மதுவன மாது – 5

0

05. நாங்கூர் இளவரசி

நிலவு உச்சிக்கு வந்திருந்தது. பூந்தென்றல் சீராக வீசிக்கொண்டிருக்க குளிரத் தொடங்கியது. அருகில் சேர்த்து வைத்திருந்த சுள்ளிகளைக் கொண்டு வந்து அடுக்கினான் அவன். எங்கோ நடந்து சென்றவள் சில நிமிடங்களுக்குப் பிறகு நெருப்பினை ஒரு கமண்டலத்தில் கொண்டு வந்தாள். கமண்டலத்திலிருந்து சில நெருப்புத் துண்டுகளைக் கையால் அந்த சுள்ளிகளின் மீது போட்டவள் ஊதினாள். அடுத்த கணம் சுள்ளி எரியத் தொடங்கியது. அதன் மீது விறகுகளை எடுத்து அடுக்கினான் அவன். நெருப்பு, அந்தக் குளிர் காற்றிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த நெருப்பையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அவர்களும் எதுவும் பேசவில்லை.

நான்தான் தொடர்ந்தேன், “நீங்கள் யார்?” என்று.

“இந்த மதுவனத்தில் வாழ்பவர்கள்” என்றான் அவன்.

“மதுவனமா?” ஆச்சர்யத்தில் வினவினேன் நான்.

“ஆம். இதற்குப் பெயர் மதுவனம் தானே.”

“இல்லை.”

“அப்படியெனில்?”

“கொல்லிமலை.”

“கொல்லைமலையா?” ஒரே நேரத்தில் அவ்விருவரும் ஆச்சர்யத்துடன் வினவினார்கள்.

“ஆம். இதற்குப் பெயர் கொல்லி மலை” என்றேன் நான்.

அவர்கள் இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.

“நீங்கள் இதனை மதுவனம் என்றா அழைப்பீர்கள்?” ஆர்வத்துடன் வினவினேன் நான்.

“ஆம் தம்பி. இதற்குப் பெயர் மதுவனம்தான்.”

“புதிதாகக் கேள்விப்படுகிறேன்.”

“இல்லை தம்பி. மதுவனம் என்பது பழங்காலப் பெயர். புராதானக் கதாநாயகர்கள் வாலி, சுக்கிரீவன், அனுமன் ஆகியவர்களைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டதுண்டா?”

“ஆம், அவர்களைப் பற்றிய பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். வாலி என்பவன் பெரும் பலசாலி. எதிரில் நின்று அவனை யார் எதிர்த்தாலும் எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதி அவனுக்குக் கிடைத்துவிடும். ஆயிரம் யானைகளின் பலத்தை உடையவன். வாலி ஒருமுறை அவனது எதிரியை விரட்டிக்கொண்டு குகைக்குள் சென்றுவிட்டான். குகைக்குள் சென்ற வாலி இறந்திருப்பான் என்று அவனது தம்பி சுக்கிரீவன் குகையைக் கல்லால் அடைத்து வாலியின் அரியணையில் அமர்ந்துகொண்டான். எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பியவன், தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தனது தம்பியைக் கண்டு ஆத்திரப்பட்டான். சுக்கிரீவன் துரோகம் இழைத்து விட்டதாகவே வாலி நினைத்தான். அவனது துரோகத்தை வாலியால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. சுக்கிரீவனை நாட்டை விட்டே விரட்டியவன் அவனது மனைவியையும் அபகரித்துக் கொண்டான். அதன் பிறகு, சுக்கிரீவன் தனது அண்ணனைக் கொல்ல ராமன் என்பவனின் உதவியை நாடினான். ஆனால், ராமனோ மரத்தின் பின்னால் மறைந்திருந்து வில்லினை எய்து வாலியைக் கொன்றான். இதுதானே அவர்களின் கதை?”

“ஆமாம்… ஆமாம்…  இதுதான் அவர்களின் கதை” என்றான் அவன்.

“வாலியும் சுக்கிரீவனும் வசித்த வனம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?” எங்களின் உரையாடலில் குறுக்கிட்டு வினவினாள் அவள்.

