பிறந்த நாள் கடிதம்

அன்புள்ள நண்பனுக்கு,

நலம் நலமே விழைகிறேன்.

கலையாத கல்வியும்,குறையாத வயதும்,
கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும்,அன்பகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் எப்பொழுதும் உன்னோடு நிலைத்து இருக்கட்டும்.

இனிய பிறந்ததின வாழ்த்துகள் வெற்றி.

நம் நட்பானது ஒரு கெழிஇய நட்பு , அப்படியாகத்தான் அது இருந்தாக வேண்டும் எனத் தோன்றுகிறது.

புள்ளிகள் பல வைத்து, எங்கெங்கோ வளைவுகளும், நெளிவுகளும் வரைந்து அத்தனைப் புள்ளிகளையும் இணைக்கும் ஒரு அற்புதமான கோலக் காரியைப் போல எங்கெங்கோ வைக்கப்பட்ட புள்ளிகளான நம்மை இந்த காலமெனும் கோலக்காரி ஏதோ ஒரு கோட்டின் மூலம் இணைத்து வைத்துவிட்டிருக்கிறாள்.
ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு ரகம். பெரும்பான்மையானவைகள் வளைவுகளில் சந்திக்கும் சாதாரணப் புள்ளிகளாக, இருந்துவிட்டுப் போகட்டுமே என்று தான் இருந்து கொண்டிருக்கின்றன,

இணையாமலேயே கோல இடுக்குகளுக்குள் சில தப்பி விடுகின்றன, சில புள்ளிகள் சிக்கல்களாகின்றன, சில பூக்களாகின்றன, மின்னல் கீற்றுகள் போல சில , இன்னும், இன்னும் ஏதேதோவெல்லாம் கூட ஆகின்றன சில.

நம் ஒவ்வொரு பிறந்தநாளும் நமக்கே நமக்கான பிரத்யேக வருசப்பிறப்பு என்று நான் சொல்வதுண்டு. இந்த நாளினைத் துவக்கமாக வைத்துத்தானே நாம் நம் வருசங்களை துவக்கினோம், அப்படியெனில் இது நம் வருசப்பிறப்புத் தானே.

இந்த வருடம் துவக்கத்திலேயே உன்னை இல்லறத்தான் ஆக்கப்போகிறது. மிக்க மகிழ்ச்சி.

அன்பும் அறனும் வழுவா வாழ்வமைய என்றும் உன்னோடு இறை துணை நிற்கும்.

கம்பங்காட்டுக்குள் குரங்கு ஓட்டிக்கொண்டு, நீ எழுதின எழுத்துகள் இன்று வளர்ந்து நிற்கிற உயரத்தைப் பார்க்கிறபோது, பிரமிப்பும், ஆச்சர்யமுமாக இருக்கிறது, கூடவே மகிழ்ச்சியாகவும்.

உனக்கு ஒன்று சொல்லட்டுமா ! என் ஆதர்சங்களின் பட்டியலில் உன் பெயரும் உண்டு.

எண்ணியதை செயலாக்கி, எடுத்தது முடிக்கும் நானறிந்த நபர்களில் நீயுமொருவன்.

நன்று கருது , நாளெலாம் வினை செய், நினைத்தது முடியும் என்கிறானே பாரதி. அந்த மந்திர வார்த்தைகளை மெய்யாக்கி நிற்கிறாய் நீ !.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கையில் மழை பெய்து கொண்டிருக்கிறது..

இந்த கடிதத்தை எழுதியபடியே சன்னல் வழியாக மழையை எட்டிப்பார்க்கிறேன்,

‘வெற்றிக்கனவுகளுடன்
சலியா நினைவுகள் இணைந்திருக்க,
வானம் வாழ்த்து பாடிக்கொண்டிருக்கிறது’

என்கிறது, காதருகே வந்து ஒரு மழைத்துளி !

அன்புடன்,
கடல்.
09/08/2019