ஒரே கிராமத்தில் 33 கோயில்கள்… பெரும்பேர் கண்டிகை அதிசயம்!

0

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது நமது முன்னோர் வாக்கு. தமிழக கிராமங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்தத் தெருவுக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு கோயிலைத் தரிசித்துவிடமுடியும். ஆனால், நடந்துசென்றால்கூட அரைமணி நேரத்தில் ஊரைச் சுற்றி வந்துவிடக்கூடிய மிகச்சிறிய ஒரு கிராமத்தில் 33 கோயில்கள் இருக்கின்றன என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. ஆன்மிக மணம் கமழும் பெருமைக்குரிய அந்தக் கிராமத்தின் பெயர் பெரும்பேர் கண்டிகை.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சரபாக்கத்திலிருந்து 4 கி.மீ தொலைவு பயணித்தால் இந்தக் கோயில் கிராமத்தை அடைந்துவிடலாம்.

தான்தோன்றீஸ்வரர் கோயில்

பெரும்பேர் கண்டிகைக்கு மேற்குத் திசையில் `பெரும்பேர் ஏரி’ அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சுற்றியிருக்கும் வயல்வெளிகளுக்கு இந்த ஏரிதான் நீராதாரம். இந்த ஏரியின் கரையில் வயல்வெளிகள் சூழ அமைந்திருக்கிறது `தான்தோன்றீசுவரர்’ கோயில். பெரும்பேர் கண்டிகையில் காணப்படும் கோயில்களில் பிரதானமானது இந்தக் கோயில்தான்.

இங்குக் காணப்படும் லிங்கம், மணலால் ஆன சுயம்பு லிங்கத் திருமேனி. அதனால்தான் இறைவனார், `தான்தோன்றீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். செப்புக் கவசம் இறைவனுக்கு அணிவிக்கப்பட்டு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. அம்மன் `தடுத்தாட் கொண்ட நாயகி’ என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறாள். மேலிரு கரங்களில் அங்குசம் – பாசம் தாங்கியும் கீழிரு கரங்களில் அபய – வரத முத்திரைகளைத் தாங்கியும் பக்தர்களுக்கு அருள் புரிந்துகொண்டிருக்கிறாள். இந்தத் தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை கல்வெட்டுகள், `பெரும்பேறூர் ஆளுடையார் ஸ்ரீ கரணீசுவரமுடையார்’ என்றும், `திருத்தாந்தோன்றி மகா ஸ்ரீ கரணீசுவரமுடையார்’ என்றும் குறிப்பிடுகின்றன. சோழர் காலக் கற்றளி இது. வீரராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தக் கோயில் கல்வெட்டுகளில்தான், பெரும்பேர் கண்டிகையைப் பற்றியும், அதன் வரலாற்றுச் சிறப்பைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.

சித்தர் கோயில்கள்

இந்தக் கிராமம் `பெரும்பேறூர்’ என்றே கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் `பெரும்பேறூரான திரிபுவன நல்லூர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. கிராமத்தின் நுழைவு வாயிலில் உள்ள கயிலாசநாதர் கோயிலின் 16 – ம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டொன்றில் `பெரும்பேறு பாளையம்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. சோழர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்குக் கீழடங்கிய ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்களத்துக்கு உட்பட்ட கிராமமாக இது இருந்திருக்கிறது.

பழையோள்

ஒரு காலத்தில் சோழர்களின் குதிரைப் படை இந்த ஊரில் பாடி அமைத்துத் தங்கியிருந்ததாக செவி வழி செய்தி நிலவுகிறது. குதிரைப்படையினர் தங்கியிருந்ததால் இந்தக் கிராமத்துக்கு `கண்டிகை’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். `கண்டி’ என்றால் `மந்தை’ என்றும் பொருள்; `கண்டிகை’ என்றால் `கழுத்தணி’ என்றும் `நிலப்பிரிவு’ என்றும் பொருள்.

பெரும்பேர் கண்டிகை முருகன் கோயில்

பெரும்பேர் கண்டிகைக்குப் பேறு சேர்க்கும் வகையில் சஞ்சீவி மலையின் மீது சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்திருக்கிறது. சூர சம்காரத்தை முடித்த கையோடு முருகப் பெருமான் சிவபெருமானுடன் அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தருளிய தலம் இது என்று கோயில் தல புராணம் கூறுகிறது. இன்றும் ஒவ்வொரு சித்திரை பௌர்ணமி தினத்தன்றும் முருகன், அருகிலிருக்கும் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரரை அழைத்து வந்து அகத்தியருக்குக் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் கோயிலில் முருகனின் வேலாயுதம் `சக்தி வேலாயுதம்’ எனும் பெயரில் வழிபடப்படுகிறது. சத்ரு சம்கார எந்திரமும் கோயிலில் இருக்கிறது. சத்ரு சம்கார யாகம் செய்தால் சத்ருக்களால் ஏற்படும் எம பயம் விலகும் என்பது நம்பிக்கை.

சக்தி வேல்

சஞ்சீவி மலையடிவாரத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்திருக்கிறது. பல்லாயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறாள் இந்தக் கோயிலில் அருள்புரியும் ரேணுகா தேவி. பக்தர்கள் வேண்டிய வரத்தை அளிப்பதில் கொடையுள்ளம் கொண்டவள் இவள்.

ஊர் நுழைவாயிலில் கயிலாசநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. செண்பகவல்லி தாயார் கயிலாசநாதருடன் காட்சி அளிக்கிறாள். இந்தத் தலத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் பஞ்சமுக சங்கு ஒன்றும் காணப்படுகிறது. ஆனால், இந்தக் கோயில் சிதிலமடைந்து இருக்கிறது. இதைப்போன்றே நிறைய கோயில்கள் சிதிலமடைந்து வழிபாடில்லாமல் கிடக்கின்றன இந்தக் கிராமத்தில். இந்தக் கிராமத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் தெருவில் பழைமையான பல்லவர் கால கொற்றவை மற்றும் ஜ்யேஷ்டா தேவியின் சிலைகளும் காணப்படுகின்றன.  பெரும்பேர் கண்டிகையில் காணப்படும் பழைமையான வழிபாட்டுச் சின்னங்கள் இவை.

மூத்த தேவி

பெரும்பேர் கண்டிகையில் சிறிதும் பெரிதுமாக 33 கோயில்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை வழிபாடின்றி சிதிலமடைந்தே இருக்கின்றன. முறையாகப் பராமரித்தால் பெரும்பேர் கண்டிகை கிராமம் தமிழகத்தின் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்கும்!

நடவடிக்கை எடுப்பார்தான் யார் என்று தெரியவில்லை.