“தெரியாது” என்றேன் நான்.

“மதுவனம்.”

“மதுவனமா?”

“ஆம்.”

“அப்படியெனில்…”

“நீங்கள் கொல்லி மலை எனக் குறிப்பிடும் இந்த வனம் தான் மதுவனம்.”

அதிர்ச்சியில் அவர்கள் இருவரின் வதனத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன்.

“கோழைத் தனத்துடன்  மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து ராமன் வில்லினை எய்த போது வாலியும் சுக்கிரீவனும் எந்தப் பாறையின் மீது சண்டையிட்டார்கள் தெரியுமா?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“நாம் அமர்ந்திருக்கும் இதே பாறையின் மீதுதான்.”

“இந்தப் பாறையா?” எனக் கேட்டுக்கொண்டே அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன் நான்.

“அச்சம் வேண்டாம், அவர்கள் சண்டையிட்டது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால். நீர் அமரலாம்” எனக் குறுக்கிட்டுப் புன்னகையுடன் கூறினான் அவன்.

“குகைக்குள் வாலி சென்றுவிட்டபோது சுக்கிரீவன் அடைத்துவிட்டான் என்றீர்களே, அது எந்தக் குகை என்றுத் தங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது…”

“அதோ…” என்றபடியே கை நீட்டினாள் அவள். அவள் கை காட்டிய திசையைக் கவனித்தேன் நான். அங்குப் பெரிய பாறைகளும், புதர்களும் மண்டிக் கிடந்தன.

“நாங்கள் அங்குதான் வசிக்கிறோம்” என்றாள் அவள்.

எனக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. மனதில் அச்சமும் சூழ்ந்துகொண்டது. அது எச்சரிக்கை உணர்வினால் வந்த அச்சமா? அல்லது திகிலினால் வந்த அச்சமா? என்பதை என்னால் இணங்கான முடியவில்லை. இருவரது முகத்தையும் பதற்றத்துடன் மாறி மாறிப் பார்த்தேன். அவர்களின் முகம் அமைதியுடன் விளங்கியது.

மீண்டும் அவர்களிடம் நான், “நீங்கள் இருவரும் யார்?” என்று வினவினேன் நான்.

“அதுதான் கூறினோமே, இந்த மதுவனத்தில் வசிப்பவர்கள் என்று.”

“இல்லை. நூற்றாண்டுகள் என்கிறீர்கள்? யுகங்கள் என்கிறீர்கள்? உண்மையில் நீங்கள் யார்? இங்கு என்ன செய்கிறீர்கள்? சிரஞ்சீவிகளாக வாழ்பவர்களா நீங்கள்? அதற்கான சாத்தியங்கள் உண்டா?” அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டேன் நான்.

நான் கேட்டதற்கு எந்தப் பதிலையும் கூறாமல் மீண்டும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ கூற வாயெடுத்தான். அதற்குள் முந்திக்கொண்ட நான், “பிசிராந்தையாரைப் போன்று கவலைகள் இல்லாமல் இருப்பதனால்தான் நாங்கள் இன்னும் சிரஞ்சீவியாக இளமையுடன் வாழ்கிறோம் என்று மட்டும் கூறிவிடாதீர்கள்” என்றேன்.

சிரித்தபடியே அவன், “உன்னை மட்டுமே நேசிக்கும் ஒருத்தியை அருகில் வைத்துக் கொள். யுகங்கள் பல கடந்தாலும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாய்” என்றான்.

அப்பெண்ணின் முகத்தைப் பார்க்கும்போது அவளுக்கு அருகில் இருப்பவன் எப்படிப்பட்ட பாக்கியம் செய்தவனாக இருப்பான்? என்று எண்ணிக்கொண்டு வியப்பில் அமர்ந்திருந்தேன். என்னை அறியாமல் அப்பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது முகத்தில் அன்பும், கருணையும், பரிவும், அழகும் சேர்ந்து குடிகொண்டிருந்தது.

அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவன், “இளவரசியின் முகத்தை முதலில் காணும்போது நானும் தங்களைப் போன்றுதான் இவ்வுலகத்தை மறந்துவிட்டேன்” என்றான்.

