சுக்குநூறாகிப் போன தன் கண்டுபிடிப்பு… உடைத்த உதவியாளரை என்ன செய்தார் எடிசன்! #FeelGoodStory

மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. தீப்பந்தங்களும், எண்ணெய் விளக்குகளும், வாயு விளக்குகளும் மட்டுமே இரவு  நேரத்தில் எரிந்து, இருளை விரட்டுவதற்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்த காலம் அது. மின் சக்தியில் தொடர்ந்து ஒளிரும் விளக்கினைக் கண்டுபிடிப்பதற்காகப் பலர் முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன். இந்த கதை தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றிய கதை இல்லை. அவரது உதவியாளர் வில்லியம் ஜோசப் ஹாம்மருடைய  (William Joseph hammer) கதை.

எடிசன்

‘தொடர்ந்து ஒளிரும்’ மின் விளக்கினைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எடிசனும் அவரது உதவியாளர் வில்லியமும் தீவிரமாக முயன்று கொண்டிருந்தார்கள். மின் விளக்கை அவர்கள் ஒளிரச் செய்ய பயன்படுத்திய பல்வேறு இழைகளும் கண நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தன. மின் விளக்கில் ஏற்பட்ட அதீத வெப்பத்தில் உருகின. எடிசனும், அவரது உதவியாளரும்  நூற்றுக்கணக்கான உலோகங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனை செய்து தோற்றுக் கொண்டிருந்தனர். சுமார், ஆயிரம் தொடர் தோல்விகளுக்குப் பிறகு இருவரும் ‘கார்பன் இழை’யைப் பயன்படுத்தி மின் விளக்கினைத் தொடர்ந்து எரியச் செய்து வெற்றி பெற்றார்கள்.

மின் விளக்கு தொடர்ந்து எரிந்தது… எடிசன், அவரது உதவியாளர் வில்லியம் ஜோசப் ஹாம்மர் மற்றும் சக உதவியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மின் விளக்கில் உருவான அதீத வெப்பத்துக்கு ஈடு கொடுத்து கார்பன் இழை மட்டுமே தொடர்ந்து ஒளிர்ந்துகொண்டிருந்தது. உலக விஞ்ஞானிகள் அனைவரும் ‘தொடர்ந்து ஒளிரும்’ மின் விளக்கை உருவாக்கவே முடியாது என்று கூறிக்கொண்டிருந்த வேளையில் எடிசன் குழுவினர் மின் விளக்கினைக் கண்டுபிடித்து பெரும் சாதனை நிகழ்த்தியிருந்தார்கள்.

தனது நண்பர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளை அழைத்து மின் விளக்கினைத் தொடர்ந்து எரிய வைத்துக் காட்ட வேண்டும் என்று விரும்பிய எடிசன் அனைவரையும் அழைத்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அவரது அழைப்பை ஏற்று விஞ்ஞானிகள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் கூடினார்கள். அவர்கள் முன்னிலையில் எடிசன் தனது புது கண்டுபிடிப்பைக் கூறி ஆச்சரியப்படுத்தினார். அந்தத் தொடர்ந்து மின் விளக்கை அனைவர் முன்னிலையிலும் தொடர்ந்து ஒளிரச் செய்து காட்டப் போகிறேன் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை எதிர்பார்த்திராத சக விஞ்ஞானிகள் அனைவரும் ஆச்சரியப்பட்டு அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது தனது முதன்மை உதவியாளரான வில்லியம் ஜோசப் ஹாம்மரை அழைத்த எடிசன் புதிதாக வடிவமைக்கப்பட்ட மின் விளக்கினைக் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிட்டார்.

எடிசனின் உதவியாளரும் அந்த மின் விளக்கினைக் கொண்டுவந்தார். உலகில் தொடர்ந்து எறிந்த முதல் மின் விளக்கு அது. பல விஞ்ஞானிகளின் கனவாக விளங்கிய அந்த மின் விளக்கினைக் கொண்டுவந்த போது அவரது கைகள் தானாக நடுங்கின. பதற்றத்திலும், கை நடுக்கத்திலும் கையிலிருந்த மின் விளக்கினைத் தவறவிட்டுவிடுவார். கீழே விழ்ந்த மின் விளக்கு சுக்கு நூறாக உடைந்தது. கூடியிருந்த விஞ்ஞானிகள் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அந்தக் கணத்தில் உடைந்துபோனார்கள்..

எடிசனின் புகழைக் காலத்துக்கும் நிலை நிறுத்தும் என்று கருதப்பட்ட அந்த மின் விளக்கு அனைவர் கண் முன்னும் உடைந்து கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அனைவருக்கும் கோபம் தலைக்கேறியது.

அந்தச் சூழலிலும் எடிசன் கோபம் கொள்ளாமல், “மற்றொரு நாள் சந்திப்போம்” என்று கூறி அனைவரையும் அனுப்பி வைப்பார்.

மீண்டும் மற்றொரு மின் விளக்கினை உருவாக்கியபிறகு எடிசன் அனைவரையும் விருந்துக்கு அழைப்பார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் முதல் மின் விளக்கை உடைத்த அதே வில்லியம் ஜோசப் ஹாம்மரை அழைத்து, “மின் விளக்கைக் கொண்டு வா” என்று கட்டளையிடுவார்.

