விறல்வேல் வீரனுக்கோர் மடல் – 05 : பதில் கடிதம்

0

பேரன்புள்ள நண்பனுக்கு,

நீடூழி வாழ்வாயாக…

உன் கடிதம் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பா. நீண்ட நாள்களுக்குப் பிறகு நீ எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாய். உனது கடந்த கடிதத்துக்கு என்னால் கடைசி வரை பதில் அனுப்ப முடியவில்லை. அதற்கான மன்னிப்பைக் கோருகிறேன். இதற்காகவாவது உடனே கடிதம் எழுதிவிடலாம் என்று எழுதத் தொடங்கிவிட்டேன். உனது புது பணிக்கு எனது வாழ்த்துகள் நண்பா. பத்திரிகைத் துறையிலும், எழுத்துத் துறையிலும் நீ உச்சி வான பரிதியைப் போன்று ஒளி வீச எனது அன்பு வாழ்த்துகள்.

இனி  நீ தொடர்ந்து எழுத்துலகில் பயணிப்பாய் என்பதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கடிதத்தில் நீ எனது நலனைப் பற்றி விசாரித்திருந்தாய், எனது நலனுக்கு எந்தக் குறைச்சலும் இல்லை நண்பா. அளவற்ற மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடன் வாழ்கிறேன் நான். வாழ்க்கையில் இழக்கக் கூடாதவற்றை நான் இழந்திருந்தாலும், அந்த வலியிலிருந்து மீண்டு விட்டேன் என்று நான் கருதுகிறேன். மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு என்னை நான் பழக்கிக் கொண்டுவிட்டேன். எம் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் நண்பா. உனக்கு ஒன்றைக் கூற மறந்துவிட்டேன். நான் சொந்தமாக என் கிராமத்தில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் கட்டிமுடித்துவிடுவேன். தைக்கு முன்னோ அல்லது தை மாதத்திலோ வீடு குடிபுகும் வைபவம் நடக்கும். இப்போதைக்கு விழா என்றால் இதுதான்.

அப்பொழுது நான் எனது படிப்புக்கு ஏற்ற பணியைச் செய்தேன். இப்பொழுது பிடித்த பணியைச் செய்துகொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். எழுத்து என்னை முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது நண்பா. அதனால் எனக்கு இந்தப் பணி மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்தக் கடிதத்தை நீ வாசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் ’வென்வேல் சென்னி’ மூன்றாவது பாகத்தை எழுதி முடித்துவிட்டேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன். வென்வேல் சென்னியுடனான எனது நீண்ட காலப் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. வானவல்லியை நீ படித்துவிட்டாய். படித்ததும் கருத்துரை எழுதுகிறேன் என்று வாக்களித்தாய். ஆனால், அதை நீ மறந்துவிட்டாய் என்பதை மீண்டும் உனக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனது ஊடகப் பணியைப் பற்றி வினவியிருக்கிறாய். அது நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது நண்பா. நான் விகடனில் பாடி அண்ட் சோல் எனும் துறையில் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். அதாவது உடல் நலம் மற்றும் ஆன்மா பற்றி எழுதும் துறை. மகிழ்ச்சியுடன் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். எனது துறையில் பணிபுரிகிறவர்கள் அனைவருமே திறமையானவர்கள். ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்து, வாழ்த்துக் கூறி உற்சாகத்துடன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். பத்திரிகைத் துறை அனுபவத்தைப் பொறுத்தவரை நான் தான் இங்கு இளையவன். அதனால், அவர்களின் வழிகாட்டுதலில் நான் சிறப்பாக செயல்படுவதாகவே மதிப்பிடுகிறேன் நான்.

பத்திரிகைத் துறையில் அடியெடுத்துவைக்கும் எனது அன்பு நண்பனுக்கு சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறேன். பொருளாதாரத்தில் உன்னை விரைவில் நிலைப்படுத்திக்கொள். நான் பெங்களூரில் செய்துகொண்டிருந்த பணையை விட்டுவிட்டு வந்தபோது எனக்கு அப்படியொன்றும் பெரிய பொறுப்புகள் இல்லை. அதனால் எனது முடிவு குடும்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், நீ இல்லற வாழ்வில் இருப்பவன். உனது வருமானத்தை நம்பித்தான் என் அன்புத் தங்கையும், மருமகளும் இருக்கிறார்கள். அவர்களைச் சிரமமில்லாமல் பார்த்துக்கொள். அதுதான் உன் கடமையாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த சில கிழமைகளுக்குச் சிரமப்பட்டாலும் விரைவில் பொருளாதாரத்திலும் நல்ல நிலைமையில் வருவாய் என்று கருதுகிறேன். கவனத்துடன் இரு. திட்டமிட்டுச் செயல்படு நண்பா. மற்றொன்றையும் உனக்குக் கூற விரும்புகிறேன். நீ ஒரு கட்டுரையை உயிரைக் கொடுத்து ரசித்து ரசித்து எழுதுவாய். ஆனால்,  அது நன்றாக இல்லை என்றுக் குப்பையில் கூட வீசப்படும். அதையெல்லாம் நீ கடந்துவரக் கற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியர் என்ன எதிர்பார்க்கிறார், அவரது துடிப்பை உணர்ந்துகொண்டு எழுதப் பழகு நண்பா. அதுதான் உன்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உனது எழுத்து வீரியம் மிக்கது என்பதை நான் அறிவேன். அதை சரியாகப் பயன்படுத்து. உலகத்திலேயே அபாயகரமான ஆயுதம் எழுத்து தான். அதை நீ எப்படிப் பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்துத்தான் உனது சக்தி வெளிப்படும். எப்பொழுதும் மக்களின் அறத்தைப் பற்றி எழுது. அறத்தை எழுதுவதற்கு எப்போதும் தயங்காதே. அது உன்னைக் காக்கும். அது உன்னை நல் நிலைக்குக்கொண்டு செல்லும்.