அவன் கூறியபோதுதான் எனது பிழையை உணர்ந்து, பார்வையை அவளது முகத்திலிருந்து விலக்கிக்கொண்டேன். குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவன், “தம்பி, குற்றம் செய்துவிட்டதாக எண்ண வேண்டாம். என் இளவரசியின் வசீகரம் அப்படி, அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்களது  குற்றம் அல்லவே. இது படைத்தவனின் குற்றம் அல்லவா?” என்றான்.

“இவர் இப்படித்தான் என்னை பரிகசிக்காவிட்டால் இவருக்கு உறக்கமே வராது” எனப் போலியாக கோபம் கொண்டாள் அவள்.

பதிலுக்கு நான், “இவர் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையே, உண்மையைத் தானே கூறுகிறார்” என்றேன்.

“நீங்களும் இவருடன் சேர்ந்துவிட்டீர்களா? தொலைந்தேன் நான்” என்றாள் போலிக் கோபத்துடன்.

“இளவரசி என்றீர்களே? எந்த நாட்டு இளவரசி என்று கூறவே இல்லையே?” குறுக்கிட்டேன் நான்.

“இரு நாட்டுக்கு இவள் இளவரசி. எதனை முதலில் கூறுவேன் நான்” என்றான் அவன்.

”இரு நாட்டுக்கா?”

“ஆம்.”

“எந்தெந்த தேசங்களுக்கு?”

“ஒன்று நாங்கூர்.”

“மற்றொன்று?”

“மற்றொன்று எனக்கு.”

“உங்களுக்கா?”

“ஆம் தம்பி, எனக்கும் இவள் தான் இளவரசி. காயம்பட்டு குருதி வழியும் போர் வீரனாக இப்பெண்ணை சந்தித்தேன் நான். எனக்கு இவள் மருத்துவம் அளித்தாள். அப்போது இவளது மையலில் சிறைபட்டவன்தான், இன்னும் விடுதலையடைந்த பாடில்லை. இவளது கடைக்கண் பார்வை என் மீது எப்போது விழுந்ததோ அப்போதே மரணத்தை எதிர்க்கும் துணிச்சல் வந்துவிட்டது எனக்கு” என்றவாறே அப்பெண்ணை நோக்கினான் அவன். அவளும் அவனை நோக்க இருவரும் பார்வையை விலக்க விரும்பாதவராய் நெடு நேரம் அமர்ந்திருந்தார்கள்.

திடீரென்று பார்வையை விளக்கிக் கொண்டு என்னைப் பார்த்தவள், “தாங்கள் இந்த வனத்தில் எப்படி அகப்பட்டீர்கள்? அதுவும் இந்த மார்கழி மாதக் குளிரில்? நான் மட்டும் உங்களைக் கண்டு இங்கு வரவில்லை எனில் ஒன்று இந்த வன விலங்குகளிடம் அகப்பட்டு மடிந்திருப்பீர்கள்? அல்லது குளிரில் விறைத்துப் போய் மடிந்திருப்பீர்கள். எதற்கு இங்கு வந்தீர்கள்?” சற்றுக் குரலை உயர்த்தி அதிகாரத்துடன் வினவினாள் அவள்.

“தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன். ஆனால், அந்த முடிவை பிற்பாடு மாற்றிக்கொண்டேன். இங்கிருந்து வெளியேற வழி தெரியவில்லை எனக்கு” வருத்தத்துடன் கூறினேன் நான்.

“உங்களைப் பார்த்ததும் தைரியமான மனிதர் என்றல்லவா நினைத்தேன் நான். இப்படிக் கோழைத் தனமாக முடிவெடுத்திருக்கிறீர்கள்? எதனால் இந்த முடிவு?”

பதில் கூறத் தயங்கினேன் நான். அவமானமாகவும் இருந்தது. பிறகு அனைத்தையும் கூறி விட்டேன். கண்களில் கசிந்த கண்ணீரை அவர்கள் கண்டுவிடக் கூடாது என்பதற்காகத் தரையைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.

