மதுரைகொண்ட ராஜகேசரி

மதுரைகொண்ட ராஜகேசரி
மதுரைகொண்ட ராஜகேசரி

அரிஞ்சயன்…

அரிஞ்சயன் எனும் பெயரைக் கேட்கும்போது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய ‘அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா’ எனும் புதினம் நினைவுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அவனது மகன் சுந்தர சோழன் என்றாலே படுக்கையிலேயே உயிரைத் துறந்தவன் எனும் எண்ணம் தான் நினைவுக்கு வரும். குறிப்பாக, பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்குக்  காலம் முழுவதும் படுத்த படுக்கையாகக் கிடந்த அரசன், எப்போதுமே தன் காதலியை எண்ணியும் மகனை எண்ணியும் அச்சத்திலேயே வாழ்ந்தவன் என்றுதான் நினைவுக்கு வரும்.

அரிஞ்சயன் என்றாலும் சரி அவனது மைந்தன் சுந்தர சோழன் என்றாலும் சரி அழகர்கள், அந்தப்புரமே கதி என்று கிடப்பவர்கள் என்ற எண்ணம் தோன்றுவதற்கு ஒரு சில புதினங்கள் காரணமாக அமைந்துவிட்டன. காலம் செய்த கோலம் என்றுதான் இதைக் கூறவேண்டும்.

Mathuraikonda rajakesari
மதுரைகொண்ட ராஜகேசரி

அரிஞ்சய சோழன், ராஜராஜனைப் போன்றோ அல்லது ராஜேந்திரனைப் போன்றோ புகழ்பெற்றவன் அல்ல. சோழர்கள் வரலாற்றை நோக்குகையில் நள்ளிரவில் உச்சி வானை நோக்கும் போது தெரியும் பலகோடி விண்மீன்களில் ஒன்றைப்போன்றே அவனும் நமக்குத் தெரிவான். சோழர் சரித்திரம் எனும் வானில் சிறிது காலமே அவன் எரி நட்சத்திரத்தைப் போன்று ஒளிர்ந்தாலும், அவன் உருவாக்கிய பேரொளியில், பிற்காலத்தில் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் காலத்தால் அழியாத சரித்திரத்தைப் படைத்துச் சென்றார்கள்.

வரலாற்றை உற்று நோக்கினால் அரிஞ்சய சோழன் ஒரு கர்ம வீரன் என்பதை அறிந்துகொள்ளலாம். தெற்கே வீரபாண்டியனும், வடக்கே கன்னர தேவனும் சோழநாட்டை இறுக்கியபோதும் சரி, சிற்றரசர்கள் ஒவ்வொருவராக விடுபட்டுச் சென்றபோதும் சரி, சோழநாட்டைக் காத்த மாவீரன் அரிஞ்சய சோழன்.

காஞ்சி மாநகரம் கரிகாலச் சோழனால் உருவாக்கப்பட்ட தொன்மையான நகரம். கரிகாலனின் காலத்தில்தான் இளந்திரையன் தொண்டை மண்டலத்தின் அரசனானான் (தொண்டைமான்). கரிகால சோழனால் உருவாக்கப்பட்ட தொண்டை மண்டலம் பிற்காலத்தில் சோழர்கள் கரத்திலிருந்து விடுபட்டு, பல்லவர்கள் வசம் சென்றது. பின்னர் ஆதித்த சோழனின் எழுச்சியால், அபராஜித பல்லவ மன்னனிடமிருந்து தொண்டை மண்டலம் மீட்கப்பட்டது. நெடுங்காலம் கழித்து சோழர்கள் வசமான தொண்டை  மண்டலம், கண்டராதித்தன் காலத்தில், இரட்டபாடி ஏழரை இலக்க வேந்தன் கன்னரதேவன் வசமானது. அப்போது இளவரசனாக இருந்தவன் அரிஞ்சய சோழன். தான் இளவரசனாக இருந்தபோது ஏற்பட்ட களங்கத்தை அரசனான பிறகு துடைத்துவிட்டு, உயிர் துறந்த கர்ம வீரன் அரிஞ்சய சோழன்.

Mathuraikonda rajakesari
மதுரைகொண்ட ராஜகேசரி

அரிஞ்சய சோழன் இல்லையென்றால் குறுகிய காலத்திலேயே சோழ நாடு பாண்டியவர் வசமோ அல்லது இரட்டபாடி ஏழரை இலக்கம் வசமோ வீழ்ந்துபோய், வரலாற்றிலிருந்து சோழர்கள் மறைந்துபோயிருக்கவும் கூடும். ஆனால், அரிஞ்சயனின் தீரத்தாலும், வீரத்தாலும் இந்தக் களங்கம் எதுவும் நிகழாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த மாவீரன் தன் சோணாட்டைக் கன்னரதேவன் வசம் விழாமல் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், கன்னரதேவனை வீழ்த்தி தொண்டை மண்டலத்தை எப்படிக் கைப்பற்றினான் என்பதைச் சற்றே கற்பனையுடன் விளக்கும் புதினமே ‘மதுரை கொண்ட இராஜகேசரி – பாகம் 1.

மேலும் தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத புதிர், ‘பார்த்திவேந்திரவர்மன்’. அந்தப் புதிருக்கான விடையாகவும் வெளியாகவிருக்கிறது மதுரைகொண்ட இராஜகேசரி.

Chola histry
சோழர்கள்

மதுரைகொண்ட இராஜகேசரி முதல் பாகம் சென்னை YMCA மைதானம், நந்தனம் – புத்தக கண்காட்சியில் வானதி பதிப்பகத்தினரால் (ஸ்டால் எண் 496-497) வெளியிடப்படவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்புதினத்தை எழுத்தாளர் சக்திஸ்ரீயும் நானும் சேர்ந்து இயற்றியிருக்கிறோம். வாசக நண்பர்கள் எனது வானவல்லி, வென்வேல் சென்னி புதினங்களுக்கு அளித்த ஆதரவைக்காட்டிலும் பன்மடங்கு ஆதரவை அளித்தருள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி : இதுல ஆதித்த கரிகாலனும் வரான். குடிகாரனா, காதல்ல தோத்துப்போய் விரக்தியோட இருக்கறவனா இல்ல… சோணாட்டோட மகாதண்ட நாயகனாவும், தொண்டை மண்டலத்த மீட்கறவனாவும், இளவரசனாவும், பாண்டியனை ஜெயிச்சவனாவும் வரான்!

சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி.
writervetrivel.com