கூட்டத்திலிருந்தவர்கள் அனைவரும், “ஏற்கெனவே செய்த விளக்கை உடைத்தவர் இவர். இவரை எதற்காக மீண்டும் விளக்கினைக் கொண்டு வரச் சொல்கிறீர்கள்? நானாக இருந்தால் இவரை அப்போதே வேலையை விட்டு அனுப்பி வைத்திருப்பேன்” என்று  கோபத்துடன் கத்தினார்கள்.

இன்முகத்துடன் எடிசன் தனது உதவியாளரான வில்லியம் ஜோசப் ஹாம்மரையே மின் விளக்கை அனைவர் முன்னிலையிலும் சோதனையிடச் சொல்வார். இந்த முறை வில்லியம் ஜோசப் ஹாம்மர் பத்திரமாக விளக்கினைக் கொண்டுவந்து அதை வெற்றிகரமாகவும் எரிய வைப்பார். கூட்டத்தினர் அனைவரும் உலகில் முதல் முறையாக எரிந்த அந்த விளக்கினைக் கண்டு ஆச்சர்யத்துடன் கைதட்டி ஆரவாரமிட்டார்கள்.

அப்போது எடிசன், “எனக்கு வில்லியம் ஜோசப் ஹாம்மரைப் பற்றி நன்கு தெரியும். எனது சோதனைகள் அனைத்திலும் உடன் இருந்தவர். இந்த மின் விளக்கினை உருவாக்குவதற்கு இரவு பகல் பாராமல் என்னுடன் உழைத்தவர். கடந்த முறை அவர் மின் விளக்கினை உடைத்தது பதற்றத்தினாலும், எதிர்பாராமலும் நடந்த நிகழ்வு. இந்த முறை நான் வேறு ஒருவரை அனுப்பி வைத்திருந்தால் வில்லியம் ஜோசம் ஹாம்மர் குற்றமிழைத்தவரைப் போன்றவராகியிருப்பார். விளக்கு உடைந்தால் மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், அவரது மனம் உடைந்து தன்னம்பிக்கை சிதறினால் எதனாலும் ஒட்டவைக்க முடியாது” என்று நிதானமாகப் பதில் அளிப்பார்.

வந்திருந்தவர்கள் அனைவரும் எடிசனுக்குப் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த குணம் எது என்று அறிந்துகொண்டார்கள். எடிசனால் அன்று மன்னிக்கப்பட்ட அவரது உதவியாளரான வில்லியம் ஜோசப் ஹாம்மர் ஒரு மின் பொறியாளர். எடிசனின் கண்டுபிடிப்புகளுக்கு கடைசி வரை துணை நின்றவர். பிற்காலத்தில் எடிசன் தனது கண்டுபிடிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட எடிசன் பையோனீர்ஸ் (Edison Pioneers ) நிறுவனத்தின் பிரசிடெண்ட்டாக உயரும் அளவுக்குத் தன்னம்பிக்கையை அளித்தது.

உலகில் முதன் முதலில் மின் விளக்கினால் ஒளிர்ந்த நகரம் நியூயார்க் தான். அதில்  வில்லியம் ஜோசப் ஹாம்மடைய பங்கு முக்கியமானது.

இதுவரை வரலாற்றில் உருவாக்கப்பட்ட அனைத்து வகையான மின் விளக்குகளையும் சேகரித்து வைத்திருக்கிறார் வில்லியம் ஜோசப் ஹாம்மர். மின் விளக்குகள் தொழில் நுட்ப அடிப்படையில் எப்படி முன்னேற்றம் அடைந்தன என்பதை இந்த அருங்காட்சியகம் கொண்டு அறிந்துகொள்ளலாம். இந்த உலகம் தற்போது மின் விளக்குகளால் ஒளிர்கிறது என்றால் அதில் வில்லியம் ஜோசப் ஹாம்மருடைய பங்களிப்பும் மகத்தானது.

அலுவலகத்திலோ அல்லது நம்முடன் இருப்பவரோ ஒருமுறை தவறிழைத்தால் நம்மில் எத்தனைப் பேர் எடிசனைப் போன்று மன்னித்து மறுவாய்ப்பினை அளிப்போம்? மறு வாய்ப்பு வழங்கப்பட்டதனால் தான் வில்லியம் ஜோசப் ஹாம்மர் ஒளிரும் மின் விளக்கினை விடவும் எதிர்காலத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்தார். ஃபிரான்க்ளின் நிறுவனம் (Franklin Institute ) அளிக்கும் உயர்ந்த விருதான எல்லியாட் க்ரெஸ்ஸொன் மெடல் ( Elliott Cresson Medal) ஐப் பெற்றவர் வில்லியம் ஜோசப் ஹாம்மர்.

அன்று மட்டும் எடிசன் அந்த உதவியாளரை வேலையை விட்டு அனுப்பியிருந்தால் இன்று வில்லியம் ஜோசப் ஹாம்மர் பற்றி எந்த தகவலும் இருந்திருக்காது. அதனால் தவறுகளை மன்னித்து மறு வாய்ப்பு வழங்குவோம் அனைவருக்கும்!