“உனக்கு மிகவும் பிடித்த மன்னர் கரிகாலர் என்று தானே கூறினாய்?” என வினவினாள் அவள்.

எதற்கு இப்போது சம்பந்தமில்லாமல் கரிகாலரைப் பற்றி கேட்கிறாள் என்று சிந்தித்தபடியே, குழப்பத்துடன் “ஆமாம்” என்றேன்.

“அவர் அரியணையை அடையுமுன் அவர் அடைந்த இன்னல்கள் உனக்குத் தெரியுமா?”

“ஓரளவிற்கு தெரியும்.”

“நீ கேள்விப்பட்டது மிகவும் குறைவுதான். தாயின் கருவில் உதித்து மண்ணில் பிறப்பதற்கு முன்னரே தந்தையை இழந்தவர். மண்ணில் பிறந்தபிறகு தாயையும் இழந்தவர். அவரது தந்தை வடக்கிலிருந்து படையெடுத்து வந்த மௌரியரைத் தடுத்து நிறுத்தியவர். மாபெரும் மன்னனது மகனான கரிகாலன் வளரும் காலத்தில் அவரை அவரது எதிரிகள் எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா? பாலகனாக அவர் இருந்த போதே சிறை பிடித்து மாளிகையில் அடைத்துவிட்டார்கள். அவர் தனது இளம் பருவத்தைக் கழித்ததே எதிரிகளின் சிறைச் சாலையில் தான். மாளிகையில் தீ வைத்து அவரை முழுவதுமாக எரிக்கவும் எத்தனித்தார்கள். அவரைக் கொல்லவும் வீரர்களை அனுப்பியிருந்தார்கள். மார்பில் பாய்ந்த வேலுடன், எரியும் மாளிகையிலிருந்து தப்பிக்க நேரிட்டது. அவரது வலது கால் முழுவதும் வெந்துபோய் விட்டிருந்தது. ஆனால், அவருக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. தென்னகத்தில் காணப்பட்ட குறுநில மன்னர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அவரை எதிர்த்தார்கள். அந்தக் குறுநில மன்னர்களுக்கு சேரனும், பாண்டியனும் தலைமை வகித்தார்கள். அனைவரையும் வெண்ணியில் எதிர்த்து சுவடே தெரியாமல் அழித்தார் கரிகாலர். அதன் பிறகே ஈழத்தின் மீது படையெடுத்து சிங்கள மன்னனைக் கொன்று அங்கிருந்து பன்னிரெண்டாயிரம் போர் வீரர்களைக் கொண்டு வந்து காவிரிக்கு அணை எழுப்பினார். வடக்கே படையெடுத்து இமயத்தில் புலிச் சின்னத்தைப் பொறித்தார். அன்று மட்டும் கரிகாலர் தங்களைப் போன்று விரக்தியில் சோர்ந்திருந்தாலோ அல்லது தோல்வியினால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தவறான முடிவெடுத்திருந்தாலோ காலம் வியக்கும் சாதனைகளை செய்திருக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள்! கரிகாலனைப் பார்த்து சமணத் திகம்பர முனிவர்கள் ‘வாழ இயலாத கடினமான காலத்தில் ஏற்படும் இன்னல்களைக் கரிகாலனைப் போன்று பொறுத்திருந்தால் பிறகு, தனக்கு உகந்த காலம் வரும்போது இழந்த பெருமைகள் அனைத்தையும் மீண்டும் பெற்று நிலை நிறுத்திக் கொள்ளலாம்’ என்றார்களே. கடினமான காலத்தில் உயிரை இழக்காமல் இருப்பதைப் போன்ற நற்பயன் வேறு எதுவும் இல்லை. அதனைத் தாங்கள் நினைவில் கொள்ளுங்கள்.”

அப்போது குறுக்கிட்டவன், “வாழ்வு வெற்றியோ? அல்லது தோல்வியோ? இன்பமோ? அல்லது துன்பமோ? ஆனால், போராட்டத்தை மட்டும் நாம் எச்சூழலிலும் கைவிட்டுவிடக் கூடாது” என்றான்.

