ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்குக் கிடைத்த வெற்றி… சாத்தியப்படுத்தியது எது? #FeelGoodStory

0
டெரீக் ரெட்மாண்ட்

1992 – ம் ஆண்டு… ஸ்பெயின், பார்சிலோனியாவில் கோடைக்கால ஒலிம்பிக் திருவிழா கோலாகலத்துடன் நடந்துகொண்டிருந்தது. 400 மீட்டர் அதிவேக ஓட்டப்பந்தய அரையிறுதிப் போட்டி அது. மொத்தம் 8 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், பிரிட்டனைச் சேர்ந்த தடகள வீரரான டெரீக் ரெட்மாண்ட் (derek redmond). அந்த அரையிறுதிப் போட்டியில் டெரீக்தான் வெற்றிபெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில், டெரீக் தனது வாழ்நாளின் உச்சக்கட்ட தகுதியுடன் திகழ்ந்த காலம் அது. இதற்கு முன்பு, லண்டனில் நடந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை புரிந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், உலக சாம்பியன்ஷிப், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டி என்று நான்கு முறை 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிவாகை சூடியிருந்தார். அதனால் டெரீக் ரெட்மாண்ட் எளிதாக வெற்றிபெறுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

FeelGoodStory

அன்றைய நாள் ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்லாமல் டெரீக் ரெட்மாண்ட் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக அமையும் என்று போட்டி தொடங்கும்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

அரங்கத்தில் சூழ்ந்திருந்த சுமார் 65,000 பார்வையாளர்களின் கண்களும் டெரீக் ரெட்மாண்ட்டைத் தான் நோக்கிக்கொண்டிருந்தன. அரங்கில் மொய்த்திருந்த கேமராக்களில் பெரும்பாலானவை டெரீக்கைத்தான் ஃபோகஸ் செய்தன. டெரீக் வெற்றி பெறப்போகும் தருணத்துக்காகப் பிரிட்டனே காத்திருந்தது.

போட்டி தொடங்குவதற்கான துப்பாக்கிச் சத்தம் எழுந்ததும், தயாராக இருந்த 8 தடகள வீரர்களும் துப்பாக்கிக் குண்டை விடவும் வேகமாகப் பாயலானார்கள். நிதானமாக ஓடிக்கொண்டிருந்தார் டெரீக். முதல் 200 மீட்டர் தொலைவை நிதானமாகக் கடந்து கடைசி 200 மீட்டர் தொலைவை அதிவேகமாகக் கடக்கும் பழக்கமுடையவர் அவர். அதனால் அவர் நிதானமாக, நான்காவது இடத்தில் சென்று கொண்டிருந்தார். போட்டி தொடங்கிய 17.1 ஆவது விநாடியின்போது போட்டித் தொலைவில் 150 மீட்டர் இடைவெளியைக் கடந்திருந்தார். இப்போது டெரீக் தனது வேகத்தைக் கூட்டினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று சுருண்டு கீழே விழுந்தார். அவரது கால் தசைகள் பிடித்துக்கொண்டன.

derek redmond

அதுவரை ஆரவாரமிட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டம் அந்தக் கணத்தில் திடீரென்று அமைதியானது. கீழே விழுந்துவிட்ட டெரீக் ரெட்மாண்டையே சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் கனவாக வாழ்ந்தவர் அவர். அதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். பயிற்சியின்போது ஏற்பட்ட காயங்களினால் அவர் மிகக் குறைந்த காலத்தில் பலவித அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டியிருந்தது. வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் திடீரென்று தசைப்பிடிப்பினால் கீழே விழுந்ததைக் கண்டதும் அனைவரும் பதைபதைப்புடன் எழுந்து நின்றுகொண்டிருந்தார்கள்.

கீழே விழுந்த டெரீக் போட்டியிலிருந்து பின்வாங்கவில்லை. விட்டுக்கொடுக்காமல் எழுந்து  நின்றார். அவரது ஒரு கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஒற்றைக் காலை ஊன்ற முடியாமல், வலியினால் அழுதபடியே எல்லைக் கோட்டை நோக்கி நொண்டி நொண்டி நடக்கத்தொடங்கினார்.

