வானவல்லி முதல் பாகம்: 21 – காதலும் ஓவியமும்

புகாரின் ஏழடுக்கு உயர்ந்த பெரும் மாளிகை அது. பெருவணிகன் வேளாதனுக்கு உரியது. மாளிகை முழுதும் யவன விளக்குகளாலும், சிற்பங்களாலும், ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. மாளிகைத் தரை முழுதும் சீன தேசத்து கீதாம்பரப் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு வாசல் வரை எப்போதும் நீண்டிருக்கும். மாளிகையின் வெளிப்புறம் பல வண்ண மலர்கள் பூக்கும் அழகிய நந்த வனமும், அதன் மத்தியில் இருந்த தடாகத்தில் தாமரை மலர்களும், அல்லியும் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

நாளங்காடி

அந்தக் தடாகத்திற்கு அருகில் கரையோரம் பத்திரைத் தேவி தன்னை மறந்த நிலையில் திரைச் சீலையில் ஒரு ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தாள். பத்திரைத் தேவி அந்த ஓவியத்தை வரையும் போது அவளது முகத்தில் பல வித குதூகலமும் அச்சமும் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அவளது மாறிக்கொண்டிருக்கும் முக பாவனைகளிலிருந்து அவளது ஈடுபாட்டைத் தடாகத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்த வானவல்லி கவனிக்கவே செய்தாள்.

மாளிகையில் பல வீரர்களும், பணியாட்களும் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், நந்த வனத்திற்குச் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. பணிப் பெண்களுக்கு மட்டுமே அதனுள் செல்ல அனுமதி. இந்த நிலையில் தன்னை மறந்த நிலையில், முழு ஈடுபாட்டுடன் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த பத்திரைத் தேவியை நோக்கி விரைந்து வந்தாள் பணிப் பெண்ணொருத்தி.

பணிப் பெண் வந்த வேகத்தைக் கண்டே அவளது அவசரத்தை உணர்ந்த வானவல்லி, எங்கே அவள் சத்தமாகப் பேசி ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கும் பத்திரையை இடையூறு செய்து விடுவாளோ? என எண்ணி அவள் தூரத்தில் வந்துகொண்டிருந்த போதே ‘சத்தமெழுப்பாமல் வா’ எனச் சைகையின் மூலம் கட்டளையிட்டாள்.

அவளது சைகையின் கட்டளையை உணர்ந்த பணிப் பெண், எந்தவொரு சத்தமும் எழுப்பாமல் வானவல்லியின் காதுகளில் குசுகுசுவென  ஏதோ ஓதினாள். அவள் கூறியதைக் கேட்ட வானவல்லி, “அவர்கள் இருவரையும் இங்கு அழைத்து வா!” எனக் கட்டளையிட்டாள்.

அதற்குப் பணிப்பெண் “அம்மா, இங்கே ஆடவர்கள் வருவதற்கு மாளிகைத் தலைவர் வேளாதன் அவர்கள் தடை செய்துள்ளாரே!” என்றாள் அடக்கமாக.

பதிலுக்கு வானவல்லி, “அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். இருவரையும் இங்கே உடனே அழைத்து வா. மேலும் அவர்கள் உண்பதற்குப் பால் மற்றும் பழங்களையும் கொண்டு வா” என மெல்ல கட்டளையிட்டாள்.

டாள்தொபியாசிற்கும், திருக்கண்ணனுக்கும் எத்தனை முறை பெரு வணிகன் வேளாதனின் மாளிகைக்கு வந்தாலும், ஒவ்வொரு முறையும் ஆச்சர்யமே ஏற்படும். ஏனெனில், அது புகாரின் ஆடம்பர மாளிகையாக இருந்தாலும் அதே சமயம் அடக்கமான, அமைதியான மாளிகையும் கூட!

இருவரும் மாளிகையின் முன் தங்களது புரவியில் இருந்து இறங்குமுன்னே அவர்களை வரவேற்ற யவன காவல் வீரன் ஒருவன் அவர்களின் புரவிகளைப் பெற்று காவல் வீரர்களிடம் கொடுத்து புரவிக்  கொட்டகைக்கு அனுப்பிவிட்டு இருவரையும் மாளிகைக்குள் அழைத்துச் சென்றான்.

