ராஜராஜன் ஏன் ‘த கிரேட் ராஜராஜன்’ எனப்படுகிறான்?

ந்தாவது படிக்கும்போது தஞ்சாவூருக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். வாழ்வில், சுற்றுலா எனும் பெயரில் ஊர் சுற்றுவதற்கு வெளியூர் சென்ற முதல் பயணம் அதுதான். நாங்கள் சென்ற பேருந்து தஞ்சாவூர் எல்லையை அடைந்தபோது தொலைவில் தெரிந்த கோயில் விமானத்தைச் சுட்டிக்காட்டி, ‘இதுதான் பெரியகோயில் விமானம்’ என்று யாரோ குரல் கொடுக்க ஒரே நேரத்தில் பேருந்தில் பயணித்த அனைவருமே ஜன்னல் வழியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தோம். மனதுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தஞ்சை எல்லையிலிருந்து கோயில் நுழைவாயிலை அடையும் வரை பார்வை கோயில் விமானத்தை விட்டு அகலவில்லை. பேருந்திலிருந்து இறங்கியதுமே நாங்கள் அனைவரும் ‘ஓஓஓஓ’வென்று கத்திக்கொண்டு கோயிலுக்குள் ஒரே நேரத்தில் ஓடினோம். கேரளாந்தகன் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்று கோயிலைப் பார்த்தபோது மனதுக்குள் ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. மனதில் இன்னதென்று இணங்கான முடியாத உணர்வு தோன்றியது. அதுவரை பிரமாண்டம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருந்தோமேயொழிய, அந்தச் சொல்லுக்கான பொருளை உணர்ந்ததில்லை. தஞ்சைப் பெரிய கோயிலை முதன் முதலில் கண்டபோதுதான் ‘பிரமாண்டம்’ எனும் சொல்லின் பொருளை உளப்பூர்வமாக உணர்ந்தோம் நாங்கள் அனைவரும்.

வானளாவ உயர்ந்து விளங்கிய கோயிலையும், அதில் காணப்பட்ட தேன் கூடுகளையும் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த எங்கள் ஆசிரியர், ‘இதுதான் பெரிய கோயில், இதைக் கட்டியவன் த கிரேட் ராஜராஜ சோழன்’ என்று தெரிவித்து கோயிலைப் பற்றியும், ராஜராஜனைப் பற்றியும் விவரிக்கத் தொடங்கினார். ராஜராஜன் மீதும், தஞ்சைப் பெரிய கோயில் மீதும் அப்போது ஏற்பட்ட வியப்பு, பிரமிப்பு இன்று வரைத் தொடர்கிறது.

முதல் முறை செல்லும்போது மட்டுமல்ல; எத்தனை முறை சென்றாலும் ‘இறைவன் மிகப்பெரியவன், அவன் நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன், பிரமாண்டமானவன்’ எனும் உணர்வை நமக்கு வரவழைத்துவிடும் தஞ்சை பெரிய கோயில். அந்நியர்களான மாலிக்குகள், நவாப்கள், சுல்தான்கள் ஆகியோர் பல முறைப்  படையெடுத்து கோயிலைச் சூறையாடியிருக்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் பீரங்கிகளைக் கொண்டு தகர்க்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களாக எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைக் கடந்திருக்கிறது பெரிய கோயில். இத்தனை இடர்களையும் கடந்து அன்று எப்படிப் பிரமிப்புடன் காணப்பட்டதோ அதே பிரமிப்புடன் இன்றும் நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோயில்.

இன்று, தஞ்சை பெருவுடையார் கோயிலை ‘பெரிய கோயில்’ என்கிறோம். இன்று மட்டுமல்ல, அன்றும் தஞ்சை பெருவுடையார் கோயில் தான் பெரிய கோயில். கோயில் கட்டி முடிக்கப்பட்டபோது (கி.பி 1010) இந்தியாவில் இருந்த உயரமான கோயில் தஞ்சைப் பெரிய கோயில் தான் என்றால் மிகையாகாது. அதுவரை யாராலும் கற்பனையில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதபடி, தான் வணங்கிய  ஈசன் குடியிருக்கும் கயிலாயத்துக்கு இணையான பெருங்கோயில் எடுப்பித்துச் சிறப்பு செய்தவன் ராஜராஜன். தென்னகத்தின் கயிலாயம் தஞ்சைப் பெரிய கோயில்.