கடந்த இரண்டு வருடங்களாக கரிகாலனைப் பற்றித்தான் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவனது வாழ்க்கை உரைக்கும் தத்துவத்தை உணராமல் இருந்து விட்டதனால் எப்பேற்பட்ட கோழைத் தனமான முடிவினை மேற்கொண்டுவிட்டேன் என நினைக்கையில் அவமானமாகப் போய்விட்டது. அப்பெண்ணின் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியம் இருக்கவில்லை.

“உனக்கும் கரிகாலனுக்கும் என்ன வேறுபாடு தெரியுமா?”

“என்ன?”

“அவர் வாழ வேண்டும் என்று இந்த மதுவனத்தில் தஞ்சம் புகுந்தார். நீங்கள் சாக வேண்டும் என்று தஞ்சம் புகுந்திருக்கிறீகள்” என என்னிடம் தெரிவித்தவள், மீண்டும் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவனது முகத்தைப் புன்னகையுடன் பார்க்கலானாள்.

அவர்கள் இருவரையும் பார்த்தபடியே அமைதியாகச் சிந்தித்தபடியே அமர்ந்திருந்தேன்.

“அத்தான், பொழுது விடிய இன்னும் ஒரு சாமப் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளது. நாம் சென்று உறங்கலாம் அல்லவா?” என அவனது விழிகளைப் பார்த்தபடியே வினவினாள் அவள்.

“இவரைத் தனியாக விட்டு நாம் எப்படிச் செல்வது? நம்மை நாடி வந்திருக்கும் விருந்தினர் அல்லவா இவர். இவரை உபசரித்ததைப் போன்று இவரைப் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமையல்லவா?”

“சரி, பொழுது புலரும் வரை நாம் இவருக்குத் துணையாகவே இருப்போம்” எனக் கூறியவள் அமைதியானாள்.

மூவரும் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம். பொழுது கடந்துகொண்டே இருந்தது. அதற்கு மேல் அவர்களிடம் பேசும் தைரியம் எனக்கு வரவில்லை. எரியும் நெருப்பில் சுள்ளிகளைப் போட்டுவிட்டு அமர்ந்தான் அவன். இவனுக்கும் கால் இருக்கிறதா என்று அவனது கால்களைக் கவனித்தேன். அவனது வலது கால் தீயில் வெந்து கருத்துப் போய் காணப்பட்டது. மேல் அங்கி அணியாத அவனது மார்பினைக் கவனித்தேன். மார்பில் தழும்புகள் பல காணப்பட்டது. அப்பெண் அவனது தோளில் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவள் நாங்கூர் இளவரசி என்பது நினைவிற்கு வர, ‘நாங்கூர் இளவரசியைத் தானே கரிகாற் பெருவளத்தானும் மணந்துகொண்டான்’ எனும் தகவலும் மனதில் கண நேரத்தில் தோன்றிவிட்டுச் சென்றது.

இவள் நாங்கூர் இளவரசி எனில், “இவன்???” என முணுமுணுத்துக் கொண்டேன் நான்.

அவனது முகத்தை மீண்டும் நோக்கினேன். ராஜ கம்பீரம் முழுவதும் குடிகொண்டிருந்தது. என் மனம் சொல்லொணாத வியப்பில் ஆழ்ந்தது. ஒரு பேரரசனின் முன் அமர்ந்திருக்கிறேன் எனும் நினைப்பே என்னுள் பிரமிப்பை வரவழைத்தது. உடல் சிலிர்த்துவிட்டது எனக்கு. மயிர் கால்கள் அனைத்தும் குத்திட்டு எழுந்து நின்றது. உடலில் புதுக் குருதி பாய்வதைப் போன்று உணர்ந்தேன். காண்பது கனவா? அல்லது நினைவா? என மீண்டும் என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். வலித்தது எனக்கு.

கனவு இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துகொண்டேன்.

பேரரசனுக்கு முன் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று, “சோழம்… சோழம்… என்று உரக்க அந்த வனமே அதிரும்படி கத்த வேண்டும் போல இருந்தது எனக்கு. உறங்கிக் கொண்டிருக்கும் இளவரசியை எழுப்ப வேண்டாம் என்று அமைதி காத்துக்கொண்டேன் நான்.