உன் கடிதத்தில் நீ ஒன்றைச் சொல்லியிருந்தாய். ‘வாழ்க்கை விசித்திரமானது. இன்று நாம் சரியெனக் கருதி எடுக்கும் முடிவுகள் நாளை எதிர்பார்த்த விளைவுகளைத் தருவதில்லை’ என்று. வாழ்க்கை இப்படித்தான். வாழ்வில் சிலரை நாம் சந்திப்போம். ஆனால், அவர்களை நாம் எதற்காகச் சந்தித்தோம் என்று கடைசி வரை தெரியாது. ஆனால், அவர்கள் நமக்குக் கொடுத்த அனுபவம் மட்டும் கடைசி வரை மனதில் நிழலாடும். அதைப் போன்றது தான் வாழ்க்கையும்… இன்று எடுக்கும் முடிவு நாளைச் சரியானதாக இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அந்தந்த நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ, அப்படியே வாழப் பழகிக்கொள் நண்பா. மகிழ்ச்சியோ, துயரமோ வாழ்க்கை எதை நோக்கி நம்மைத் தள்ளுகிறதோ அப்படியே சிரிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வசந்தமாகிவிடும்.

நண்பா.. ‘சமரசங்களால் ஆன வாழ்க்கையை ஒப்புக்கொண்ட பிறகு அதிலிருந்து பின்வாங்குவது உலக நியாயங்களுக்கு அப்பாற்பட்டதல்லவா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறாய். நீ எதைப்பற்றித் தெரிவிக்கிறாய் என்பது புரிகிறது எனக்கு. நமது வாழ்க்கை நம்மோடு மட்டும் இருந்துவிடுவதில்லை நண்பா. அது நமது குடும்பத்தோடும், சமூகத்தோடும் பின்னிப் பிணைந்தது. அதனால் நாம் சில சமயங்களில் நமக்காக அல்லாமல் குடும்பத்தையும், சமூகத்தையும் நினைத்து சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த முடிவுக்கு நீ இப்பொழுது வருந்தலாம். ஆனால், எதிர்காலம் அந்த முடிவுதான் உன் வாழ்க்கைக்கு ஏற்றது என்பதைப் புரியவைக்கும். முடிவெடுப்பதற்கு முன்பு யோசி நண்பா. ஆனால், முடிவெடுத்து செயல்படத் தொடங்கியபிறகு எந்தச் சூழலிலும் நமது முடிவு சரியானதா என்று மட்டும் கேள்வி எழுப்பாதே. எடுத்த முடிவை, எப்படி வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்று மட்டும் சிந்தி. அதுதான் உன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும். எந்தச் சூழலிலும் பின்வாங்காதே.

இன்று மகிழ்ச்சி எனும் சொல்லுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகின்றன. ஆடம்பரமாக வாழ்வதுதான் மகிழ்ச்சி என்று சமூகம் நினைக்கத்தொடங்கிவிட்டது. அதற்காக நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. உனக்குப் பிடித்ததை நீ செய். உனக்கு எது அவசியமோ அதை மட்டும் வாங்கு. அப்படியே உனது குடும்பத்தையும் பழக்கு. இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழத்தொடங்கினால் கவலைக்கு வேலையே இல்லாமல் போய்விடும். புத்தன் சொன்னான் அல்லவா, ஆசையே துயரத்துக்கு காரணம் என்று. ஆசையையும், கனவையும் குறைத்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறிவிடும்.

உனது விருப்பத்தை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன் நண்பா. இப்பொழுதெல்லாம் எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், எழுதுவதற்கு நேரம் தான் கிடைக்க மறுக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் எழுதியே எனது காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறேன். இப்பொழுதுதான் வென்வேல் சென்னிக்கு முற்றும் போட்டிருக்கிறேன். விரைவில் நீ கேட்டபடி சிறுகதைத் தொகுப்பு, சமூக நாவல் ஆகியவற்றைப் பற்றி யோசிக்கிறேன் நண்பா…

கவனமாக இரு. திட்டமிட்டுச் செயல்படு. உன் எழுத்தை ஆயுதமாக மாற்று. வாழ்த்துகள் நண்பனே….

அடுத்த கடிதத்தில் சந்திப்போம்…

நன்றி.

சி.வெற்றிவேல்…