மாளிகையில் அவர்களை வரவேற்று உபசரித்தாள் பத்திரைத் தேவியின் பணிப் பெண்ணொருத்தி. அவர்களிடம் பேசியதிலிருந்து அவர்கள் பத்திரைத் தேவியைக் காணத்தான் வந்துள்ளனர் என்பதை அறிந்த பின்னரே அவள் அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு நந்தவனம் நோக்கி தகவலைத் தெரிவிக்கச் சென்றாள். வானவல்லியிடமிருந்து கட்டளையைப் பெற்றுக் கொண்டவள். மற்றொரு பணிப்பெண்ணிடம் “நான் இவர்களை நந்த வனத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நீ இவர்களுக்கு உண்ண பால் மற்றும் பழங்களை விரைவில் கொண்டு வா!” எனத் தெரிவித்துவிட்டு இருவரையும் நந்தவனத்திற்கு அழைத்துச் சென்றாள்.

உப தளபதிகள் இருவரும் தாமரைத் தடாகத்திற்குச் செல்லுமுன்பே பத்திரைத் தேவி ஓவியத்தை வரைந்து முடித்திருந்தாள். உபதளபதிகள் இருவரும் வந்ததைக் கண்ட பத்திரைத் தேவி பெரு மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தடாகக் கரையில் இருந்த ஆசனத்தில் அமரவைத்துவிட்டு பணிப் பெண்ணைத் திரும்பிச் செல்ல உத்தரவிடப் பணிப் பெண் அங்கிருந்து கிளம்பினாள்.

உபதளபதிகள் அமர்ந்ததும் அவள் கேட்ட முதல் கேள்வி “தலைவர் எங்கே? அவர் வரவில்லையா!” என்பதுதான்.

பதிலுக்குத் திருக்கண்ணன் “இல்லை தேவி. தலைவர் ஒரு முக்கியமான பணியை முன்னிட்டுச் சென்றுள்ளார். ஆதலால் அவரது கட்டளையை ஏற்று நாங்கள் உங்களைக் காண வந்துள்ளோம்!” என்றான்.

பத்திரைத் தேவி ஏதோ கூற வாயெடுத்தாள் ஆனால் அதற்குள் முந்திக்கொண்ட வானவல்லி, “தளபதிகளே, இன்று புகார் முழுக்க உங்களைப் பற்றிய பேச்சுகளாகத் தான் உள்ளது. சோழ மன்னனாக உறைந்தையில் தன்னை அறிவித்துக்கொண்ட இருங்கோவேளால் நியமிக்கப்பட்ட புதிய தலைவன் புகார்க் கோட்டைக்கு வந்து அதிகாரமிட்டு பின்னர் உங்களால் நையப் புடைத்து அனுப்பப்பட்டதே ஊர் முழுக்கப் பேச்சாக இருக்கிறது. உங்கள் மூவரது வீரத்திற்கும் சோழ தேசமே தலை வணங்குகிறது. யாரும் செய்யத் துணியாத காரியம் இது. ஆனால் நீங்கள் சோழ இளவலுக்காகச் செய்துள்ளீர்கள். உங்களைப் புகாரின் உப தளபதிகளாகப் பெற்றது இரும்பிடர்த்தலையர் என்றோ செய்த புண்ணியம்” என்றாள்.

“சகோதரி, இன்று எங்களது வாள் வீச்சு மற்றும் வீரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழுக் காரணம் எங்கள் தலைவர் தான். அவரை எங்களது தலைவராகப் பெற்றது நாங்கள் செய்த புண்ணியம். அந்தப் புண்ணியத்தின் பயன் தான் இந்தப் பாராட்டுக்கள்” என அடக்கத்தோடு பதிலளித்தான் டாள்தொபியாஸ்.

திடீரென்று டாள்தொபியாஸ், செங்குவீரன் பற்றித் தன்னிடம் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. டாள்தொபியாசிற்கு மறுமொழி ஏதும் கூறாமல் அமைதியான நிலையைக் கண்ட பத்திரை அவர்களிடம் பேசத் தொடங்கினாள்.

“நேற்று அவரைக் கண்ட பின் தான் எங்களுக்கு நிம்மதியே ஏற்பட்டது. நான் இருந்த பதற்றத்தில் அவருக்கு நன்றி கூற கூட மறந்துவிட்டேன். அண்ணா, நலமுடன் தானே உள்ளார்?” எனச் செங்குவீரனின் நலனைப் பற்றி விசாரித்தாள் பத்திரை.

