21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த சிவப்பு கிரகண நிலா

பூமி சூரியனை சுற்றுகிறது, நிலவு பூமியை சுற்றிய படி பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது. இந்த சுழல் நிகழ்வில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி நுழைவதால் வரும் நிழல் நிகழ்வே நிலவு கிரகணம்.

 

சூரியனின் ஒளியை பிரதிபலித்து பட்டொளி வீசும் பால்நிலவுக்கு மத்தியில் பூமி மையம் கொண்டு விடுவதால் , நிலவின் மீது பட வேண்டிய சூரிய ஒளி பூமியால் மறைக்கப்படும், அதேசமயம் பூமியின் நிழலானது நிலவின் மீது விழும், இப்படியாக பூமியின் நிழலில் சந்திரன் மறையும் நிகழ்வே சந்திர கிரகணம். நிலவை முழுவதுமாக மறைக்கும் அளவுக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்தால் அதை முழுச்சந்திர கிரகணம் என்கிறோம். இந்த நிழல் மறை நிகழ்வு அரைகுறையாகவும் கூட சிலபல சமயங்களில் நிகழ்வதுண்டு.

2018, ஜூலை27 , வெள்ளிக்கிழமை நிகழும் சந்திர கிரகணம் ஒரு முழு சந்திர கிரகணம், அது மட்டுமின்றி இந்த சந்திரகிரகணம் தான் 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என நாசா அறிவித்துள்ளது. நாசா விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 6 மணி நேரம் நிகழ இருக்கும் இந்த கிரகணத்தில் பூமியின் நிழலில் நிலவு முழுமையாக மூழ்கி இருக்கப்போகும் நேரம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் 35 வினாடிகள் . இது போல இன்னொரு நீண்ட சந்திர கிரகணம் அடுத்ததாக ஜூன் 9, 2123 –ல் தான் நிகழுமாம்.

பொதுவாக ஜூன் , ஜூலை மாதங்களின் நிலவானது பூமியிலிருந்து சிறிது தூரமாகி சுற்றிக்கொண்டிருக்கும், பூமியிலிருந்து பார்க்கையில் நிலவு மற்றைய மாதங்களை விட அளவில் சிறியதாக தெரியும், இம்மாதங்களில் நிகழும் சந்திர கிரகணங்களின் போது நிலவின் சிறுபிம்பம் பூமியின் பெரிய நிழலுக்குள் மறைபடும். அதனால் இம்மாதங்களின் தோன்றும் முழு கிரகணம் நீண்ட நேரம் நிகழ்கிறது.

இந்த கிரகணமானது ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா,ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் தெரியும். இந்த கிரகண நிகழ்வின் பிரத்யேக சிறப்பு இரவுக் காட்சி கிழக்கு ஆப்ரிக்கா , மத்திய கிழக்கு நாடுகள் , ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதியினருக்கு வாய்த்திருக்கிறது.

பளிங்கு போல வெண்மையாக இருக்கும் நிலவு மெல்ல மெல்ல நிழலுக்குள் மூழ்கி கருப்பாக மறைய துவங்கி பின் சிவப்பு நிறமாக மாற இருக்கிறது.

முழுமையாக மறைந்த பின் கருப்பு நிறமாகத்தானே தோன்ற வேண்டும் , சிவப்பாக தோன்ற காரணம் என்ன?, நிகழும் இந்த கிரகணத்தின் போது பூமியானது சூரியனுக்கும், நிலவுக்கும் மிகச்சரியாக மத்தியில் வர இருக்கிறது, இப்படி வரும் போது பூமியின் நிழல் முழுமயாக நிலவின் மீது விழும் அதுசமயம் பூமியைச்சுற்றி பரவியிருக்கும் காற்று மண்டலத்தின் வழியாக சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவி வெளிவரும் , வெளிவரும் வானவில் நிறங்களில் , அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறம் மட்டும் தப்பிப் பிழைத்து நிலவின் மீது பட்டு நிலவை சிவப்பாக்குகிறது. காற்று வெளி எவ்வளுக்கெவ்வளவு தூயதாக இருக்கிறதோ, அத்தனை பிரகாசமாக செந்நிலவை காணலாம். பூமிக்கு காற்று மண்டலம் என்னும் ஒன்று இல்லாமல் இருந்தால் பூமியின் முழு நிழல் மறைவுக்குட்படும் நிலா கருப்பாகத்தான் காட்சியளிக்கும்.

கிரகணத்தின் போது நிலவை பார்ப்பது பாதுகாப்பானதா?

சந்திரனின் ஒளியின் மனிதர்களின் கண்களை பாதிக்கும் கதிர்வீச்சுகள் இல்லை, ஆக தாராளமாக வெற்றுக்கண்களில் இந்த நிழலாட்டத்தை கண்டு களிக்கலாம் , பைனாக்குலர், டெலஸ்கோப் உதவியோடு பார்த்தால் நிலவின் மேடு, பள்ளங்கள், மலைகள் வடை சுடும் பாட்டி போன்றவை கொஞ்சம் தெளிவாக தெரியலாம் , ஆனால் வெறும் கண்களாலேயே , நூற்றாண்டுக்கொருமுறை நிகழும் இந்த அதிசய கிரகண நிகழ்வை கண்டு ரசிக்கலாம் .

இந்த நிகழ்வு ஜூலை 27 இரவு 11:44 மணிக்கு தொடங்குகிறது. ஜூலை 28 அதிகாலை 1:00 மணிக்கு பூமியின் நிழல் நிலவை முற்றிலும் விழுங்கியிருக்கும் அதுசமயம் நிலா முற்றிலும் சிவப்பாக காட்சியளிக்கும். கிரகணம் ஜூலை 28, அதிகாலை 5:34 மணி வரைக்கும் நீடிக்கும்.

விஜயன் துரைராஜ்…