கேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory

0

ரவு முழுவதும் பெய்த பெருமழையால் ஆறுகளிலும், ஒடைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கரைகளைத் தொட்டபடி சேற்றுடன் மங்கலாகப்  பாய்ந்து கொண்டிருந்த ஆற்றையே பார்த்தபடி ‘கடக்கலாமா வேண்டாமா’ என்ற நினைப்புடன் விடிந்ததிலிருந்து வெகு நேரமாக நின்றுகொண்டிருந்தன பசுவும் அதன் கன்றும்.

Motivation Story
பசு கதை PC: pinterest

‘ஆற்றின் நீர் வடியும் அதன் பிறகு கடக்கலாம்’ என்று நினைத்தபடி காத்துக் கொண்டிருந்த பசுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேரம் வேகமாகக் கடந்துகொண்டிருந்தது. ஆற்றின் நீர் சிறிதளவு கூட வடியவில்லை. அப்பொழுது அங்கு வந்த கீரிப் பிள்ளை ஒன்றிடம், “இந்த ஆற்றைக் கடக்கலாமா?” என வினவியது பசு.

உடனே கீரிப் பிள்ளை, “இந்த ஆறு பொல்லாதது. இரக்கமே இல்லாதது. நேற்று  என் மனைவியுடன் இந்த ஆற்றைக் கடக்க முயன்றேன். என் மனைவியை இந்த ஆறு அடித்துக்கொண்டு சென்றுவிட்டது” எனப் பதில் அளித்துவிட்டு அது பாட்டுக்குச் சென்றது.

பசு சோர்வுடன் அந்த ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தது. திரும்பிச் செல்லலாமா என் நினைத்த வேளையில் அந்த வழியே கழுதை ஒன்று வந்துகொண்டிருந்தது.

கழுதையிடம் கேட்டது பசு. “இந்த ஆற்றைக் கடக்கலாமா என்று?”

கழுதைச் சிரித்தபடி, “என் முழங்கால் அளவுக்குக் கூட ஆழம் இருக்காது இந்த ஆறு. தயங்காமல் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டது.

கழுதை கூறியதைக் கேட்டதும் நம்பிக்கை பெற்ற பசு தனது கன்றுடன் நதியைக் கடக்கத் தொடங்கியது.

அப்பொழுது பின்னால் இருந்து, “நில்லுங்கள்… நில்லுங்கள்…” என்ற குரல் எழ திரும்பிப் பார்த்தது பசு.

அங்கே இரு காட்டுப் பன்றி ஒன்று ஓடி வந்துகொண்டிருந்தது. ஓடி வந்த காட்டுப்பன்றி, “இந்த ஆறைக் கடக்க முயற்சிக்காதீர்கள். என் குழந்தைகள் ஐவரை இந்த ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்களாவது தங்களது கன்றைக் காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு அழுதபடி சென்றது.

பசு தயக்கத்துடன் தனது கன்றினைப் பார்த்து, “இன்னொரு நாள் நாம் நதியைக் கடந்து அக்கரைச் செல்வோம்” எனக் கூறிவிட்டுத் திரும்பியது.

அப்பொழுது அவர்களை எதிர்கொண்ட குதிரை ஒன்று, “என்ன பசு அண்ணா திரும்பி வரீங்க?” என்று வினவியது.

“ஆற்றில் நீர் வேகமாகப் பாய்கிறது. அதனால் தான் திரும்பி வருகிறோம்” எனப் பதில் அளித்தது.

“என் கூட வாங்க. நான் தங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறிய குதிரை முன்னால் சென்றது. அப்பொழுது பசு, “இந்த ஆற்றைக் கடக்க முயன்ற கீரிப்பிள்ளை தன் மனைவியையும், காட்டுப் பன்றி தனது குழந்தைகளையும் இழந்துவிட்டது. என் கன்றினை நான் இழக்கத் தயாரில்லை” என அச்சத்துடன் பதில் அளித்தது.

அப்பொழுது உரக்கக் கனைத்த குதிரை, “பசு அண்ணா… கீரிப் பிள்ளை உங்க கணுக்கால் உயரத்திற்குக் கூட இருக்காது. காட்டுப் பன்றி உங்க முழங்கால் உயரத்திற்கு கூட இருக்காது. கொஞ்சம் யோசிங்க அண்ணே. கீரிப்பிள்ளை, காட்டுப் பன்றியால முடியவில்லை என்றால் தங்களால் முடியாதா? தங்களது பலத்தை எதற்காகா தங்களைவிட வலிமை குன்றியவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்?” என்றபடி குதிரை ஆற்றை நோக்கி சென்றது.

தனது தவறை உணர்ந்த பசுவும் தனது வலிமையை அறிந்து தனது கன்றினை அழைத்துக்கொண்டு பத்திரமாக ஆற்றினைக் கடந்து அக்கரையை அடைந்தது.

இந்த பசுவைப் போன்றுதான் நாமும் ஒரு செயலை முயற்சித்துப் பார்ப்பதற்கு முன்பே பலரிடம் கருத்துக்கேட்டு பின்வாங்குகிறோம். எந்தச் செயலைச் செய்ய வேண்டுமானாலும் நமது வலிமையுடன் ஒப்பிட்டு நம்பிக்கையுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்போம்.

‘முடியாது’ என்று மற்றவர்களால் தெரிவிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் யாரோ ஒருவரால் செய்து முடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

மற்ற கதைகளை வாசிக்க…