பதிலுக்குத் திருக்கண்ணன், “அவர் நலமாகத் தான் உள்ளார், தேவி. ஆனால், அவரது மனச் சுமை தான் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அனைத்திற்கும் தீர்வு எப்போதுதான் ஏற்படுமோ தெரியவில்லை! நேற்றிரவு சம்பாபதி வனத்தில் காளனிடமிருந்து உங்களைக் காப்பாற்றி விட்டு வந்த பின்னர் அவர் இரவு முழுக்க நடந்து கொண்டே தான் இருந்தார். உறங்கவே இல்லை. ஏதோ, அவரால் இறக்கி வைக்க இயலாத சுமையால் தவித்துக் கொண்டிருக்கிறார்” என்றான்.

“அனைத்திற்கும் தீர்வு விரைவில் ஏற்படும். நானும், அப்படித்தான் நம்புகிறேன்!” எனப் பத்திரை கூறிக்கொண்டிருந்த போதே பணிப்பெண் அவர்களுக்குப் பால் மற்றும் பழங்களைக் கொண்டு வர சற்று அமைதியானார்கள். அவள் உடனே அங்கிருந்து செல்ல மீண்டும் அவர்களது உரையாடல்கள் தொடங்கின.

டாள்தொபியாஸ் வானவல்லியிடம் “சகோதரி, ஆனால் தலைவர்….” என்று ஏதோ கூற வாயெடுத்தான். உடனே வானவல்லி, டாள்தொபியாசிடம் “தளபதியாரே, இங்கு நான் உங்களை வரவேற்றது உங்கள் அறிவுரையைக் கேட்பதற்காக அல்ல. நீங்கள் இருவரும் எந்தக் காரியத்திற்காக வந்தீர்களோ!, அதற்கான பதில் அதோ அந்த ஓவியச் சீலையில் உள்ளது” என்றவள் எழுந்து சென்று பத்திரை வரைந்த ஓவியத்தைக் கொண்டுவந்து டாள்தொபியாஸ் முன் நீட்டினாள்.

சுருட்டியபடி இருந்த ஓவியச் சீலையை வாங்கிய டாள்தொபியாஸ் அந்தக் கண நேரம் திகைக்கவே செய்தான்.

டாள்தொபியாஸ் வானவல்லியிடம், “சகோதரி, நாங்கள் இருவரும் வந்த காரியம் பற்றி எதுவுமே இன்னும் கூறவில்லை. ஆனால் தாங்கள் வந்த காரியத்திற்கான பதில்  இந்த ஓவியத்தில் உள்ளது என்கிறீர்களே!” என ஆச்சர்யத்தோடு வினவினான்.

வானவல்லி அவனிடம், “ஓவியச் சீலையைப் பிரித்துப் பாருங்கள். நீங்கள் தேடி வந்தது அதில் தான் உள்ளது” என்றாள்.

உபதளபதிகள் இருவரும் ஓவியத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட வானவல்லி அவர்களிடம் “வீரர்களே, நேற்று தாக்குதல் நடத்திய காளனைப் பற்றி அறிந்துகொள்ளத் தானே நீங்கள் இருவரும் இங்கு வந்தீர்கள். வலது பக்கத் தோளில் கத்தி பாய்ந்து வலியால் துடிதுடித்தபடி நிற்கிறானே! அவன் தான் காளன். நேற்றைய உங்கள் தலைவரின் தாக்குதலில் மயிரிழையில் இருளைப் பயன்படுத்தித் தப்பி விட்டான். அவனுக்குத் தோளில் பெருங்காயம் ஏற்பட்டுள்ளமையால் இன்னும் சில தினங்களுக்கு அவனால் நடமாடவே இயலாது. அதற்குள் தேடிக் கைது செய்து விடுங்கள். இல்லையேல்! அவன் இங்கிருந்து தப்பினாலும் தப்பி விடுவான்” என்றாள்.

அவள் கூறியதை மிரட்சியோடுக் கேட்டுக்கொண்டிருந்த திருக்கண்ணன் வானவல்லியிடம், “நாங்கள் கள்வர்களின் தலைவன் காளனைப் பற்றித்தான் விசாரிக்க வந்தோம் என உங்களுக்கு எப்படித் தெரியும்?” என வினவினான்.

பதிலுக்கு வானவல்லி சிரித்துக்கொண்டே, “தளபதியாரே, எனக்கு உங்களது தலைவரைப் பற்றியும், அவரது கட்டளைகள் பற்றியும் நன்கு தெரியும்! அவர் ஏன் காளனைப் பற்றி விசாரிக்க என்னிடம் உங்களை அனுப்பாமல் பத்திரைத் தேவியிடம் அனுப்பினார் தெரியுமா? அனுப்பியதன் காரணம் உங்கள் கையில் இருக்கும் ஓவியம் தான். பத்திரைத் தேவி காணும் காட்சிகளை அப்படியே ஓவியமாகத் தீட்டிவிடுவாள் என்பதை அவர் அறிந்ததே. ஆதலால் தான் உங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளார். உங்களை எதிர்பார்த்தே நான் காலையிலேயே இங்கு வந்து பத்திரைத் தேவியை ஓவியம் தீட்டச் சொன்னேன். உங்கள் கையில் உள்ள ஓவியச் சீலையில் உள்ளவன் தான் காளன். உங்களது தலைவரின் கட்டளையை இந்திரத் திருவிழா தொடங்குவதற்கு முன்னரே நிறைவேற்ற முயலுங்கள்!” என்றாள்.

