளது. அப்புறம் எதற்குப் பெயர்?” எனக் கூறியபடியே காய்ச்சிய பாலைப் பருகுவதில் கவனம் செலுத்த பத்திரை, “உங்களது பெயரை இன்னும் கூறவில்லையே!” என விடாப்பிடியாகக் கேட்டாள்.

“எனது பெயரா? காளன்!”

“அந்தப் பெயர் அல்ல!”

“அப்புறம் எந்தப் பெயர்!”

“உங்கள் தந்தை வைத்த பெயரும் காளன் தானா? உங்களது இயற்பெயர்!”

“நிச்சயம் தெரிந்துதான் ஆக வேண்டுமா?”

“ஆமாம்”

தனது பெயரைக் கூற வேண்டாம் என எண்ணியவன் பின் அவள் கட்டாயத்துடன் கேட்க தான் இரும்பிடர்த்தலையரின் தம்பி என்பதை அவளிடம் மறைத்து “இளந்திரையன்” எனப் பெயரை மட்டும் கூறலானான்.

“இளந்திரையன்” எனப் பலமுறை தனக்குள் கூறி அழகு பார்த்துக்கொண்டாள் பத்திரை.

இரண்டு நாள் பசியை உண்டு அடக்கியவன், “கிளம்புகிறேன்!” எனக் கூறிவிட்டு அவளது பிறை நுதலில் அழுத்தமான முத்தத்தைப் பதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பத்திரைத் தேவியும் “உங்களுக்காகக் காத்திருப்பேன்!” எனக் கூறியபடியே அவனுக்கு மகிழ்ச்சியுடன் விடை கொடுத்து அனுப்பினாள்.

அவன் அங்கிருந்துச் சென்றபின் அவன் தீண்டிய தனது உடல் பாகங்களைத் தொட்டுப் பார்த்தே பேரின்பம் கண்டாள் பத்திரைத் தேவி. ஒரே நாளில் தன் வாழ்வில் நிகழ்ந்த அசாதாரணமான நிகழ்வுகளை எண்ணி ஆச்சர்யப்பட்டுப் போனாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலே அவளது செயல்களை ஒருவன் கண்காணித்துக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. அதனால் அவள் வாழ்வில் ஏற்படப் போகும் பிரளயங்களை அவள் எப்படி அறிவாள்?

அடிக் குறிப்பு:

  1. பூந்தாது – மகரந்தத் தாள் மற்றும் சூலகம்.
  2. பெண்கள் தங்களது கண்களை மூடிக்கொண்டு மணலில் வட்டமாக ஒரு கோட்டை வரைவர். அதன் முதலும், முடிவும் ஒன்று கூடினால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதற்கு கூடலிசைத்தல் என்று பெயர். இதனை செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் ‘’மீள்வர் எனக்கருதிக் கூடல் விளைத்து அறவே கையில் அணைத்த மணல்’ (கடை திறப்பு தாழிசை 31) எனக் கூறுகிறார்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….