“கரிகாலரே” என மெதுவாக அழைத்தேன் நான்.

நான் அவரை அடையாளம் கண்டுவிட்டதை அறிந்துகொண்ட கரிகாலர், தன் தோளில் சாய்ந்து கொண்டிருக்கும் நாங்கூர் இளவரசியைச் சுட்டிக் காட்டி  உதட்டில் கைவைத்தார். அவரது கட்டளையின் பொருளைப் புரிந்துகொண்ட நான் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை.

பாறையில் சாய்ந்தபடி அவர்கள் இருவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. உறங்கிவிட்டிருந்தேன். யாரோ என்னைத் தட்டி எழுப்பவே கண் விழித்தேன் நான். எனக்கு முன் நான்கைந்து காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

“ராத்திரி முழுக்க எங்கல்லாம் தேடுறது? உசுரோட தான இருக்க?” என வினவினார் ஒருவர்.

நேற்றிரவு நான் கண்ட கரிகாலரையும், நாங்கூர் இளவரசியையும் என் கண்கள் தேடின.

“யாரத் தேடுற?” வினவினார் மற்றொருவர்.

“நேத்து ரெண்டு பேரு இங்க வந்தாங்க. அவுங்களதான் தேடுறேன்” என்றேன் நான்.

“கனவு கினவு ஏதாவது கண்டுருப்ப. நீ உசுரோட இருக்கறதே தெய்வாதீன செயல். இந்த காட்டுல யாரும் இருக்கல. காட்டு ஜந்து இருக்கற இடம்” என்றார் இன்னொருவர்.

சுற்றிலும் கண்களைச் சுழற்றினேன். என் பார்வையில் அவர்கள் அகப்படவில்லை. என் தொடையைத் தொட்டுப் பார்த்தேன். நேற்று இருமுறை நான் கிள்ளியதனால் அந்த இடத்தில் சிறு எரிச்சல் காணப்பட்டது. கனவு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

கண்களைச் சுழற்றிய போதுதான் கவனித்தேன். சற்றுத் தொலைவில் மிர்துலா சோர்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தாள். அவளருகில் சென்றேன். அவளது கண்கள் சிவந்துபோய் காணப்பட்டது.

அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்க இரு அடி முன்னால் வந்தவள், என் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒன்று வைத்தாள். அதிர்ச்சியில் அவளையே பார்க்க, “என் பின்னால்தானே வந்து கொண்டிருந்தாய். எதற்கு விலகிச் சென்றாய். பயந்துவிட்டேன் நான்” எனக் கூறியவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக அந்த வனத்திலிருந்து வெளியேறி கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தோம்.

“இங்கேயே நில். எங்கும் ஓடிவிடாதே நான் காரினை எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்றவள் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த காரை நோக்கிச் சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றேன். வயதானவர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். “தம்பி, உங்களுக்கு அந்தப் பொண்ணு என்ன வேணும்?” என வினவினார்.

“தெரிஞ்ச பொண்ணு” என்றேன் நான்.

“பாவம் தம்பி அந்த பொண்ணு. ராத்திரி முழுக்க தூங்கவே இல்ல. உங்கள தேடி அலையா அலஞ்சிது. கண்ணுல்லாம் தூங்காம செவந்து போச்சு. பத்தரமா பாத்துக்கோ” எனக் கூறியவாறே அங்கிருந்து அவர் நகரவும் மிர்துலா காரில் வரவும் சரியாக இருந்தது.

காரில் ஏறிக்கொண்டேன் நான். ‘கரிகாலனின் துயரத்தை விரட்டிய கொல்லியம் பாவை உனது துயரத்தையும் நிச்சயம் போக்குவாள்’ எனக் கூறித்தான் என்னை இங்கு அழைத்து வந்தாள் மிர்துலா. அவள் கூறியது எப்பேர்பட்ட உண்மை. வனத்திலிருந்து திரும்பிய பிறகு என் மன நிலை முற்றிலும் மாறியிருந்தது. ‘நான் கண்ட அந்த இருவரைப் பற்றி இவளிடம் கூறலாமா? கூறினால் நம்புவாளா?’ அது வெறும் கனவாக மட்டும் இருக்க வாய்ப்பே இல்லை. குழப்பத்துடனே அமர்ந்திருந்தேன்.