வானவல்லி செங்குவீரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தனது கூர்மையான அறிவால் தெரிந்து வைத்துள்ளதை எண்ணிய டாள்தொபியாஸ் தலைவருக்கு ஏற்றத் துணை வானவல்லிதான் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை என எண்ணி மகிழ்ந்தான்.

வானவல்லி இருவரிடமும், “நீங்கள் இருவரும் ஓவியச் சீலையை எடுத்துக்கொண்டு இங்கிருந்து கிளம்பலாம்” என்றாள்.

உடனே பதறிய பத்திரை வானவல்லியிடம், “நான் இந்த ஓவியத்தை அவர்களுக்கு வழங்க வரையவில்லையே!” என்றாள்.

“வேறு எதற்காக அந்த ஓவியத்தைத் தீட்டினாய்? உமது அறையில் வைத்து அழகு பார்ப்பதற்காகவா?” எனக் கோபமாகக் கேட்டாள் வானவல்லி.

வானவல்லியின் கோபத்தினைக் கண்ட பத்திரை, “இல்லை, இல்லை. அதற்காக இல்லை” என்றாள் சற்று அச்சத்துடனே.

“நீ அந்த ஓவியத்தைத் தீட்டும் போது உமது முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்தேன் பத்திரை. அகத்தின் ஆசையை முகம் காட்டிக் கொடுத்துவிடும். உமது எண்ணம் பைத்தியக்காரத் தனமானது. ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடு. இல்லையேல் என்னைப் போன்று…..” என ஏதோ கூற வந்தவள் பேசுவதை நிறுத்திவிட்டு இரண்டு உபதளபதிகளிடமும் “நீங்கள் இருவரும் செல்லலாம் வீரர்களே! உங்களைக் கண்டதில் பெருமகிழ்ச்சி” என்றபடியே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

ஓவியச் சீலையோடு அங்கிருந்து கிளம்புமுன் டாள்தொபியாஸ், “சகோதரி நான் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் தயைகூர்ந்து மன்னித்து விடுங்கள்” என்றபடியே அவனது இடையில் மறைத்து வைத்திருந்த ஒரு ஓலையை எடுத்து வானவல்லியிடம் கொடுத்துவிட்டு “நான் இதனைக் கொண்டு வந்தது தலைவருக்குத் தெரியாது. என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்” எனப் பணிவோடு கூறியபடியே அங்கிருந்து சென்றான்.

அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர், தரையைப் பார்த்துக் கொண்டிருந்த பத்திரையின் வதனத்தை உயர்த்திக் கலங்கியிருந்த அவளது கண்களைத் துடைத்தபடியே, “பத்திரை. இல்லையேல் நீயும் என்னைப் போன்று காதலை ஏற்கவும் துணியாமல், மறுக்கவும் துணியாமல் துடிதுடிக்க வேண்டியதிருக்கும். நமக்கெல்லாம் இந்தக் காதலே வேண்டாமடி! நீ என் உயிர்த்தோழி. உனது ஒவ்வொரு உடல் அசைவும், அதற்குண்டான பொருளும் எனக்கு அத்துப்படி. ஆதலால் தான் கூறுகிறேன், அவன் கள்வன். அவனைப் பற்றிய ஆசைகளை உனது மனதிலிருந்து தூர எறிந்துவிடு. அதுதான் நமக்கும் நல்லது. இந்தக் காதல் இருக்கிறதே. அது பொல்லாதது! தொடக்கத்தில் போதும் போதும் என நாம் மயங்கும் அளவிற்கு இன்பத்தை வழங்கும். ஆனால், அதுவே பின் நாம் நமது உயிரை விட்டுவிடலாமா! எனச் சிந்திக்கவைக்கும் அளவிற்குத் தாங்க இயலாத வலியை அளித்துவிடும். அது ஒரு நோய். தொடக்கத்தில் மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும். பின்னர் அனைத்தையும் மனதிற்கு நஞ்சாக்கி விடும்.

