அறிமுகம்

சொந்த ஊர் சாளையக்குறிச்சி கிராமம். அரியலூர் மாவட்டத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் இருக்கிறது. கிராமத்தில் பெரும்பாலும் விவசாயம் தான் முதன்மையான தொழில். வானம் பார்த்த பூமி. சில பருவங்களில் மழையும் பொய்த்து விடுவதுண்டு. ஆதலால் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்துகொண்டே அரியலூர், சென்னை போன்ற இடங்களில் மாற்று வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

தந்தை பெயர் சி.சின்னதுரை. அப்பாவுக்குத் தொழில் விவசாயக் கூலி வேலை. பெரும்பாலும் மரம் வெட்டச் செல்வது அல்லது பருத்தி, சோளம், நெல் ஆகியவற்றிற்கு மருந்து அடிப்பதுதான் முதன்மையான வேலை. இப்போது மருந்தடிக்கும் வேலையை நிறுத்தி விட்டோம். தாத்தா பெயர் சின்னமுத்து படையாட்சி. நான் சிறு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். பாட்டி பெயர் செல்லம்மாள். 1956ல் ஏற்பட்ட அரியலூர் இரயில் விபத்தில் இறந்து குவிக்கப்பட்டிருந்த 256 பேரின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் மன நலம் பாதிக்கப்பட்டு விட்டார். இன்னும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால் வேலை துருதுருவென்று இயங்கிக் கொண்டிருக்கிறார். தாத்தா அந்தக் காலத்தில் பெரும் செல்வாக்குடன் விவசாயம் செய்துகொண்டு மாடு, ஆடு, வைக்கோல் வியாபாரம் செய்ததாக குறிப்பிடுவார்கள். தாத்தா ஏற்றம் கட்டி நீர் இறைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஞாபகம் இப்பொதும் உண்டு. தோள் மீது போட்டுக்கொண்டே எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வார்.

அம்மா பெயர் சி.பழனியம்மாள். நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை அம்மா கட்டிடம் கட்டும் சித்தாள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். இப்போது இரண்டு மாடுகளை மேய்த்துக்கொண்டு சிறு சிறு வேலைக்கு மட்டும் சென்றுகொண்டிருக்கிறார். தாத்தா பெயர் கருப்பு படையாட்சி. கடலைக் காட்டிற்கு இராக் காவல் செல்லும்போது தாத்தாவின் தோளில் சாய்ந்துகொண்டு நட்சத்திர வானை இரசித்துக்கொண்டே நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். அத்தனை கதைகளும் ராசா, ராணி சம்பந்தப்பட்ட கதைகள்தான். ‘ஒரு ஊரில் ஒரு ராசா இருந்தாராம்’ என்று இரவு கதை கூறத் தொடங்கினால் அடுத்த நாள் ஆடு மேய்த்து முடியும் வரை கதை நீண்டு கொண்டே செல்லும். அத்தனையும் சிந்திக்க வைக்கும், சுவாரஸ்யம் நிறைந்த கதைகள். இன்று நான் எழுதுகிறேன், சிந்திக்கிறேன் என்றால் அதற்கு வித்து என் கருப்பு படையாட்சி தாத்தாவாகத் இருப்பார். பாட்டி பெயர் மீனாட்சி. இப்பொது தாத்தா, பாட்டி என இருவரும் உயிருடன் இல்லை. கருப்பு தாத்தாவின் தங்கை தான் செல்லம்மாள். கருப்பு தாத்தாவிற்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். தாத்தாவின் இளைய மகள் தான் அம்மா. பெரியம்மாவின் பெயர் மருதம்பால். மாமா பெயர் தனராசு. விவசாயம் தான் முதன்மைத் தொழில். மாமாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் பழனிசாமி, Physiotheraphist. இளையவர் சுதாகர், விவசாயம் பார்க்கிறார்.

