சூறையாடிய வெள்ளம் – நண்பனின் கடிதம்

அன்புள்ள வெற்றிவேலிற்கு,

நலம், நலமே விழைகிறேன்.

எல்லா இடங்களிலும் புகுந்து சூறையாடிவிட்டுப்போன கொள்ளைக்காரனைப் போல இங்கு வந்த அந்த புது வெள்ளம் எல்லாவற்றையும் துடைத்தெரிந்துவிட்டு நகர்ந்திருக்கிறது.

பணி நிமித்தமாக குஜராத் மாநிலத்தின் வதோததரா எனப்படும் பரோடா நகருக்கு கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் வந்திருந்தேன், இரண்டு வாரமாக இங்கு தான் குப்பைக்கொட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வார புதன் கிழமையிலிருந்து (இன்னும் ஓய்ந்த பாடில்லை) வானம் பொழிந்துகொண்டே இருக்கிறது, இந்நகரின் நடுவே ஓடும் விஷ்வாமித்ரி நதி மழை நீர் குடித்து அளவில் பெருத்து நகர வழியின்றி நள்ளிரவு வாக்கில் நகருக்குள் புகுந்துவிட்டது.

நகர் வந்த நதி நகர்த்தக் கிடைத்த எல்லாவற்றையும் நகர்த்திக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

வியாழக்கிழமை கழுத்தளவுக்கு வெள்ளமிருந்தது, வெள்ளியில் இடுப்பளவுக்கு வந்தது, இன்று கணுக்கால் அளவுக்கு வந்திருக்கிறது.

இன்னமும் மழை நின்ற பாடில்லை.

இதையெல்லாம் அலைபேசியிலேயே சொல்லியிருக்கலாமே, பக்கம் பக்கமாக எழுதித்தான் சொல்லவேண்டுமா 🙂 என்கிறாயா!, என்ன செய்ய , செல்போனிலேயே சொல்லியிருக்கலாம் தான் இருந்தாலும் எழுதிச்சொல்வதில் உள்ள மனநிறைவுக்குத்தான் இதை எழுத்தில் உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

கடை, வீடு, ATM மெசின், வாகனங்கள் என பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது இந்த மழை, இது போன்ற ஒரு மழை இப்போது தான் இங்கு வருகிறது என்கிறார்கள்.

கையில் காசிருந்தும் உண்ண உணவில்லா நிமிடங்களில் கூட சில மனிதர்கள் ஹோட்டல் சிப்பந்திகளிடம் சில்லரைத்தனமாக உணவு சுவையில்லை என்று சண்டைபோட்டுக் கொண்டிருந்தார்கள். சக தமிழினம் ஒருத்தர் இந்த இடத்தைவிட்டு வெளியே போக போட் வேண்டும் எனப் போனில் போராடிக்கொண்டிருந்தார்.

இவர்களுக்கு இந்த வெள்ளமெல்லாம் போதாது வெற்றி, இன்னும் வர வேண்டும் , அப்போதும் கூட “நான் பணக்காரன், செல்வாக்குடையவன், நான் அதுவாக்கும், இதுவாக்கும் என்னைத் தொட உனக்கு என்ன தைரியம் ” என சாகும் போது கூட யாருடனாவது சண்டை பண்ணிக்கொண்டிருப்பார்கள் Nonsense ஜென்மங்கள்.

இப்போது, வெள்ளமெல்லாம் வடிந்துவிட்டது, மின்சார இணைப்புகள் வந்தாயிற்று, உண்ண உணவு கிடைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது.

வானத்திலிருந்து வருவதால் மழை அமிர்தம் என்கிறார் அய்யன் வள்ளுவர், அமிர்தம் என்பது மக்களைக் காக்கத்தானே செய்ய வேண்டும் பின் ஏன் அழிக்கிறது என சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்கிறார்களே அதுவா இது ! ச்ச ச்ச இல்லை, பிழை மழையில் இல்லை, மழையை வைத்து என்ன செய்ய வேண்டும், அதை நல்முறையில் பயன்படுத்துவது எப்படி என்று திட்டங்கள் போடாத மனிதர்கள் பிழை.

நான் ஒன்று கவனித்தேன் , இந்த நகரை மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கெல்லாம் இங்கு மழை பெய்யவில்லை. தொடர்ந்து பெய்கிறது, தண்ணீர் நிறைகிறது. நிறையும் தண்ணீருக்கு நகர வழியில்லை. இது தண்ணீரை மேலாண்மை செய்யத்தெரியாத தரிகெட்டத்தனம் என்றுதான் என் புத்திக்கு தோன்றுகிறது.

கழுத்தளவு தண்ணீர் இரண்டு நாட்களில் வடிந்துவிட்டதே அந்த வகைக்காவது தேவலாம் என்று சந்தோசப்பட்டுக்கொள்ளலாம், சில நகரங்கள் இதற்கும் மோசம்.

சரி, அது கிடக்கட்டும்..

கல்யாண வேலையெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.

மனதை எப்போதும் இலகுவாகவே வைத்துக்கொள், எதுவந்தாலும் எதிர்கொள்ள அப்போதுதான் எளிதாயிருக்கும். உணவு, உறக்கம், உடல்நலம், உறவு இவைகளில் எதற்காவும், யாருக்காகவும் compromise செய்துகொள்ளாதே.

எனக்கு முன்பு இல்லற வாழ்வுக்குள் இறங்குகிறாய், கற்றுக்கொண்டு கற்றுக்கொண்டதை கற்றுக்கொடு 🙂 .
மற்றவை நேரில்.

தங்கை திருமணத்துக்கு அவசியம் உன்னை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

கடல்.

04/07/2019