அவர்கள் தலைவரைப் பற்றிக் கூறினார்களே கேட்டாயா! தலைவருக்கு இப்போது நான் மட்டுமே பெரும் சுமை. அவரது துயர்களுக்கெல்லாம் நான் தான் காரணம். அவரைப் பிடித்துள்ள பெரும் வியாதியும் நான் தான். அவர் படும் துயரங்களை என்னால் கேட்க இயலாமல் தான் அவர்களை நான் ஏதும் கூற வேண்டாம், வந்த வேலையைப் பற்றி மட்டுமே பேசுங்கள் என்று கோபம் கொண்டது போன்று நடிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த அவஸ்தை உனக்கும் வேண்டாமடி!” என்ற வானவல்லியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக அவளை அணைத்துக்கொண்டாள் பத்திரை.

வானவல்லியின் கண்ணீரைத் துடைத்த பத்திரை அவளது எண்ணத்தைத் திசை திருப்பும் பொருட்டு, “உபதளபதி ஏதோ ஓலையைக் கொடுத்தாரே! என்ன ஓலை அது. வா வாசிக்கலாம்” என்றபடியே அவளது கையிலிருந்த ஓலையை வாங்கி வாசிக்கத் தொடங்கினாள்.

நேற்றிரவு, சம்பாபதி வனத்தினுள் வானவல்லி மற்றும் பத்திரையைக் காளனிடமிருந்து காப்பாற்றிய பின் பேரார்வத்தோடு வானவல்லியைக் காண செங்குவீரன் சென்றபோது அவள் அவனைக் காணாமல் பாராமுகமாய் மறைந்தாளே! அவன் திரும்பி தனது அறையில் மன வேதனையோடு எழுதிய கவி தான் அது. டாள்தொபியாஸ் கூடப் பெரும் வீரர்களைக் கூடக் கவிஞர்களாக மாற்றும் வல்லமை புகார் நகரப் பெண்களுக்கே உரியது என்றானே! அதே கவிதை தான்.

பத்திரை அதனை வாசித்தபின், வானவல்லியிடம் நீட்டினாள். அதை வாங்கிப் படித்த அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகவே செய்தது. கண்ணீரோடு பத்திரையிடம் தேம்பியபடியே கூறினாள். “இந்த வலி உனக்கு வேண்டாம் என்றே உன்னிடம் மனதில் எந்த ஆசைகளையும் வளர்த்துக்கொள்ளாதே என்றேன்” என்றாள் வானவல்லி.

அவளது கண்களில் ஆறாய் பெருகிய கண்ணீரைத் துடைத்த பத்திரை, “அம்மா என்னை வீட்டிற்கு அழைத்ததாகக் கூறினாயே! வா கிளம்பலாம். அம்மா நமக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்” என நந்த வனத்திலிருந்து வானவல்லியை அழைத்து மாளிகைக்கு வந்தவள்  தனது பணியாட்களிடம், “நாங்கள் இருவரும் மருவூர்ப் பாக்கம் கிளம்புகிறோம். முத்துச் சிவிகை தயாராய் இருக்கட்டும்!” எனக் கட்டளையிட்டபடியே வானவல்லியோடு மாளிகைக்குள் சென்றாள்.

சிறிது நேரத்தில் திரும்பிய வானவல்லி மற்றும் பத்திரைத் தேவி புறப்பட முத்துச் சிவிகையும் அதைத் தூக்க யவன பணியாளர்களும் தயாராய் இருந்தனர். பத்திரைத் தேவியிடம் வானவல்லி, “பத்திரை, முத்துச் சிவிகை ஏதும் தேவையில்லை. நாம் புரவி ரதத்திலேயே புறப்பட்டு வழியில் பௌத்த விகாருக்குச் சென்று புத்த தேவரையும் தரிசித்துவிட்டுச் செல்வோம்” எனக் கூற அதை ஆமோதிக்கும் வகையில் பத்திரைத் தேவியும் “அப்படியே ஆகட்டும் வானவல்லி” என்று கூற, சிவிகையைத் திருப்பி அனுப்பிவிட்டு இருவரும் புரவித்தேரில் பௌத்தவிகாரை நோக்கிக் கிளம்பினர்.

அவர்கள் இருவரும் வேளாதனின் பெருமாளிகையிலிருந்து கிளம்பியதைக் கண்ட சில வீரர்களும் அவர்களைப் பின்தொடர பத்திரைத்தேவி தனது காவல் வீரர்களின் என்றுமல்லாத விசித்திர செயலைக் கண்டு ஆச்சர்யமடைந்து வீரர்களிடம், “நான் உங்களைப் பின் தொடரக் கூறவே இல்லையே!” என வினவினாள்.