”அங்கேயே நில்லுங்கள்… மருத்துவ உதவி வந்துகொண்டிருக்கிறது” என்று பலர் சத்தமெழுப்பினார்கள். ஆனால், அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தனது இலக்கை நோக்கி மெதுவாக நடக்கலானார். வாழ்நாள் கனவு பறிபோனதை எண்ணி அழுதாரா அல்லது வலியினால் அழுதாரா என்று தெரியவில்லை அவர் கண்ணீர்விட்டுக் கதறியபடியே நடந்தார். கூட்டத்தினர் உறைந்து போய் நின்றுகொண்டிருக்க, ஒருவர் மட்டும் பார்வையாளர் அரங்கத்திலிருந்து டெரீக் ரெட்மாண்ட்டை நோக்கி ஓடி வந்தார்.

redmond

அவர்தான் டெரீக் ரெட்மாண்ட்டின் தந்தை ஜிம் ரெட்மாண்ட் (Jim redmond).

காவலர்கள் ஜிம் ரெட்மாண்ட்டை மறித்தார்கள். தனது மகனின் வேதனையைப் பார்த்தவர், “அவன் என் மகன்… அவனுக்கு நான் உதவவேண்டும்” என்று கூறிக்கொண்டு ஓடினார். ஒலிம்பிக் விதிகளின் படி தடகள வீரர்களைத் தவிர வேறு யாரையும் ஓட்டப் பந்தயக் களத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆனால், வலி தாங்கமுடியாமல் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த டெரீக் ரெட்மாண்ட்டைக் கண்ட காவலாளிகள் அவரது தந்தையை மனிதாபிமானத்தோடு அனுமதித்தார்கள்.

அழுதபடி நகர்ந்துகொண்டிருந்த தனது மகனிடம் சென்றவர், “போதும்… இதை நீ செய்யக்கூடாது…” எனத் தடுத்தார் ஜிம்.

“நான் இதைச்  செய்ய வேண்டும். எல்லைக் கோட்டை நான் அடைந்தே தீர வேண்டும்” எனப் பதிலளித்தபடியே நகர்ந்தார் டெரீக்.

“சரி, இதுதான் உனது ஆசையென்றால் நாம் இருவரும் சேர்ந்தே அதைச் செய்வோம்” எனத் தெரிவித்த ஜிம், டெரீக் ரெட்மாண்ட்டைத் தாங்கிக்கொண்டார்.

டெரீக் ரெட்மாண்ட்

தந்தையின் உதவியுடன் ஒவ்வொரு அடியாக வைத்து எல்லைக்கோட்டைக் கடைசி ஆளாக அடைந்தர் டெரீக் ரெட்மாண்ட்.

அந்தப் போட்டியில் டெரீக் வெற்றிபெற்றிருந்தால் கூட அந்த அரங்கத்தில் அவ்வளவு ஆரவாரம், கைதட்டல்கள் எழுந்திருக்காது. டெரீக் ரெட்மாண்ட் எல்லைக் கோட்டை அடைந்ததும், அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார்கள்.

களத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்த டெரீக் ரெட்மாண்ட் போட்டியிலிருந்து பின்வாங்கியிருக்கலாம். அவருக்கு மருத்துவ உதவி செய்வதற்கு ஒரு குழு தயாராக நின்றுகொண்டிருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. ‘தனது இலக்கைக் கடைசி ஆளாக அடைந்தாலும் பரவாயில்லை. தான் ஓடத் தொடங்கிய போட்டியில் எல்லையை அடையாமல் பின்வாங்கி விடக் கூடாது’ என்று வலியைத் தாங்கியபடி அவர் பயணித்தார்.

யாரும் எதிர்பாராத அந்த நிகழ்வினால் டெரீக் ஒலிம்பிக்கில் தங்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனால், அவர் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம்பெற்றுவிட்டார்.

வெற்றி என்பது முதலாவதாக மட்டும் இலக்கை அடைவதல்ல. கடைசியாகச் சென்று இலக்கை அடைவதும் வெற்றிதான். வாழ்வில் எந்தச் சூழ்நிலையிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், எதையும் எளிதில் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதை டெரீக் ரெட்மாண்ட் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வோம்!