அப்போது மிர்துலா, “வெற்றி உனக்கு தம் அடிக்கற பழக்கம் உண்டா?” எனத்தான் வினவினாள்.

அதிர்ச்சியுடன், “இல்லையே. ஏன் கேட்கற” என்றேன் நான்.

“தம் அடிக்கறவங்கதான் எப்போதும் பைல லைட்டர் இல்லேன்னா தீப்பெட்டி வச்சிருப்பாங்க. அதான் கேட்டேன்”

“இத எதுக்கு எண்ட கேட்கற?”

“லைட்டர் இல்லாமதான் நெருப்பு பத்தவச்சி நைட் குளிர் காய்ஞ்சியா?”

“நானா?”

“ஆம், அந்தப் புகைய வச்சிதான் உன்னைக் கண்டுபுடிச்சோம்.”

நான் இரவில் நெருப்புக் கொளுத்தவில்லையே என்று சிந்தித்தபோதுதான் எனக்கு நினைவில் வந்தது , ‘நெருப்பினைக் கொளுத்தியது கரிகாலரும், நாங்கூர் இளவரசியும்’ என்று. அப்படியெனில் நேற்று நான் கண்டது கனவு இல்லை. உண்மைதான். அவர்கள் இன்னும் வாழ்வதும் உண்மைதான்.

அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த போதே, காரை ஒட்டிக்கொண்டிருந்த மிர்துலா, என் கையைப் பற்றி, “வெற்றி, நேத்து நான் பயந்துட்டேன்.  உனக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா….நெனச்சிப் பார்க்கவே பயமா இருக்கு. கடவுள் தான் உன்னைய காப்பாத்திருக்கணும். இனி நீ எழுதப்போற எல்லா நாவலையும் நான் தான் முத ஆளா படிக்கணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்கு இனி வாய்ப்பே இருக்காதோன்னு யோசிச்சி பயந்துட்டேன். தாங்க்ஸ் வெற்றி. திரும்பி வந்துட்ட” என்றாள் மகிழ்ச்சியுடன்.

என் செல்போனை எடுத்து என்னிடம் நீட்டியபடி, “நெறைய மிஸ்டு கால்” என்றாள்.

“பேச வேண்டியது தானே.”

“உன்ன காணும்ங்கற டென்சன். நான் எப்டி பேசுவேன்…?”

“சாரி… சாரி…” என்றபடியே போனை வாங்கிப் பார்த்தேன். இரட்டை இலக்கங்களில் மிஸ்டு கால். அதுவும் ஒரே எண்ணிலிருந்து.

இரண்டு குறுஞ்செய்திகள் வந்திருந்தன. திறந்து பார்த்தேன். என் மிர்துலாவிடமிருந்து தான்.

வெற்றி நான் உன்ன காயப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சுடு. நேத்து வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் யோசிச்சி பார்த்தேன். நான் தப்பு பண்ணிட்டேன். நேத்து அப்டி நடந்துருக்க கூடாது. எனக்கு கூப்டு. உன்கிட்ட நெறைய பேசணும்.”

மற்றொன்றை வாசிக்கவில்லை நான். ஒன்றை மட்டும்தான் வாசித்தேன். அதைப் படித்த போது எனக்கு எந்தவித உணர்ச்சியும் ஏற்படவில்லை. என் அருகில் அமர்ந்திருந்த மிர்துலாவைப் பார்த்தேன். புன்னகையுடன் என்னை நோக்கினாள். கரிகாலன் கூறிய வார்த்தைகள் நினைவில் வந்துவிட்டுச் சென்றது.

உன்னை மட்டுமே நேசிக்கும் ஒருத்தியை அருகில் வைத்துக் கொள். யுகங்கள் பல கடந்தாலும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாய்.

(முற்றும்)

https://www.amazon.in/dp/B073GP3YH7