எனக்கு ஒரு தம்பி. பெயர் சி.வெற்றிச் செல்வம். Diploma in Chemical Technology படித்துக் கொண்டிருக்கிறான். நான் சி.வெற்றிவேல். ஆடி மாதம் 24ம் தேதி 1991ல் பிறந்தேன். எட்டாம் வகுப்பு வரை சொந்த ஊரில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். பிறகு பொன்பரப்பி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாவது வரைப் படித்தேன். அங்குதான் வாழ்க்கையின் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். முதல் காதல், முதல் தோல்வி, பெரும் வெற்றி, கண்ணீர், தனிமை, துயரம் என அனைத்தையும் அங்கு நிரம்ப அனுபவித்திருக்கிறேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகம் திருச்சியில் B.Tech – Petrochemical Technology ல் இளங்கலைப் படிப்பை முடித்தேன். ஒரு வருடம் சென்னை மணலியில் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

முதன் முதலில் எழுதத் தொடங்கியது எனது தோழிக்கு எழுதிய கடிதம் தான். பிறகு இரவின் புன்னகை (http://iravinpunnagai.blogspot.in/) வலைப்பூ எழுதத் தொடங்கினேன். இரவின் புன்னகை என்ற பெயரை வைத்ததும் அதே தோழிதான். அவ்வபோது கட்டுரைகள், காதல் கவிதைகள் என நினைத்ததை கிறுக்கிக் கொண்டிருந்தேன்.

புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். தேர்ந்தெடுத்து வாசிப்பதெல்லாம் எனக்குத் தெரியாது. கிடைத்தை வாசிப்பேன். வரலாற்றுப் புதினங்கள் என்றால் கொஞ்சம் ஆர்வம் அதிகம். ஏனெனில், நான் ஒன்பதாவது படித்தபோது முதலில் மாவீரன் ஷெர்ஷா என்ற புதினத்தை தற்செயலாக படித்தேன். எழுதியது யார் என்று நினைவில் இல்லை. ஆனால், இன்று வரை எனக்கு அந்தப் புதினம் மிகவும் பிடிக்கும்.

வரலாறு எப்போதுமே பிடிக்கும், அதிலும் சோழர்களின் வரலாறு என்றால் இன்னும் பிடிக்கும். அதற்குக் காரணம் நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன் என்பது கூட காரணமாக இருக்கலாம் அல்லது தாத்தா கூறிய அரசர் காலத்து கதைகள் கூட காரணமாக இருக்கலாம். பிறகு களப்பிரர்கள் பற்றி சில கட்டுரைகளை வலைப்பூவில் எழுதினேன். வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.

சென்னையில் ஒரு வருடம் வேலை பார்த்தபிறகு வேலை இல்லாமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்தேன். வளைகுடா நாட்டிற்கு நேர்முகத் தேர்வினை முடித்துவிட்டு வேலைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்து வேலை கிடைக்காமல் மனம் வெதும்பி வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு குஜராத், மும்பை வரை சென்று தேடியும் வேலை கிடைக்காமல் ஊர் திரும்பி ஊரில் மாடு மேய்த்துக்கொண்டு அரியலூர் நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டு வந்து நிம்மதியாகப் படித்துக்கொடிருந்த சமயம் பருத்திக் காட்டில் குரங்குக்கு காவல் காக்க வேண்டிய சூழல். வேலை இல்லை, அந்த வயதிற்கே உண்டான காதல் வலி என என்னை வாட்டிய பெரும் சோதனைக் காலம் அது. எழுத்து என்பது தனிமையின் ரணத்தை வெளிப்படுத்தும் அற்புதக் கருவி என்பதை அறியாமலே என் தனிமையிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளவே வானவல்லி புதினத்தை இரவின் புன்னகை இணையதளத்தில் எழுதத் தொடங்கினேன். எனது முதல் புதினமும் இதுதான். நான்கு பாகங்கள் அடங்கிய தொகுப்பினை வானதி பதிப்பகத்தார் வெளியிடவிருக்கிறார்கள்.

புத்தகங்கள், எழுதுவதைத் தவிர்த்து பயணம் மிகவும் பிடிக்கும். மலை, காடு, வரலாற்று சம்பந்தமான இடங்கள் என தனியாக ஊர் சுற்றுவது எனது பொழுதுபோக்குகள்.
நேற்று நான் எப்படியோ அப்படியே தான் நாளையும் என்று சொல்ல முடியாத அளவு தினமும் நிறைய மாற்றங்களுடன் எனது வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படியேதான் நட்பு மற்றும் காதலையும்…
சி.வெற்றிவேல்…
சாளையக்குறிச்சி…

                                                                                                                                10/04/2016 அன்று எழுதப்பட்டது…