“பெரு வணிகர் உத்தரவிட்டுள்ளார், அம்மா!” என்றான் வீரனொருவன்.

“என்ன உத்தரவு?”

“தாங்கள் எங்கு சென்றாலும், தங்களது பாதுகாப்பினை உறுதி செய்யச் சில வீரர்கள் எப்போதும் உங்களுடன் செல்ல உத்தரவிட்டுள்ளார்!”

அவனது மறுமொழியைக் கேட்ட பத்திரை, “வீரர்களே உங்களது செயல் எள்ளி நகையாடும் வகையில் உள்ளது. புகார் நகரத்தில் எங்களது பாதுகாப்பிற்கு வீரர்களா? நேற்று இரவு பயணம் என்பதனால் கள்வர்களால் தாக்கப்பட்டோம். அதற்காகப் பகல் பொழுதுகளிலும் எனது பாதுகாப்பிற்கு வருவேன் என அடம்பிடிப்பது சரியல்ல. திரும்பிச் செல்லுங்கள்!” எனக் கட்டளையிட அவர்கள் பத்திரைத் தேவியின் கட்டளையை மறுக்க இயலாமல் மாளிகைக்குத் திரும்பினர்.

மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட தோழிகள் இருவரும் அவர்களது மனதில் உள்ள அந்தரங்க செய்திகளை மனம் விட்டுப் பரிமாறியபடி மகிழ்வுடன் பௌத்த விகாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

பௌத்த விகார் அமைந்திருந்த தெருவினை அடைந்த போது அந்தக் காட்சியைப் பத்திரைத் தேவிதான் முதன் முதலில் கண்டாள். அந்தக் காட்சியைக் கண்ட தன் கண்களை நம்பலாமா? அல்லது வேண்டாமா? எனப் பெரும் குழப்பத்துடன் தான் காண்பது மெய் தானா? என உறுதிசெய்து கொள்ள வானவல்லியிடம் சுட்டிக் காட்டினாள்.

பத்திரைக் காட்டிய திசையைக் கண்ட வானவல்லியின் கண்களில் ஆத்திரம் பெருகுவதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

தூரத்தில் விறல்வேல் விறலி பூங்கோதையை மார்போடு அனைத்துத் தூக்கி வந்தது தான் வானவல்லிக்கு பெரும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. சற்று முன்னர் விறல்வேல் மீது அவள் கொண்ட அன்பு, அவனுக்காக அவள் வடித்த கண்ணீர் என அனைத்தும் விறலியை சுமந்து வரும் விறல்வேலைக் கண்ட கணப் பொழுதில் மறைந்துவிட்டது.

ஊரிலே பெரும் பரபரப்புடன் காணப்படும் பௌத்த விகார முச்சந்தியில் விறலி ஒருத்தியை தூக்கியபடி சிரித்து, கொஞ்சி, குலாவிக்கொண்டு வரும் இந்த வெட்கங்கெட்ட மனிதர் மேலா சற்று முன் பாவம் எனப் பரிதாபப்பட்டோம். ஆண் மனம் குரங்கைப் போன்றது தானே! குரங்கு கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருப்பதைப் போல அவர்களது மனமும் அப்படித்தானே பெண்களிடம் தாவிக்கொண்டிருக்கும். அதை அறிந்திராத பேதையாக இருந்துவிட்டேனே! எனப் பலவாறு அவள் தனக்குள் நினைத்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ச்சீ, ச்சீ… பௌத்த விகாருக்கு முன் இப்படியா?” எனச் சத்தமிட்டுக் கூறியது பத்திரையின் செவிகளிலும் விழத்தான் செய்தது.

நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பினால் தாக்கப்பட்ட விறலியை விறல்வேல் தூக்கிக்கொண்டு வந்ததை எதிரில் வந்தவர்கள் அறிய வாய்ப்பில்லைதான். அம்பினால் தாக்கப்பட்ட விறலியின் விலாப்பக்கம் விறல்வேலின் மார்போடு அழுந்தியிருந்ததாலும், குருதி வெளியேறாவண்ணம் விறலியின் காயத்தை இறுகக் கட்டியிருந்ததாலும், கசிந்த குருதி அவளது உடலுக்கும், விறல்வேலின் மார்புக்கும் இடையில் இருந்ததனால் அவள் அம்பினால் தாக்கப்பட்டதை எதிரில் வந்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள இயலாது. மேலும் பூங்கோதை மூர்ச்சையாகிவிடக் கூடாது என விறல்வேல் சிரித்துக்கொண்டு அவளுடன் பேசிக்கொண்டே வந்ததும் அவள் தாக்கப்பட்டாளெனச் சிறிதும் சந்தேகத்தை எதிரில் வந்தவர்களுக்கு ஏற்படுத்தாது.