ஒவ்வொரு கல்லிலும் கலை நயத்தைப் புகுத்தி, ஒவ்வொரு சிற்பமும் கதைகளைக் கூறும்படி வடித்திருக்கிறார்கள் சிற்பிகள். இரண்டு அல்லது  மூன்று தலங்கள் மட்டுமே கொண்டு கோயில் கட்டப்பட்டுவந்த காலத்தில், பெயரளவுக்குக் கூடக் கருங்கற்கள் கிடைக்காத வயல் வெளிகளும் வாய்க்கால்களும் நிறைந்த தஞ்சை சமவெளிப் பகுதியில் 13 அடுக்குகளை உடைய 216 அடி உயரமுள்ள கோயில் விமானத்தை எழுப்பி அனைவரையும் அதிசயிக்கச் செய்தான் ராஜராஜன். எகிப்து பிரமிடுவின் கட்டுமானமும், தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமானமும் ஒரே மாதிரியானவை என்பது கட்டுமானப் பொறியாளர்களின் கருத்து. இரண்டுமே கற்களை ஒன்றன் மீது மற்றொன்றை இண்டர் லாக் அமைப்பு மூலம் அடுக்கி கட்டப்பட்டவை.

உலக அதிசயம் எனக் கருதப்படும் தாஜ்மகாலைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆயின. பைசா நகர சாய்வு கோபுரத்தைக் கட்டி முடிக்க 174 வருடங்கள் ஆனது. ஆனால், அது இன்றும் சாய்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், கற்களே கிடைக்காத தஞ்சைத் தரணியில் புவியின் அச்சிலிருந்து இம்மிளவு கூட சாய்ந்திருக்காத தஞ்சைப் பெரிய கோயிலை சுமார் ஏழே வருடத்தில் கட்டி உலகையே ஆச்சரியப்படச் செய்திருக்கிறான் ராஜராஜன்.

உலகே வியக்கும்படியான கோயிலை எழுப்பிய ராஜராஜன் தனது பெயரை மட்டும் முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் அனைவரின் பெயரையும் கோயிலில் கல்வெட்டுகளாகப் பொறித்து ஆவணப்படுத்தியிருக்கிறான். இதற்குச் சான்றாக ’நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்’ எனத் தொடங்கும் கல்வெட்டில் கோயிலுக்கு பொன் கொடுத்தவர்கள், மதில் சுவர் எழுப்பியவர்கள், நிவந்தமாக ஆடு கொடுத்தவர்கள், வாழைப்பழம் அளித்த மூதாட்டி என்று அனைவரின் பெயரையும் பொறிக்கச்செய்திருக்கிறான்.

‘இந்தக் கோயில் என்னால் மட்டும் கட்டப்பட்டது இல்லை. அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் கோயிலுக்கு யார் என்ன கொடுத்தாலும் கொடுக்கும் பொருளையும், கொடுப்பவர் பெயரையும் கல்வெட்டில் எழுதி விடுங்கள். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஏழையோ, பணக்காரனோ, மறவனா, வேளாளனா சோழ அரசாங்க ஊழியனா என்பது முக்கியமில்லை. அவரும் சிவபெருமானின் பக்தன் தான். அவன் கொடுப்பதும் இறைவனுக்குக் காணிக்கையே. இறைவன் சிறியவன் பெரியவன் எனும் பாகுபாட்டைக் காண மாட்டான். அப்படி தான் அவனுக்குச் சேரும் காணிக்கைகளும்’ என்பதை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன கோயில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டுகள்.

ராஜராஜன் பெரிய கோயிலை மட்டும் எழுப்பாமல், பல்வேறு கோயில்களைக் கட்டித் திருப்பணி செய்திருக்கிறான். நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தான். உண்மையான வெற்றி வரலாற்றை ‘மெய்க் கீர்த்தி’ எனும் பெயரில் எழுதத் தொடங்கியவன் ராஜராஜன் தான். சோழ நாடுகளை வளநாடு, கூற்றம், ஊர் என்று நிர்வாக ரீதியாகப் பிரித்து நிர்வாகத்தை சீர்படுத்தியவன் அவன் தான். தமிழகத்தில் நிலங்களை அளந்து நன்செய், புன்செய் நிலம் எனப் பிரித்து வரி வசூலை முறைப்படுத்தியவன் ராஜராஜனே. அதனால் தான் ராஜராஜனை வரலாற்று ஆய்வாளர்கள் ‘த கிரேட் ராஜராஜன்’ என்று புகழ்கிறார்கள்.

பெரிய கோயிலில் ஒரு வாசகம் அடங்கியிருக்கும். ‘சூரியர், சந்திரர் உள்ளவரை இந்தக் கோயில் நிலைத்திருக்கும்’ என்று. சூரியர் சந்திரர் உள்ளவரை பெரிய கோயில் தரணியில் நிச்சயம் நிலைத்திருக்கும்.  அதே போன்று பெரிய கோயில் நிலைத்திருக்கும் வரை ராஜராஜனின் பெயரும் நிச்சயம் நிலைத்திருக்கும்.

வானவல்லி புதினத்தை வாசிப்பதற்கு…