விறலியுடன் விறல்வேலைக் கண்ட மாத்திரத்திலேயே தனது நிதானத்தையும், பொறுமையினையும் இழந்து விட்ட வானவல்லிக்கு அவ்விடத்தில் சென்று விறல்வேலை விசாரிக்க இயலவில்லை. ஏனெனில் அவளது காதல் அப்படிப்பட்டது. விறல்வேல் தனக்கு மட்டுமே உரியவன் என எண்ணிக் கொண்டிருந்தவள், விறலியை சுமந்து வரும், அதுவும் சிரித்த படியே தூக்கி வரும் விறல்வேலைக் கண்ட போது அவளது மனதில் தேக்கி வைத்திருந்த காதல், அன்பு, நேசம் அனைத்தும் ஆத்திரமாய் வெளிப்படத் தொடங்கியிருந்தது.

அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடுதான்  “ச்சீ… ச்சீ…” என்ற வார்த்தைகள்.

வானவல்லியின் முக மாற்றத்தையும், அவளது கோபப் பார்வையையும் கண்ட பத்திரைத் தேவி, “வானவல்லி, அவசரப்பட்டு நீயாக எந்த முடிவிற்கும் வந்துவிடாதே! தலைவரது ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் காரணம் நிச்சயம் பொதிந்திருக்கும். நான் சென்று விசாரித்துவிட்டு வருகிறேன். கண்ட காட்சிகளை மட்டும் கண்டு நீ எந்தவொரு துயர சிந்தனைகளுக்கும் இடமளித்து விடாதே! கண்ணால் காணும் காட்சிகள் கூடச் சில நேரங்களில் பொய்யாகி விடும்.” என எச்சரித்தபடியே பௌத்தவிகாரை நோக்கி நடக்கச் சித்தமானாள்.

பதிலுக்கு வானவல்லி, “நீ வேண்டுமானால் இந்த மானங்கெட்ட செயலுக்கான காரணத்தை அறிந்து வா, நான் புறப்படுகிறேன். விரைவில் வந்து சேர்!” எனக் கூறியபடியே தன் மனதில் விறல்வேல் மீதுள்ள கோபத்தையெல்லாம் புரவி மீது காட்ட நான்கு புரவிகளும் நாற்பது கால் பாய்ச்சலில் மருவூர்ப்பாக்கத்தை நோக்கிப் பாய்ந்தன.

உடலெங்கும் குருதியில் நனைந்திருந்த விறல்வேலைக் கண்ட பத்திரை பெரிதும் அதிர்ச்சியடைந்துவிட்டாள். அவனது உடலில் படிந்திருந்த குருதி விறலியின் உடலிலிருந்து வெளிப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டவள் வாடிய முகத்துடன் நின்றிருந்த விறல்வேலிடம் பேசக்கூடத் துணியவிவில்லை. அவனது அருகில் நின்ற பரதவன் குமரனிடம் தலைவரின் இந்த நிலைக்குக் காரணம் யாதென வினவினாள்.

அதற்கு அவன் நேற்று வனத்தில் கிடைத்த விறலி மாலையிலிருந்து கணிகையர் விடுதி வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளிடம் ஒப்புவித்தான்.

அனைத்தையும் கேட்ட பத்திரைத் தேவி செயலற்று நின்ற விறல்வேலிடம் ஏதொ பேச வாயெடுத்தாள். அதற்குள் முந்திக்கொண்ட விறல்வேல், “அவள் எங்கே? சென்றுவிட்டாளா?” என அவனே கேள்வியையும் கேட்டு பதிலையும் கூறிக்கொண்டான்.

பதிலுக்குப் பத்திரை, “யார் வானவல்லியா?” என்றாள்.

“ஆமாம். அவளே தான்!”

தலையைத் தொங்க போட்டுக்கொண்டே பத்திரை “ஆமாம் அண்ணா. சென்று விட்டாள்.” என்றாள்.

சிரித்துக்கொண்டே “நல்லது தான்” எனப் பதிலளித்தான் விறல்வேல். அந்தச் சிரிப்பில் அவனது மனதில் இருக்கும் கவலைகள், போராட்டங்கள் என அனைத்தும் வெளிப்பட்டதைப் பத்திரையும் பரதவன் குமரனும் கவனிக்கத் தான் செய்தனர்.

“இப்போது விறலியின் நிலை எப்படியுள்ளது?” எனப் பரதவன் குமரனிடம் வினவினாள் பத்திரைத் தேவி.

“அவள் இருக்கும் அந்த நிலையைக் காண இயலாமல் தான் நாங்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டோம் தேவி” என்றான்.

“நான் சென்று பார்க்கலாமா?” எனப் பத்திரை கேட்க “தாராளமாகச் சென்று பாருங்கள்” எனப் பதிலளித்தான் பரதவன் குமரன்.

பௌத்த விகாருக்குள் சென்று பூங்கோதையைக் கண்ட பத்திரைத் தேவி விறலியின் தியாகத்தை எண்ணி ஆச்சர்யப் படவே செய்தாள். அந்த நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பு மட்டும் தலைவரைத் தாக்கியிருந்தால் அவரது நிலையையும், வானவல்லியின் நிலையையும் எண்ணிப் பார்த்தவளுக்கு விறலியின் தியாகத்திற்கு ஈடாக அவளது கண்களில் கண்ணீர்த் துளிகளை மட்டுமே உதிர்க்க முடிந்தது.

விறலியின் கண்கள் பாதி மட்டுமே திறந்திருந்தது. அவளது உடலெங்கும் நஞ்சின் தாக்கம் அதிகமாகி நீல நிறம் ஏறி முற்றிலும் மூர்ச்சையடைந்து நினைவிழுந்து படுத்த படுக்கையாகக் கிடந்தாள்.

அவளைச்சுற்றி சில பவுத்த மருத்துவர்கள் நின்று மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களுள் ஒருத்தி அவளது கண்களில் மருந்தை துளித்துளியாய் செலுத்திக்கொண்டும், காயம்பட்ட இடத்தில் பச்சிலையைக் கட்டிக் கொண்டும் இருந்தாள். அங்கு இருந்தவர்களுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்த ஒரு முதிர்ந்த பௌத்த தேரரிடம் சென்ற பத்திரைத் தேவி விறலி பூங்கோதையின் உடல் நிலையைப் பற்றிப் பணிவுடன் விசாரித்தாள்.

“குழந்தாய், உமது கவலை எங்களுக்குப் புரிகிறது. இந்த நஞ்சு மிக மிகக் கொடியது. கடந்த கிழமைதான் எங்களது மருத்துவர்கள் இந்த நஞ்சை முறிக்கும் மூலிகைச் செடியைக் கண்டறிந்தார்கள். ஆதலால் இந்த நஞ்சோடு எங்களால் போராட இயலுகிறது. இல்லையேல் இந்நேரம் இவளது உயிர் இவளது உடலிலிருந்து பிரிந்திருக்கும். மூலிகையின் வீரியத்தை விட நஞ்சின் வீரியம் அதிகமாக உள்ளது. ஆதலால் எங்களால் இப்போது போராடவே இயலும். இன்னும் சில பௌர்ணமி காலம் கழிந்தால் மட்டுமே இவளது நிலையை உறுதியுடன் கூறலாம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அனைத்தும் புத்த பகவானின் அருளில் தான் உள்ளது. புத்தரது அருளே இப்போது இக்குழந்தைக்குத் தேவை” எனக் கூறியபடியே அங்கிருந்துக் கிளம்பினார் அந்தப் பவுத்த தேரர்.

படுக்கையில் கிடந்த பூங்கோதையின் கைகளைப் பிடித்துப் புத்த பகவானின் அருள் கிடைக்கும்படி வேண்டினாள். விறலியின் நிலையைக் கண்ட பத்திரைத் தேவியாலும் அங்கு இருக்க இயலாமல் வெளியே நின்ற விறல்வேல் மற்றும் பரதவன் குமரனிடம் வந்தாள்.

வெளியே வந்தவள், இருவரிடமும் “நான் நடந்த நிகழ்வுகள் மற்றும் விறலியைப் பற்றி வானவல்லியிடம் தெரிவிக்கிறேன்” என்றபடியே தனது புரவி ரதத்தை நோக்கினாள். வானவல்லி ஆத்திரத்தில், அவசரமாகத் தனது ரதத்தில் சென்றுவிட்டது, அப்போது தான் அவளது நினைவிற்கு வந்தது.

அந்தப் பங்குனி வெயிலையும் பொருட்படுத்தாமல் வானவல்லியின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள் பத்திரைத் தேவி.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….